"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Wednesday, November 26, 2014

இனிய இம்சை....



ரகசியம்
சொல்லத்தான்
என்னை நெருங்குகிறாய்
என்றே நினைத்திருந்தேன்
என் காதுமடல்
உன் பற்களில்
சிக்கிக்கொண்டு
இனிமையாய்
இம்சிக்கப்படும்வரை !!!

Saturday, November 22, 2014

கோபம்...




உன் அழகையும்
புன்னகையையும்
பொறாமையால்
அள்ளிக்கொண்டு
போகிறதுப்பார்
நீ என் மேல் 
கொண்ட 
கோபம் !!!

Monday, March 31, 2014

அழகே என் அற்புதமே....



உன்  கண்களில்  உறக்கம் கூட
அழகாய் தெரிகிறது
பவழவாய் திறந்து
பட்டுக்கைகளை தூக்கி
“ நீ “
சோம்பல்  முறிக்கும் அழகை
கண்கொட்டாமல் ரசிக்கிறேன்...
என் வாழ்க்கை ரசனையாக்க
வந்த அற்புதம்  
“ நீ  “
உன் இனிமையான செயல்களை
காணும் பாக்கியம்
என்னைப்போல் யாருக்கு
கிடைக்கும் இந்த வரம் !!!

Friday, February 28, 2014

நேசத்தின் நிழல்...



தன்னை 
வெளிப்படுத்தா
நேசத்தின்
நிழல்
நிலத்தடி நீராய்
யாரும் அறியாவண்ணம்
ஊறிக்கொண்டு
காத்திருக்கிறது
பெருமழையாய்
பொழிந்து
உன் மனதை
நனைத்துவிட !!!!

Monday, February 17, 2014

உனக்காகவே....



என்
சந்தோஷச்சிறகிலிருந்து
ஒற்றை இறகும்
ஆத்மார்த்த கண்ணீரின்
ஒற்றைத்துளியும்
உனக்காகவே
விட்டுச்செல்கிறேன்
ப்ரியமே !!!

Tuesday, February 11, 2014

தேடல்....



நினைவுகளின் கோடியில்
நின்றுக்கொண்டிருக்கிறேன்
தேடலின் முடிவில்
மனக்கதவின் குமிழில்
உன் ஸ்பரிசம் 
மீட்டெடுக்கும்
என்ற நம்பிக்கையில்......

Friday, August 30, 2013

ப்ரியங்கள்....




உன்னைப்பார்க்கவே மாட்டேன்
வறட்டுப்பிடிவாதம் கொண்டு...
ப்ரியங்களில் ஊறிய மனம் மட்டும்
உன்னையே நினைத்துக்கொண்டு....

Monday, August 5, 2013

அதீத அன்பு....



.கண்ணுறக்கத்திலும்
என் மடியில்...

கனவுகளிலும்
என் கைப்பிடியில்...

சோகத்திலும்
என் கண்ணீர் துளிகளில்...

யார் சொன்னது
அதீத அன்பு
அவஸ்தை என்று?

Sunday, July 28, 2013

சுவாசமாய்..... நேசம்....


என்னிடம் உனக்கு
பிடித்ததும் பிடிக்காததும் என்ன???

குறும்பாக
தலைசாய்த்து ஒற்றைக்கண் மூடி
கேட்கிறாய் என்னை...

உச்சிமுகர்ந்து என் நெற்றியில்
நீ 
முத்தமிடும்போதெல்லாம்
என் அன்னையை நினைவுப்படுத்துகிறாய்....

என் கன்னத்தில் 
நீ
கவிதை முத்திரை பதிக்கும்போதெல்லாம்
ஏக்கத்தில் ஆழ்த்திவிடுகிறாய்...

தோல்விகளில் துவளும்போதெல்லாம்
நீ
இதழ் ஒத்தடம் தந்து
என்னை உயிர்ப்பிக்கிறாய்....

என் சுவாசத்தில் முழுமையாய்
ஆக்கிரமித்து
நேசம் பகிர்கிறாய்....

இன்னும் சொல்ல நிறைய....

சொல்லி முடிக்குமுன்
உன் அணைப்பில்
நான்.....

Saturday, November 17, 2012

காதலாய்.....




சுவாசிக்கும் மூச்சாய்…
தெறிக்கும் கோபமாய்….
சிந்திய புன்னகையாய்…
உறக்கத்தில் கனவாய்
துளிர்க்கும் அன்பாய்…
கண்ணீர் துளியாய்….
என்னில் நீயாய்…
உன்னில் நானாய்….
காதலாய்….

Monday, September 3, 2012

நீ மட்டுமே வேண்டும்....



உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
இறுதிமூச்சிலும் உன்மடி சாய


நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

சொல்லிவிடு....


நீ அன்று குளிர் மழையில்
நனைந்தபடி என்னுடன் உடல்
ஒட்டி உரசியபடி  நடந்தபோது.....
பிறந்ததா உனக்குள் காதல்?

நம் பார்வைகள் ஒன்றோடொன்று
முட்டி மோதி பூகம்பமாய்
உனக்குள் புயல் உருவானபோது
பிறந்துவிட்டதா உனக்குள் காதல்?

கூட்ட நெரிசலில் மற்றவரின்
விகார பார்வையும் தொடுதலும்
பட்டுவிடாமல் நான் தடுத்தபோது
அப்போது பிறந்திருக்குமா என் மேல் காதல்?

நீ என்னை ரசித்த நொடியில்
உன் வசமிழந்து என் வசமான
அந்த அற்புத உணர்வை
உணர்ந்த நொடிகளை....

என் கல்லறையிலாவது
வந்து சொல்லிவிடு

Monday, January 2, 2012

நான் எப்படி இருப்பேன்?



நான் எப்படி இருப்பேன்?
நான் என்ன தருவேன்?
அழகாய் இருப்பேனா?

அமைதியுடன் இருப்பேனா?
மனிதம் வளர்ப்பேனா?

அண்டை நாடுகளுடன்
வம்பு வளர்க்காது
நட்பு கொள்வேனா?

ஊழல் இல்லா அரசியல் 
அமைப்பேனா?
கலகம் மறைந்து
அமைதிப்பூங்காவாக இருக்க
என் பங்கு எத்தனை?

என்னை வரவேற்பதில் தான்
எத்தனை எத்தனை ஆசை
என்னென்ன வார்த்தைகள்
எத்தனை வாழ்த்துகள்
எத்தனை கவிதைகள்

கவிஞர்களின் கவிதைவேட்டை
இன்னமும் தொடர்ந்திருக்க….

அரசியல்வாதிகளின் நமுட்டுச்சிரிப்பில்
எதிர்க்காலம் தொய்வுற்றிருக்க….

இன்றாவது ஒருவேளை சோறு
கிடைக்குமா என ஏழைகள் காத்திருக்க….
இந்தவருடம் எனக்கு ஏழரைச்சனி
தொடங்குதே என்று சிலர் அங்கலாய்க்க….

ஹப்பாடா இந்தவருடத்துடன்
ஒழிந்தது என்னைப்பிடித்து
இதுநாள்வரை ஓ(ஆ)ட்டிய சனி
என்று சிலர் நிம்மதி பெருமூச்சு விட….

மறைந்தவரை நினைவுக்கொண்ட
நல்லவர் சிலர்….

மனதில் இருந்த கசப்பெல்லாம்
மறையாதா என்ற வேண்டுதலோடு
ஒருசிலர்…

தட்டில் விழும் காசு
பையன் படிப்புக்கு ஆகுமா
ஏழை பூசாரி….

குடிக்காமல் வருவானா 
இன்றொருநாளாவது உலைகொதிக்குமா
குடிகாரனின் மனைவியின் கண்ணீர் கேள்வி….

மனிதர்களின் ஆட்டம் போதாதென்று
இயற்கையும் ஆடிய ஊழித்தாண்டவம்
உயிரிழந்தோர் எண்ணிக்கை
சில தெரிந்து
பல மறைத்து......


ஈழத்து மக்களின் கண்ணீர்காயாத
ரத்தநிலமாகிப்போய்
இன்னமும் இருக்கும் துளி உயிரிலும்
ஈழம் மலரும் என்ற‌
நம்பிக்கை விளக்கெரிந்துக்கொண்டிருக்க….

இன்றோடு நடந்தவை எல்லாம்
கடந்து போன அனுபவ‌ங்களாக
தீண்டிவிட்டு சென்ற கருநாகமாக
தூண்டிவிட்டு சென்ற வில்லன்களாக
எப்படியோ முடிந்தது 2011….

இனி வரும் நான்….
எப்படி இருப்பேன்?

என்ன கொண்டுவந்து தருவேன்?
நல்லதை செய்வேனா?
புரட்சியை விதைப்பேனா?

அரசியலில் தூய்மையை ஆக்ரமித்து
கொள்ளையர்களை கொன்று குவிப்பேனா?

என்னை ஆரவாரம் செய்து
ஆர்பாட்டத்துடன் சந்தோஷக் கூச்சலுடன்
நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
நான் (2012) நல்லதை தருவேன் என்ற‌
மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
அடியெடுத்து வைக்கிறேன்....

Tuesday, November 1, 2011

நான் என்ற ஆணவம் அழிய.....

நான் என்ற ஆணவம் அழிய
உடற்கூட்டினை எரித்துப்பார்

ஆன்மாவில் சஞ்சரிக்கும்
அத்தனை உயிர்களுக்கும்

உடல்கொடுத்த இறைவனை
நேரில் வந்தால் கேட்டுப்பார்

தீவிரவாதமும் தீராத நோயுமாய்
ஏழையை சுரண்டும் பணக்காரனாய்

லஞ்சப்பேய் தலைவிரித்து ஆடி
வஞ்சகத்தால் பதவி பிரமாணம் செய்து

ஈவிரக்கமின்றி கொன்றுகுவிக்கும்
வெறியர்களாய் உருவாக்கியதும் ஏன்?

அன்பும் கனிவும் கருணையும் பாசமும்
பண்பும் பணிவும் ஆதரவும் அரவணைப்பும்

ஒருங்கே ஒன்றாய் கூட்டினில் அடக்கி
உலகை அமைதிப்பூங்காவாய் மாற்றாது

இப்படி விளையாடி தீர்ப்பது ஏன்??

தானும் தன் மனைவி மக்களும் மட்டும்
நன்றாய் வாழ்ந்தால் போதுமா?

நம்பி வாக்குகள் இட்டு
நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு

துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை
இறைவன் காத்திருந்து தண்டிக்ககூடாது

அன்றே அப்போதே அந்த நிமிடமே
துடிக்கவிட்டு கதறவிட்டு.....

இனியொருவன் இப்படி நாட்டை
வைத்து விளையாடமாட்டான்...

நேர்மையும் உண்மையும் இனியாவது
உயிர்த்தெழட்டும்.....

Friday, October 28, 2011

காதல் உயர்வாய் தெரிகிறது.....

மௌனம் கலையும்போது
சோகங்கள் விடியும்போது
கண்ணீர் உறையும்போது
கோபங்கள் வடியும்போது

அன்பு தலைதுவட்டும்போது
இனிமை மனதில் தித்திக்கும்போது
ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது

அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது

காதல் உயர்வாய் தெரிகிறது.....

Thursday, October 6, 2011

காதல்..... காதல்......



காதல்.... காதல்...

நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்.....

அன்பைக்கொடுத்து கைக்கோர்த்தவரை
அன்பையே தந்து சொர்க்கம் காட்டிவிடும் காதல்.....

கண்ணியம் குறையாது மாசற்ற மனத்தவரை
கண்ணீரால் பாவங்களை கரைத்துவிடும் காதல்.....

மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்.....


காதலுக்காக எந்த விலை கொடுக்கவும்
காதலுக்காக எதையும்  இழக்கவும்   
உலகே தயாராய் இருப்பதுவும்
உண்மையில் இதனால் தானே  

Saturday, September 24, 2011

செல்லக்கூடல்....


அன்பு குறைய ஆரம்பித்தால்
குறைகள் கண்ணுக்கு தெரியுமாம்

குறைகள் தெரிய வந்துவிட்டால்
அன்பில் விரிசல் தொடங்குமாம்

இயல்பான வார்த்தைகள் வெளிவந்தால்
குற்றம் சாட்டுவது போல் அமையுமாம்

இன்பமாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
நரகவேதனையாய் நகர்ந்து முடியுமாம்

பொறுமைக்காத்து வேண்டி நின்றால்
தவறை உணர்ந்து தத்தளித்து நிற்குமாம்

விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....

Sunday, September 18, 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்??


வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்

மனம் சுருங்கி தடுமாற நின்றேன்
வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி
போனது எல்லாம் மறக்க வேண்டினேன்

நட்புகள் எங்கும் மலர்வதும் சாத்தியம்
அன்புடன் என்றும் வளர்வதும் சத்தியம்
அன்பினை முதலாய் இட்டால் தான்
அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே

பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்

கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது

அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
உறவு கொண்டு தன்னை நேசம் என்றது
உள்ளத்துள் வைத்து நிலையாய் பூஜித்தது
இது தான் நேசமென்று பறைசாற்றியது....

Related Posts Plugin for WordPress, Blogger...