"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, July 25, 2011

முத்தான மூன்று முடிச்சு....(ரமணி சாரின் அன்பு அழைப்புக்கிணங்கி எழுதியது)


தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார் (http://yaathoramani.blogspot.com/)  அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்சு பதிவுத் தொடரினை இங்கே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். 

பிடித்த உறவுகள்

1.அம்மாவில் ஆரம்பித்து நட்புவரை இணைந்திருக்கும் எல்லா நல்ல உள்ளங்களும்...
2. இதே தான்...
3. இதே தாம்பா...

பிடித்த உணர்வுகள்.                

1.அன்பில் தொடங்கி அன்பில் தொடர்ந்து அன்பிலேயே அன்பிலேயே கரையும் 
2.இதே தான்...
3.இதே தாம்பா...

பிடிக்காத உணர்வுகள்.            

1.பிறரின் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அதிகபிரசங்கித்தனம்
2.இதே தான்...  
3.இதே தாம்பா....

முணுமுணுக்கும் பாடல்கள் 

1.குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...
2.பஜன் பாடல்கள்
3.பாரதியார் பாடல்கள்

பிடித்த திரைப்படங்கள்

1.ரேவதி நடித்த அத்தனை படங்களும்
2.இதே தான்...
3.இதே தாம்பா...

அன்புத் தேவைகள்

1.என்னவர்
2.என்னவரே தான்
3.என்னவரே தான்

வலிமையை அழிப்பவை

1.மனச்சோர்வு 
2.இதே தான்  
3.இதே தாம்பா

குட்டித் தத்துவம்

1.முகத்துக்கு முன்னும் முதுகுக்கு பின்னும் நல்லவற்றையே பேசு
2.அன்பை பகிரும்போது ஆத்மார்த்தமாய் பகிர்
3.வேண்டாத வார்த்தைகளை காதில் கேட்டாலும் அது மனம் வரை சென்று தாக்காமல் பார்த்துக்கொள்

பயமுறுத்தும் பயங்கள்

1.கூட இருந்தே குழி பறிப்பது
2.எதிரில் சிரித்து புறம் பேசுவது
3.நம்பிக்கை துரோகம்

அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.முக்தி
2.முக்தி
3.முக்தி

கற்க விரும்புவது

1.ஹிந்துஸ்தானி இசை  
2.கண்டெம்ப்ரரி நடனம்   
3.வெண்பா

வெற்றி பெற வேண்டியவை 

1.இடைவிடா முயற்சி
2.வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை
3.இறையின் அருள்

சோர்வு நீக்க தேவையானவை

1.இசை
2.நடனம்
3.குழந்தையின் சிரிப்பு

எப்போதும் தயாராக இருக்க வேண்டியது  

1.உதவும் மனப்பான்மை
2.இதே தான்...
3.இதே தாம்பா...

முன்னேற்றத்திற்கு தேவை   

1.முயற்சி  
2.தோல்வியிலும் துவளாது எழும் தன்மை  
3.வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை

எப்போதும் அவசியமானது 

1.தன்னிடம் இருப்பதில் ஏழைகளுக்கு தந்து உதவும் மனப்பான்மை
2.இதே தான்
3.இதே தாம்பா

பிடித்த தத்துவம்

1.இதுவும் கடந்து போகும்
2.பணத்தை சேமிக்காதீங்க நல்லதை செய்து புண்ணியத்தை சேமிங்க
3.நமக்கு துன்பம் செய்தவருக்கும் நல்லதையே நினைங்க

தெரிந்து தெரியாது குழப்புவது 

1.இதுவரை பார்க்காத கோவில்கள் கனவில் வருவது
2.அந்த கோவில்கள் பற்றிய விவரங்கள் அறிந்து போகும் வரை விடாது கனவாய் வருவது
3.கண்டுபிடித்து போனால் கனவில் வந்த ஸ்வாமியே அங்கு கர்ப்பகிரஹத்தில் இருப்பது

எரிச்சல் படுத்துபவர்கள்

1.ஸ்வாமி கும்பிடும்போது இடையில் போன் அடிப்பது
2.தூக்கத்தில் இருக்கும்போது போன் வருவது
3.உறக்கம் கலையும் முன்னரே விடிந்துவிடுவது

மனங்கவர்ந்த பாடகர்கள்

1.எம் எஸ் சுப்புலட்சுமி அம்மா
2.வாணி ஜெயராம்
3.சின்னக்குயில் சித்ரா

இனிமையானவை 

1.பாகவதம் படிப்பது
2.பாடுவது
3.படம் வரைவது

சாதித்தவர்களின் பிரச்சனைகள் 

1.வெற்றியை தக்கவைத்துக்கொள்ள போராடி முடியாதபோது சோர்ந்து போவது
2.இதே தான்..
3.இதே தாம்பா...

பிடித்த பழமொழிகள்

1.தாயிற் சிறந்த கோவிலும் இல்லை...என்னவர் சொல் மிக்க மந்திரமில்லை...என்ன மாத்திட்டேனா?? :)
2.நேரம் பொன் போன்றது (ஆமாம் டிவி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணிராதீங்கப்பா...
3.உழைப்பே உயர்வு தரும்.... இல்லையா பின்ன?

 பதிவிட அழைக்கும் அன்பு உள்ளங்கள்

1.புலவர் சா இராமானுசம்(http://pulavarkural.blogspot.com/)
2.சிவகுமாரன்(http://sivakumarankavithaikal.blogspot.com/)


அருமையான இந்த வாய்ப்பை நல்கிய ரமணி சாருக்கு என் அன்பு நன்றிகள்...

Sunday, July 24, 2011

கதை 10. மரணத்தின் நிழல்....


கதை 10. மரணத்தின் நிழல்

என்னாச்சு ஆண்ட்டி சத்யாவுக்கு?? அதிர்ச்சி நீங்கா முகத்துடன் மஞ்சு...

தெரியலம்மா நல்லா தான் இருந்தா ராத்திரி தண்ணி வேணும்னு கேட்டா கொண்டு வந்து கொடுக்கிறதுக்குள்ள.... என்று நிறுத்தி வாய் பொத்தி அழுதார் சத்யாவின் அம்மா....

இதோடு இது எத்தனையாவது சாவு என்று யோசித்துக்கொண்டே நடந்து வந்ததில் வீடு வந்ததை அறியாது போய்க்கொண்டே இருக்க....

நீயும் உண்டு காத்திரு என்ற சப்தம் அவள் நடையை நிறுத்தியது...

பயத்துடன் திரும்பி பார்த்தாள் யாரு யாரு என்று கத்த நினைத்து தொண்டைக்குழிக்குள் என்னவோ அடைத்தது போல் உணர்ந்தாள்....

பயத்தில் வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் மஞ்சு....

நான்கே நாட்களில் சகுந்தலாவின் மறைவு.....

என்ன தான் நடக்கிறது தலையை பிய்த்துக்கொண்டாள்....

பாட்டி வீடு போய் வந்தால் கொஞ்சம் மனசு சாந்தியாகுமா என்று எண்ணியபடி வீட்டில் வேலைகளை வேகமாக முடித்துவிட்டு பஸ் பிடித்து போய் பாட்டி வீட்டில் இறங்கினாள்...

வசந்தி அங்கே வாழை மரத்தடியில் உட்கார்ந்து அரிசி புடைத்துக்கொண்டிருப்பதை கண்டாள்...

வசந்தி சிநேகபாவத்துடன் சிரித்துக்கொண்டே எப்டி இருக்கீங்க மஞ்சு என்ன இந்த பக்கம் என்று கேட்டுக்கொண்டே இருந்தபோது தான் அந்த மாறுதலைக்கண்டாள்....

சகுந்தலாவை எப்படி கொண்டு போனோம் தெரியுமா என்ற குரல் சத்தியமாக வசந்தியுடையது இல்லை...

அதிர்ச்சியுடன் கால்கள் நகரமுடியாது நாக்கு ஒட்டிக்கொள்ள பயம் விலகா கண்களுடன் பார்த்தாள்....

கும்பலாக தான் போனோம்... கதை பேசிக்கொண்டே இருந்தோம்..... கிளம்பும் நேரம் வந்தது..... பாடத்தொடங்கினோம்..... எம்மில் ஒருவர் சகுந்தலாவைத்தூக்கிக்கொண்டு போனோம்.... அடுத்து நீ காத்திரு எங்களுக்காக..... சொல்லி முடித்து உடல் உலுக்க வசந்தி சகஜ நிலைக்கு மாறினாள்... என்ன இங்கயே நிக்கிறீங்க? குடிக்க நீர் கொடுக்கவா என்று தன் இயல்பான குரலில் கேட்டாள் வசந்தி....

மஞ்சு திரும்ப எத்தனிப்பதற்குள் பாட்டி அங்கே முருங்கைக்கீரையுடன் தட்டில் வைத்துக்கொண்டு அம்மிக்கல்லில் மிளகாய் வைத்து அரைக்க வந்துக்கொண்டிருந்தார்....

மஞ்சு இதை அரைத்துக்கொடு என்றபடி தட்டை மஞ்சுவின் பதிலுக்காக காத்திராமல் வீட்டுக்குள் போனார்...

செத்தவர் உயிர்க்கமுடியுமா? என்ன நடக்கிறது ஒன்றுமே புரியவில்லையே என்று பயத்துடன் முருங்கைக்கீரை மிளகாய் உப்பு எல்லாம் ஒன்றாய் அம்மிக்கல்லில் வைத்து அரைக்கும்போது கருப்பு உருவத்துடன் சிவந்த கண்களுடன் மண்டைஓட்டு தலைகள் கோர்த்த மாலையுடன் கோரப்பற்களுடன் காளி தோற்றத்தில் சிரித்தாள் ஒரு பெண் மஞ்சுவின் முன்....

பயத்தில் கண்கள் சுழற்ற மயக்கத்தில் போகுமுன் காளியின் அசரீரி குரல் காதில் கேட்டது.....

மஞ்சு அடுத்து உன்னை தான் குறி வைத்திருக்கிறார்கள்... இதே போல் கும்பலாய் வருவார்கள்.... நீ அவர்கள் கண்ணுக்கு தென்படாது ஒளியப்பார்ப்பாய்... விடமாட்டார்கள்.... உன்னையும் கொண்டுப் போவார்கள்.... கதைப்பேசிக்கொண்டே இருப்பார்கள்.... கிளம்பும் நேரம் பாட்டுப்பாடும் வைபவம் தொடங்கும்.... உன்னை கொண்டுப்போவார்கள்.... கொண்டுப்போவார்கள்.... மயக்கத்தில் பூரணமாய் ஆழ்ந்தாள் மஞ்சு.....

என்னாச்சு என்னாச்சு என்று எல்லோரும் பதறி ஓடி வர சற்றுமுன் முருங்கை கீரை தட்டில் கொடுத்த பாட்டி அங்கே படத்தில் சிரித்துக்கொண்டிருக்க மாலை வாடிப்போய் காய்ந்து ஆடிக்கொண்டு இருந்தது....

மஞ்சு வந்து என்னிடம் பேசிக்கிட்டு இருந்தாங்க குடிக்க தண்ணி வேணுமான்னு கேட்டேன் ஒன்னும் பதில் சொல்லாம இங்க வந்து மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களே மம்மிக்கு போன் போட்டு சொல்லிருவோமா? டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம் தூக்குங்க....

மருந்து வாசனையும் டெட்டால் வாசனையும் பிடிக்காத மூக்கு மெல்ல விரிந்து கண்கள் மலர்த்தினாள் மஞ்சு.....

ஆஸ்பிட்டலில் இருப்பதை உணர்ந்தாள்... சுற்றி குடித்தனக்காரர்கள் நிற்பதை பார்த்து என்னாச்சு எனக்கு என்றாள்...

ஒன்னுமில்லம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க... ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்... ஒன்னுமில்லை சின்ன மயக்கம் தானாம் சோர்வுன்னு டாக்டர் சொன்னார் நீங்க தூங்குங்க நாங்க மம்மிக்கு போன் பண்ணிட்டோம் இதோ வராங்களாம் இடைவிடாத குரலில் வசந்தி சொல்லிக்கொண்டே போக இதெல்லாம் கனவா இல்லை நான் இதற்கு முன் கண்டது கனவா என்ற பிரம்மை விலகாத நிலையில் மஞ்சு திரும்ப ஆழந்த உறக்கத்தில் போனாள்....

வீடே ஒரே கொண்டாட்டமாக இருந்தது... குடும்பத்தினர் உறவுகள் எல்லோரும் ஒரே இடத்தில் சேரும்போது சிரிப்புக்கும் சத்தத்துக்கும் குறைவே இருப்பதில்லை....

பெரியம்மா குடும்பத்தினர் , அத்தை குடும்பத்தினர் மாமா குடும்பத்தினர் இப்படி எல்லாரும் சேர்ந்து வீட்டில் குமிந்திருப்பதை கண்டு மஞ்சுவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது....

எல்லோரும் சாப்பிட்டு ஒரு சிலர் கண்ணயர ஒரு சிலர் சிரித்து பேசிக்கொண்டிருக்க சத்தமே இல்லாது நாலைந்து பேர் ஒன்றாய் வீட்டில் நுழைவதை மஞ்சு பார்த்தாள்... உடல் முழுதும் சிலிர்த்து அடங்கியது.... யாரும் இவளை பார்க்கவில்லை.... ஆனால் மஞ்சுவின் பார்வை அவர்கள் மேல் படுவதை அவர்கள் அறிந்துவிட்டார்களோ என்ற பயத்தில் அவள் உடல் பதற தொடங்கியது....ஐயோ இவர்கள் கண்ணில் நான் படக்கூடாது படவே கூடாது என்று சொல்லிக்கொண்டே போய் ஒரு ரூமில் ஒளிந்துக்கொண்டாள் பீரோவின் பக்கம் இருந்த கொஞ்சம் இடத்தில்.....

வந்த கும்பல் எல்லோரிடம் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது..... எல்லோரும் இவர்களுக்கு உபசரிப்பதையும் நீர் குடிக்க கொடுப்பதையும் பயத்துடன் சத்தங்கள் மூலம் உணர்ந்தாள்...

அத்தைப்பெண் சுகன்யாவும் தங்கை ஷோபியும் கதவை திறந்துக்கொண்டு வர இவள் பீரோவின் அருகே ஒளிந்திருப்பதை கண்டு சிரித்தனர்.

ஏன் மஞ்சு ஒளிஞ்சிருக்கே?

பயமா இருக்கு...

ஏன்?

என்னை கொண்டு போக வந்திருக்காங்க...

யாரு இப்ப வந்தவங்களா? இவங்க உங்க டாடி ஃப்ரெண்ட் குடும்பமாம்... வந்து பேசிக்கிட்டு இருக்காங்க.... இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிருவாங்க... ஏன் மஞ்சு இப்படி பயந்து வியர்த்திருக்க?

ப்ளீஸ் ப்ளீஸ் ஷோபி.... என்னை காப்பாத்து...

என்னாச்சுடி ?

என்னை இவர்கள் பார்க்க கூடாது... நான் இங்கிருப்பதை இவர்கள் அறியக்கூடாது ப்ளீஸ் ப்ளீஸ் என்று அழத்தொடங்கினாள் மஞ்சு....

மஞ்சு நீ ஏன் இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாம நடந்துக்கிறே? அவங்க கிட்ட வாங்க எப்படி இருக்கீங்க வணக்கம்னு சொல்லிட்டு வந்துருன்னு கையை பிடிக்கும்போது....

மஞ்சுவின் கண்களில் மரண பயம் தேங்கி இருப்பதை கண்டு ஷோபி கலக்கமுற்றாள்....

மஞ்சு என்னாச்சு ஏன் இப்படி பயப்படறே?

என்னை இந்த ஒரு முறை காப்பாற்றிடு ஷோபி ப்ளீஸ் என்று ஷோபி கைப்பிடித்து அழுதாள் மஞ்சு....

சரி சரி பீரோவின் அருகே ஒளியாதே..... மூச்சு முட்டும்... நானே கதவை சாத்திக்கிட்டு போறேன்... ஃபேன் போட்டு படு நீ என்று சொல்லிவிட்டு கதவை வெளிப்புறம் சாத்திவிட்டு போனாள் வந்தவர்களுக்கு டீ வைக்க....

மஞ்சு பயத்துடன் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டே அவர்கள் குரலை கேட்டுக்கொண்டு இருந்தாள்.....

கொண்டு போவோம் கலக்கமில்லாமல் இயல்பாய் இரு..... இந்தப்பயணம் எளிது உனக்கு... சொன்னால் கேளு என்ற சப்தம் மண்டையில் இடியாய் இடித்தது.... மனம் பயத்தில் உதறிப்போட உடல் சக்தியே இல்லாது போவதை உணர்ந்தாள் மஞ்சு....

சடாரென்று கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு பதறி எழுந்தாள்....

அத்தைப்பெண் அனு கதவை திறந்துக்கொண்டு நின்றிருந்தாள்... ஆஜானுபாவ தோற்றம் அனுவுக்கு....

மஞ்சு அதிர்ச்சியுடன் அனுவை பார்த்தாள்... கால்கள் நன்றாய் இருக்கிறதே அனுவுக்கு..... நம்பமாட்டாது பார்த்தாள்... அனுவின் கால்கள் ஊனம் அல்லவா? எத்தனையோ வருடங்களாக வீல்சேரில் தானே அனுவின் வாழ்க்கை இன்று எப்படி எப்படி என்று அவள் அதிர்ச்சியுடன் யோசிக்கும்போதே ஷோபி வேகமாக ஓடி வந்து கதவை மூடிவிட்டு அனுவை கடிந்த சப்தம் கேட்டது.....

ரூம் முழுக்க அமானுஷ்யமாய் என்னவோ உணர்ந்தாள் மஞ்சு.....

திரும்ப கதவு திறக்கும் சப்தம் கேட்டு பயத்துடன் பார்த்தாள் மஞ்சு...

ஷோபி உள் நுழைந்து கவலைப்படாதே அவங்க எல்லாரும் கிளம்பறாங்க... நீ பயமில்லாம இரு என்று சொல்லி சிரித்துவிட்டு போனாள் கதவை வெளிப்புறம் சாத்திக்கொண்டு...

இடைப்பட்ட அந்த சின்ன கதவின் இடுக்கில் ரெண்டு நெருப்பாய் எரியும் கண்களும் பஞ்சுபொதியான தலைமுடியை பார்த்து அலறினாள் மஞ்சு....

அந்த கிழவியின் கண்கள் நெருப்பாய் ஜொலித்தது... பாடத்தொடங்கினாள் கதவருகே நின்றுக்கொண்டு.....

பெற்றவரும் உற்றவரும் அருகே இருந்து சூழ.....
கொண்டு போக வந்திருக்கும் விதியை நோக.....
போடா அவளை கொண்டு வா என்று கர்ஜிக்கும் குரலில் பாட

சட்டென சுவரில் ஒரு பக்கம் திறக்க அதிர்ச்சியுடன் மஞ்சு பார்த்துக்கொண்டிருக்க....

ஆஜானுபாவ தோற்றம் கொண்ட அவன் மஞ்சுவை அலாக்காய் தூக்க....

மஞ்சு அருகே இருக்கும் பீரோவின் பிடியை பிடித்துக்கொண்டு அலறினாள்...

காப்பாத்துங்க காப்பாத்துங்க....யாரேனும் காப்பாத்துங்க என்று அலறிக்கொண்டே திரும்பினாள்...

இதுவரை அந்த ரூமில் அவள் மட்டும் இருந்தது போக இப்போது சுற்றம் முழுக்க உறவினர்கள் முழுக்க சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டாள்.... அவள் அலறலை யாருமே லட்சியம் செய்யவில்லை... இன்னும் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்க....

மஞ்சுவை தூக்கியவனின் கைகளில் உடல் பாரம் முழுதும் இருக்க கைகளை மட்டும் பீரோவின் பிடியில் இருந்து எடுக்காமல் அலறிக்கொண்டிருக்க அலாரம் சத்தம் அடிக்க சட்டென கண் விழித்தாள் மஞ்சு......

விண் விண் என்று தலை வலிக்க ஆரம்பித்தது....

திரும்ப கண் மூடினாள் எங்கே அந்த கனவு தொடருமோ என்று பயந்தாள்.... இத்தனை பயங்கரமான கனவு ஏன் எனக்கு இப்படி என்று யோசிக்கும்போது காதருகே ஒரு குரல் கேட்டது....

உன்னை கொண்டு போகாமல் விடமாட்டாங்க..... நீ தப்பிக்கவே முடியாது.....


Thursday, July 14, 2011

எனக்கு நீ வேண்டும் என்றென்றும் உனக்கு நான் வேண்டாமா ஒருபோதும்? :(


உனக்காவது உன் காதல் தோற்றதை
சொல்லி அழ உறவிருக்கிறது...
உன்னோடு நான் கொண்ட காதலை
சொல்லி அழ எனக்கிங்கே யாருமில்லையே

உன் நினைவுகளுடன் போராடி
உன் மேல் கொண்ட கனவுகளுடன்

நம்பிக்கை வளர்த்து
உன்னோடு இணைய காத்திருந்த வேளை


வேண்டாம் நீ என்று என்னை வீசிவிட்டாயே
உன் தவறுகளுக்கு மன்னிப்பை மட்டுமே தந்து
உன்னை அணைத்தேனே அன்புடன்
என் தவறுகள் நீ பொறுக்குமளவுக்கு
உன் மனதில் நானில்லையா அன்பே :(

எனக்கு நீ வேண்டும் அன்பே என்றென்றும்
உனக்கு நான் வேண்டாமா ஒருபோதும்?? :(

Tuesday, July 12, 2011

கதை 9.இத்தனை பசி உனக்கு ஏன்?

கதை 9.இத்தனை பசி உனக்கு ஏன்?



ஹப்பா மூச்சு முட்டறதே.... முனகலோடு திரும்ப முயன்றேன்...

முடியாது துவண்டு ஹீனமான மூச்சுவிட்டேன்...

வெளியே என்னைக்காண ஒரு கூட்டமே சந்தோஷமாக காத்திருக்கிறது....

எப்ப வெளியில் வருவேன்? ம்ம் இன்னும் ரெண்டு வாரமோ மூணு வாரமோ... 

வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் போலிருக்கே...

இப்ப யோசிச்சு என்னத்தை கிழிக்க போறேன்?

டைமுக்கு சாப்பிட்டு தூங்கி எழுவதும் தானே என் வேலை...

ஆனால் புத்தி ஒரு நொடி கூட தூங்கவிடமாட்டேங்குதே....

ஒரே சத்தம் வெளியே... அழுகுரல் துப்பாக்கி வெடிக்கும் சத்தம்.. 

என்ன ஆச்சோ தெரியலை.....

நான் வெளியில் வந்து என்ன செய்யப்போகிறேன்?

ஒன்றும் புரியவில்லை...

என்னை எப்படி ஏற்கும் உலகம்?

ஏற்கனவே என் தாய் ஜெயிலில் தன் காலத்தை கழித்திருக்கிறாள்....

வெளியில் வந்து நல்லது செய்வேனா இல்லை அட்டூழியங்கள் புரிவேனா?

என்னைச் சுற்றி ஒரே இருட்டு.....

கதகதப்பான சூடு என்னை அழுத்துகிறது.....

ஹும் வெளியே போகத் துடிக்கிறேன்...

ஆனால் குறிப்பிட்ட தேதியில் தான் வெளியில் செல்ல முடியுமாம்...

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்த இருள் வாழ்க்கை? யோசனையோடு புரண்டேன்....

சரி பரவாயில்லை ரெண்டே வாரம் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துடுவோம்.....

என் அம்மா சுரேகா என் வரவை எப்படி எதிர்கொள்வாளோ? என்னென்ன கனவுகளுடன் என் வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாளோ? உறக்கம் வராது யோசனையில் ஆழ்ந்தேன்.
என் தாய் என்னிடம் தனியாக ஆசையுடன் கூறிக்கொண்ட வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன்...

ப்ரணவ் என் துயர் எல்லாம் துடைக்க நீ வரும் நாளை எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் மகனே...

நீ இல்லாத இந்த உலகம் எனக்கு சூனியமாக தெரிகிறது ப்ரணவ்....

உன்னை காணாது என் கண்கள் உறங்க மறுக்கிறது...

ப்ரணவ் அம்மாவின் அன்பை நினைப்பாயா?

அம்மா படும் கஷ்டங்கள் உன்னிடம் சொல்லமாட்டேன் ப்ரணவ்....

நீ வாழனும்... நிறைய சாதிக்கனும்.... இன்னும் என்னென்னவோ என் மனதில்.....

திடிரென்று இடி போன்ற ஒரு சத்தம் உலுக்கியது.... நிமிர்ந்து பார்க்குமுன் பெரிய நெருப்பு பிழம்பொன்று விழுந்தது போலிருந்தது...

ஐயோ என் கண் கூசுகிறதே... என் உடம்பெல்லாம் பாரமாகிறதே நான் கண் திறக்க முயன்று வலியில் கதற முயன்று தோற்றேன்...

என் கால் என் காலுக்கு என்ன ஆச்சு ஐயோ என்ன இது சத்தம் என் கால் தனியாக ஐயோ இது என்ன கொடூரம் என்னால் வாய் விட்டு அழமுடியாது விக்கித்து என் கால் பிய்ந்து ஊசலாடுவதை பார்த்தேன்...

இத்தனை நாள் பனிக்குடத்துள் நீச்சலிட்டுக்கொண்டு சந்தோஷமாய் இன்னும் ரெண்டே வாரத்தில் வெளிவந்து உலகை பார்ப்பேன் என்று குதூகலித்தேனே...

இறைவா என் பிறப்பு அவ்வளவு தானா? அழக்கூட திராணியற்று என் தாயின் வயிறு வெடித்து நான் வெளிவந்து என் உடல்பாகங்கள் சிதைந்து என்தாய் சுரேகாவின் நெஞ்சின் மேல் விழுந்திருந்தேன்...

அம்மா அம்மா உன் அமுது குடிக்கும் அதிர்ஷ்டம் கூட இல்லாது என்னையும் உன்னையும் கொன்று விட்டனரே பாவிகள்...

அம்மா அம்மா என்று என் கடைசி மூச்சு நிற்குமுன் கேட்டகேள்வி இறைவனை உலுக்கியது....

உருவான என்னை உலகம் காணுமுன்னே கொன்றாயே இறைவா... இத்தனை பசி உனக்கு ஏன்?

என்னைப் போல் இன்னும் எத்தனை பிஞ்சுகள் உலகை காணுமுன் மடிந்தனரோ இறைவா?

கொடுமையை அழிக்க அவதாரங்கள் எடுக்கத்தான் மறந்தாயோ இறைவா....

பாவம் செய்தவருக்கு துர்மரணம் என்ற இறைவா...

பிறக்கவே இல்லையே நான் இன்னும்... என்னை இப்படி சிதைத்துக் கொன்றாயே நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த கொடூர தண்டனை கொடுத்தாய்?

ஈழம் முழுவதும் பலி கொண்டபின் தான் அவதாரம் எடுப்பாயோ இறைவா... மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக நின்று என் திறக்காத கண்கள் நிரந்தரமாக மூடியது.....

Saturday, July 9, 2011

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

கருத்து பரிமாற்றம் புரிகிறேன் என்று
பிடிவாதமாய் என் மனதை பிடுங்கிக்கொண்டவள் நீ

வாழ்க்கை துணையாய் வருவாயா என்றதற்க்கு
மௌன கண்ணசைவில் சம்மதம் சொன்னவள் நீ

பிள்ளையில்லா மலடியென்று ஊரே உமிழ்ந்தப்போது
குழந்தையாய் கண்ணீரால் என் மடி நனைத்தவள் நீ

காலம் என்னை சமூகத்தில் உயர்த்திய போது
அன்பாய் அமைதியாய் ஆர்பரித்தவள் நீ

மூச்சுக்காற்று அடங்குமுன் என் வழி காத்திருந்து
விழிமூடா இமையோரம் மூச்சை நிறுத்தியவள் நீ

வயோதிகத்தில் தனிமையில் புரண்டழுதப்போது
உன் நினைவுகளால் தாலாட்டி மெல்ல உறங்கவைத்தவள் நீ

காலம் முடிந்து உன்னுடன் சேர எதிர்ப்பார்த்த வேளையில்
சில்லென பனியாய் அணைத்து கைவிரல் கோர்த்து கண்மூட வைத்தவள் நீ

உன்னுடனே சுவாசித்து உன்னுடனே வாழ்ந்து உன் காதலில் திளைத்து
என் இறுதி மூச்சும் உன்னுடனே கலக்க நம் சுவாசம் ஒன்றாய் நிறுத்தியவள் நீ.......

கறுப்புக்கயிறு....

கறுப்புக்கயிறு....

என் கையில் நீ கட்டிய 
கறுப்புக்கயிறு நீரில் நனைந்து
இறுக்கும்போதெல்லாம்
உன் அணைப்பை
நான் நினைவுகூறுகிறேன் அன்பே.....

உயிர்ப்பித்து விளையாடுவது ஏன்?


உயிர்ப்பித்து விளையாடுவது ஏன்?

என்றோ கொன்றாய் மனதை இறைவா
நடை பிணமாய் அலைய விட்டாய்
கர்மபலன் ஒன்றே காரணம் என்றாய்
சரி என்றே தொடர்ந்தது வாழ்க்கை

விளையாட்டை தொடங்கிவிட்டாய்
இனி வெற்றி தோல்வி யாரறிவார்
மனித விதியை உன் வசமாக்கி
மனிதரிடம் ஏன் முயற்சிக்கிறாய்
உன் சித்து மாயமெல்லாம்..

இருண்ட குகையில் வெளிச்சமாய்
நெருப்பில் இருந்து மீட்டவராய்
உயிரை கொடுத்த ரட்சகனாய்
உயிர்ப்பித்து விளையாடுவது ஏன்?

நம்பிக்கையே நீ என்றானப்பிறகு......

நம்பிக்கையே நீ என்றானப்பிறகு.....

கண்ணாய் நீ இருக்கும்போது
பார்வை எனக்கெதற்க்கு

கனிவாய் மொழிஉரைக்கும்போது
மௌன மொழி எதற்கு

நாட்டியமாய் நீ அருகிலெனும்போது
துணைக்கம்பு எனக்கெதற்கு

உயிர்ப்பாய் அணைப்பில் இருக்கும்போது
கனவாய் மலர்வது எதற்கு?

அன்பாய் உணவூட்ட நீ இருக்கும்போது
பசியாய் கிடப்பததெற்கு?

தாயாய் நீ தலை கோதும்பொழுது
அனாதை என்ற சொல் எதற்கு?

வாழ்க்கை உன்னுடன் என்றானப்போது
நீயும் நானும் தனி என்ற சொல் எதற்கு?

உயிராய் நீ என்னுடன் கலந்தப்பின்னே
ஒற்றையாய் நான் சுவாசிப்பததெற்கு??

உடலாய் உணர்வாய் எல்லாமாய் நீ என்றானப்போது
இன்னும் நமக்குள் பிரிவென்னும் சொல் எதற்கு

நம்பிக்கையே நீ என்றானப்பிறகு
வாழ்வு குறித்த பயமெனக் கெதற்கு... ......

மரணம் அன்பை வென்றுவிட்டதோ?






















தோள் சாயும் கணங்களில்
கண்கள் உறங்கும் வேளையில்
அன்பு விழித்துக்கொள்கிறதோ
தலையை கோதி அணைக்கிறதோ?

மரண பயத்தை நீக்குகிறதோ?
நானிருக்கிறேன் அன்பே என்கிறதோ?
உடல் விறைத்து எரிந்தாலும்
உள்ளம் உயிர்ப்பதை சொல்கிறதோ?

கண்கள் இறுதியாய் மூடினாலும்
மனதில் நிலைத்து நிற்கிறதோ?
யாதுமாய் உன்னுடன் நானிருக்கும்போது
மரணத்தைக்கூட அன்பு வென்றுவிட்டதோ?

கைகள் கோர்த்துக்கொள்ள
தோள்கள் கட்டிக்கொள்ள
விழிகளில் கண்ணீர் பெருக
உள்ளம் ஒன்றாய் இணைந்தது
உயிரும் ஒன்றாய் பிரிந்தது...

தானத்தில் சிறந்தது எது ???

ஒட்டிய வயிறோடு
எலும்பு கூடு தோற்றத்தில்
பெரியவர் ஐயா பசி
என்றபோது யோசித்தேன்
அன்னதானம் சிறந்ததோ 

தானம் தந்த கண்கள்
ஒளிப்பெற்று உலகம் கண்டு
பூரித்தப்போது யோசித்தேன்
கண் தானம் சிறந்ததோ

தந்த ரத்தத்தில் உயிர்த்த
குழந்தை தத்தி தவழ்ந்து 
அருகில் வந்து
கன்னத்தில் முத்தமிட்டப்போது
யோசித்தேன் 
ரத்த தானம் சிறந்ததோ

கண்மங்கி உடல் உழைத்து
வறுமையில் உழன்று
படித்து சாதிக்க துடிக்கும் இளங்குருத்துகளுக்கு
கல்விக்கண் திறக்க அவசியமென்பதால்
யோசித்தேன்
கல்விதானம் தான் சிறந்தததோ

நிதானம் தவறி பலமுறை
கோபத்தில் அடித்தப்போதும்
கண்ணீரோடு எதிர்த்து பேசாத
என் அன்பு மனைவி

என் கடும்சொல் பொறுக்காது
எரிந்த அவள் உடல் சாம்பலாகி
எனக்கு உணர்த்தியது
தானத்தில் சிறந்தது நிதானம் என்று...
Related Posts Plugin for WordPress, Blogger...