"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, September 10, 2011

கதை 15. ரம்ஜான் பரிசு

கதை 15.  ரம்ஜான் பரிசு



"அண்ணா நான் வேலைக்கு போகலாம் என்று இருக்கேன் “ மெல்ல தொடங்கினாள் ஃபாத்திமா.

"ஏன் இப்ப அதுக்கென்ன அவசரம் வந்திச்சாம்? "ஃபாத்திமாவின் மூத்த அண்ணன் ஷரீப்

"என்னால் முடிந்த அளவு கொஞ்சம் உதவலாமே உங்களுக்கு என்று தான் அண்ணா...."

"ஓஹோ தங்கச்சிக்கு கல்யாணம் செய்துவைக்க துப்பில்லாதவன்னு நீயே சம்பாதிக்க ஆரம்பிக்கிறியா?"

"இல்லன்னா லாக் அவுட் செய்து வேலைக்கு போகாம நீங்க வீட்டில் இருந்துக்கொண்டு ராத்திரி ஆனால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தைகளையும் அண்ணியையும் இம்சிப்பதை பொறுக்க முடியாமல் தான்..".  எனச் சொல்ல
நினைத்தவள்  சொல்லவில்லை 

"சரி சரி எவ்ளவு சம்பளமாம்?" சிகரெட்டை உதட்டில் பொருத்தியவாறே கேட்டான் ஷரீப்

"முதலில் 6000 ரூபாய் தருவார்களாம்... பின்னர் என் வேலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து மேலும் உயர வாய்ப்பிருக்கு."

இதெல்லாம் தூரத்தில் துணி தைத்துக்கொண்டே ஷரீப் மனைவி மீனாள் (காதலித்து மணந்தவள்) முணுமுணுத்தாள்... சம்பாதிக்க துப்பு இல்லன்னாலும் குடும்பத்தை காப்பாத்த ஒரு ஜீவன் வெளியே உழைக்க போனால் ஆயிரத்தெட்டு கேள்விகள்..

ஃபாத்திமாவின் இரண்டாவது அண்ணன் பஷீர் பணக்கார இடத்தில் பெண்ணை மணந்து வீட்டுக்கு மாப்பிள்ளையாகி இவர்கள் ஞாபகங்களில் கூட தப்பித் தவறி வராது இருந்துவிட கவனமாக இவர்கள் கண்களில் கூட படுவதே இல்லை.

முதல் நாள் வேலைக்கு போகும் ஃபாத்திமாவுக்கு டிபன் பாக்சில் தயிர்சாதத்தை அன்பையும் சேர்த்தே குழைத்து தொட்டுக்கொள்ள உப்பிலிட்ட நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து அனுப்பினாள் மீனாள்.

"குடும்பத்தை காக்க வேறு வழி இல்லாததால் மட்டுமே நீ வேலைக்கு போக நான் சம்மதிக்கிறேன் ஃபாத்திமா.. மற்றபடி நான் உன் அண்ணி இல்லை... என் குழந்தைடா நீ "என்று சொல்லி அன்புடன் நெற்றியில் முத்தமிட்டாள்...

"எனக்கு தெரியாதா அண்ணி உங்களை.... நீங்க என்னிக்குமே என் தாய் தான்..".

"அம்மா என்னை பெற்றுவிட்டு கண்மூடியபோது உங்கள் முகம் பார்த்து தான் முதலில் நான் அழுததாக வாப்பாவே சொல்லி இருக்கார் அண்ணி "என்று கண்ணீர் துளிர்க்க மீனாள் அறியாது கண்ணை துடைத்துக்கொண்டாள்.

முதல் நாள் அதுவும் நேரத்திற்கு ஆபிசுக்கு போகவேண்டுமே என்று அரக்க பரக்க செருப்பை போட்டுக்கொண்டு பஸ் பிடிக்க. ஓடினாள்

ஆபிசில் நுழையவும் மணி சரியாக ஒன்பது அடித்தது.

புதிதாக சேர்ந்திருந்தாலும் டெலிபோன் ஆபரேட்டர் வேலை மட்டுமல்லாது செகரெட்டரி வேலையும் கற்று தேர்ந்திருப்பதால் அவளுக்கு வேளையைக்  கற்பதென்பது  மிகவும் எளிதாக வே  இருந்தது 

மாலை வேலை முடிந்ததும் பஸ்ஸில் ஏறியதும் உட்கார இடம் கிடைக்கவே உட்கார்ந்ததும் கண்ணை மூடியதும் தன் பால்யக் கால நண்பன் ரமேஷ் ஞாபகம் வந்தது. இப்போது எப்படி இருப்பான் என்று நினைத்தாள்....

பள்ளி நாட்களில் இருவரும் ஒன்றாய் பள்ளிக்கு போனதும், எப்போதும் வகுப்பில் முதலில் வரவேண்டும் என்று இருவரும் போட்டி போட்டுக்கொண்டு படித்ததும்.... எல்லா ஆசிரியர்களுக்குமே இருவரும் செல்லப்பிள்ளைகள் ஆனதும்.... வீட்டில் இருந்து கொண்டு வரும் சாப்பாட்டை இருவரும் பகிர்ந்து உண்டதும்.. ரம்ஜான் நோன்பு இவளுக்காக ரமேஷும் சேர்ந்து இருந்ததும் அவனுடைய பூணூல் கல்யாணம் சாப்பாட்டை அவன் ஆசையுடன் கொண்டு வந்து இவளுக்கு கொடுத்ததும்... இருவரின் நட்பு பிடிக்காமல் இரு குடும்பமும் அடித்துக்கொண்டதும் தாறுமாறாய் வார்த்தைகளை வீசிக்கொண்டதும் பின் தன் இனிய நண்பன் ரமேஷ் குடும்பத்துடன் ஊரை விட்டு போனதும் தான் மிகவும் தனிமையானது எல்லாம் நினைவுக்கு வந்தது.... மூடியிருந்த கண்களில் கண்ணீர் நிறைந்தது..

நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கவேண்டும்... அதற்கான ஆயுத்தங்களில் வீடு தயாராகிக் கொண்டு இருந்தது.

வீட்டில் நுழையும்போது எதிர்வீட்டில் யாரோ வந்ததன் அடையாளமாக எதிர்வீடு நிறைந்து இருந்தது..

"என்ன அண்ணி எதிர்ல வீடு ஒரு வருஷமா பூட்டியே இருந்ததே "என்று கூறிக்கொண்டே கைப்பையை வைத்துவிட்டு முகம் கை கால் கழுவ போனாள் ஃபாத்திமா...

"எதிர்வீட்டில் வந்திருப்பது யாருன்னு தெரியுமா "என்று மீனாள் கேட்டாள்.

"இப்ப தானே அண்ணி கூட்டம் நிறைந்திருப்பதை பார்த்தேன்... தெரியலையே "என்று சொல்லிக்கொண்டே முகம் கழுவிக்கொண்டு வந்து தொழுகை செய்ய பாய் விரித்தாள்..

"ரமேஷ் குடும்பம் தான் வந்திருக்கிறது ஃபாத்திமா... ரமேஷ் வெளியூரில் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான்... இப்ப அவனுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆனதால் இங்க ஊருக்கே வந்திருக்காங்க... அவனுக்கு கிட்னி கொடுக்க அவன் சொந்தங்களே முன் வராத நிலையில் வயதான காரணத்தால் ரமேஷின் தாய் தந்தையருக்கு பிபி சுகர் கொலஸ்ட்ரால் இருக்கும் காரணத்தாலும் முதுமையின் காரணத்தாலும் கிட்னி கொடுக்க இயலாது என்று டாக்டர் சொல்லிவிட்டாராம். ரமேஷ் முகத்தை பார்க்கவே முடியவில்லை" என்று மீனாள் சொன்னதும் அதிர்ந்தாள் ஃபாத்திமா..

என் நண்பன் உயிராய் இருந்த நண்பன் வந்திருக்கிறானா... சந்தோஷம் ஒரு பக்கமும் உயிருக்காக போராடும் நிலையில் வந்திருக்கும் நண்பனைப் பார்க்கத் துடித்த மனதை கட்டுப்படுத்தினாள். தொழுகையை முடித்தாள் அமைதியாக. நாளை முதல் தொடங்கும் ரமதான் நோன்பு எந்த தடையும் இல்லாமல் நல்லவிதமாக நடக்க மானசீகமாக வேண்டினாள். ரமேஷின் உயிரை காக்க இறைந்தாள்...

தொழுகையை முடித்துவிட்டு எதிர்வீட்டுக்கு ஓடினாள் ஃபாத்திமா...

ரமேஷின் அன்னை விளக்கேற்றிக்கொண்டிருந்தார்.

யாரோ நுழையும் சப்தம் கேட்க திரும்பி பார்த்த மீனாட்சி, “ நீங்க யாருன்னு தெரியலையே “ என்று கண் இடுங்க பார்த்தாள்.

"நான் ரமேஷின் சிறுவயது பள்ளித் தோழி ஃபாத்திமா" என்று சொல்லி கை கூப்பினாள்.

உடனே மீனாட்சி அவள் கைகளை பிடித்துக்கொண்டு கதறினாள்.

"உன்னிடமிருந்து என் மகனை பிரித்தேன்.. உங்கள் நட்பை பிரித்து அவனை எங்கோ கூட்டிக்கொண்டு போனேன். இப்ப உயிரையாவது இந்த மண்ணில் விட அனுமதி கொடுங்க அம்மா என்று என் மகன் என் கால் பிடித்து கதறும்போது என் இதயமே நின்றுவிடும் போலிருக்கிறதும்மா.. இவன் கூடப்பிறந்தவர்களுக்காக உழைத்து இவன் அனுப்பின காசில் படித்து கல்யாணம் செய்து சந்தோஷமாக குடும்பமாக இருக்கும் இவன் தங்கைகள் தம்பிகள் ரமேஷுக்கு இப்படி ஆனதுக்கு கிட்னி தரமுடியுமான்னு கேட்டதுக்கு அப்புறம் அவர்களிடம் இருந்து எந்த ஒரு போனோ தகவலோ இல்லம்மா..."

ரமேஷ் சொல்றான், “ இனி என் உயிராவது நிம்மதியானம் மண்ல போகட்டும்மா .... யாரையும் எதுவும் கேட்கவேணாம்னு சொல்லிட்டான்மா "என்று அழுதார்.

"மாமா எங்கே "என்று கேட்டுக்கொண்டே சுற்றுபுறம் பார்த்தாள்.. இருமும் சத்தம் ஒரு அறையில் இருந்து கேட்கவே அங்கே போய் பார்த்தபோது எலும்புக்கூடாய் ஒரு உருவம் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து பதறி ஓடினாள்.

கட்டிலின் அருகே ரமேஷின் வயதாகி தளர்ந்த தந்தை அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.

"மாமா கவலைப்படாதீங்க. நீங்களும் நானும் அத்தையும் விடாது பிரார்த்திப்போம். நாளை முதல் ரம்ஜான் நோன்பு இருக்கிறேன் என் நண்பனுக்காக" என்று அழுதுகொண்டே கூறினாள்.

ஃபாத்திமாவின் குரல் கேட்டு கண்விழித்தான் ரமேஷ்.. இடுங்கிய கண்களுடன் ஃபாத்திமாவை பார்த்தான்.

நெடுநாட்கள் காணாதிருந்து கண்ட நண்பர்களின் தூய நட்பு அங்கே கண்ணீராய் கரைந்ததை மாடத்திலிருந்த விளக்கு மங்கிய ஒளியுடன் தானும் ஒரு சாட்சியாய் பார்த்துக்கொண்டு இருந்தது.

"ரமேஷ் அழாதே டா... உயிர் விட வந்த உன்னை உயிரோடு திரும்ப நான் பார்ப்பேன்.. நம்பு" என்று உறுதியுடன் சொல்லி அவன் கண்களை துடைத்தாள்.

இந்த அருமையான பெண்ணை எத்தனை கேவலமாக பேசி விரட்டினோம் என்று ரமேஷின் பெற்றோர் கண்ணீருடன்  ஃபாதிமாவிடம்  மன்னிப்பு கேட்டு கைகூப்பினர்

ஃபாத்திமா பதறி அவர்கள் கைகளை விலக்கி "அத்தை மாமா நீங்க பெரியவங்க. நீங்க ஆசி தான் கொடுக்கனும். கைக்கூப்பக்கூடாது."என்றாள்

"நாளை நானும்  ஆஸ்பிடலுக்கு வருகிறேன் "என்று கூறி நம்பிக்கையை  விதைத்துவிட்டு வந்தாள்.

"எத்தனை நல்லபெண் பார்த்தியா மீனாட்சி... நம்ம மகன் பிழைப்பானோ இல்லையோ எனக்கு தெரியாது.. பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத நல்ல உள்ளத்தை நம் மகன் நட்பாக கொண்டுள்ளான். இனி அவன் நிம்மதியாக மூச்சை இங்கே மண்ணுக்கு சொந்தமாக்கட்டும்" என்று பெருமூச்சுடன் படுக்கப் போனார்.

மறுநாள் மாலை ஆபிசு முடிந்ததும் ஆஸ்பிடலுக்கு புறப்பட்டனர். "டாக்டர் சொன்னார் யாராவது கிட்னி டோனர் கிடைத்தால் அதுவும் இந்த இருபது நாட்களுக்குள் கிடைத்தால் ஆபரேஷன் வைத்துக்கொள்ளலாம். சொந்தததில் கொடுத்தாலும் சரியே..". ஃபாத்திமா அப்போது டாக்டரிடம் , “ இடையில் நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கனும் டாக்டர்” நான் என் நண்பனுக்காக கிட்னி தரலாமா "என்றபோது அதிர்ச்சி விலகா கண்களுடன் ரமேஷ் உள்பட குடும்பமே பார்த்தது ஃபாத்திமாவை.

டாக்டர் ஃபாத்திமாவை யாரென்று விசாரிக்க..." சிறுவயது தோழி நான் இவனுக்கு "என்று ரமேஷின் தோள் அழுத்தி சொன்னாள். அந்த அழுத்தலில் யாமிருக்க பயமேன் என்பது போல் இருந்தது.

டாக்டர் ,” இங்கே பாரம்மா உன் அருமையான உதவும் எண்ணம் சந்தோஷம் தரக்கூடியதே. ஆனால் உன் கிட்னி அவருக்கு ஒத்துப்போனால் மட்டுமே தான் மாற்ற முடியும். அதுக்கும் நிறைய டெஸ்டுகள் இருக்கு.."

"டாக்டர் என் நண்பனுக்காக உயிரையே தருகிறேன் என்று முன்வரும் என்னை அல்லா ஏமாற்றமாட்டார். ஒரு கிட்னியுடன் ஆரோக்கியமாக என்னால் யதார்த்த வாழ்க்கை வாழமுடியும்போது ஒரு கிட்னி நான் என் நண்பனுக்காக தரமுடியும். அல்லா கண்டிப்பாக என்னுடையதை என் நண்பனுக்கு பொருந்துமாறு செய்வார். நட்பு எதையும் தாங்கும். நட்பு எதையும் செய்யும். என்பதை நான் சொல்லித்தானா தெரியனும் டாக்டர்" என்றாள் ஃபாத்திமா..

ரமேஷின் தந்தை தாய் இருவரும் ஒரு சேர ஃபாத்திமாவின் காலில் விழப்போனபோது பதறி விலகினாள் ஃபாத்திமா...

சந்தோஷத்துடன் நம்பிக்கையோடு உயிரை காக்கும் தெய்வமாக கண்முன் தெரியும் தேவதையாக ஃபாத்திமாஅவர்கள் கண்களுக்குத் .தெரிந்தாள் 

அடுத்தநாளே வேலைக்கு போய் நடந்த விவரம் சொன்னபோது மேலாளர் மகிழ்ச்சியுடன் சொன்னார்." உதவி செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டுமே நம்மால் பிறருக்கு உதவமுடியும். அதுவும் ஒரு உயிரை காக்கும் அரியபணி இப்போது உனக்கு.. தைரியமாக போய்வாம்மா... நீ நலமுடன் வந்து திரும்ப எப்போது வேண்டுமானாலும் வேலையில் சேரலாம் "என்றார் கண்கள் பனிக்க 

கிட்னி கிடைக்காது பணம் இருந்து போராடி உயிர் விட்ட அவருடைய மனைவியை அவர் அந்நேரம் நினைத்ததை பாவம் ஃபாத்திமா அறிந்திருக்க வாய்ப்பில்லை..

டெஸ்டுகள் எல்லாம் முடிந்து ஃபாத்திமாவின் கிட்னி பொருந்தி இருப்பதை டாக்டர் சந்தோஷத்துடன் தெரிவித்து ஒரு மாதம் முன்பே நீ ஆஸ்பிடலில் அட்மிட் ஆகி உடம்புக்கு தேவையான சத்துள்ள மருந்துகளும் ஆகாரமும் உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் டாக்டர்.

"டாக்டர் நான் நோன்பில் இருக்கேன். அல்லா கண்டிப்பாக நல்லதை செய்வார். நம்பிக்கையோடு சொல்கிறேன் ஆபரேஷனுக்குரிய ஏற்பாடுகள் செய்யுங்கள்" என்றாள் ஃபாத்திமா.

வியப்பான முகத்துடன் டாக்டர் பார்த்தார். தேவதை தான் இந்த பெண் தெய்வம் போல இவர்களுக்கு கிடைத்தது இவர்களின் அதிர்ஷ்டமே என நினைத்த்துக் கொண்டார்

ரமேஷ் ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டான். தினமும் ஃபாத்திமா அவனை அருகிலிருந்து நன்றாய் கவனித்துக்கொண்டாள். புன்னகையுடன் ரமேஷின் இடுங்கிய முகம் விரியும்போது தைரியமாக இரு என்று நம்பிக்கையோடு கைகோர்த்து சொன்னாள்.

நோன்பின் கடைசி நாள் ஆபரேஷனுக்கு தேதி குறிக்கப்பட்டது.

இங்கே ஷரீபுக்கும் பஷீருக்கும் இந்த விவரம் தெரிந்து பஞ்சாயத்து கூட்டினர்.. அதெப்படி கல்யாணம் ஆகாத பெண்ணை கிட்னி கொடுக்க சம்மதிக்கலாம் என்று குதித்தனர்.

பஷீரின் மனைவி இதில் எதிலும் சம்பந்தப்படாது தன் நெயில் பாலீஷ் கலையாமல் இருக்கிறதா லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கிறதா என்று அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கொண்டாள்.

இறுதியில் ஃபாத்திமாவுக்கு தெரியாமல் ரமேஷின் பெற்றோரிடம் ஃபாத்திமாவின் கிட்னிக்கு5 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது 

அவர்கள் ஃபாத்திமாவுக்கு இந்த விவரம் சொல்லக்கூடாது என்று அவர்களிடம் மிரட்டி பணத்தையும் பெற்றுக்கொண்டு  ஆளுக்கு பாதியாக.பிரித்துக் கொண்டனர்

இதை எல்லாம் மீனாள் பார்த்துக்கொண்டு அழுகையோடு மனதுக்குள் சபித்தாள். பாவிகளா நல்ல இதயம் கொண்ட இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு ஈவிரக்கமற்ற அண்ணன்களா... இறைவா அந்த பெண்ணையும் ரமேஷையும் காப்பாற்று உனக்கு பால்காவடி தூக்குகிறேன் என்று பிரார்த்தனை செய்தாள்.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.

 ஃபாத்திமாவின் உயர்ந்த மனதைக்கண்டு..ரமேஷின் பேற்றோர்.கண்ணீர் மல்க நன்றி கூறினர்

"ஷரீப் ஒரு மாப்பிள்ளை சம்மந்தம் வந்திருப்பதாக சொன்னதுமே .. கிட்னி தந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லிருங்க "என்றாள்  மீனா...

அதை சொல்லாமல் மறைத்து கல்யாணம் பேசினான் ஷரீப். வரதட்சனை அதிகம் கேட்டனர். தன்னிடம் இருக்கும் இரண்டரை லட்சம் ரூபாயை அவன் வெளியே எடுக்காமல் இதை விட குறைந்த சம்பளம் அதிக வயதுள்ள மாப்பிள்ளையை பார்த்தான் ஷரீப்.

இதையெல்லாம் அழுகையுடன் பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள் ஃபாத்திமா....

அப்போது போன் ஒலித்தது.. எடுத்து பேசியது மீனாள்.... போனில் கேட்ட விவரம் அவள் முகத்தை பூரிக்க வைத்தது.

யார்என்று கேட்டாள் ஃபாத்திமா... "ரமேஷ் பெற்றோர் இன்னும் ரெண்டு மாதம் ரமேஷ் இங்கே ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப லண்டனுக்கே போகிறார்களாம்" என்றாள்...

இந்த செய்தி கேட்டு  ஃபாத்திமாவின் முகம்.வாடியது

 அதை ஓரக் கண்ணால் கவனித்தமீனா "நாளை ரமேஷ் பெற்றோர் வந்து உனக்கு ரம்ஜான் பரிசு தரப்போறாங்களாம்."
என்றாள் 

"அதென்ன அண்ணி எதிர்வீட்டில் இருந்துகொண்டு போனில் சொல்றாங்க? நேரில் ஏன் வரலை" 

"நாளை வருவாங்க தானே நீயே கேட்டுக்கோம்மா "என்று நமுட்டு சிரிப்புடன் போய்விட்டாள்.

திரும்ப தன் நண்பனை இழக்க போகிறோமே என்ற சோகம்  அவள் முகத்தில்..படர்ந்தது

மறுநாள் ரமேஷ் பெற்றோர் தட்டு நிறைய பழங்கள் வைத்து கொண்டு வந்து வைத்தனர்.

"எதுக்கு இதெல்லாம் "எழமுடியாது சிரமத்துடன் படுத்துக்கொண்டாள் ஃபாத்திமா...

மீனாட்சி தான்  முதலில் ஆரம்பித்தாள்...

"ஃபாத்திமாவை எங்கவீட்டு பொண்ணா சம்மந்தம் பேச வந்திருக்கோம் "...

அதிர்ச்சியுடன் எல்லோருமே பார்த்தனர்...

"என்ன அப்படி பார்க்கிறீங்க?? பிராமணன் எப்படி முஸ்லிம் பெண்ணை தன் மகனுக்கு பார்க்கிறான் என்றா? இந்தாம்மா ஃபாத்திமா.. பரிதாபப்ப்ட்டோ இல்லை நீ என் மகனை உயிரோடு எங்களுக்கு திருப்பி கொடுத்ததுக்காக நாங்க எடுத்த அவசர முடிவுன்னு நினைக்காதே..உனக்கு பார்த்த மாப்பிள்ளை வரன் இருவரும் அதனால் கேட்கப்படும் வரதட்சனையும் பற்றி வயதான மாப்பிள்ளை குறித்தும் மீனாள் வந்து எங்களிடம் சொன்னாள்."
எங்க மாணிக்கத்தை நாங்க இழந்துட போறோமோன்னு ஒரு சுயநலத்துல தான் தாயே உன்னை வந்து பெண் கேட்டோம்.
புரியலையா? எங்களுக்கு மகளாக இருக்கும் பெண் தான் எங்க வீட்டுக்கு மருமகளா வரனும்.. அது நீயா தான் இருக்கனும்.. இது ஆற அமர யோசித்து எடுத்த முடிவு தான்.. உனக்கு இஷ்டம் இருந்தால் மட்டுமே நாங்க மேற்கொண்டு இந்த காரியத்தை தொடர்வோம் "என்று சொல்லி நிறுத்தினார்.

ஃபாத்திமா குழப்பமான முகத்துடன் மீனாள் முகம் பார்த்தாள்.

மீனாள் சந்தோஷத்துடன் அம்மா, “ எங்க ஃபாத்திமாவுக்கு இதை விட நல்ல சம்ப்ந்தம் கொண்டு வந்திருக்கமுடியாது “எங்க ஃபாத்திமா குழந்தை. அவளுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். எங்க வீட்டுக்காரரே என்னை காதலித்து மணந்தவர் தான்." என்றாள்

"ஃபாத்திமா நட்புக்குள் காதல் வரக்கூடாது.. ஆனால் நட்பு நல்லதொரு வாழ்க்கை தரலாமே என்ன சொல்றே?"

நாணத்துடன் தலைகுனிந்து தன் சம்மதம் தெரிவித்தாள் ஃபாத்திமா...

தூரத்தில் தொழுகை தொடங்க மணி அடிக்கும் சத்தம் நல்ல நட்பு வாழ்க்கையாகும் நல்லதொரு நிகழ்வுக்கு சாட்சியாக ஒலித்தது....

Tuesday, September 6, 2011

அன்புக்காதல்....

அன்புக்காதல்...

இதயம் மறுக்கும் காதல்
உயிர் கூட்டைவிட்டு
பிரியும்போதும்
இணைய சாத்தியமில்லை

இதயம் மறந்த காதல்
காதல் என்றே
கணக்கில்
கொள்ளப்படுவதில்லை

இதயம் இணைத்த காதலோ
இணைந்த நொடிமுதல்
இறுதிமூச்சுவரை
இற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்...

Friday, September 2, 2011

ஒரே ஒரு முறை.....

ஒரே ஒருமுறை....

உயிர்பிழைக்க மட்டுமேனும்
என்னை நீ காதலிப்பதாய்
பொய்சொல்லிவிடு ஒரே ஒருமுறை

உன்புன்னகையால் என்னை உயிர்ப்பிக்க
காட்டிவிடு உன் அன்புமுகத்தை
என்னெதிரே ஒரே ஒருமுறை...

உறக்கத்திலாவது உன்னைத்தழுவ
கனவாய் என் கண்ணில்
மலர்ந்துவிடு ஒரே ஒருமுறை

சோகங்களை உன்னுடன் பகிர்ந்துவிட
உயிர்த்தோழியாய் என்னுடன்
பழகிவிடு ஒரே ஒருமுறை

இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன் இணைந்துவிடு
என்னவளாய் ஒரே ஒருமுறை

உன்மடி என்னை தாங்கிவிட
உரிமையாய் தலை சாய்க்கவிடு
உன்னவனாய் ஒரேஒருமுறை...

Sunday, August 28, 2011

இறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்....

இறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்

கல்வி கற்க ஆசிரியர் துணை வேண்டும்
நல்லொழுக்கம் பேண பெற்றோர் உடன் வேண்டும்
எல்லாம் பகிர்ந்துக்கொள்ள‌ நல்லதொரு நட்பு வேண்டும்
மனதிலுள்ள மென்மையை உணரவைக்க அழகான காதல் வேண்டும்
பொறுப்பை உணர அவசியம் திருமணம் வேண்டும்
நம்மை நாமே காண மழலை செல்வம் வேண்டும்
இத்தனையும் கேட்க இறைவா நீ எங்கள் கண்முன் வரவேண்டும்...

Friday, August 26, 2011

கதை 14. தொலைக்க விரும்பாத அன்பு.....

கதை 14. தொலைக்க விரும்பாத அன்பு...



சூரியவெளிச்சம்  பட்டு கண் கூசியது பிரபாவுக்கு....


ஸ்ஸ்ஸ் ஆஹ் என்று தலையை பிடித்தபடி எழுந்து உட்கார்ந்தான்...

இன்று டான்ஸ் க்ளாஸுக்கு வரும் வந்தனாவை பார்க்கணுமே என்ற பரபரப்பு உடம்பில் சட்டென தொற்றிக்கொண்டு வேகமாக எழுந்து கிளம்பி தயாரானான்....

பிரபாவை பற்றி ஒரு சின்ன அறிமுகம் கதை தொடர நமக்கும் வசதியா இருக்கும்ல?

பிரபா யாரையும் சட்டென ஈர்த்துவிடும் ஒரு வசீகரத்தன்மை..... ஹூஹூம் கிடையாது....

அழகு?? துளியும் இல்லை....

சரி நிறம்???  சொல்லமுடியாது வேணும்னா காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா அப்டின்னு பாடிக்கலாம்...

ஆனா ஆள் நல்ல உயரம் கனகச்சிதமான யோகா உடற்பயிற்சி இதெல்லாம் அவனை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது....

சரி சரி பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேக்குது வாங்க என்ன செய்றார்னு பார்ப்போம் நம்ம ஹீரோ... என்ன இவர் தான் ஹீரொவான்னு பாக்குறீங்களா?? யெஸ் இவரே தான் நம்ம கதையின் நாயகன்... வேற வழி இல்லை...

குளித்துவிட்டு வேகமாக வந்து பாபா உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு வேகமாக பாபாவின் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே ஒரு கிளாஸ் பாலை சூடு செய்து கல்கண்டு போட்டு நைவேத்தியமாக படைத்துவிட்டு அரக்க பரக்க குடித்துவிட்டு பைக் சாவி எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வண்டியை கிளப்பினான்... மனம் முழுக்க வந்தனா வந்தனா என்று அரற்றிக்கொண்டே இருந்தது.... வந்திருப்பாளா வந்திருப்பாளா??

நளினி பெயருக்கேற்றார் போல் நளினம் இல்லை உடலிலும் உள்ளத்திலும்... ஆனால் கொள்ளை அழகு... ஆண் தனமான ஒரு தலை சிலுப்பல்.... உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அழகு துளிர்த்தது..... தன்னடக்கம் என்ற பெயரை கேட்டாலே என்னமோ அசூயைப்போல் பார்ப்பது நளினியின் பழக்கம்.....

இன்னுமா வண்டி ரெடியாகலை என்று கோபத்துடன் கூலிங் கிளாஸ் கழட்டிவிட்டு கேரேஜ் பையனை கத்திக்கொண்டு இருந்தாள்..

இதோ இன்னும் ஒரு அரைமணிம்மா...

எனக்கு லேட் ஆகுது மீட்டிங்குக்கு... என்று உறுமினாள்...

பையன் ஒரு மாதிரியாக பார்த்தான்...

ஏம்மா இந்த பொட்டக்காட்டுல வண்டி நின்னு போனதுக்கு நான் என்னம்மா செய்யமுடியும்? அதான் பார்த்துட்டு இருக்கேன்ல என்று முணுமுணுத்தான்...

இவனிடம் பேசி பயனில்லை என்றபடி ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்க நினைக்கலாம் என்றால் எங்கும் வெயில் சுட்டெரித்தது... மரத்தை வெட்டாதீர்கள்... மழை வர மரக்கன்றுகள் நடுங்கள்னு அலங்காரத்துக்காக அரசியல்வாதிகள் நடச்சொன்னபடி நட்டிருந்தால் கூட அங்கே இங்கேன்னு மரம் இருந்திருக்கும் நிழலும் கிடைச்சிருக்கும்...

ஹூம் என்றபடி வண்டியில் இருந்த பாட்டில் எடுத்து நீர் குடித்தாள்.....

நளினியைப்பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமே...

அட இவங்க நம்ம கதையின் ஹீரோயின்பா...

அட அதுக்குள்ள பைக் சத்தம் கேக்குதே... சரி அப்புறம் பாத்துக்கலாம் விடுங்க... இப்ப இங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...

நளினி வேகமாக லிப்ட் கேட்கவேண்டி கைவிரலை உயர்த்தி காட்டினாள்... மீட்டிங் எப்படியாவது போய்விடவேண்டும் என்ற பரபரப்பு வியர்வையின் ஊடே வழிந்தது....

கிட்டே பைக் வர வர பைக்கை ஓட்டியவனின் முகம் பார்த்து ச்சே என்றபடி முகத்தை திருப்பிக்கொண்டாள்...

பைக் நின்றது...

மேடம் டூ யூ வாண்ட் லிப்ட்?

நோ தாங்க்ஸ் என்றபடி திரும்பிக்கொண்டாள்....

தோளைக்குலுக்கிக்கொண்டு அவன் பைக்கை உதைத்தான்....பைக் சீறி பாய்ந்தது... சில நொடிகளில் பைக் போன சுவடே தெரியாமல் பொட்டல்காடானது...

அம்மா வண்டி ரெடியாயிருச்சுங்கம்மா....

சரி சரி இந்தா பணம் என்றபடி அவனிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தாள் நளினி....

ஏசி போட்டுக்கிட்டே பாட்டுக்கேட்டுக்கிட்டே நாமும் நளினி பத்தி ஒரு சின்ன அறிமுகம் தரலாமே....

நளினி அழகு பெட்டகம் ஆனா மனசுல தான் ஒரு பெரிய கிளியோபாட்ரான்னு நினைப்பு தலையை குனிந்து பார்ப்பதை வெறுப்பதால் எப்பவும் தலையில் க்ரீடம் வைத்துக்கொண்டு நடப்பதை போல தான் நடப்பாங்க இந்தம்மா....

நளினி டிவோர்ஸி.....

அப்டின்னா எக்ஸ் ஹஸ்பெண்ட் யாருன்னு குழப்பிக்கிற முன்னாடி நானே சொல்லிடரேன்... பைக்ல லிப்ட் கேட்டு வேணாம்னு தலைய சிலுப்பிக்கிட்டாங்களே.. சாக்‌ஷாத் அந்த பைக்கில் வந்த ஆள்..... அதாம்பா நம்ம நாயகன் பிரபா....

எப்படி அமாவாசையும் பௌர்ணமியும் அப்டின்னு நீங்க யோசிக்கிறது புரியுது....

அதுக்குள்ள வண்டி கரெக்டா நளினியின் ஆபிசுல வந்து நின்றுச்சு... சரி நளினி மீட்டிங்குக்கு போகட்டும்....

அங்க பிரபா வந்தனா வந்தனான்னு அனத்திக்கிட்டே போனது என்னாச்சுன்னு தெரியலையே போய் பார்ப்போமா?

டான்ஸ் க்ளாஸ் நெருங்கும்போதே உள்ளிருந்து வந்த மெல்லிய இசை அவன் மனதை நிதானத்துக்கு கொண்டு வந்தது....

உள்ளே நுழைந்தபோது மார்னிங் மாஸ்டர் என்று சொன்னபடி குட்டி குட்டி பூக்களாக குழந்தைகள் ஓடி வந்தன...

பிரபாவின் கண்கள் வேகமாக பிள்ளைகளை அணைத்துக்கொண்டே வந்தனாவை தேடியது....

12 வருட காதல் வாழ்க்கையை பட்டுப்போயிவிட்டது என்று எண்ணிய நேரத்தில் ஒரு தேவதையாக வந்தனா வந்தது அவனுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது....

எப்படி உருகி உருகி காதலித்தோம் இருவரும்.... பணம் மதம் அழகு எதுவுமே குறுக்கிடலையே எங்கள் காதலில்..... எத்தனை சௌந்தர்யம்  இத்தனைப்பெரிய அழகி என்னை நேசித்தது எனக்கு பெரிய அதிர்ச்சி தான்... பணமும் இல்லை பெரிதாக சொத்தும் இல்லை... ஆனால் எதைக்கண்டு காதலித்தாய்ன்னு கேட்கும்போதெல்லாம் அவள் தலைமுடியை பின்னுக்கு தள்ளி அவன் நெற்றியில் முட்டி முத்தமிட்டு சொன்னது நினைவுக்கு வந்து அவன் கண்ணில் நீர் துளிர்த்தது....

படவா நீ அழகில்லைன்னு ஏண்டா சொல்றே? நீ அழகு தான்.... புதியபாதை பார்த்திபன் மாதிரி கறுப்பா அழகா இருக்கே உனக்கென்ன குறைவு? இதுக்கே அலட்டிக்கிறியே உன்னைப்போலவே பெத்துக்கப்போறேன் பிள்ளைய அப்ப என்ன சொல்லுவே என்று அன்பிலேயும் காதலிலேயும் கட்டிப்போட்டிருந்தாள்.....

ஹூம் அது ஒரு காலம்....

எந்த சுனாமி வந்து எங்கள் காதலையே புரட்டிப்போட்டது வேதனையுடன் நினைத்துப்பார்த்தான் அந்த நாட்களை.....

பூஜை அறையில் பாபாவின் அஷ்டோத்ரம் படித்துக்கொண்டிருந்த நளினி சட்டென தலைச்சுற்றலும் மயக்கமுமாக இருக்க எழுந்து ஓடினாள் பாத்ரூமுக்கு... எடுத்து வைத்த அடியில் தட்டாமாலை சுற்றவே சரிந்து விழப்போனவளை பிரபா ஆதரவாய் தாங்கிக்கொண்டான்...

என்னாச்சுடா பரிவுடன் கேட்டு சோஃபாவில் படுக்க வைத்தான்...

இந்த மிஸ்டருக்கு ஒரு மாஸ்டர் போட்டியா வரப்போறான் என்று அவன் மூக்கை கிள்ளினாள்....

ஹே எனக்கு குட்டி தேவதை தான் வேணும்.... என்றபடி ஆசையாக வயிற்றை தடவிக்கொடுத்தான்....

எல்லாம் சரியாகத்தானே போனது?

மசக்கையும் வாந்தியும் எத்தனை தான் படுத்தினாலும் அம்மா வீட்டுக்கு போகணும்னு கண்ணைக் கசக்கினதில்லை என்றும்...

நார்மல் டெலிவரியில் குட்டி ரோஜாப்பூ பட்டு விரல்களுடன் குட்டி தேவதையாக ஹரிணி பிறந்தபோது பிரபா உலகமே மறந்தான்.....

டான்ஸ் க்ளாஸ் போவதை டைம் மாற்றிவைத்துக்கொண்டு குழந்தையே உலகமாய் சுற்றிக்கொண்டிருந்தான்....

ஹே படவா ஹரிணி வந்தப்பின் என்னை மறந்தாச்சா என்று காதுமடலை கடித்தாள்....

உன்னை மறப்பதா... நீ என் உயிர்டா..

அப்ப ஹரிணி?

ஹரிணி என்னை புதுப்பித்த உலகை அழகென்று உணர்த்திய குட்டி தேவதை தெரியுமா??

ஐந்து வயது ஹரிணிக்கு கைக்கால்கள் அழகாய் பூவாய் விரித்து ஆடிய டான்ஸ் இருவரின் மனமும் மகிழ்வித்தது....

அம்மா அம்மா இன்னிக்கு ஸ்டேஜ்ல நான் ஆடப்போறேன் என்று மழலை விலகாது சொன்ன குட்டி தேவதை ஹரிணியின் கண்கள் பட்டாம்பூச்சியாய் விரிந்தன....

அப்படியா என் செல்லத்தோட டான்ஸ் பார்க்க ஓடி வருவோம்ல நானும் அப்பாவும் என்று அணைத்துக்கொண்டாள்....

ஸ்கூலே ஒரே பிரகாசமாய் ஜெகஜ்ஜோதியாய் மின்னியது....

பிள்ளைகள் எல்லோரும் குட்டி குட்டி பூக்களாய் கண்ணை மறைக்கும் மேக்கப்புடன் அங்கும் இங்கும் ஓடியது...

பிரபாவின் கார் மெல்ல பார்க்கிங்கில் நின்றதும்....

இறங்கி இருவரும் போய் இருக்கையில் அமர்ந்தனர்....

ப்ரோக்ராம் தொடங்கியது...

அழகிய குரலில் குழந்தைகள் கடவுள் வாழ்த்தை பாடி முடித்ததும்....

முதல் ப்ரோக்ராம் நடனம் தொடங்கியது....

என்னடா நம்ம ஹரிணி எப்ப ஆடுவா....பிரபாவின் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன....

இருங்க ஏன் டென்ஷனாகுறீங்க?

நம்மை போல தானே எல்லா பேரண்ட்ஸும் காத்திருக்காங்க....

ஓகே என்று இருவரும் ரசிக்க ஆரம்பித்து பிள்ளைகளின் மழலை பாட்டுகளிலும் ஆடலிலும் மனம் லயித்து ஒன்றினர்..

ஒரு குட்டி தேவதையாக ஹரிணி ஸ்டேஜில் தோன்றியதுமே பிரகாசமாக தெரிந்தது...

குழந்தையின் நடனம் கண்டு பெற்றோர் இருவருமே மனம் பூரித்து கைத்தட்டினர்... ஆடியன்ஸ் எல்லோருமே ரசித்து கைத்தட்டி ஊக்குவித்தனர்...

அப்போது சடாரென அங்கே எரிந்துக்கொண்டிருந்த லைட் வெடிக்கவே ஸ்டேஜ் சுற்றி நெருப்பு பரவியது....ஐயோ ஐயோ என்ற கூக்குரல்கள் எங்கும்....

அதிர்ச்சியில் சிலையாகி பின் சுதாரித்துக்கொண்ட எல்லோரும் தன் குழந்தைகளை பாதுகாக்க முயன்று தத்தளித்து ஓடினர்..

அங்கே அரைமணியில் எல்லாம் முடிந்து நிறைய குழந்தைகள் உள்ளிருந்து வெளிவரமுடியாது கருகி கைக்கோர்த்தபடி இறந்து கிடந்தனர்...

பிரபா தன்னால் இயன்றவரை நிறைய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் தன் குழந்தையை மறந்துவிட்டான்....

ஹரிணியும் பரிதாபமாக உடலும் உடையும் கருகிக்கிடந்தது அந்த குட்டி தேவதை....

ஐயோ என் குழந்தை................. அலறல் ஆஸ்பத்திரியில் ஒலிக்க பிரபா ஓடி வந்து அணைக்க முயன்றபோது வெறி வந்தது போல அவனை தள்ளிவிட்டாள்...

” பாவி பாவி நம் குழந்தையை காப்பாற்ற ஓடாம மத்தவங்க குழந்தையை காப்பாத்த ஓடினியே.... நம்ம குழந்தை நினைப்பாவது வந்திச்சா உனக்கு” என்று அவன் நெஞ்சில் அடித்தாள்.

கண்ணில் நீர் வழிய பதில் சொல்லத்தெரியாமல் நின்றான் சிலையாக....

எல்லா குழந்தைகளுமே ஹரிணி போல காட்சி அளித்தது பிழையா :(

ஹரிணியாக நினைத்து தானே காப்பாற்றினேன் இறைவா என் பிள்ளையை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாயே என்று கதறினான் பிரபா..

வெடுக்கென்று தலை நிமிர்ந்து அவனை உற்று நோக்கினாள்....

எப்ப நீ நம்ம குழந்தையை ஒரு பொருட்டா நினைக்காம காப்பாத்தாம விட்டிட்டியோ இனி எனக்கும் உன்னிடம் பாதுகாப்பு இல்லைன்னு தெரிஞ்சுகிட்டேன்....

இனி உன்னோடு சேர்ந்து வாழமாட்டேன் என்று குரூரமாக சொல்லிவிட்டு அழுகையுடன் மயக்கத்திற்கு போனாள்....

எல்லாம் அஸ்தமித்தது அப்போது தான் பிரபாவுக்கு....

உள்ளம் மரத்து உடல் செத்து உலகமே வெறுமையாகி போய்விட்டது பிரபாவுக்கு.. குழந்தையை இழந்த துக்கம் ஆறுமுன் தன்னை நேசித்த உயிரும் தன்னை விட்டு பிரிந்து போனதே என்ற வெறுமையில் பிரபா தன் முழு கவனத்தை டான்ஸ் க்ளாஸில் செலுத்தினான்...



1 வருடம் கழித்து.....

” போ செல்லம் சொல்றேன்ல உள்ளப்போ மாஸ்டர் கிட்ட அழகா சொல்லு உனக்கு டான்ஸ் பிடிக்கும் தானேவீட்ல ஒரே கத்தி ரகளை பண்னிட்டு இங்க வெட்கப்பட்டா எப்படி?? ”  ராதை தன் குழந்தையை பிரபாவின் முன் கொண்டு வர மிகவும் பிரயத்தனப்பட்டாள்...

” குழந்தையை  கட்டாயப்படுத்தாதீங்க... அவர்கள் போக்கில் விடுங்க “ என்றான் பிரபா...

“ வீட்டில் ஒரே ரகளை உங்க படம் போஸ்டர் பார்த்துட்டு இவரிடம் தான் டான்ஸ் கத்துப்பேன்னு இப்ப என்னடான்னா.... நெளியிறா “ என்றாள் ராதை.

“ நான் ஒன்னும் வெட்கப்படலை.. அம்மா சும்மாவே இப்படி தான் மாஸ்டர் சொல்வாங்க... உங்களுக்கு ரோஸ் பிடிக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னா... அதான் கொண்டு வரலையேன்னு என்று முடிப்பதற்குள்

அதிர்ச்சியில் குழந்தையின் முகத்தை பார்த்துவிட்டு அசையாமல் நின்றான் பிரபா...

இது இது.....

பிரபாவிற்கு அந்த டான்ஸ் ரூமே சுற்றுவது போலிருந்தது....

இது இது....

மயக்கம் வருவது போல் இருக்கவே சுவற்றை பிடித்து சுதாரித்து உட்கார முயன்று தோற்று கீழே விழுந்து ஆழ்ந்த மயக்கத்திற்கு போனான் பிரபா....

ஐயோ இதென்ன வம்பா போச்சு மாஸ்டருக்கு என்னாச்சு..

குழந்தைகளும் ராதையும் பயந்து நீர் கொண்டு வந்து தெளிக்க மெல்ல கண்ணைத்திறக்கும்போது அவன் பார்வையில் முதலில் ராதையின் குழந்தை தான் பட்டாள்...

மாஸ்டர் இந்தாங்க தண்ணி குடிங்க ராதை நீட்டினாள்...

மெல்ல எழுந்து உட்கார்ந்தான் பிரபா...

தன் செயலுக்கு வெட்கப்பட்டான்....

சாரி வெயில் அதான் கொஞ்சம் என்றபடி எழுந்து தன்னை சரி செய்துக்கொண்டான்.

ராதையின் குழந்தையைப்பார்த்து வாஞ்சையுடன் சிரித்தான்...

பெயர் என்ன?

வந்தனா - கண்ணை அழகாய் பட்டாம்பூச்சியைப்போல் சிமிட்டி சொன்னாள்...

அழகுப்பெயர்....

அதன்பின் வந்தனா தான் அவன் உலகம் என்றாகிவிட்டது....

வந்தனா தன் வீட்டில் இருப்பதை விட அதிக நேரம் மாஸ்டருடனே இருந்து நடனமும் கற்று பெரிய மனுஷிப்போல மாஸ்டருக்கு வீட்டில் உதவியும் செய்வாள்....

பிரபாவின் உலகம் சட்டென அழகானதை உணர்ந்தான்....

நளினியிடம் இந்த விஷயம் சொல்லத்துடித்தான்....

இவன் நளினிக்கு போன் செய்து ஹலோ என்றபோது கட்டானது....

அதன்பின் ஒரு மாதமாக பிரபாவின் சொற்களில் 99 சதவீதம் வந்தனாமயம் தான்....

அன்று டான்ஸ் கிளாஸ் போகும் அவசரத்தில் வழியில் நின்று லிப்ட் கேட்டப்பெண்ணை பார்த்தபோது ஆச்சர்யமாகி வண்டியை நிறுத்தினான்...

ஆனால் தலையை சிலுப்பிக்கொண்டு உதவி வேண்டாம் என்று மறுத்தது சாக்‌ஷாத் நளினியே தான்....

குழந்தையின் மறைவுக்குப்பின்னர் தன்னை முழுமையாக பிசினஸில் ஈடுபடுத்திக்கொண்டு விட்டாள்...

அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபாவின் நினைவுகள் மங்கிய நேரத்தில் தான் பிரபாவை மறுபடி சந்தித்தது.....

பிரபா ஒரு மாதம் முன்பு தனக்கு போன் செய்ததை கோபமாக கட் செய்ததை நினைத்துப்பார்த்தாள்...

மறுபடி உறவைத்தொடர தான் போனோ என்று அலட்சியமாக முகத்தை சுளித்தாள்....

தன் ஆபிசில் தன்னைப்பற்றி எல்லோரும் ஒரு மாதிரி பேசுவதை அறிவாள் நளினி....

திமிரும் அகம்பாவமும் நான் எனக்கிட்டுக்கொண்ட கவசம்... எவனும் என்னை நெருங்கமுடியாதபடி நான் எனக்குப்போட்டுக்கொண்ட வேலி என்று நினைத்துக்கொண்டாள்...

அதனால் யார் பேச்சையும் சட்டை செய்வதில்லை... ஆனால் வேலையில் ரொம்ப கறாராக இருப்பாள்...

அன்று காலை ஆபிசுக்குள் நுழைந்தபோது ரிஷப்ஷனிஷ்ட் மெல்லிய குரலில் பிரபா வந்தனா என்று சொன்னது காதில் கேட்டும் கேட்காதது போல் போனாள்....ஆனால் மனதில் குடைய ஆரம்பித்தது....

பிரபாவுக்கு போன் செய்து கேட்டுவிட துடித்தாள்....

” ஆம்பிளை தானே ஒருத்தி போனதும் இன்னொருத்தி மேலே மோகம் வந்திடுச்சு போல “ நகத்தை கடித்து துப்பினாள் ஆக்ரோஷமாக...

” கேட்டுடலாமா “ போன் எடுத்து டயல் செய்தாள்.

 எதிர்ப்புறம் ஹலோ என்றதும் போனை வைத்துவிட்டாள்...

” யார் எப்படி போனால் எனக்கென்ன எப்ப எனக்கும் பிரபாவுக்கும் ஒன்றுமில்லைன்னு ஆயிட்டுதோ இனி அவர் முகத்திலே விழிக்கக்கூடாதுன்னு நினைச்சேன் ச்சே இப்படி ஒரு அசிங்கம் செய்ய எப்படி முடிகிறது இந்த மனிதனால்.. உருகி உருகி என்னை காதலித்து கல்யாணமும் செய்துவிட்டு ” ....

யோசிக்கமுடியாமல் தலை விண்விண் என்று வலிக்கவே

பொறுக்கமுடியாது இனி என்ற ரீதியில் போன் செய்தாள் மறுபடி பிரபாவுக்கு...

” ஹலோ”....

” நான் தான்” ....

”தெரியும் சொல்லு”.....

” யாரது வந்தனா.... இப்ப அவ கூட சுத்திக்கிட்டு இருக்கீங்களா?” கடூரமாக கேட்டாள்.

”ஆமாம்” அமைதியாக சொன்னான் பிரபா...

”எவ்ளோ திமிர் உங்களுக்கு.. நான் ஒருத்தி இருக்கும்போது வெட்கமா இல்லை உங்களுக்கு?

” என்ன சொன்னே கம் அகெயின்.... நீ என்னுடன் இருந்தால் நான் ஏன் வந்தனாவை தேடப்போகிறேன்?

” வீண் பேச்சு வேண்டாம்.... உங்க புத்தி தெரிஞ்சு தான் விலகினேன்” ஆங்காரமாக கத்தினாள் நளினி...

“ சரி இப்ப உனக்கு வந்தனா யாருன்னு தெரியனும் அவ்ளோ தானே?

“ அவசியமில்லை எவளையும் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லை கழுதை கெட்டா குட்டிச்சுவர்....”

“ அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதே நளினி.... மாலை 6 மணிக்கு ஸ்பென்ஸர் ப்ளாசா கிட்ட வா... நீயே தெரிஞ்சுப்பே “

 கோபத்துடன் சட்டென இணைப்பை துண்டித்தாள் நளினி.

மனதில் ஒரு துளி நம்பிக்கை இருப்பதால் தான் இன்னமும் நளினிக்காக காத்திருந்தான் பிரபா... காத்திருந்தது வீண் போகவில்லை... கண்டிப்பாக வருவாள் மாலை... சந்தோஷ சீழ்க்கையுடன் தலையை கலைத்துப்பார்த்தான்...நளினிக்கு அடிக்கடி இவன் தலையை கலைத்துவிடுவது மிகவும் பிடிக்கும்....அப்படி ஒரு சந்தோஷக்காலம் மீண்டும் மலருமா ஏங்கினான் பிரபா...

பாபாவை மனதில் தியானித்தான்...

“ மாலை எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து உனக்கு நன்றி சொல்ல வருவேன் நான் “ நம்பிக்கையுடன் பாபாவைக்கும்பிட்டான்...

பாபா அமைதியுடன் புன்னகைத்தார்...

மாலை ஸ்பென்ஸர் ப்ளாசாவில் வந்து காரை பார்க் செய்தாள் நளினி....

மெல்ல தேடினாள் பிரபாவை....

ஆனால் பிரபாவை காணவில்லை....

1 மணி நேரம் ஆனது..... இன்னமும் காத்திருக்க முடியாது என்ற கோபத்தில் காலை உதைத்துக்கொண்டு நகரும் வேளையில்......

எதிரில் எதிரில்.....

யாரது....

கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தாள்...

ஹையோ என் ஹரிணி என் ஹரிணி கையை விரித்துக்கொண்டு ஓடினாள் பிடிக்க....

சட்டென திரும்பி பார்த்து சிரித்து ஹலோ ஆண்ட்டி.... என்றது குழந்தை வந்தனா....

அப்படியே தலைச்சுற்றி மயக்கத்தில் விழப்போனபோது தன் வலிமையான தோள்களில் சட்டென அணைத்துக்கொண்டான்...

பிரபா பிரபா ஹரிணி ஹரிணி ஒன்னும் பேச இயலாது அழத்தொடங்கினாள் நளினி....

வந்தனா ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு நளினியின் கையை பிடித்துக்கொண்டு...

ஆண்ட்டி என் பெயர் ஹரிணி இல்லை... வந்தனா என்று அழகாய் உச்சரித்தாள்.

”பின்னாடி இத்தனை நேரமும் நீ அறியாமல் மறைந்து இருந்து உன்னைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன் நளினி. நீ எழுந்த வேகத்தில் எங்கே கிளம்பிடுவியோன்னு தான் வந்தனாவை உன் முன் நடந்து வரச்சொல்லி அனுப்பினேன்.. ”

“ ஏன் இப்படி காக்க வைத்தேன்னு பாக்குறியா என் கண்ணாட்டி? “ ஒரு நம்பிக்கை துளி என் மனதில் இருந்ததுடா... எப்படியும் நீயும் நானும் சேர்ந்துடுவோம்னு....”

” ஹரிணி காரணமா நீ என்னை விட்டு பிரிந்து நான் ரொம்ப தனியாகி போனேண்டா... “

” இப்ப நீயே வந்து என்னை சேர பாபா நடத்தின அற்புதமா நினைக்கிறேன்... இப்பவும் உன் மனதில் நான் இருக்கிறேனா என்று அறியத்தான் இப்படி காக்கவைத்தேன்.. மன்னிச்சிருடா என் தங்கம் “ என்றான்...

“ இல்ல பிரபா நீ தான் என்னை மன்னிக்கனும்... இருவருமே ஒரே விதமா இழந்தோம்... ஆனால் இழப்பு எனக்கு மட்டும் தான் என்பது போல உன்னை நிர்கதியா தவிக்க விட்டுட்டேன் மன்னிச்சிரு பிரபா”  என்று அழுதாள்....

“ ஐயே இன்னும் அழுதுக்கிட்டே இருந்தா எங்க வீட்ல என்னை எப்ப கொண்டு விடப்போறீங்க”  இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்தாள் இந்த குட்டி தேவதை.

சிரித்துக்கொண்டே இருவரும் ஹரிணியை இல்ல இல்ல வந்தனாவை வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டை நோக்கி வண்டியை வேகமாக திருப்பினான் பிரபா...

இனி அடுத்த புது வரவாய் உறவாய் ஹரிணி பிறந்து மீண்டும் இருவர் வாழ்விலும் வசந்ததை கொண்டு வரப்போறாள்னு சொல்லனுமா என்ன???









Related Posts Plugin for WordPress, Blogger...