” எங்க ஒளிஞ்சிட்டிருக்கே??”
கொலுசு சத்தமும் வளையல் கிணுகிணுக்கும் சத்தமும் நோக்கி தேடினான் பார்த்திபன்.
” ப்ளீஸ்டா.... என்னை இப்படி அலைக்கழிக்கவிடாதே.. நானே மனசு சரியில்லாம இருக்கேன் “
சட்டென அவன் முகத்தை புடவை முந்தானை வந்து மூடி விலகியது.....
கலகலவென்று சிரித்துக்கொண்டே எதிரில் வந்து அமர்ந்தாள்...
“ உன் முகத்தில் கருணையும் கனிவும் தெரியறது தெரியுமா??? “
”சும்மா கிண்டல் பண்ணாதீங்க என்னை.... ஆமா என்னிக்கு தான் உங்களுக்கு மனசு சரியா இருந்திருக்கு? இன்னைக்கு மகாராணி என்ன திட்டினா?? “
“ திட்றதுக்கு அவளுக்கு காரணம் அவசியமே இல்லை “ ஹூம் ஆயாசமாக சாய்ந்து உட்கார்ந்தான் பார்த்திபன்...
“ சரி சரி மனசை திசை திருப்புங்க... சும்மா அதையே நினைச்சுக்கிட்டு கவலைப்படாதீங்க “ என்றபடி அவன் தோளை அழுத்தினாள்..
” நீங்க என்னோட பேச ஆரம்பிச்சு சரியா ஒரு வாரமாகுது.. ஆனா என் பெயர் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?? “
“ அட ஆமாம் கேட்கவே மறந்துட்டேனே.. உன் பெயர் என்ன? “
“ ஏன் நீங்களே ஒரு பெயர் வைங்களேன் ” கன்னத்தில் குழிவிழ அழகாய் சிரித்தாள்...
” ம்ம்ம்ம்ம் ராகினி... பெயர் நல்லாருக்கா?? “
” ரொம்ப நல்லாருக்கு ” என்றபடி அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள் ராகினி...
” உன்னிடம் பேச வந்து உட்கார்ந்தாலே நான் எல்லாம் மறந்துடறேன் தெரியுமா ராகினி?? “
“ அப்டியா??” என்று கண்களை விரித்து உதடு சுழித்து சிரித்தாள்...
” நிஜம்மா தான்...எத்தனை மனசு வேதனையா இருந்தாலும் உன்னிடம் வந்து உன்னைப்பார்த்து பேசி உன் மடியில் கொஞ்சம் தலைவைத்து படுத்தாலே என் அத்தனை கவலைகளும் போய்டறது தெரியுமா?? “ என்றபடி ராகினியின் கன்னத்தை தன் கைகளில் ஏந்தினான்....
“ ம்ம்ம்ம் “ என்று சிணுங்கியபடி விலகி அவன் மூக்கை திருகினாள்....
“ நிஜம்மா தான் சொல்கிறேன் நம்பமாட்டியா “ என்ற ஏக்கக்கண்களுடன் ராகினியைப்பார்த்தான்.
“ நம்புவேன் கண்டிப்பா... “ என்றபடி பார்த்திபனை மெல்ல தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்...
“ ஒரு பாட்டு பாடேன் “
“ என்ன பாட்டு? “
” எதுனா.... என் மனம் அமைதியாகும்... அப்டியே உறக்கம் அணைக்கும் என்னை... பாடேன் “ என்றபடி ராகினியை கழுத்தை வளைத்தான் தன் பக்கம்...
“ மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா “
இனிய ராகத்தில் ராகினி பாடப்பாட மெல்ல கண் சொக்கி உறங்கினான் பார்த்திபன்....
“ எழுந்திருங்க.... அங்க உங்களுக்கு திட்டு விழும் சீக்கிரமா போகலன்னா.. நேத்தே டோஸ் வாங்கிட்டு தானே வந்திங்க?? “ விரட்டினாள் ராகினி.
“ எங்க இருக்கேன்?? “ அலங்க மலங்க விழித்து பின் சுதாரித்து எழுந்து வீட்டுக்கு கிளம்ப ஆயுத்தமானான் பார்த்திபன்....
“ மறுபடி எப்ப?? “
“ சீக்கிரமேடா.. நீ தானே என் உயிர்... நீ தானே என் ஸ்வாசம்.. நீ தானே என் எல்லாம்.. நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழமுடியாது.. வாழ்வது போல நினைச்சு கூட பார்க்கமுடியாதுடா.. “ ராகினியின் நெற்றியில் முத்தமிட்டு விரைந்தான் வீட்டுக்கு...
“ ம்க்கும் என்ன இன்னைக்கு ஏன் இவ்ளோ நேரம்?? இன்னைக்கு போய் புடவை எடுக்கணும்னு சொன்னேனே மறந்துட்டுதா “ கடூர குரலில் கத்தினாள் அகிலா...
“ சத்தம் போடாதே அகிலா.. அக்கம்பக்கம் பார்க்கிறாங்கல்ல?? “
“ இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.. ம்க்கும் “ தோளில் முகத்தை இடித்துக்கொண்டு நகர்ந்தாள்...
முணுமுணுப்பு ஆரம்பமானது... இந்த பாவிக்கு வாக்கப்பட்டு வந்து என்ன சுகத்த கண்டேன்.. சொந்த வீடும் இல்ல, சொகுசான வாழ்க்கையும் இல்ல, காசு இல்ல, ஓட்டை ஒடைசல் வீடு..வீட்டைச்சுத்தி கடன் வெச்சுக்கிட்டு என் நகை எல்லாம் அடமானத்துல வெச்சு அதுவும் முழுகிப்போச்சு... பாடாவதி வேலை.. கர்மம் கர்மம்... போயும் போயும் எங்கப்பன் இவனுக்கு கட்டிக்கொடுத்தான் பாரு.. என் தலை எழுத்து... இவன் கிட்ட போனாலே பொணநாற்றம் தாங்க முடியல... எப்படி இவனோடு குடும்பம் நடத்துறது.... எல்லாம் என் தலை எழுத்து....
பரிதாபமாக இதை எல்லாம் கேட்டபடி நகர்ந்தான் பார்த்திபன் குளியலறைக்கு....
குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான் பார்த்திபன்...
“ ஒன்னும் சமைக்கல.. புடவை வாங்க போகணும்ல? அதனால் நான் சமைக்கல...எனக்கு ஹோட்டல்ல பிரியாணி வாங்கித்தாங்க “ என்று சொன்னாள் அகிலா...
“ சரிம்மா கிளம்பு “ என்றபடி சட்டை போட்டுக்கொண்டு கிளம்பினான் பார்த்திபன்...
ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் புடவைக்கடையில் குவிந்தது போல அத்தனை கூட்டம்....
“ நீங்க உட்காருங்க.. நான் போய் எடுத்துட்டு வரேன் “ கூட்டத்தில் மறைந்தாள் அவன் பதிலுக்கு காத்திருக்காமல்...
ஹூம்....
கண்ணை சுழட்டியபடி பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு இடத்தில் அவன் கண்கள் நிலைக்குத்தியது..
“ ஆஹா என்ன ஒரு அழகான ஆகாய நீல நிறம்... ராகினிக்கு பொருத்தமா இருக்குமே.. ஆனா கைல இருக்குற காசுக்கு இவளுக்கு புடவை வாங்கவே பத்தாதே.. ராகினிக்கு இதுவரை நான் ஒன்னுமே வாங்கித்தரலையே...”என்று யோசித்தான்...
“ யோசித்து மட்டும் என்ன கிழியப்போகிறது வாங்குற சம்பளம் வாய்க்கும் கைக்குமே போறலை... ” என்று அவன் மனக்குரல் எழுப்பவே ஹூம்...மீண்டும் கண்மூடி ராகினியை நினைத்து கனவு காண ஆரம்பித்தான்...அவன் நினைவில் ராகினி மெல்ல அவனை அணைத்தாள்...
“ ஐயே உங்களத்தான் எந்திரிங்கன்னா... வந்து காசை கட்டுங்க ” என்று காட்டுக்கத்தல் கத்தினாள் அகிலா...
புடவைக்கு பணத்தை கட்டிவிட்டு ஹோட்டலுக்கு சென்று உணவருந்திவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்ததும் முகம் கைக்கால் கழுவிக்கொண்டு கிளம்பினான் பார்த்திபன்...
“ கிளம்பிட்டான் மறுபடி கர்மம் “ என்றபடி புடவையை எடுத்து தன் மேல் போர்த்திக்கொண்டு நடந்து பார்த்தாள் அகிலா...
மனம் நிறைய ராகினி நிறைந்திருக்க இன்று கொஞ்சம் பூவாவது வாங்கிச்செல்வோம் என்று நினைத்து மல்லிகைப்பூ 3 முழம் வாங்கினான்....
“ என்ன இன்னைக்கு ஒரே வாசனையா இருக்கு உங்கமேலே?? ” என்று அவனிடம் வந்து கை எடுத்து முகர்ந்தாள் ராகினி.
“ நிஜம்மா சொல்லு என் மேலே நல்ல வாசனையாவா இருக்கு? என் பொண்டாட்டி என் மேலே நாறுதுன்னு சொல்றா “ என்று கண்கலங்கினான்...
ராகினி அவனை நெருங்கி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டுச்சொன்னாள்.... ” எனக்கு உங்க உள்ளத்தூய்மை தெரிகிறது..உங்க மனைவிக்கு உடலைமட்டும் பார்க்கிறா... உங்க வேலை அப்படி.. அதுக்கு நீங்க என்ன செய்யமுடியும்? செய்யும் தொழிலே தெய்வம் தெரியுமா? ஏமாத்தறது, திருடறது தவிர எந்த வேலையும் செய்யலாம்... தப்பில்ல... இன்னும் எவ்ளவு நேரம் தான் எனக்கு தெரியாம பூவை மறைச்சு வைப்பீங்க? வெச்சுவிடுங்க என் தலையில் “ என்றபடி திரும்பி நின்றாள் ராகினி..
ஆசையாக அவள் தலையில் பூ வைத்துவிட்டு அழகு பார்த்தான்... ” நீ உன் மனசைப்போலவே அமைதியான அழகு ராகினி.... உன்னைப்பார்த்ததுல இருந்து கேட்க தோணித்து.. உன் கை மணிக்கட்டு அறுபட்டிருப்பது போலிருக்கே என்னடா அது?
அதுவா.. ம்ச்சு அசுவாரஸ்யமாக திரும்பி தன் மணிக்கட்டை பார்த்தாள்... ஒன்னுமில்ல... என்றபடி அவன் அருகே வந்து நெருங்கி அமர்ந்தாள்....
“ எதுனா ஒரு கவிதை சொல்லக்கூடாதா என்னைப்பற்றி “
“ ஏன் எப்ப பார்த்தாலும் கவிதை சொல்லச்சொல்றே? நீயே ஒரு கவிதை.. உனக்கு நான் கவிதை சொல்வதா?? எனக்கு கவிதை எல்லாம் சொல்லத்தெரியாது ராகினி.. ஆனால் அழகை ரசிப்பேன்... ரசித்து ரசித்து மகிழ்வேன்... சொல்ல மறந்துட்டேனே... இன்னைக்கு அகிலாவை கூட்டிக்கிட்டு புடவை வாங்க கடைக்கு போனேன். அங்க உனக்கு பொருத்தமான சேலை ஒன்று பார்த்தேன். என் கையாலாகாத்தனம்.. எனக்கு பற்றாக்குறை... எங்கிருந்து உனக்கு சேலை வாங்குவது.... ” பெருமூச்சு கிளம்பியது பார்த்திபனிடமிருந்து....
“ நான் பார்த்த நாளில் இருந்து நீ ஒரே சேலை தான் கட்டிக்கிட்டு இருக்கே :( உனக்கு ஒரே ஒரு சேலையாவது வாங்கித்தரணும்னு ஆசையா இருக்கு ராகினி...”
கலகலவென்று சிரித்தாள் ராகினி... எனக்கு புடவை எல்லாம் வேண்டாம்.. நீங்க வாங்கிக்கொடுத்த பூவே எனக்கு போதும் என்றபடி மடியில் அவனை சாய்த்து படுக்கவைத்து பாட ஆரம்பித்தாள்....
“ நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை......” மெல்ல கண்ணுறங்க ஆரம்பித்தான் பார்த்திபன்...
” டேய் எந்திரிடா பொணத்து கால் கிட்ட தலை வெச்சு படுத்துக்கிட்டு இருக்கே?? எவனாவது பார்த்தா உன் வேலைக்கு வேட்டு விழும் எந்திரி... ஒரு வாரமா இந்த பொணத்தோட பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கான் லூசுப்பைய ” என்று தலையில் அடித்துக்கொண்டான் சுந்தரம் உடன் வேலை செய்பவன்...
” இந்த பொணத்தை வாங்க அவங்க அம்மாப்பா வந்துட்டாங்க... சீக்கிரம் எந்திரி ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சிட்டாங்களாம் “ பொணத்தை வாங்க வந்திருக்காங்க... சுந்தரம் பார்த்திபன் முதுகில் தட்டி உலுக்கி எழுப்பினான்...
வாயில் ஒழுகும் எச்சிலை துடைத்துக்கொண்டு வேகமாக எழுந்தான்....
தன் உயிரே தன்னை விட்டு போவது போல் உணர்ந்தான்.. இனி தோழியாக காதலியாக தன்னை அரவணைக்க ராகினி வரமாட்டாள் என்ற நிதர்சனம் உறைக்க எழுந்தான்....
ஐய என்னடா இது பொணத்து மேலே மல்லிப்பூவெல்லாம் போட்டிருக்கே என்று எல்லாம் எடுத்து குப்பையில் வீசினான்...
ஒரு வாரமாய் தன்னுடன் பேசி சிரித்து மகிழ்ந்த ராகினி இப்போது சலனமில்லாமல் கண்மூடி படுத்திருப்பதை பார்த்தான் பார்த்திபன்....
என் ராகினி.. என் ராகினி... மனம் முழுக்க எரிந்தது....
வெளியே குரல்கள் கேட்கவே எட்டிப்பார்த்தான் பார்த்திபன்...
ராகினி சாயலில் முகமெல்லாம் அழுது வீங்கி ஒரு பெண்மணி சோகமாய் சொல்லிக்கொண்டிருந்தாள் தன் கணவனிடம்...” உங்களால தான் நம்ம மக இப்ப நம்மை விட்டு போயிட்டா.. அவ காதலுக்கு நீங்க சரின்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் இப்படி கண்காணா இடத்தில் வந்து மணிக்கட்டு அறுத்துக்கிட்டு தற்கொலை செய்துக்கிட்டு இருந்திருக்கமாட்டா.. ஐயோ நம்ம ஒரே பொண்ணு... மீண்டும் அழத்தொடங்கினாள்....
மார்ச்சுவரியில் இருந்து பிணத்தை முழுவதுமாக போர்த்தி கட்டி வெளியே கொண்டு வந்து வைத்தபோது பார்த்திபன் நெஞ்சம் அறுக்க பார்த்துக்கொண்டே இருந்தான்....
” உன் டூட்டி முடிஞ்சிருச்சு... வீட்டுக்கு போ.. இவங்க கிட்ட பொணத்தை ஒப்படைச்சிட்டு நானும் கெளம்பறேன்... என்னடா பேயறைஞ்சமாதிரி இருக்கே? ” என்னாச்சு உலுக்கினான் சுந்தரம்....
“ ராகினி ராகினி ” என்று மனம் அரற்றியபடி பார்த்துக்கொண்டிருந்தான்.....
“ ஒன்னும் இல்ல வீட்டுக்கு கிளம்பறேன்..
தன் சந்தோஷம் எல்லாம் வடிந்து உயிரற்ற உடலாய் வீட்டுக்கு நடந்தபோது....
“ என்னைப்பற்றி ரெண்டு வரி கவிதை சொல்லுங்களேன்... “ காதருகில் வந்த கிசுகிசுப்பாய் ராகினியின் குரல்....
” கனவில் வந்து
கற்பனையில் உதித்து
கவிதையாய் மகிழ்வித்து
மனதில் நீங்காது
நிலைத்து
காற்றில் கலைந்த
என் காதல் தேவதை நீ “
கவிதையே தெரியாதவனின் மனதில் தானாய் உதித்தது வரிகள்.....