"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, April 27, 2015

ஹலோ ஹலோ சுகமா?

அன்பு நண்பர்களே,

எல்லோரும் சௌக்கியமாப்பா?

இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா...

அப்பப்ப வந்து அப்பப்ப காணாம போய் திரும்ப அப்பப்ப வந்து எட்டிப்பார்ப்பதற்கு காரணம் என்னால அதிகம் டைப் பண்ண முடியாத நிலை..

முகநூலில் கொஞ்சமா டைப் பண்ணினா போறும்னு அங்க டைப்பிட்டு இருந்தேன்...

இப்ப அங்கயும் க்ளாஸ் கட் அடிச்சாச்சு...

டைப் அதிகம் அடிக்க முடியல... வலி பின்னுது.. அதான் விஷயமே..

வை.கோ அண்ணா கிட்ட இருந்து ஒரு அவசர மெயில் வந்தது.

என்னன்னு பார்த்தால் என்னவோ என் ப்ளாக் பக்கம் போனால் அண்ணாவை ப்ளாக் பண்ணி ஏதோ விளம்பரத்தை தள்ளிவிடுகிறதாம்..

வேலை பளுவுக்கிடையே ஓடிவந்து என்னன்னு பார்த்தால் என்னையும் போடி வெளியே என்று விரட்டியது..

ஒரே டென்ஷனாகி யாரை அழைப்பது.... என்று யோசித்து ஆபத்பாந்தவன் தனபால் சாரோட மொபைல் நம்பர் எடுத்து அடித்தால் ரிங் போகவே இல்ல.

சரின்னு கூகுளில் டைப்பினேன் அனாவசியமா உள்ள வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிட்டு ஜம்முனு உட்கார்ந்துட்டு இருக்கே என்ன பண்ண அப்படின்னு?

அதுவும் சொல்லி கொடுத்தது வேண்டாத்த சங்காத்தமெல்லாம் விட்டு ஒழி என்பது போல் 3 வது பார்ட்டி கெட்ஜெட் எல்லாம் ரிமூவ் செய் என்று..

நானும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல் போய் கன்னாபின்னாவென்று என்னன்னவோ பதட்டத்தில் ரிமூவ் செய்து தள்ளிட்டேன்..

அதன்பின் தான் விளம்பரம் காஞ்சனா 2 ல வந்த முனி போல் காக்கா ஊச் ஓடியே போச்....

எல்லாரும் சேர்ந்து ஒண்ணா அடிக்க வராதீங்க. தாங்க மாட்டேன் ஆமாம் சொல்லிட்டேன் :)


ஊருக்கு போவதே கைவலிக்கு மருத்துவம் செய்துக்கொள்ள தான்....

அதனால நான் சொல்ல வரது என்னன்னா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு மஞ்சு பேச்சு அல்பாயுசுல போச்சு என்றில்லாம ஊருக்கு போய் நல்லா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்து சமர்த்தா பதிவுகள் போடலன்னாலும் முடிந்த அளவு பதிவுகள் படித்து கருத்து கண்ணாயிரமாக கண்ணும் கருத்துமாக கருத்திடுகிறேன் என்று உறுதி சொல்லிக்கொ(ல்)ள்கிறேன்






ennavo agudhu en blog la :(

என்ன நடக்குது என் ப்ளாக்ல யாரேனும் உதவுங்கப்பா.. வை.கோ அண்ணா சொல்லி தான் தெரியும்...

Wednesday, November 26, 2014

இனிய இம்சை....



ரகசியம்
சொல்லத்தான்
என்னை நெருங்குகிறாய்
என்றே நினைத்திருந்தேன்
என் காதுமடல்
உன் பற்களில்
சிக்கிக்கொண்டு
இனிமையாய்
இம்சிக்கப்படும்வரை !!!

Monday, November 24, 2014

இன்று முதல் ஏழு நாட்கள் வலைச்சரத்தில் நான்.. 24.11.2014 - 30.11.2014


அன்பு நண்பர்களே,

இன்று முதல் வலைச்சரத்தில் ஏழு நாட்கள் என் மனம் கவர் பதிவுகளை அறிமுகப்படுத்த இருக்கிறேன். எல்லோரும் என் உடன் பயணிக்க வேண்டுகிறேன்.

மஞ்சுபாஷிணி அறிமுகம்

24.11.2014  - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - முதல் நாள்

25.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்

26.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - மூன்றாம் நாள்

27.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - நான்காம் நாள்

28.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்

29.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்

30.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்

விடைபெறுதல்






Saturday, November 22, 2014

கோபம்...




உன் அழகையும்
புன்னகையையும்
பொறாமையால்
அள்ளிக்கொண்டு
போகிறதுப்பார்
நீ என் மேல் 
கொண்ட 
கோபம் !!!

அவசர சமையல்....

அவசர சமையல்... ஆனால் அரைகுறை சமையல் இல்லை...

அவசரத்துக்கு இட்லி மாவு குறைவா இருந்தால் என்ன செய்வது??

நேற்று இட்லிக்கு அரைத்துவிட்டு பாதி மாவு எடுத்து ஃப்ரிட்ஜ்ல வெச்சுட்டு போய் உட்கார்ந்தாச்சு.. கொஞ்சம் நேரம் கழிச்சு போய் பார்த்தால் இந்த மாவு எல்லாருக்கும் மறுநாள் இட்லிக்கு போறாது போலிருக்கே என்ன செய்யலாம் என்று யோசித்து கோதுமை மாவை தேடினால்... “மஞ்சு கோதுமை மாவு தீர்ந்துவிட்டது வாங்கணும் அம்மாவின் குரல் அசரீரியாய்  ... ரவை டப்பா திறந்து தூக்கக்கலக்கத்துடனே ரெண்டு கப் ரவை எடுத்து மாவில் கொட்டிவிட்டு ஒரு ஸ்பூன் உப்பு, ொஞ்சம் நீர் விட்டு கரைத்துவிட்டு வந்து படுத்துட்டேன்.

இன்னைக்கு காலை எழுந்து வந்து பார்த்தால் ஜம்முனு பொங்கி இருக்கு... “ மஞ்சு எனக்கு டயமாச்சு... என்ன ரெடியா?” எங்க வீட்டுக்காரர்.... என்ன செய்ய தோசை செய்ய நோ டயம்.. அப்படியே எடுத்து இட்லி தட்டில் நல்ல எண்ணை தடவி மாவு விட்டு வெச்சுட்டேன்.. தொட்டுக்க வெங்காய சட்னியும்...

அட அட அட  ரவா இட்லி சூப்பரா சாஃப்டா வந்திருச்சுப்பா.. நம்புனா நம்புங்க... ரவா இட்லிக்கு மெனக்கெட்டு செய்தால் ரவா இட்லி இச்சுக்கு பிச்சுக்குன்னு வரும்... இப்ப என்னடான்னா அழகா வந்திருச்சு...

அம்மாட்ட மூச்... அம்மாக்கு மிக்சிங் பிடிக்காது  சரி அம்மாவை டேஸ்ட் பண்ண சொன்னேன்.. சாப்பிட்டு ரொம்ப நல்லாருக்கே.. அப்டின்னு சொன்னாங்க.. “ மம்மி அது ரவா இட்லிஎன்றேன்.. ஹுஹும் நல்லாவே இல்ல அப்டின்னுட்டாங்க..

சாப்பிட்ட அஞ்சான் சூப்பர்னு சொல்லிட்டான் மாலை இவரிடம் கேட்கணும்.. இட்லி எப்படி இருந்திச்சு.. எப்படியோ எதையோ செய்யப்போனால் நல்லா வந்துடுது பாருங்க ரவா இட்லி 

Monday, March 31, 2014

அழகே என் அற்புதமே....



உன்  கண்களில்  உறக்கம் கூட
அழகாய் தெரிகிறது
பவழவாய் திறந்து
பட்டுக்கைகளை தூக்கி
“ நீ “
சோம்பல்  முறிக்கும் அழகை
கண்கொட்டாமல் ரசிக்கிறேன்...
என் வாழ்க்கை ரசனையாக்க
வந்த அற்புதம்  
“ நீ  “
உன் இனிமையான செயல்களை
காணும் பாக்கியம்
என்னைப்போல் யாருக்கு
கிடைக்கும் இந்த வரம் !!!

Wednesday, March 26, 2014

சோயா பனீர் ட்ரை மஞ்சுரியன்



சோயா பனீர் ட்ரை மஞ்சுரியன்

தேவையான பொருட்கள்

சோயா
பனீர் துண்டுகள்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
ஆரஞ்ச் கலர்
உப்பு
தயிர்
இஞ்சி
பூண்டு
மசாலா பௌடர்
எலுமிச்சம்பழம்
சோள மாவு
மைதாமாவு
அரிசிமாவு
ஸ்ப்ரிங் ஆனியன்
பொரிக்க எண்ணை

செய்முறை

சோயா மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதன்பின்னர் குளிர்ந்த நீரில் 4 அல்லது 5 முறை கழுவிப்பிழிந்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வைக்கவும். பனீர் துண்டுகள் அதில் போட்டுக்கொள்ளவும். அதில் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மசாலாப்பௌடர் ( பட்டை கிராம்பு ஏலக்கா சோம்பு அன்னாசி மொக்கு பொடித்தது) பச்சை மிளகாய் நீளமாய் நறுக்கி அதில் போட்டுக்கொள்ளவும். கறிவேப்பிலை கழுவி அதையும் அப்படியே அதில் போட்டுக்கொள்ளவும். தயிர் ஊற்றிக்கொள்ளவும் உப்பு எலுமிச்சம்பழ ரசம் எல்லாம் போட்டு மைதா மாவு கொஞ்சம், அரிசிமாவு கொஞ்சம், சோளமாவு கொஞ்சம் எல்லாமும் போட்டு பிசிறி 2 மணி நேரம் ஊறவைத்து எண்ணை கடாயில் ஊற்றி ஸ்டவ் சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமக பொரித்து எடுத்து வைக்கவும்... ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி பச்சைமிளகாய் பொடியாய் நறுக்கினது ஸ்ப்ரிங் ஆனியன் பொடியாய் நறுக்கினது போட்டு உப்பு போட்டு வதக்கி பொரித்ததை போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கி சாப்பிடவும் சூடா.. செம்ம டேஸ்ட் தெரியுமாப்பா?

Monday, March 24, 2014

நட்பு....


” உன்னை தினமும் பாக்கணும் “

ம்ம்…

” உன்கிட்ட தினமும் பேசணும் “

சரி…

” எனக்காக ஒரு பாட்டு பாடணும் தினமும் “

சகிச்சுப்பியா?

உன்னை ரொம்ப பிடிச்சதால தானே கேட்கிறேன். 

சரி சரி.. அது ஏன் ஒரு பாட்டு?

சரி உன்னிஷ்டம்… என்னை தினமும் காலைல எழுப்பறச்சே பாட்டுப்பாடி எழுப்புவேன்னு சொன்னேன்.

அதுல எதுக்கு கஞ்சத்தனம்? நைட் தூங்கும்போது ஒரு தாலாட்டு?

” இதுவும் நல்லாத்தான் இருக்கு..”

ஸ்ரீ… என்னைப்பாரேன்…

” உன்னைப்பாக்கலன்னாலும் நீ சொல்றதை காதுக்கொடுத்து கேட்டுட்டு தானே இருக்கேன். இந்த கடல் அலைகளுக்கு மட்டும் ஓய்வே கிடையாதா? பாரேன் ஓய்வே இல்லாம அலை வந்து வந்து வந்து நம்பிக்கையோடு என் அழகைப்பார்னு நம்ம காலைத்தொட்டு கூப்பிட்டு கிச்சுக்கிச்சு மூட்டுதுல்ல? “

” நான் உன்கிட்ட பேசறதுக்கு தான் பீச்சுக்கு வரச்சொன்னேன். நீ கடல் அலைய ரசிச்சுக்கிட்டு இருக்கே.. என் மனசு உனக்கு புரியவே மாட்டேங்குது.. இந்த கடலும் அலையும் எப்பவும் இருக்கத்தான் செய்யும்… “

” அதேப்போல் நீயும் நானும் நம் நட்பும் எப்பவும் இருக்கும் பார்க்கவி..” 

“ ஸ்ரீ எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. “

“ நல்ல விஷயம் தானே பார்க்கவி? இதை சந்தோஷமா தான் சொல்லேன்? “

” ஸ்ரீ நீ நிஜமா தான் சொல்றியா? இல்ல என் மனசு உனக்கு புரியலையா? “

பார்க்கவியின் கண்கள் கண்ணீர் கொட்ட தயாராக இருந்தது.. மூக்கு விடைத்து உதடு துடித்து.. வந்தே விட்டது கண்ணீர் கன்னத்தில் உருண்டு… 

ஸ்ரீ முன் தான் இப்படி தலைக்குனிந்து காதலுக்கு யாசிப்பதை தன் ஈகோ விரும்பவில்லை என்பது அவள் தலையை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டதில் உணரமுடிந்தது..

ஸ்ரீ அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் கண்களை சிமிட்டாமல் உற்று நோக்கினான்.

அவன் பார்வையின் தீக்ஷண்யம் தாங்காமல் தலை குனிந்துக்கொண்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நாம எப்ப முதன் முதலா சந்திச்சோம்னு நினைவிருக்கா உனக்கு? “

“ ஏன் இல்ல? ரெண்டு பேரும் ஒன்னா இந்த கம்பனிக்கு இண்டர்வ்யூக்கு வந்திருந்தோம். ஒன்னாவே செலக்ட் ஆனோம்.. ஒன்னாவே ட்ரெயினிங் முடிச்சோம். சீட்டும் பக்கத்து பக்கத்துல… இன்னியோட 5 வருஷம் முடியப்போறது “

“ இந்த 5 வருஷத்துல உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யார் பார்க்கவி? “

“ சொல்லனுமா? சிடுமூஞ்சியா இருந்த என்னை சிரிக்கவெச்சே.. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் அழகை ரசிக்க வெச்சே… ரோட்டில் நடக்கும்போது யாராவது பிச்சை எடுத்து வந்தால் அவங்கக்கிட்ட கூட சிநேகமா தோளில் கைப்போட்டு பேசி என்னையே திகைக்க வெச்சே இப்படி நிறைய… தினமும் ஒரு அற்புதம் நடத்துவே.. பார்க்கிறவங்களுக்கெல்லாம் அது சாதாரணமா இருந்தாலும் எனக்கு மட்டும் அது ஆச்சர்யமா இருக்கும் நீ நீயே தான்பா என் பெஸ்ட் ஃப்ரெண்ட் “

பார்க்கவி கண்களை மூடிக்கொண்டு எங்கோ சஞ்சரிப்பதை ஸ்ரீ உணர்ந்தான். 

பார்க்கவியின் தோளைத்தட்டி…. “ உனக்கு இப்ப என்ன ப்ரச்சனை பார்க்கவி சொல்லு “ என்று கேட்டுக்கொண்டே மணலை அளைந்தான்.

மறுபடியும் ஆரம்பத்துல இருந்து ஆரம்பிக்க சொல்றியா ஸ்ரீ? அதான் சொன்னேனே… தினமும் உன்னை பாக்கணும் உன்னிடம் பேசணும்.

இதைக்கேட்டதும் ஸ்ரீ சிரித்தான்.. “ லூசு தினமும் அதானே பண்றோம் ஆபிசுல? “ என்றான்.

“ நீ புரிஞ்சுக்கலையா ஸ்ரீ என் காதலை? நான் இப்படி வெட்கத்தை விட்டு என் காதலை சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறியா ஸ்ரீ ? சோகத்துடன் கேட்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அந்த எல்லையை நான் என்னிக்குமே தாண்டினதில்லை… தாண்ட முயற்சித்ததும் இல்லை… அதைத்தாண்டி உன்னை வேறவிதமா என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியலை உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது பார்க்கவி? 

” ஸ்ரீ உன்னோட ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் என்னை உன்னிடம் ஈர்க்க வெச்சுட்டுது.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தோணித்து. “

“ பார்க்கவி…. காதலுக்குள் நட்பு இருக்கணும்… அப்ப தான் இருவருக்குள் நல்ல புரிதல் இருக்கும்… ஆனால் நட்புக்குள் காதல் வந்தால்… காதலும் நிலைக்காது…. நட்பையும் இழக்கும் அபாயம் இருக்கு பார்க்கவி…சப்போஸ் நீ சொன்னது போல நாம கல்யாணம் பண்ணிக்கிறோம்னே வெச்சுக்கோ…. ஏதாவது நமக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரலாம் இல்ல ப்ரச்சனை வரலாம். அப்ப உன்னால என்னை நண்பனாவும் பார்க்க முடியாது காதலனாவும் பார்க்க முடியாது கணவனா உன் கண்முன்னாடி நிப்பேன் உன் ஈகோ என் மேல் ஈட்டி எறியும்… பதிலுக்கு என் ஈகோ தடுக்கவோ உன்னை சமாதானப்படுத்தவோ முயலாமல் உன்னை மட்டம் தட்ட முயலும்..என் மேல் உனக்கு கோபம் வெறுப்பு ஆயாசம்… ச்சே இவனைப்போய் கட்டினோமே.. இப்படி எல்லாம் எண்ண வைக்கும்…”

எனக்கு நட்பு ரொம்ப நல்லாருக்கு பார்க்கவி… நாம நட்புடனே இருப்போமே அவள் கண்களைப்பார்த்து சொன்னான் ஸ்ரீ.

” நான் அழகா இல்லையா ஸ்ரீ? என்னை பிடிக்கலையா உனக்கு? நீ வேண்டாம்னு சொன்னா இப்பவே இந்த கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிப்பேன் “ மூக்கு சிவக்க உதடுகள் துடிக்க கண்ணீர் கண்களுடன் கெஞ்சினாள் பார்க்கவி.

ஸ்ரீக்கு தர்மசங்கடமானது…. நீ ஒரு தேவதை பார்க்கவி. என்று சொல்லும்போது ஒரு பந்து வந்து அவன் முகத்தை உரசி கீழே விழுந்தது. “ அங்கிள் பால் தாங்க “ என்று கேட்டபடி 5 வயது குழந்தை ஓடி வந்து பூவாய் சிரித்து பாலை ஸ்ரீயிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றது.

” பார்க்கவி…. எப்பவும் நாம நட்புடனே இருக்க முடியாதா? “

“ நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிருக்கோமே நண்பர்களா இருந்தோம் இதுவரை இனி காதலித்தால் என்னவாம்? முனகினாள் பார்க்கவி.

“ என் மனசுல உன்னை அப்படி ஒரு தடவை கூட நினைச்சு பார்க்கல பார்க்கவி.. இனியும் என்னால அப்படி முடியும்னு தோணலை… நட்பை நான் மதிப்பவன்… நட்புக்குள் ஆண் பெண் என்ற பேதம் வயசு அழகு நிறம் படிப்பு இதெல்லாம் அவசியமற்றது… நட்பு நட்பாகவே இருந்தால்... அது நிலைத்து இருக்கும் பார்க்கவி...

அதே நட்புக்குள் காதல் நுழைந்தால் இவள் எனக்கு மட்டும் தான். இவன் எனக்கு மட்டும் தான் என்ற பொசசிவ்நெஸ் வரும். அது கொஞ்சம் கொஞ்சமா சந்தேகத்துக்கு வழி விடும்.. இப்படியே பிரிவு வரைக்கும் கொண்டு போயிரும்… அப்படி ஆகும் நிலை வந்தால் காதலும் நிலைக்காது… நட்பும் நிலைக்காது…. “ அதை விட இப்படி நட்புடனே இருந்துப்பார் ..என்ன சிரமம் உனக்கு?

ஸ்ரீயின் எந்த பதிலும் பார்க்கவியை சமாதானப்படுத்தவில்லை.

ஸ்ரீயின் முதுகில் படார்னு ஒரு அறை விழுந்தது… அதோடு குரல் வேறு…”ஹே பாஸ் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு… அட பார்க்கவி.. என்ன ரெண்டு பேரும் இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு கடலை விலைக்கு வாங்க பலமான யோசனை நடக்குது போல? என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தாள் மீனலோசனி இருவருடன் ஆபிசில் பணிபுரிபுவள்.

மீனலோசனி ஸ்ரீயிடம் காட்டும் நெருக்கம் பார்க்கவிக்கு சந்தோஷம் தரவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு அலைகளை வேடிக்கைப்பார்ப்பது போல் பார்த்தாள்.

“ என்ன பார்க்கவி என்ன விஷயம் உன் முகம் சோகமா இருக்கு? ஐஸ்க்ரீம் கேட்டால் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டானா? கஞ்சன் என்று சொல்லி ஸ்ரீயின் தலையில் குட்டினாள் மீனலோசனி.

இவற்றுக்கெல்லாம் அமைதியாக சிரித்துக்கொண்டே இருந்தான் ஸ்ரீ.

பார்க்கவிக்கு கோபம் தலைக்கேறியது. தன் கண்ணெதிரே தன் மனம் விரும்பியவனிடம் இத்தனை நெருக்கமாய் முதுகில் அடிப்பதும் தலையில் குட்டுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை.. இவன் இப்படித்தானோ? எல்லா பெண்களிடமும்.. மனம் முதல் முறையாக சந்தேகப்பட்டு அவனிடம் கொண்ட காதல் சரியா என்று யோசித்தது…. சடுதியில் மனித மனம் குரங்குப்போல் தாவுகிறதே என்று தலையில் அடித்துக்கொண்டாள் பார்க்கவி…

பார்க்கவின் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் அவள் முக குறிப்புகள் உணர்த்தியது. 

ஸ்ரீ அமைதியாக பார்க்கவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பார்க்கவியின் கவனமோ மீனலோசனி இன்னும் ஸ்ரீயை என்னென்ன தொந்திரவு செய்வாளோ என்ற பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததை ஸ்ரீ கவனித்துக்கொண்டிருந்தான்.

பார்க்கவியின் மனம் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தான் ஸ்ரீ…

பார்க்கவின் மனம் இனி தன் வசப்படாமல் இருக்க என்ன செய்வது என்ற யோசனையுடன் உடையில் ஒட்டி இருந்த மணற்துகளை தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தான். 

“ இருட்டிடுத்து மீனலோசனி. நாளை ஆபிசில் பார்ப்போம். 

பார்க்கவி உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன் எழுந்து வா என்று பார்க்கவி எழ கைக்கொடுத்தான் ஸ்ரீ..

“ நான் டி நகர் ரூட்ல தான்பா போறேன். நானே ட்ராப் பண்ணிடவா? நீ அவளை விட்டுட்டு திரும்ப தாம்பரம் போகணும் “ என்று சொன்ன மீனலோசனியை அனல் தெறிக்க பார்த்துவிட்டு ஸ்ரீயிடம் “ வேண்டாம் ஆட்டோ பிடிச்சு நானே போய்க்கறேன் “ முறைப்பாய் சொல்லிவிட்டு மீனலோசனி பக்கம் திரும்பாமல் ஆட்டோ என்று அழைத்து ஏறி அமர்ந்து போய்விட்டாள் காற்றாய்.

“ என்னாச்சு பாஸ் எனிதிங் ராங்? பார்க்கவி கொஞ்சம் கோபம் கொஞ்சம் சோகம் கலந்தமாதிரி இருப்பது போல தோணுதே? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? “ தர்மசங்கடத்துடன் மீனலோசனி கேட்க

“ ச்சே ச்சே அப்டி எல்லாம் ஒன்னுமில்லப்பா.. கொஞ்சம் டயர்ட் அவ்ளோ தான்.. நாளை சரியாயிருவா சரி நான் கிளம்பட்டுமா “ என்று சொல்லிக்கொண்டே செருப்பணிந்து நடக்க ஆரம்பித்தான் தன் வண்டி பார்க் செய்த இடம் நோக்கி ஸ்ரீ..

” பார்க்கவி மனதில் இப்படி ஒரு சலனம் ஏற்பட நான் காரணமா இருந்துட்டேனே.. இனியும் அவளுடன் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்வது இன்னும் அவளை துன்புறுத்துவதற்கு சமம்…

வேண்டாம். கொஞ்ச நாட்கள் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொள்ளவேண்டும்…

மும்பைக்கு ரொம்ப நாளா மாற்றல் கிடைத்தும் மறுத்துக்கொண்டிருந்தேன். நாளை போய் ஜி எம் கிட்ட பேசி மாற்றலுக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் “

என்றாவது ஒரு நாள் நான் சொன்னது சரி என்று பார்க்கவி புரிந்துக்கொள்வாள்… என்ற நம்பிக்கையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீ

Friday, February 28, 2014

நேசத்தின் நிழல்...



தன்னை 
வெளிப்படுத்தா
நேசத்தின்
நிழல்
நிலத்தடி நீராய்
யாரும் அறியாவண்ணம்
ஊறிக்கொண்டு
காத்திருக்கிறது
பெருமழையாய்
பொழிந்து
உன் மனதை
நனைத்துவிட !!!!

Monday, February 17, 2014

உனக்காகவே....



என்
சந்தோஷச்சிறகிலிருந்து
ஒற்றை இறகும்
ஆத்மார்த்த கண்ணீரின்
ஒற்றைத்துளியும்
உனக்காகவே
விட்டுச்செல்கிறேன்
ப்ரியமே !!!

Tuesday, February 11, 2014

தேடல்....



நினைவுகளின் கோடியில்
நின்றுக்கொண்டிருக்கிறேன்
தேடலின் முடிவில்
மனக்கதவின் குமிழில்
உன் ஸ்பரிசம் 
மீட்டெடுக்கும்
என்ற நம்பிக்கையில்......

வலைச்சரம் 10.02.2014 - 16.02.2014

Thursday, November 7, 2013

என் மனதுக்கினிய என்ன(கண)வருக்கு




ஏன் மம்மி நகம் வளர்க்க விட மாட்டேன்றீங்க. தலைமுடியை ஃப்ரீயா விட சம்மதிக்க மாட்டேன்றீங்க. இப்படி நிறைய மாட்டேன்றீங்க. அம்மா சொன்ன ஒரு சொல். நீ படிச்சு முடிச்சதும் என்ன ஸ்டைல் வேணும்னாலும் பண்ணிக்கோ. சரி மூணாவது வருஷம் முடிஞ்சிருச்சு ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலியா இருக்கலாம்னு நினைக்கும்போது பொண்ணு பார்க்க வந்தாச்சு மாப்பிள்ளை.

நான் நல்லா இருக்கமாட்டேன். ஆனா என்னை பாக்க வந்த மாப்பிள்ளை ஹீரோ போல இருந்தார் அழகுல, மனசுல, அன்புல, பண்புல. மாப்பிள்ளையை பார்க்கும் சுவாரஸ்யம் இல்லை. அவசரமா கல்யாணம் பண்றாங்கன்ற எரிச்சல். ஆனால் எங்க சொந்தங்கள் முக்கியமா என் தங்கை எல்லாருக்கும் இஷ்டமாகிவிட்டது மாப்பிள்ளையை பார்த்ததும், மாப்பிள்ளை எல்லோருடனும் பழகின விதமும்.

ஒரு சிலர் வீட்டில் மாமியார் மருமகள் சண்டை ஓரவத்தி சண்டை நாத்தனார் சண்டை இருக்கும். எங்க வீட்டில் அதுக்கும் நோ சான்ஸ். அன்பாலயே எல்லார் மனசையும் கட்டிப்போட்டுட்டார். அவருடைய மனைவி நானும் அவர் வழி…

என் கணவர் கண்டிப்பானவர் கிடையாது. ஆனால் நிறைந்த அன்பு தரும் நேசம் நிறைந்தவர்.

ஏன் இவ்ளோ நீளமான கதைன்னு யோசிக்கிறீங்களாப்பா? பொண்ணுப்பாக்க வந்தது 08.03.1989 நிச்சயதார்த்தம் 08.06..1989 கல்யாணம் 08.11.1989 ஆமாம் முழுமையான நிறைவான சந்தோஷமான 24 வருடங்களின் நிறைவு.

அடுத்த ஜென்மத்திலும் இவரே எனக்கு புருஷனா கிடைக்கணும்னு நான் எப்போதும் போல் வேண்டிப்பேன். ஒருவேளை நான் பிறந்தால்.

இன்னும் எத்தனை நாள் இருப்போமோ தெரியாது? இறந்தால் மீண்டும் பிறப்போமோ அதுவும் தெரியாது. பிறந்தால் நம் எல்லா சொந்தங்களுடனும் நட்புகளுடனும் பிறப்போமோ அதுவும் தெரியாது. அதனால் இருக்கிற இந்த கொஞ்ச நாட்களையும் நிறைவாக சந்தோஷமாக அன்புடன் வாழ்ந்துவிடுவோமே.

எங்கள் 24 ஆம் வருட திருமண நாளை எல்லோரும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

Sunday, October 20, 2013

என்னை அம்மா ஸ்தானக்கு உயர்த்திய அன்பு அஞ்சான்....



எங்கள் வாழ்க்கையில் என்னை அம்மா ஸ்தானத்துக்கு உயர்த்தி, பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு இவர் காத்திருந்தபோது ஆண் மகவாய் பிறந்து... எனக்கு ரொம்ப சந்தோஷம்.. தினமும் கீர்த்தி வினாயகருக்கு செய்த குங்குமார்ச்சனை வீண் போகவில்லை.. ஆண்குழந்தை தான் பிறக்கும் என்று என் கணவரின் அண்ணன் Hemanth Kumar அவ்ர்களிடம் பந்தயம் 100 ரூபாய் கட்டி... பிரசவம் முடிந்ததும் பாவா வந்து என்னிடம் சிரித்துக்கொண்டே பணம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது....

நான் கர்ப்பிணியாக இருந்தபோது அது வேண்டும் இது வேண்டும் என்று எதுவும் கேட்காமல் இருந்தாலும் எனக்கு என்ன வேண்டும் என்று ஆசையாக என் கணவர் Sampath Kumar Narayanaswamyவாங்கிக்கொடுத்த நாட்களை நினைவுக்கொள்கிறேன்.

பிரசவ வலி அதிகமானபோது ஆஸ்பிடலுக்கு கிளம்பு என்று அம்மா துரிதப்படுத்தினாலும் மொபைல் இல்லாத காலம் அது எங்க வீட்டுக்காரர் வந்தா தான் நான் கிளம்புவேன் என்று பிடிவாதம் பிடிக்க, என் அப்பாவும், தம்பியும் ஒவ்வொரு பக்கம் போன் செய்து பின் என் கணவருக்கு விஷயம் தெரிந்து அரக்கப்பறக்க வந்தப்பின்னரே நர்சிங்ஹோமுக்கு கிளம்பினேன்.

மனதில் ஆயிரம் பயம்... செத்துவிடுவேனோ? என் பிள்ளையை பார்க்காமல் என் மரணம் ஏற்பட்டுவிடுமோ... நிறைய பயம்... கீர்த்தி வினாயகரை விடாமல் பிரார்த்தித்துக்கொண்டு போய் அட்மிட் ஆயாச்சு...

என்னங்க நான் பிரசவத்தில் இல்லாம போயிட்டால்.. உடனே இவர் அழ.... அம்மா எல்லோரும் சேர்ந்து என்னைத்திட்ட.. மூன்று நாட்கள் 
என்னை வலியில் துடிக்கவைத்தான் 21.10.1990 அழகாக பொன் நிறத்தில் க்ருஷ்ண விக்ரஹம் போல குழந்தையை கொண்டு வந்து காட்டினார்கள். எத்தனை அழகு... பொன் நிறம்.... பிஞ்சு விரல்கள்... சிமிட்டி சிமிட்டி கண் மலர்த்திப்பார்த்தான் அஞ்சான்..தலை நிறைய்ய்ய்ய முடி...

நர்சிங்ஹோம்ல இருந்த ஒரு வாரமும் நர்ஸுகளுக்கு ராத்திரி வேலையை ஒழுங்காக செய்யவைத்தான் அஞ்சான்.  முழுக்க அழுகை... ஆலாபனை.. கச்சேரி தான்..

பிரசவத்தில் மட்டுமே படுத்திய என் தங்கம் என் மூத்தப்பிள்ளை இன்று வரை இந்த நொடி வரை என்னை தாயாய் பார்த்துக்கொள்கிறான்.. இன்று என் மகனுக்கு 24 வயது தொடங்குகிறது..

தாய் தந்தையர் செய்யும் நல்லவை கெட்டவை எல்லாமே பிள்ளைகளை போய் சேரும் என்று சொல்வார்கள்.

நானும் சரி என் கணவரும் சரி யாருக்கும் எந்த கெடுதலும் மனதால் கூட நினைக்கவில்லை. எனக்கு கெடுதல் செய்துக்கொண்டிருப்போரைக்கூட அமைதியாக மன்னிக்கிறேன். ஏனெனில் தண்டிப்பதோ வெறுப்பை உமிழ்வதோ நம் வேலையில்லை. தெய்வம் பார்த்துக்கொள்ளட்டும் எல்லாவற்றையும். என் பிள்ளைகள் என்றும் சௌக்கியமாக இருக்க எங்களின் நல்லவைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் ஆசிகளாக..

இறைவன் கிருபையால் எல்லோரின் ஆசியால் சௌக்கியமாக, சந்தோஷமாக, நிறை ஆயுள், ஆரோக்கியம், மூத்தோர் ஆசிப்பெற்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அஞ்சான் Vignesh Ram.

Thursday, September 26, 2013

தெய்வம் நின்று காக்கிறது....



” உங்க மகனுக்கு கண்டம் இருக்குங்க பார்த்து வண்டி எதுவும் ஓட்டாமல் இருப்பது நல்லது “ தங்கம் சொல்லும்போது நான் அதிர்வுடன் பார்க்கிறேன்.

” என்ன தங்கம் சொல்றீங்க. அஞ்சான் எப்போதும் வண்டி ஓட்டுவதில் பைத்தியம்… அதனால் தான் அவனை ஹெல்மெட் போட்டுக்கோடா, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போட்டுக்கோடான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

” இல்லம்மா நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க நான் சொல்ல வருவதை. பையன் வண்டி எடுத்தான்னா கண்டிப்பா விபத்து பயங்கரமா நடக்கும் அவ்ளவு தான் நான் சொல்லிட்டேன் கிளம்பறேன். ” சொல்லிவிட்டு தங்கம் இடத்தை காலி செய்துவிட்டார் என் மனதில் சுமையை ஏற்றிவிட்டு…

அஞ்சானுக்கு இன்னைக்கு போன் செய்துடணும். எப்ப பார்த்தாலும் நிம்மதி இல்லாம இருக்கிறேன். அவன் வண்டி எடுத்தான்னா அசுர வேகத்துல வண்டி ஓட்டுகிறான். இளம் வயது. பயம் இருப்பதில்லை.. சொன்னா கேட்டுப்பான்.

யோசனையில் இருக்கும்போது போன் சத்தம் என்னை இயல்புக்கு அழைக்கிறது. அட அஞ்சான்..

“ அஞ்சான் என்னம்மா எப்படி இருக்கே ராஜா? “

” நல்லா இருக்கேன் மா நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா, தம்பி, எப்படி இருக்காங்க?”

” எல்லாரும் சௌக்கியம்பா… என்ன இந்த நேரத்துல போன்?”

” அம்மா நான் புதிதா வாங்கின வண்டியை விற்கிறேன்மா.. தப்பா நினைக்காதீங்க,. ஆசையா வாங்கிக்கொடுத்த பைக் அதுவும் இத்தனை செலவு செய்து வாங்கிக்கொடுத்தீங்க புதுசு வாங்கி ஒரு மாசம் கூட ஆகல. ஆனா நாலு முறை ஆக்சிடெண்ட் ஆகிவிட்டதும்மா அதான் விற்கலாம்னு. ”

”ஐயோ உனக்கு ஒன்னும் ஆகலையே? அதிர்ச்சியுடன் நான்.”
”இல்லைம்மா.. நான் சௌக்கியமா இருக்கேன்.”

” சரி ராஜா. விற்றுவிடு.. அப்பாட்ட நான் சொல்லி சமாளித்துக்கொள்கிறேன் ”சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். தெய்வம் இத்தனை எளிதாய் என் மகனை காப்பாற்றும்னு நினைக்கவில்லை.

வண்டி இல்லன்னா எங்கும் சுற்றமாட்டான். ஆபிசு விட்டால் வீடு. நிம்மதியாக இருக்கலாம்.. ஆசுவாசம் எனக்குள்..

வீட்டில் இவர் கத்த ஆரம்பிச்சுட்டார்.
”என்ன நினைச்சுட்டு இருக்கான். இவ்ளோ செலவு பண்ணி புது பைக் வாங்கி இப்படி அரக்கப்பரக்க விற்கனுமா என்ன?”

”எனக்கு வண்டியை விட குழந்தையின் நலன் முக்கியமா படுதுங்க.”
” எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் ” திட்டிவிட்டு நகர்ந்தார்.

”அஞ்சான் ஊருக்கு வர டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டியாம்மா? ”
”பண்ணிட்டேன்மா.. இண்டர்வ்யூல செலக்ட் ஆகிவிட்டதால்  நிம்மதி.மெடிக்கலும் முடிந்துவிட்டது. எப்ப ஜர்னின்னு சொன்னால் அன்னிக்கு கிளம்பிருவேன்மா.. ”

” அப்பாவின் என் ஆசிகள்டா ராஜா. ” சொல்லிவிட்டு போன் வைத்தேன்.
அஞ்சான் வரும் நாளை எதிர்ப்பார்த்து ஆசையுடன் காத்திருந்தோம் எல்லோருமே இங்கு.

பகவானே என் பிள்ளைகளை என்றும் நான் பிரியாமல் இருக்கும்படி எனக்கு கருணை செய்துட்டேப்பா…

தினமும் ஆபிசுக்கு கிளம்புமுன் எல்லோருக்காகவும் வேண்டிக்கிட்டு கிளம்புவேன். ஆபிசு விட்டு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறப்பதில்லை…

இன்னைக்கு என்னவோ மனசு ஒரு மாதிரியா இருக்கே… ஏதோ ஒரு பயம் மனதில் அடைக்கிறதே.. அஞ்சான் வண்டி எடுத்திருப்பானோ? சே இருக்காது கண்டிப்பா இருக்காது. அவனிடம் தான் வண்டி இல்லையே.. 

இதை நினைச்சுக்கிட்டே நான் ஆபிசை விட்டு மாலை கிளம்பி ரோட் கிராஸ் செய்கிறேன். அப்ப சட்டுனு ஒரு காட்சி  கண்முன். ஒரு வண்டி வேகமாக வந்து அஞ்சான் வண்டியை வேகமாக இடிக்க அஞ்சான் வண்டியில் இருந்து மேல எழும்பி பறந்தான் வலியுடனான அவன் முகம் தெரிந்ததும் மிரண்டேன். சட்டென்று மென்மையான உடையில் பாபா வந்து அஞ்சானை தாங்குவது போல் தெரிந்தது. தலைச்சுற்ற ஆரம்பித்துவிட்டது.

” ஐயோ இப்ப தானே உடம்பு கொஞ்சம் சரியானது போல் இருந்தது. மறுபடி தலைச்சுற்றல் மயக்கம். கடவுளே நெஞ்சுவலி வந்துவிடக்கூடாது. அஞ்சானுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. ” நினைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்.

வீட்டின் வேலைகள் சின்னவனின் எக்சாம் பாடங்கள் என்று மும்முரமாகிவிட்டேன். ராத்திரி நெஞ்சு அடைப்பது போல் இருந்தது படுக்கும் முன்னாடி.  தண்ணீர் குடித்துவிட்டு படுத்தேன்.
அகால நேரத்தில் இடைவிடாது போன் சத்தம்..

அகால நேரத்தில் போன் வந்தால் உடம்பு தூக்கிப்போடுகிறது. ஊரில் யாருக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டம் அதிகமாகிறது. வேகமாக எழுந்து போன் எடுத்தால் தங்கை ஷோபி அழுகைக்குரலுடன். ” மஞ்சு மஞ்சு வேகமா ஸ்கைப்ல வா ” என்றாள்.

“என்னடி இந்த நேரத்துல என்னாச்சு ? “ என்றேன் பயத்துடன்.
“முதல்ல வா நீ ” என்றாள்…

நான் பயத்தில் கதறிய சத்தம் கேட்டு வீட்டில் எல்லோருமே எழுந்தாச்சு.. இரண்டு மணி… வேகமாக ஸ்கைப்பில் வந்தால் அழுகை முகத்துடன் ஷோபி. என்னாச்சு ஷோபி என்னாச்சு சொல்லு எனக்கு பதட்டம் அதிகமானது. மஞ்சு மஞ்சு டென்ஷனாகாதே.. பெரியம்மா நைட் கல்யாண ரிசப்ஷனுக்கு போகணும்னு சொல்லி அஞ்சானிடம் சொல்லி இருக்காங்க.

 உதவி யாரேனும் கேட்டால் மறுக்காமல் உடனே உதவிட துடிக்கும் பிள்ளை அஞ்சான். இதோ என்று உடனே கிளம்பிட்டான். நைட் ரெண்டு பெரியம்மாவையும் பின் சீட்டில் உட்காரவெச்சுட்டு கார் ஓட்டிக்கிட்டு பாடி ப்ரிட்ஜ் கிட்ட வரும்போது பின்னாடி வந்த வண்டி ஒன்று ஓவர் டேக் பண்ணும் அவசரத்தில் இவன் வண்டியை முட்டி மோதிருச்சு என்று சொல்லி முடிக்குமுன் எனக்கு மயக்கம் வந்தது.
“ஐயோ அஞ்சான் அஞ்சான் அஞ்சான் ” விழுந்தேன்.

இவர் பயந்து ” ஷோபி அஞ்சான் எங்கே அவனுக்கு ஒன்னும் ஆகலையே ”என்று எல்லோரும் கதறினார்கள்.

“இதோ இதோ அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல மஞ்சு கண் முழி அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல நல்லாருக்கான் இதோ பாரு இதோ பாரு அஞ்சான் அம்மாவை பாருடா ” என்று சொல்லி என் பிள்ளையை காட்டினாள்.

 என் பிள்ளையின் அழுத முகம்.. நான் எப்போதோ சின்ன வயதில் அடிக்கும்போது என் பிள்ளை அழுதமுகத்தை பார்த்திருக்கிறேன், அதோடு இத்தனை வருடம் கழித்து என் பிள்ளையை இப்படி பார்த்ததும் மனம் சமாதானம் ஆகலை.

 ” என்னாச்சு அஞ்சான் என்னாச்சுடா ”என்று கத்தினேன்.

”எனக்கு ஒன்னும் இல்லம்மா… வண்டி மோதினதுல கார் பல்டி அடித்து உருள ஆரம்பித்து தரையை தலைகீழ் தேய்த்துக்கொண்டே போய் சுவற்றில் இடித்து நின்றது.

ஜன்னல் கண்ணாடி உடைந்து “ சீட் பெல்ட் போடாததால் “ வெளியே போய் விழுந்துட்டேன்மா “ என்றான்.

” ஐயோ பெரியம்மாக்கு ரெண்டு பெரியம்மாவுக்கும் என்னடா ஆச்சு ” என்றேன் பதட்டத்துடன்…

” ஒரு பெரியம்மாவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இன்னொரு பெரியம்மா கால் சீட்டுக்கு இடையில் மாட்டிக்கொண்டு எடுக்க வராததால் வண்டியை திருப்பி மெல்ல அவரை மீட்டோம் “ என்றான்.

”போலீஸ் விரைந்து வந்தது ஸ்பாட்டுக்கு. முகம் தெரியாதவர்கள் எல்லாம் உதவினார்கள் அம்மா ” என்றான்.

” ஐயோ கடவுளே இருவருக்கும் ஒன்றும் ஆகக்கூடாது..”
இரண்டு பெரியம்மாவும் போலிசிடம் ” இது எங்கப்பிள்ளை தான். இவன் பெயரில் தப்பில்லை.. பின்னாடி இருந்து வந்த வண்டி முட்டி மோதி வேகமாக போய்விட்டது. எங்களால் வண்டியை பார்க்க முடியவில்லை ” என்று சொல்ல அஞ்சான் மேல் எந்த வித கேசும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது.

இந்த விபத்தில் அஞ்சான் மட்டும் சின்ன சின்ன காயங்களோடு எப்படி தப்பினான் என்று போலிசுக்கள் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். என் தங்கையும் பெரியம்மா மகளும் சொல்றாங்க பாபா தான் அஞ்சான் உயிரை பத்திரமா காப்பாற்றி இருக்கிறார் என்று.
”சீட் பெல்ட் எப்போதும் போடுடா போடுடா ” என்றால் போடவே மாட்டான்.

அன்றும் சீட் பெல்ட் போடாததால் உயிர் தப்பியிருக்கான்.
நான் கீர்த்தி வினாயகரிடம் போய் உட்கார்ந்து அழுகிறேன். ” என் பிள்ளைக்கு ஏதாவது ஒன்று ஆனால் சத்தியமாக நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். தெரியும் உனக்கு. என் மேல் எத்தனை கருணை பகவானே உனக்கு.”

முகம் தெரியாதவர் எத்தனையோ பேர் அருகே இருந்து உதவி இருக்கிறார்கள். போலிஸ் ஸ்டேஷனிலும் ஆஸ்பிட்டலிலும் அஞ்சானைக்காப்பாற்றும் முயற்சியில் தான் இரண்டு பெரியம்மாக்களும் இருந்திருக்கிறார்கள். இருவரின் ஓயாத வேண்டுதல். அஞ்சான் நல்லபடியா குவைத் போய் சேரவேண்டும். அவன் அப்பா அம்மாவிடம் பத்திரமாக சென்று சேரவேண்டும்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் அத்தனைப்பேரும் அஞ்சானுக்காகவும். இரண்டு பெரியம்மாக்களுக்காகவும் பிரார்த்தித்தனர்.
அத்தனைப்பேரின் ஆசிகள், பிரார்த்தனைகள் பத்திரமாய் சரியாக சொன்ன தேதியில் வந்து இறங்கினான் அஞ்சான்.

கடவுளின் கருணையை நினைத்து தினமும் இடைவிடாது நன்றிகள் சொல்லிக்கொண்டு.. இந்த விபத்தில் ஒரு பெரியம்மாவுக்கு மட்டும் இன்னும் ஆபரேஷன் நடந்து படுக்கையில்.. அவரும் எழுந்து வேகமாக நடமாடவேண்டும். பூரண நலம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்ந்துக்கொண்டே….

எப்போதும் சிறு வயதில் இருந்து அஞ்சானிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். “ ஸ்வாமி கிட்ட கண்மூடி உட்காருடா கொஞ்சம் நேரமாவது. “எனக்காக உட்காருவான். நான் சொல்கிறேனே என்று உட்காருவான். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின்னர் தினமும் ஸ்வாமி கிட்டே உட்காருகிறான் ஒரு மணி நேரம். பிரார்த்திக்கிறான்.

இந்த விபத்து நடந்தப்பின் நண்பர்களும் உறவினர்களும் சொன்ன வார்த்தைகள் ஒரே போல்…

” அஞ்சான் நல்லப்பையன். உதவி என்று கேட்டால் எப்போதும் இன்முகத்துடன் செய்பவன். அவனுக்கு என்றும் நல்லதே நடக்கும்.  ”

”அம்மா அப்பா நீங்கள் இருவருமே யாருக்கும் ஒரு கெடுதலும் செய்ததில்லை. மனதாலும் நினைத்ததில்லை. நாங்கள் இருவரும் செய்த நல்லவையே என் பிள்ளையின் உயிரை காப்பாற்றியதாக சொல்கிறார்கள் எல்லோரும்…”

இது நடந்தது மார்ச் மாதம்.. இறைவன் அருளால்.. எல்லோரின் ஆசீர்வாதத்தால்.. அஞ்சான் என்னும் விக்னேஷ்ராம் இங்கே நல்ல வேலையில் இருக்கிறான்.“ இந்த வேலை கிடைத்ததும் என் அன்புத்தோழியின் உதவியால் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் என் தோழியை “ வேலை வாங்கித்தந்த என் தோழி சொல்கிறாள் இப்போது

“ மஞ்சு சீக்கிரம் பையனுக்கு பொண்ணு பாரு.. கல்யாணச்சாப்பாடு எப்பப்போடப்போறே? “

எல்லாமே பகவான் செய்துக்கொண்டிருக்கிறார்… முயற்சி மட்டுமே நம்முடையது.  அந்தந்த நேரம் வரும்போது தானாகவே நல்லது நடக்கும் ஜெம்னி என்று சொன்னேன் ஆசுவாசம் ஆனது எனக்கு.


நல்லதே நினைத்து… நல்லதே பேசி… நல்லதே பகிர்கிறோம்.. எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்.. இறைவன் நம்முள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்..

எனக்கு கெடுதல் செய்ய நினைப்போருக்கும் சரி, எனக்கு கெடுதல் செய்வோருக்கும் சரி, என்னைத்தூற்றுவோருக்கும் சரி நான் பதிலுக்கு எந்த கெடுதலும் செய்ததில்லை. இனியும் செய்யப்போவதில்லை..என்னைப்பொறுத்தவரை எல்லோரும் நலமுடன் இருக்கவேண்டும். நான் பட்ட இந்த அவஸ்தைகள் யாருக்கும் வராதிருக்கவே வேண்டுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...