"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label சமையலறை. Show all posts
Showing posts with label சமையலறை. Show all posts

Saturday, November 22, 2014

அவசர சமையல்....

அவசர சமையல்... ஆனால் அரைகுறை சமையல் இல்லை...

அவசரத்துக்கு இட்லி மாவு குறைவா இருந்தால் என்ன செய்வது??

நேற்று இட்லிக்கு அரைத்துவிட்டு பாதி மாவு எடுத்து ஃப்ரிட்ஜ்ல வெச்சுட்டு போய் உட்கார்ந்தாச்சு.. கொஞ்சம் நேரம் கழிச்சு போய் பார்த்தால் இந்த மாவு எல்லாருக்கும் மறுநாள் இட்லிக்கு போறாது போலிருக்கே என்ன செய்யலாம் என்று யோசித்து கோதுமை மாவை தேடினால்... “மஞ்சு கோதுமை மாவு தீர்ந்துவிட்டது வாங்கணும் அம்மாவின் குரல் அசரீரியாய்  ... ரவை டப்பா திறந்து தூக்கக்கலக்கத்துடனே ரெண்டு கப் ரவை எடுத்து மாவில் கொட்டிவிட்டு ஒரு ஸ்பூன் உப்பு, கொஞ்சம் நீர் விட்டு கரைத்துவிட்டு வந்து படுத்துட்டேன்.

இன்னைக்கு காலை எழுந்து வந்து பார்த்தால் ஜம்முனு பொங்கி இருக்கு... “ மஞ்சு எனக்கு டயமாச்சு... என்ன ரெடியா?” எங்க வீட்டுக்காரர்.... என்ன செய்ய தோசை செய்ய நோ டயம்.. அப்படியே எடுத்து இட்லி தட்டில் நல்ல எண்ணை தடவி மாவு விட்டு வெச்சுட்டேன்.. தொட்டுக்க வெங்காய சட்னியும்...

அட அட அட  ரவா இட்லி சூப்பரா சாஃப்டா வந்திருச்சுப்பா.. நம்புனா நம்புங்க... ரவா இட்லிக்கு மெனக்கெட்டு செய்தால் ரவா இட்லி இச்சுக்கு பிச்சுக்குன்னு வரும்... இப்ப என்னடான்னா அழகா வந்திருச்சு...

அம்மாட்ட மூச்... அம்மாக்கு மிக்சிங் பிடிக்காது  சரி அம்மாவை டேஸ்ட் பண்ண சொன்னேன்.. சாப்பிட்டு ரொம்ப நல்லாருக்கே.. அப்டின்னு சொன்னாங்க.. “ மம்மி அது ரவா இட்லி “ என்றேன்.. ஹுஹும் நல்லாவே இல்ல அப்டின்னுட்டாங்க..

சாப்பிட்ட அஞ்சான் சூப்பர்னு சொல்லிட்டான் மாலை இவரிடம் கேட்கணும்.. இட்லி எப்படி இருந்திச்சு.. எப்படியோ எதையோ செய்யப்போனால் நல்லா வந்துடுது பாருங்க ரவா இட்லி 

Wednesday, March 26, 2014

சோயா பனீர் ட்ரை மஞ்சுரியன்



சோயா பனீர் ட்ரை மஞ்சுரியன்

தேவையான பொருட்கள்

சோயா
பனீர் துண்டுகள்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
ஆரஞ்ச் கலர்
உப்பு
தயிர்
இஞ்சி
பூண்டு
மசாலா பௌடர்
எலுமிச்சம்பழம்
சோள மாவு
மைதாமாவு
அரிசிமாவு
ஸ்ப்ரிங் ஆனியன்
பொரிக்க எண்ணை

செய்முறை

சோயா மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதன்பின்னர் குளிர்ந்த நீரில் 4 அல்லது 5 முறை கழுவிப்பிழிந்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வைக்கவும். பனீர் துண்டுகள் அதில் போட்டுக்கொள்ளவும். அதில் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மசாலாப்பௌடர் ( பட்டை கிராம்பு ஏலக்கா சோம்பு அன்னாசி மொக்கு பொடித்தது) பச்சை மிளகாய் நீளமாய் நறுக்கி அதில் போட்டுக்கொள்ளவும். கறிவேப்பிலை கழுவி அதையும் அப்படியே அதில் போட்டுக்கொள்ளவும். தயிர் ஊற்றிக்கொள்ளவும் உப்பு எலுமிச்சம்பழ ரசம் எல்லாம் போட்டு மைதா மாவு கொஞ்சம், அரிசிமாவு கொஞ்சம், சோளமாவு கொஞ்சம் எல்லாமும் போட்டு பிசிறி 2 மணி நேரம் ஊறவைத்து எண்ணை கடாயில் ஊற்றி ஸ்டவ் சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமக பொரித்து எடுத்து வைக்கவும்... ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி பச்சைமிளகாய் பொடியாய் நறுக்கினது ஸ்ப்ரிங் ஆனியன் பொடியாய் நறுக்கினது போட்டு உப்பு போட்டு வதக்கி பொரித்ததை போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கி சாப்பிடவும் சூடா.. செம்ம டேஸ்ட் தெரியுமாப்பா?

Tuesday, September 18, 2012

கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா ஜூஸ்


காலை எழுந்ததும் அரக்க பரக்க ஏதோ ஒன்னு சாப்புட்டு ஓடுகிறோம்.  என்னிக்காவது நம்ம உடல்நலனில் நமக்கு அக்கறை இருக்கா? எடுத்துக்கிறோமா அதுவும் இல்லை. வீட்டில் எல்லோர் தேவைகளும் பார்த்து பார்த்து செய்கிறோம். பிரயோஜனமா இதை செய்வோமா இனி?

கறிவேப்பிலை  ஒரு கட்டு, புதினா ஒரு கட்டு, கொத்தமல்லி ஒரு கட்டு, நெல்லிக்கா முழுசு 4, இஞ்சி ஒரு துண்டு இதெல்லாம் போட்டு மிக்சில அரைச்சு ஜூஸ் எடுத்துக்கோங்க.

எலுமிச்சை ஒன்னு பிழிஞ்சு அதில் கலந்துக்கோங்க. சுகர் இருக்கிறவங்க உப்பு சேர்த்துக்கோங்க. பிபி இருக்கிறவங்க வெல்லம் சேர்த்துக்கோங்க. ரெண்டும் இருக்கிறவங்க அப்டின்னு கேட்டுராதீங்கப்பா ப்ளீஸ்....

தினமும் காலை இதை குடிங்க.... என்ன பயன்னு கேட்பீங்களே...

சரி குறிச்சுக்கோங்க...

நெல்லிக்காய் = இளமையா இருக்க உதவும், ஆயுளை நீட்டிக்கும். தோல் சுருக்கமில்லாம அழகா இருக்கும்.

புதினா, கொத்தமல்லி = ரத்தத்தை சுத்தப்படுத்தும், வாய் துர்நாற்றம் போக்கும்.

கறிவேப்பிலை = தலைமுடி உதிர்வுக்கு ரொம்ப நல்லது.

இஞ்சி = அனாவசியமான சதைகள் உடலில் சேர இடம் தராது....

எலுமிச்சை = உடல் உஷ்ணத்தை தீர்க்கும், பித்தம் போக்கும்..

போறுமா?

அப்ப நாளை முதல் உங்க வீட்டில் ஜூஸ் ரெடியா??

நானா?? நாங்க தான் தினமும் குடிக்கிறோமேப்பா...


Saturday, August 25, 2012

சோயா 65 சாப்பிடுவோமா?

சோயா - 65

அதென்ன எப்ப பார்த்தாலும் சிக்கன் 65?? நான்வெஜ் சாப்பிடாதவங்க சாப்பிடறமாதிரி எதுனா செய்து பார்க்கலாமா? புதுசு புதுசா எதுனா செய்து அதுக்கு ஒரு பேரும் வெச்சு சமைச்சு ஆத்துக்காரருக்கு கொடுத்து அவர் அதை வாயில் போட்டு முழுங்குமுன்னாடி முன்னூறு முறை நல்லாருக்கா நல்லாருக்கான்னு கேட்டு உயிரெடுத்து நல்லாருக்குன்னு சொன்னது தான் தாமதம்... உடனே இங்க போட்டுட்டா என்ன யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு ஒரு நல்ல எண்ணத்தால ( நிஜம்ம்ம்ம்ம்மா தாம்பா நம்புங்க) போட்டுட்டேன்... படிங்க. சமைச்சு பாருங்க... சாப்பிட்டு நல்லாருந்தா சொல்லுங்க சரியாப்பா?

தேவை

ஊறவைத்த சோயா மீல்மேக்கர், இஞ்சிபூண்டு விழுது, காரப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை , க்ரிஸ்பியா இருக்க கொஞ்சூண்டு அரிசிமாவு, எலுமிச்சை ஜூஸ் ரெண்டு டேபிள் ஸ்பூன், பொரிக்க எண்ணை..

செய்முறை...






மீல்மேக்கரை நல்லா கழுவிட்டு ஒரு மணி நேரம் நீர்ல ஊறவெச்சுட்டு அதை பிழிஞ்சு ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க. அதுல உப்பு, காரம், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை, எலுமிச்சை ஜூஸ், அரிசிமாவு எல்லாம் போட்டு பிசிறிவெச்சிட்டு ஒரு மணி நேரம் ஊறவெச்சிட்டு கடாய்ல எண்ணை ஊற்றி இதை கொஞ்சம் கொஞ்சமா போட்டு பொரிச்சு எடுத்து தட்டுல அடுக்கி சூடா சாப்பிட்டு பாருங்க... எப்டி இருக்கு? நல்லாருக்கு தானே??


Tuesday, August 16, 2011

வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி 

தேவை 

பச்சரிசி பாசுமதி அரிசிக்கு அளவு தண்ணீர் ஒன்றுக்கு ஒன்று (அப்ப குழையாது) 
வெங்காயம் 
தக்காளி 
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிப்ளவர், குடமிளகாய். 
மஞ்சள் தூள் 
உப்பு 
எண்ணை 
தயிர் ஒரு கப் 
எழுமிச்சை ரசம் 

மிக்சியில் அரைக்க‌ 
1. இஞ்சி பூண்டு 
2. பச்சைமிளகாய், கொத்த‌ம‌ல்லி 
3.ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம், சோம்பு, ஏல‌க்காய் (பொடி செய்துக்கொள்ள‌வும்) 
4. வெங்காயம் மிக்சியில் அடித்துக்கொள்ளவும் 

அரிசி சமைப்பதற்கு முன் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். 

பெரிய பாத்திரம் வைத்து எண்ணை ஊற்றி பொடிகளை போட்டு வதக்கி பின் வெங்காயம் பேஸ்ட் வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கி தக்காளி காய்கள் எல்லாம் வதக்கி ப‌ச்சை மிள‌காய் கொத்த‌ம‌ல்லி வ‌த‌க்கி உப்பு மஞ்சள் தூள் போட்டு வ‌த‌க்கி த‌ண்ணீர் ஊற்றி கொதித்த‌தும் அரிசி போட்டு, புதினா த‌ழைக‌ளை ந‌றுக்கி போட்டு எலுமிச்சை ர‌ச‌ம் ஊற்றி, த‌யிர் ஊற்றி பின் கொதி வ‌ந்த‌தும் த‌ட்டுப்போட்டு மூடி சிறு தீயில் வைத்து 20 நிமிட‌ங்க‌ள் க‌ழித்து திறந்து பாருங்க‌ள் பொல‌ பொல‌வென்று இருக்கும்....நன்றாக இருக்கும் சாப்பிட‌ (த‌ண்ணீரில் அரிசி போட்ட‌தும் கொதி வ‌ரும்போது த‌ண்ணி நிறைய‌ இருக்க‌கூடாது... த‌ண்ணியும் அரிசியும் ச‌ரி விகித‌மா இருக்க‌னும்) 

கோதுமை ரவை கிச்சடி

கொலஸ்ட்ரால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் கோதுமை ரவை கிச்சடி... எல்லாருமே சாப்பிடலாம்... 

தேவை 

கோதுமை ரவை 
நறுக்கிய தக்காளி, பீன்ஸ், பட்டாணி 
வெங்காயம் 
இஞ்சி பூண்டு 
புதினா ஒரு கட்டு 
கொத்தமல்லி ஒரு கட்டு 
பட்டை 
லவங்கம் 
ஏலக்காய் 
சோம்பு 
ம‌ஞ்ச‌ள் தூள் 
எலுமிச்சை ர‌ச‌ம் 
எண்ணை 
உப்பு 

செய்முறை 

மிக்சியில் இஞ்சி, பூண்டு, ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம், ஏல‌க்காய், புதினா, கொத்த‌ம‌ல்லி எல்லாம் ந‌சுக்கிக்கொண்டு குக்க‌ரில் ஆலிவ் ஆயில் இல்லையென்றால் ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி வெங்காய‌ம் ந‌றுக்கிய‌தை ந‌ன்றாக‌ வ‌த‌க்க‌வும், பொன்னிற‌ம் வ‌ந்த‌தும் மிக்சியில் அடித்த‌தை போட்டு வ‌த‌க்க‌வும், ந‌றுக்கிய‌ காய், த‌க்காளி, ப‌ட்டாணி போட்டு வ‌த‌க்க‌வும், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு போட்டு வ‌த‌க்கி அள‌வான‌ நீர் ஊற்றி கொதித்த‌தும் கோதுமை ர‌வையை போட்டு க‌ல‌ந்து ஒரு க‌ப் த‌யிர் ஊற்றி க‌ல‌ந்து எலுமிச்சை ர‌ச‌ம் பிழிந்து க‌ல‌ந்து சிறு தீயில் வைத்து குக்க‌ர் மூடியால் மூடி 20 நிமிட‌ங்க‌ள் க‌ழித்து க‌ல‌ந்து வெங்காய‌ த‌யிர் ப‌ச்ச‌டியோடு சாப்பிட‌லாம், எல்லாரும் சாப்பிட‌லாம்..

மீன் பிரியாணி

மீன் பிரியாணி
மீன் பிரியாணி 

தேவை 

வஞ்சிர மீன் துண்டுகள் 
அரிசி 
வெங்காயம் 
தக்காளி 
இஞ்சி 
பூண்டு 
எலுமிச்சை பழம் 
மஞ்சள் தூள் 
பச்சை மிளகாய் 
உப்பு 
கறிவேப்பிலை 
மிளகாய் தூள் 
எண்ணை 

செய்முறை 

வஞ்சிர மீன் துண்டுகளை கழுவி அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை ரசம் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து எண்ணையில் பொறித்து வைக்கவும் (டீப் ஃப்ரை அல்ல) 

அரிசியை கழுவி ஊறவைக்கவும் 15 நிமிடங்கள். குக்கரில் குக்கர் இல்லாதவர் பெரிய பாத்திரத்டை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி வெங்காயம் நறுக்கி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது , தக்காளி, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி மஞ்சள் தூள், உப்பு கலந்து வதக்கி, வறுத்த மீன்களை போட்டு வதக்கி அளவான நீர் ஊற்றி கொத்தித்தும் அரிசி நீர் களைந்து இட்டு கொதித்ததும் அடுப்பை சிறிதாக வைத்து எலுமிச்சை ரசமிட்டு கலந்து சரியான தட்டு போட்டு மூடி அரிசி வேகும்வரை அடுப்பை சிறிதாக வைக்கவும், பின்னர் திறந்து கலந்து மறுபடியும் மூடி வைக்கவும். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

Sunday, August 7, 2011

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுக்காய் 


தக்காளி ‍ 1 கிலோ 
பூண்டு 150 க்ராம் 
மஞ்சள் தூள் போதுமான அளவு 
மிளகாய் தூள் 
வெந்தயம் வறுத்து பொடி செய்தது 1 டேபிள்ஸ்பூன் 
பெருங்காயம் கொஞ்சம் 
உப்பு போதுமான அளவு 

செய்முறை 

நன்கு பழுத்த தக்காளிகளை நன்றாக கழுவி துடைத்து பூண்டும் தோல் உரித்து இரண்டும் மிக்சியில் போட்டு அரைத்து பெரிய தாம்பாளத்தில் ஊற்றி உப்பு கலந்து வெயிலில் 3 மணி நேரம் காயவைத்து (தண்ணி வற்றி ஜாம் மாதிரி ஆகிவிடும்) பின் வாணலி வைத்து இந்த கலவையை போட்டு ஸ்டவ்வில் வைத்து நன்றாக கிண்டவும், தொக்கு பதமாக வந்தப்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய தூள், பெருங்காயத்தூள் எல்லாம் கலந்து இறக்கி வைத்து விட்டு, மற்ற வாணலியில் நல்லெண்ணை ஊற்றி கடுகு தாளித்து தக்காளி தொக்கில் போட்டு கலந்து வைத்து விடவும், இட்லி, சப்பாத்தி, தயிர் சாத்ததுக்கு தொட்டுக்க ஹப்பா சூப்பரா இருக்கும்..

புளிச்சக்கீரை ஊறுக்காய்





தேவை:

புளிச்சக்கீரை ‍ 2 கட்டு
கீரையை ஆய்ந்து அல‌சி வெறும் வாண‌லியில் வ‌த‌க்க‌வும், ந‌ன்றாக‌ வ‌த‌க்கும்போதே ஜாம்
போல‌ ஆகிவிடும். அதை இறக்கி வைத்துவிட்டு 20 ப‌ல்லுப்பூண்டு ந‌சுக்கி வைத்துக்கொள்ள‌வும்.


வறுத்து பொடி செய்ய‌

பெருங்காயம்
எள்ளு
முழு தனியா
சிகப்பு மிளகாய் வற்றல்
சீரகம்
வெந்தயம்
கடுகு

இதையெல்லாம் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைக்கவும்


வாண‌லி வைத்து ந‌ல்லெண்ணையை ஊற்றி காய்ந்த‌தும் ந‌சுக்கி வைத்து பூண்டை
எண்ணையில் போட்டு உட‌னே ஸ்ட‌வ்வை அணைத்து விட‌வேண்டும். பின்
வாண‌லியை கீழே இற‌க்கி வைத்து விட்டு அதில் வ‌த‌க்கிய‌ கீரையை போட்டு க‌ல‌க்க‌வும்
அதில் மிள‌காய் தூள் போட்டு ந‌ன்றாக‌ க‌ல‌க்க‌வும், பின்ன‌ர் வ‌றுத்த‌ ம‌ற்ற‌
பொடிக‌ளையும் க‌ல‌க்க‌வும்.க‌டைசியில் போதுமான‌ அள‌வு உப்பு சேர்த்து க‌ல‌க்க‌வும்...
ந‌ன்றாக‌ க‌ல‌ந்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள‌வும்...
அப்புற‌ம் எல்லாத்துக்கும் புளிச்ச‌க்கீரை ஊறுக்காயை தொட்டு சாப்பிட‌லாம்..


நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய் ஊறுகாய் 

10 பெரிய நெல்லிக்காய் இட்லி வேகவைப்பது போல் தண்ணீர் ஊற்றாமல் வேகவைத்து வெறும் வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தையம், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் போதுமான அளவு உப்பு , வறுத்த பொடியையும் மிளகாய் தூளையும், உப்பையும் கலந்து நெல்லிக்காயை கொட்டை நீக்கி விட்டு கரண்டியால் மசித்து, வாணலி வைத்து நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் நெல்லிக்காயை எண்ணையில் வதக்கி மிளகாய் தூள் வறுத்து பொடி செய்த கடுகு தூள் வெந்தய தூள் பெருங்காயத்தூள் உப்பு கலந்து இறக்கவும்.... தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சப்பு கொட்டி சாப்பிட நல்லா இருக்கும் ரொம்ப :)
Related Posts Plugin for WordPress, Blogger...