"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 10, 2007

விரிவாக என்னைப்பற்றி...

எனக்கு திறமை இருக்கிறதா
திறமைகளை வளர்த்ததுமில்லை
முழுமையாக்க முயற்சித்ததுமில்லை

இசையும் நடனமும் கற்றதும்
தாத்தா பாட்டியின் உபயத்தில்
வளர்ந்தது அவர்களிடத்தில் தானே
தாய்ப்பால் குடித்ததுமில்லை
தாயின் அருமை அறிந்ததுமில்லை

தெளியாத நினைவுகளாக
கைப்பிடித்து தாத்தா கூட்டிச்சென்ற
கடற்கரையும் உண்ட வெண்ணை பிஸ்கெட்டும்
கலங்கலான நினைவுகளாக

அவர் மொழியில் (குஜராத்தி ப்ராமின்)
மஞ்சு அக்கா என்று அன்போடு
தலை தடவி ஊட்டி விட்ட ஞாபகம்

இரண்டாம் வகுப்பு பரிட்சை நேரம்
ஞாபக மறதி குட்டி மஞ்சு
பரிட்சை அட்டை மறந்து வீட்டில் வைக்க

அதை கொண்டு வந்து தாத்தா கொடுத்த
நினைவுகள் மறக்கவே இல்லை
வெள்ளை உடுப்பு தாத்தா சொன்னது
நல்லா எழுதுடா டாட்டா கூட்டிட்டு போரேன்

சொன்னவர் மாலை பள்ளி முடிந்து
வீட்டில் சென்ற போது தாத்தா இறந்தவராக
கூட்டிட்டு போறேன்னு சொன்ன தாத்தா
மீளா உறக்கத்தில் வாக்குறுதி காற்றில்

இறப்பென்றால் தெரியாத வயதல்லவா
என்னை கட்டிக்கொண்டு பாட்டி அழ
மௌனமாய் அம்மா அப்பா அடுத்து நிற்க
அம்மா வயிற்றில் என் கடைசி தம்பி

பாட்டியிடம் வளர்ந்ததாலோ
தாத்தாவின் இறப்புக்கு பின்னர்
இன்னும் என்னை தனியாக்கி
உலகத்தில் என்னை தவிர யாருமில்லை

பூஜையறையில் தனியாய் நான்
என் சம்பாஷணை விக்கிரங்களோடு
தெய்வத்தை மதித்து பயந்து

தொழுத ஞாபகமே இல்லை எனக்கு
என் அன்பு நண்பர்களே என்றழைத்து
அபிஷேகம் ஆராதனை....

தீயகுணம் ஒன்றுமில்லை
திருடியதில்லை திருடிக்கொண்டு
பொய் சொல்ல முயன்றதில்லை

ஏமாற்றியதில்லை ஆனால் முன்கோபம் அதிகம்
அன்னம் வைக்கும் தட்டை
முகத்தில் எறிந்த ஞாபகம் இன்றுமுண்டு

யாருக்கும் இல்லை இத்தனை கோபம்
ஏன் எனக்கு மட்டும் ஜாதகக்கட்டு
பார்த்த மஹான் சொல்கிறார் பாட்டியிடம்

முனிவர் பிறந்த நட்சத்திரம் அனுஷமாம்
பகைமை கொள்ளாதீர் இப்பெண்ணிடம்
இவள் உமிழும் வார்த்தைகள் என்றும்
வீரியம் அதிகம் சத்தியமாக பலிக்கும்

நினைவு தெரிந்து யாரையும்
சுடுசொல் வீசி துன்புறுத்தியதில்லை
உடைத்ததுண்டு தொலைக்காட்சி பெட்டியை
பாட்டி அன்புடன் என்னை அருகே அழைத்து

உன்னால் பயன்பெறுவோராக இருக்க
அன்பை மட்டுமே ஆயுதமாக
உன்னுடன் வைத்துக்கொள்......

இன்றும் அப்படியே அதே அன்புடனே
வார்த்தைகளில் என்றும் தித்திப்பு மட்டுமே
குனிந்த தலை நிமிராது ரோட்டில் நடந்து

ஆண்களை முழுமையாக வெறுத்து
பார்க்கும் ஆண்களில் அப்பனை கண்டதாலோ
ஆண்கள் என் அகராதியில் தீண்டத்தகாதவர்
காதலிக்கும் வயதிலும் காதலை வெறுத்து

திருமண வயதில் திருமணத்தை வெறுத்தேன்
அப்பனை போலொரு கணவன்
அமைந்து விட்டால் பயத்தில்
எத்தனை முறை கண்விழித்து நான்

விலகினால் தான் தங்கைக்கு திருமணம்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது
என்னை தன் அண்ணனுக்கு பார்க்க வந்து
வேண்டாம் பாவம் சிறு பெண் என்று

மறுத்து போன மாப்பிள்ளையின் தம்பி
ஐந்து வருடம் கழித்து தனக்காக என்னை
பார்க்க வந்து பார்த்த உடனே

சட்டென சம்மதம் கூறி பெண்ணுக்கு
என்னை பிடித்தால் பேசலாம் மேற்கொண்டு
இந்த குணம் தாய் தந்தையர் இஷ்டப்பட

மங்கல நாண் என் கழுத்தில் பூட்டி
என்னை தன் இதயத்தில் இருத்தி
மனைவி என்ற அந்தஸ்தை நிலைநிறுத்தி

தாய்மை என்ற அதிகப்படி பதவி தந்து
பிள்ளைகள் இரண்டும் இப்போது எங்களுடன்
ஆண்டுகள் பதினெட்டு திருமணம் கழிந்து....

ஏன்.........காணாத நேரம் தவிப்பது ஏன்
கண்ட பின் சந்தோஷிப்பது ஏன்
கை குலுக்க துடிப்பது ஏன்
மனம் கொஞ்சம் லேசானதேன்

உன் முகம் வாட்டம் கொண்டது ஏன்
வாய் மூடி மௌனமாய் இருப்பது ஏன்
தவறே செய்யாமல் கலங்குவது ஏன்
ஆறுதல் சொல்ல தயங்குவது ஏன்

சிறிது நேரம் சம்பாஷணை ஏன்
நெடு நேரம் கண்முன் வராதது ஏன்
கண்டதும் இன்முக புன்னகை ஏன்
கண்கள் நீரை கொட்டுவது ஏன்

காதல் செய்யும் மாற்றம் ஏன்
காதல் கொண்ட அனுபவம் ஏன்
நேர்மை காதல் நிறைவேறாதது ஏன்
சாதல் கொண்டு திரிவது ஏன்

காதல் உயிர்பலி கொள்வது ஏன்
காதலை மதங்கள் பிரிப்பது ஏன்
காதலன் காதலியை கைவிடுவது ஏன்
காதலைனை மறந்து காதலி பிரிவது ஏன்

ஏன் ஏன் ஏன் இத்தனை ஏன்
காதலின் மேல் நம்பிக்கை இல்லாதது ஏன்
நம்பிக்கை கொண்டு வாழ்வதில்லை ஏன்

நம்பிக்கை இல்லாததால் தானோ??
Related Posts Plugin for WordPress, Blogger...