"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

ரசிக்கிறேன்....

உன்னை பிரிந்திருக்கும் நேரமெல்லாம்
சபித்து தீர்க்கிறேன் இந்த இறைவனை
உன்னை காணும் கணம் எல்லாம்
மனம் சந்தோஷ கூச்சலிட ஆர்பரிக்கிறது
 

உன் குரல் என் காதில் ஒலிக்கும் நேரமெல்லாம்
மனசு போடும் குதியாட்டத்தை நிறுத்தமுடிவதில்லை
இதோ உன் அடுத்து நான் நிற்கும்போது
என் நிழல் உணர்ந்தும் ஓரக்கண் பார்வை
எனை பார்க்கும்போது பறக்கிறேன் வானத்தில்
 

நீ என்னுடன் என்னவோ பேசுகிறாய் தான்
ஆனால் என் காதில் ஏன் விழவே இல்லை
உன் முகத்தையே பார்த்து என்னையே மறக்கிறேன்
 

புதுப்புடவை உடுத்தி உன் அடுத்து நடக்கும்போது
உன் கால்களை கவனிக்கிறேன் என்ன ஒரு ப்ரகாசம்
உன் காலடி சுவடுகள் கூட என்னை கண்டு சிரிக்கிறதே
 

என்ன தான் செய்வேன் இப்படி உன்னை ரசித்து
என்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறேனே
என்னவோ கூக்குரல் எங்கே என் மனதிலிருந்தா?
 

உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை தான் இந்த ரசிப்பு
குழந்தை பிறந்ததும் உன் ரசிப்புத்தன்மை 
இடம் மாறி விடும் பைத்தியக்காரி கொக்கரிக்கிறது என் மனம்
உண்மையா மகனே?? உப்பி இருக்கும் 
என் வயிற்றை தடவிக்கொண்டு நான் வெட்கச்சிரிப்பில்.....

சுகம்.....

அதிகாலை பனியில் வெந்நீரில் குளிப்பது சுகம்
மடி ஆடை உடுத்தி பூஜை அறையில் அமர்வது சுகம்
அமர்ந்து ஓம் கணேசாய நமஹ என தொடங்கி
அபிஷேகம் ஆராதனை செய்வது சுகம்
 

பர பரவென வேலைகளுக்கிடையே மனம் அமைதியுடன்
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
என்ற பாடல் முணுமுணுப்பது சுகம்......
கூட்ட நெரிசலில் உட்கார பஸ்ஸில் 
இடம் கிடைப்பது ஒரு சுகம்......
 

சரியான நிறுத்தத்தில் இன்று ஒரு நாள்
மட்டும் நடத்துனர் நிறுத்தி 
பக்கத்திலேயெ அலுவலகம் எட்டியது சுகம்...
இன்று மட்டும் திட்டு வாங்காமல்
வேலை வேகமாக முடித்துவிட்டது சுகம்
 

மாலை பிள்ளைகளை காண காத்திருப்பது சுகம்
வீடு சேருமுன்னே கணவன் இன்று மட்டும்
எனக்காக காபி போட்டு நீட்டுவது சுகம்
பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது சுகம்
வேலைகளை வேகம் முடித்து சீக்கிரம் படுப்பது சுகம்...
 

அன்றாட வாழ்க்கை எந்திரமயமாகும்போது
இது போல சின்ன சின்ன சுகங்களை
ஏற்படுத்திக் கொள்வது சுகம்.....

மௌனமாய் இருக்கத்தான் முடியுமா ?

எண்ணங்களை எட்டி பிடிக்க முடியுமா
கற்பனைகளை கட்டி தான் போட முடியுமா
கனவுகளுக்கு கடிவாளம் இட முடியுமா
சந்தோஷத்தை அள்ளிச்செல்ல முடியுமா
 

எல்லாமே முடியும் நம்பிக்கை எனும்
நல்லவர் வாழும் மத்தியில் நாம் இருக்கும்போது
எண்ணங்களை அளவாக அளந்து
கற்பனைகளை கலராக்கி ரசிக்கவும் முடியும்
 

கனவுகளை நம் வழிக்கு கொண்டு வரவும் முடியும்
சந்தோஷத்தை நாமும் அனுபவித்து
பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்
 

நல்லவர் யாரெனெ அறியாத போது
அமைதியாக உதடுகளை மூடி
கண்களை காதுகளை திறக்கவும்
நல்லவரெல்லாம் நல்லவரெ
என்னும் கூற்று என்றும் பொய்யானதில்லை
 

காணும் காட்சிகளெல்லாம்
கேட்கும் ஒலியிலெல்லாம்
நன்மை தீமை சட்டென
தெரியாது போனாலும்
மெது மெதுவே உணர்த்தும்
அதுவரை மனமே மௌனம் கொள்
 

மௌனத்தில் கற்கும் பாடங்கள் அதிகம்
மௌனம் தரும் சுகமும் அதிகம்
தாயின் மௌனதாலாட்டு கேட்டதுண்டா
தாய் விடும் மூச்சு தான் மார்பில் 
சாய்ந்திருக்கும் மகவுக்கு தாலாட்டு
 

மனைவியின் மௌன மொழி கேட்டதுண்டா?
கேட்டதை வாங்கி தராமல் வீடு திரும்பும்
கணவனுக்கு அன்பு பார்வையும் இல்லை
அன்பு மொழியில் கதையும் இல்லை
சுட்டெரிக்கும் மௌனமே மனவியின் மொழியது
 

மௌனமாய் ஒரு கணம் இருந்து பார்ப்போமா?

ஓம் நமச்சிவாய....

ஓம் நம சிவாய....

சித்தம் கலங்கி பித்தம் தெளிந்து
மனம் ஓங்கார கூச்சலிட
ஓம் நம சிவாய


பித்தன் இவன் நாடகமும்
சுற்றமெல்லாம் சூழ்ந்திருக்க
நெற்றிக்கண்ணால் எரித்த
அவனின் பாதி பராசக்தி


மற்றொரு அவதாரத்தில்
ஒன்றாய் புவியினை 
இருவரும் ஆண்டு
மக்கள் இருவரை
அழகாய் பெற்று


தலை கொய்த சிவன்
யானை முகத்தை 
விநாயகனாம் முதல் பிள்ளை
அவனுக்கு பொருத்தி
போற்றி போற்றி


உலகமே வினைகள் அகற்ற
விநாயகனே போற்றி
ஆறு முகங்களும் மனதை
கொள்ளை கொண்ட அழகும்
சிரித்தே மனதை அள்ளிய
கார்த்திகை நட்சத்திரத்தில்
பிறந்த முருகப் பெருமானே
போற்றி போற்றி


உக்கிரனிவன் காட்டினிலே
பழியாய் கிடந்து சாம்பலை பூசி 
ஊழிக்கூத்தாடி புலித்தோலணிந்தவன்


இன்னும் எத்தனை எத்தனை
நாடகங்கள் நடத்த போகின்றான்
என்னென்ன பாத்திரங்கள்
படைக்க போகின்றான்


விளையாடி பார்க்க
மனிதனா கிடைத்தான்??
ஓம் நம சிவாய
எனும் குரலுக்கு செவிசாய்த்து


முன்பே வந்து யோசிக்காமல்
வரங்களை அள்ளித்தந்து
தன் தலை தப்பிக்க


ஊழித்தாண்டவம் ஆடி
அரக்கர்களை அழிக்க
இதோ புறப்பட்டு விட்டான்
ஓம் நம சிவாய.....


தணிந்து இருப்பாய் சிவனே
குளிர்ந்து நடப்பாய் கங்காதரனே
நெற்றி கண்னை திறக்காது
நல்லதை மட்டுமே புரிந்துவிடு


அழிப்பதில் என்ன உனக்கு 
அத்தனை அவசரம்
காப்பதில் கருணை 
கொள்வாயே நந்திக்கு ஈஸ்வரனே.....
ஓம் நம சிவாய...

Friday, June 3, 2011

உலகம் சொல்லுமே....

மக்கி போகும் உயிரினங்களும்
உரமாகும் பொழுது
மனிதனின் பயனற்ற உடலால்
பயனும் உண்டோ

மானிடனாய் பிறப்பெடுத்து
தேவனாய் வாழ்ந்து
பயனுள்ளதாய் தன்
வாழ்க்கையை அமைத்து

பொய்யை களைந்து
அன்பை விதைத்து
நேசம் தொடர்ந்து
கருனை மனதுடன்

இனிதாய் கனிந்து
எளியோரை காத்து
மூத்தோரை வணங்கி
உலகில் உன்பெயர்
சரித்திரமாக்கி

பின் மறைந்தாலும்
உலகம் சொல்லுமே
தெய்வமாய் நம்முடன்
இன்னும் வாழ்கிறான் என்று...

Thursday, June 2, 2011

தற்கொலை தீர்வல்ல எதற்கும்....

பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போக நினைப்பது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு?


கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?

தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெறுவதற்கு....

அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்

தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....



Wednesday, June 1, 2011

அன்பாய் இரு.....

அன்பாய் இரு
ஆணவத்தை ஒடுக்க‌
துணியாதே


இயல்பாய் இரு
ஈ என இளித்து
உன்னை
வெளிப்படுத்திவிடாதே


உன்னை கட்டுப்படுத்தாதே
ஊடுருவும் கண்களை
சந்திக்கத் துணி


எட்டி நிற்கும்
புகழுக்காக‌
மயங்கி ஏங்காதே

ஏனெனில் புகழ்ச்சி
உனக்கு வாழ்த்தும்
ஆசியுமே...


ஐய‌ப்பாடு உண்டோ
இன்னும் உன‌க்கு?


ஒப்ப‌னை இல்லாத‌
வெள்ளை ம‌ன‌துன‌க்கு

ஓடுகிறாயா பய‌ந்து
ஓடினால் துர‌த்தும்
உல‌க‌ம் இது


நின்று நிதானி
திற‌மைக‌ளை
வெளிக்கொண்டுவா


த‌ய‌க்க‌மும் க‌ல‌க்க‌மும்
உன்னை அட‌க்கிவிடும்


மூத்த‌வ‌ர்க‌ளை வண‌ங்கு
ந‌ட்பை உய‌ர்வுப‌டுத்து
நாடி வ‌ரும்
ச‌கோத‌ர‌த்துவ‌த்தை
ஏற்றுக்கொள் அன்போடு


ப‌ண‌ம் பேசுவ‌தில்லை இங்கு
ம‌ன‌ம் ம‌ட்டுமே
ப‌கிர்ந்துக்கொள்கிற‌து


உண்மை மட்டுமே
உரைக்கும் அன்பை
முழுமையாய் பகிர்......

Monday, May 30, 2011

வார்த்தைகள்....

காதலில்
திக்கி திணறுகிறது…..

அழுகையில்
வெம்பி வெதும்புகிறது….

கோபத்தில்
இரக்கமில்லாது
பிரிவைத் தூண்டுகிறது…..

மகிழ்ச்சியில்
நிலை கொள்ளாமல்
தவிக்கிறது….

மயக்கத்தில் ஆழ்த்துகிறது……
வசியம் செய்கிறது…..

ஊடல்களில்
தப்பி மனதுக்குள்
செல்கிறது…

ஒருவரையொருவர்
அறிய உதவுகிறது….

ஒன்றாய் இணைக்கிறது….

கூடலில்
மனம் அமைதிக்கொள்கிறது….

கொஞ்சம் ஓய்வெடுக்கிறது
மௌனத்தில் உறைகிறது...


வார்த்தைகள்...

Sunday, November 28, 2010

பற்றற்ற நிலையை வேண்டி....

மனம் அமைதியற்று
நிலை தடுமாறி
கண்கள் பொலிவிழந்து
ஊண் உறக்கம் மறந்து
பிரிவின் ஏக்கம் மட்டும்
விடாது வலித்துக்கொண்டு
நினைவுகளை வலிய
பிடிவாதமாய் தன்னுள்
இருத்திக்கொண்டு
பற்றற்ற நிலையினை வேண்டி
ஒற்றையாய் பாதையில்
போய்க்கொண்டிருக்கிறது
நல்நட்பு ஒன்று..........

Saturday, August 28, 2010

நினைவுகள் நிஜங்களாகுமா....

நினைவுகள் வாழவைக்கும்
நினைவுகள் நிஜமாகுமா
முடிந்த நிமிடங்கள்
கழித்த காலங்கள்
பேசி சிரித்த தருணங்கள்
வாழவைக்கும்
தொலைத்தவை திருப்பி தருமா?

என் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் உன்னுடனே
என் மனம் நிறைந்த காதலும்
உன்னுடனே
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே

உன்னுடன் சந்தோஷித்த
தருணங்கள் என்னுடனே
உன் நினைவுகள்
என்னோடு இன்றும்

உன்னை அடைய
நினைக்கும் நினைவுகள்
நிஜமாகுமா பெண்ணே
உன் மடியில் தலை சாய்க்கும்
அந்த அற்புத நொடிகள்
எனக்கு கிடைக்குமா கண்ணே

என் கண்ணீர் உன் தோள்
நனைக்குமா கண்ணே
உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

இறைவன் என்னோடு
உன் நினைவுகள் என்னோடு
இறைவன் ஆசியோடு
பொய்க்காத நம்பிக்கையோடு
நினைவுகளும் ஆகும் நிஜங்கள்
அதுவும் என்னோடே

நம்பிக்கை காதல்
பொய்ப்பதில்லை என்றும்
எதுவும் சாத்தியமே
இதுவும் சத்தியமே…
Related Posts Plugin for WordPress, Blogger...