"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, November 7, 2013

என் மனதுக்கினிய என்ன(கண)வருக்கு
ஏன் மம்மி நகம் வளர்க்க விட மாட்டேன்றீங்க. தலைமுடியை ஃப்ரீயா விட சம்மதிக்க மாட்டேன்றீங்க. இப்படி நிறைய மாட்டேன்றீங்க. அம்மா சொன்ன ஒரு சொல். நீ படிச்சு முடிச்சதும் என்ன ஸ்டைல் வேணும்னாலும் பண்ணிக்கோ. சரி மூணாவது வருஷம் முடிஞ்சிருச்சு ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலியா இருக்கலாம்னு நினைக்கும்போது பொண்ணு பார்க்க வந்தாச்சு மாப்பிள்ளை.

நான் நல்லா இருக்கமாட்டேன். ஆனா என்னை பாக்க வந்த மாப்பிள்ளை ஹீரோ போல இருந்தார் அழகுல, மனசுல, அன்புல, பண்புல. மாப்பிள்ளையை பார்க்கும் சுவாரஸ்யம் இல்லை. அவசரமா கல்யாணம் பண்றாங்கன்ற எரிச்சல். ஆனால் எங்க சொந்தங்கள் முக்கியமா என் தங்கை எல்லாருக்கும் இஷ்டமாகிவிட்டது மாப்பிள்ளையை பார்த்ததும், மாப்பிள்ளை எல்லோருடனும் பழகின விதமும்.

ஒரு சிலர் வீட்டில் மாமியார் மருமகள் சண்டை ஓரவத்தி சண்டை நாத்தனார் சண்டை இருக்கும். எங்க வீட்டில் அதுக்கும் நோ சான்ஸ். அன்பாலயே எல்லார் மனசையும் கட்டிப்போட்டுட்டார். அவருடைய மனைவி நானும் அவர் வழி…

என் கணவர் கண்டிப்பானவர் கிடையாது. ஆனால் நிறைந்த அன்பு தரும் நேசம் நிறைந்தவர்.

ஏன் இவ்ளோ நீளமான கதைன்னு யோசிக்கிறீங்களாப்பா? பொண்ணுப்பாக்க வந்தது 08.03.1989 நிச்சயதார்த்தம் 08.06..1989 கல்யாணம் 08.11.1989 ஆமாம் முழுமையான நிறைவான சந்தோஷமான 24 வருடங்களின் நிறைவு.

அடுத்த ஜென்மத்திலும் இவரே எனக்கு புருஷனா கிடைக்கணும்னு நான் எப்போதும் போல் வேண்டிப்பேன். ஒருவேளை நான் பிறந்தால்.

இன்னும் எத்தனை நாள் இருப்போமோ தெரியாது? இறந்தால் மீண்டும் பிறப்போமோ அதுவும் தெரியாது. பிறந்தால் நம் எல்லா சொந்தங்களுடனும் நட்புகளுடனும் பிறப்போமோ அதுவும் தெரியாது. அதனால் இருக்கிற இந்த கொஞ்ச நாட்களையும் நிறைவாக சந்தோஷமாக அன்புடன் வாழ்ந்துவிடுவோமே.

எங்கள் 24 ஆம் வருட திருமண நாளை எல்லோரும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

Sunday, October 20, 2013

என்னை அம்மா ஸ்தானக்கு உயர்த்திய அன்பு அஞ்சான்....எங்கள் வாழ்க்கையில் என்னை அம்மா ஸ்தானத்துக்கு உயர்த்தி, பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு இவர் காத்திருந்தபோது ஆண் மகவாய் பிறந்து... எனக்கு ரொம்ப சந்தோஷம்.. தினமும் கீர்த்தி வினாயகருக்கு செய்த குங்குமார்ச்சனை வீண் போகவில்லை.. ஆண்குழந்தை தான் பிறக்கும் என்று என் கணவரின் அண்ணன் Hemanth Kumar அவ்ர்களிடம் பந்தயம் 100 ரூபாய் கட்டி... பிரசவம் முடிந்ததும் பாவா வந்து என்னிடம் சிரித்துக்கொண்டே பணம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது....

நான் கர்ப்பிணியாக இருந்தபோது அது வேண்டும் இது வேண்டும் என்று எதுவும் கேட்காமல் இருந்தாலும் எனக்கு என்ன வேண்டும் என்று ஆசையாக என் கணவர் Sampath Kumar Narayanaswamyவாங்கிக்கொடுத்த நாட்களை நினைவுக்கொள்கிறேன்.

பிரசவ வலி அதிகமானபோது ஆஸ்பிடலுக்கு கிளம்பு என்று அம்மா துரிதப்படுத்தினாலும் மொபைல் இல்லாத காலம் அது எங்க வீட்டுக்காரர் வந்தா தான் நான் கிளம்புவேன் என்று பிடிவாதம் பிடிக்க, என் அப்பாவும், தம்பியும் ஒவ்வொரு பக்கம் போன் செய்து பின் என் கணவருக்கு விஷயம் தெரிந்து அரக்கப்பறக்க வந்தப்பின்னரே நர்சிங்ஹோமுக்கு கிளம்பினேன்.

மனதில் ஆயிரம் பயம்... செத்துவிடுவேனோ? என் பிள்ளையை பார்க்காமல் என் மரணம் ஏற்பட்டுவிடுமோ... நிறைய பயம்... கீர்த்தி வினாயகரை விடாமல் பிரார்த்தித்துக்கொண்டு போய் அட்மிட் ஆயாச்சு...

என்னங்க நான் பிரசவத்தில் இல்லாம போயிட்டால்.. உடனே இவர் அழ.... அம்மா எல்லோரும் சேர்ந்து என்னைத்திட்ட.. மூன்று நாட்கள் 
என்னை வலியில் துடிக்கவைத்தான் 21.10.1990 அழகாக பொன் நிறத்தில் க்ருஷ்ண விக்ரஹம் போல குழந்தையை கொண்டு வந்து காட்டினார்கள். எத்தனை அழகு... பொன் நிறம்.... பிஞ்சு விரல்கள்... சிமிட்டி சிமிட்டி கண் மலர்த்திப்பார்த்தான் அஞ்சான்..தலை நிறைய்ய்ய்ய முடி...

நர்சிங்ஹோம்ல இருந்த ஒரு வாரமும் நர்ஸுகளுக்கு ராத்திரி வேலையை ஒழுங்காக செய்யவைத்தான் அஞ்சான்.  முழுக்க அழுகை... ஆலாபனை.. கச்சேரி தான்..

பிரசவத்தில் மட்டுமே படுத்திய என் தங்கம் என் மூத்தப்பிள்ளை இன்று வரை இந்த நொடி வரை என்னை தாயாய் பார்த்துக்கொள்கிறான்.. இன்று என் மகனுக்கு 24 வயது தொடங்குகிறது..

தாய் தந்தையர் செய்யும் நல்லவை கெட்டவை எல்லாமே பிள்ளைகளை போய் சேரும் என்று சொல்வார்கள்.

நானும் சரி என் கணவரும் சரி யாருக்கும் எந்த கெடுதலும் மனதால் கூட நினைக்கவில்லை. எனக்கு கெடுதல் செய்துக்கொண்டிருப்போரைக்கூட அமைதியாக மன்னிக்கிறேன். ஏனெனில் தண்டிப்பதோ வெறுப்பை உமிழ்வதோ நம் வேலையில்லை. தெய்வம் பார்த்துக்கொள்ளட்டும் எல்லாவற்றையும். என் பிள்ளைகள் என்றும் சௌக்கியமாக இருக்க எங்களின் நல்லவைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் ஆசிகளாக..

இறைவன் கிருபையால் எல்லோரின் ஆசியால் சௌக்கியமாக, சந்தோஷமாக, நிறை ஆயுள், ஆரோக்கியம், மூத்தோர் ஆசிப்பெற்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அஞ்சான் Vignesh Ram.

Thursday, September 26, 2013

தெய்வம் நின்று காக்கிறது....” உங்க மகனுக்கு கண்டம் இருக்குங்க பார்த்து வண்டி எதுவும் ஓட்டாமல் இருப்பது நல்லது “ தங்கம் சொல்லும்போது நான் அதிர்வுடன் பார்க்கிறேன்.

” என்ன தங்கம் சொல்றீங்க. அஞ்சான் எப்போதும் வண்டி ஓட்டுவதில் பைத்தியம்… அதனால் தான் அவனை ஹெல்மெட் போட்டுக்கோடா, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போட்டுக்கோடான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

” இல்லம்மா நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க நான் சொல்ல வருவதை. பையன் வண்டி எடுத்தான்னா கண்டிப்பா விபத்து பயங்கரமா நடக்கும் அவ்ளவு தான் நான் சொல்லிட்டேன் கிளம்பறேன். ” சொல்லிவிட்டு தங்கம் இடத்தை காலி செய்துவிட்டார் என் மனதில் சுமையை ஏற்றிவிட்டு…

அஞ்சானுக்கு இன்னைக்கு போன் செய்துடணும். எப்ப பார்த்தாலும் நிம்மதி இல்லாம இருக்கிறேன். அவன் வண்டி எடுத்தான்னா அசுர வேகத்துல வண்டி ஓட்டுகிறான். இளம் வயது. பயம் இருப்பதில்லை.. சொன்னா கேட்டுப்பான்.

யோசனையில் இருக்கும்போது போன் சத்தம் என்னை இயல்புக்கு அழைக்கிறது. அட அஞ்சான்..

“ அஞ்சான் என்னம்மா எப்படி இருக்கே ராஜா? “

” நல்லா இருக்கேன் மா நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா, தம்பி, எப்படி இருக்காங்க?”

” எல்லாரும் சௌக்கியம்பா… என்ன இந்த நேரத்துல போன்?”

” அம்மா நான் புதிதா வாங்கின வண்டியை விற்கிறேன்மா.. தப்பா நினைக்காதீங்க,. ஆசையா வாங்கிக்கொடுத்த பைக் அதுவும் இத்தனை செலவு செய்து வாங்கிக்கொடுத்தீங்க புதுசு வாங்கி ஒரு மாசம் கூட ஆகல. ஆனா நாலு முறை ஆக்சிடெண்ட் ஆகிவிட்டதும்மா அதான் விற்கலாம்னு. ”

”ஐயோ உனக்கு ஒன்னும் ஆகலையே? அதிர்ச்சியுடன் நான்.”
”இல்லைம்மா.. நான் சௌக்கியமா இருக்கேன்.”

” சரி ராஜா. விற்றுவிடு.. அப்பாட்ட நான் சொல்லி சமாளித்துக்கொள்கிறேன் ”சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். தெய்வம் இத்தனை எளிதாய் என் மகனை காப்பாற்றும்னு நினைக்கவில்லை.

வண்டி இல்லன்னா எங்கும் சுற்றமாட்டான். ஆபிசு விட்டால் வீடு. நிம்மதியாக இருக்கலாம்.. ஆசுவாசம் எனக்குள்..

வீட்டில் இவர் கத்த ஆரம்பிச்சுட்டார்.
”என்ன நினைச்சுட்டு இருக்கான். இவ்ளோ செலவு பண்ணி புது பைக் வாங்கி இப்படி அரக்கப்பரக்க விற்கனுமா என்ன?”

”எனக்கு வண்டியை விட குழந்தையின் நலன் முக்கியமா படுதுங்க.”
” எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் ” திட்டிவிட்டு நகர்ந்தார்.

”அஞ்சான் ஊருக்கு வர டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டியாம்மா? ”
”பண்ணிட்டேன்மா.. இண்டர்வ்யூல செலக்ட் ஆகிவிட்டதால்  நிம்மதி.மெடிக்கலும் முடிந்துவிட்டது. எப்ப ஜர்னின்னு சொன்னால் அன்னிக்கு கிளம்பிருவேன்மா.. ”

” அப்பாவின் என் ஆசிகள்டா ராஜா. ” சொல்லிவிட்டு போன் வைத்தேன்.
அஞ்சான் வரும் நாளை எதிர்ப்பார்த்து ஆசையுடன் காத்திருந்தோம் எல்லோருமே இங்கு.

பகவானே என் பிள்ளைகளை என்றும் நான் பிரியாமல் இருக்கும்படி எனக்கு கருணை செய்துட்டேப்பா…

தினமும் ஆபிசுக்கு கிளம்புமுன் எல்லோருக்காகவும் வேண்டிக்கிட்டு கிளம்புவேன். ஆபிசு விட்டு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறப்பதில்லை…

இன்னைக்கு என்னவோ மனசு ஒரு மாதிரியா இருக்கே… ஏதோ ஒரு பயம் மனதில் அடைக்கிறதே.. அஞ்சான் வண்டி எடுத்திருப்பானோ? சே இருக்காது கண்டிப்பா இருக்காது. அவனிடம் தான் வண்டி இல்லையே.. 

இதை நினைச்சுக்கிட்டே நான் ஆபிசை விட்டு மாலை கிளம்பி ரோட் கிராஸ் செய்கிறேன். அப்ப சட்டுனு ஒரு காட்சி  கண்முன். ஒரு வண்டி வேகமாக வந்து அஞ்சான் வண்டியை வேகமாக இடிக்க அஞ்சான் வண்டியில் இருந்து மேல எழும்பி பறந்தான் வலியுடனான அவன் முகம் தெரிந்ததும் மிரண்டேன். சட்டென்று மென்மையான உடையில் பாபா வந்து அஞ்சானை தாங்குவது போல் தெரிந்தது. தலைச்சுற்ற ஆரம்பித்துவிட்டது.

” ஐயோ இப்ப தானே உடம்பு கொஞ்சம் சரியானது போல் இருந்தது. மறுபடி தலைச்சுற்றல் மயக்கம். கடவுளே நெஞ்சுவலி வந்துவிடக்கூடாது. அஞ்சானுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. ” நினைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்.

வீட்டின் வேலைகள் சின்னவனின் எக்சாம் பாடங்கள் என்று மும்முரமாகிவிட்டேன். ராத்திரி நெஞ்சு அடைப்பது போல் இருந்தது படுக்கும் முன்னாடி.  தண்ணீர் குடித்துவிட்டு படுத்தேன்.
அகால நேரத்தில் இடைவிடாது போன் சத்தம்..

அகால நேரத்தில் போன் வந்தால் உடம்பு தூக்கிப்போடுகிறது. ஊரில் யாருக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டம் அதிகமாகிறது. வேகமாக எழுந்து போன் எடுத்தால் தங்கை ஷோபி அழுகைக்குரலுடன். ” மஞ்சு மஞ்சு வேகமா ஸ்கைப்ல வா ” என்றாள்.

“என்னடி இந்த நேரத்துல என்னாச்சு ? “ என்றேன் பயத்துடன்.
“முதல்ல வா நீ ” என்றாள்…

நான் பயத்தில் கதறிய சத்தம் கேட்டு வீட்டில் எல்லோருமே எழுந்தாச்சு.. இரண்டு மணி… வேகமாக ஸ்கைப்பில் வந்தால் அழுகை முகத்துடன் ஷோபி. என்னாச்சு ஷோபி என்னாச்சு சொல்லு எனக்கு பதட்டம் அதிகமானது. மஞ்சு மஞ்சு டென்ஷனாகாதே.. பெரியம்மா நைட் கல்யாண ரிசப்ஷனுக்கு போகணும்னு சொல்லி அஞ்சானிடம் சொல்லி இருக்காங்க.

 உதவி யாரேனும் கேட்டால் மறுக்காமல் உடனே உதவிட துடிக்கும் பிள்ளை அஞ்சான். இதோ என்று உடனே கிளம்பிட்டான். நைட் ரெண்டு பெரியம்மாவையும் பின் சீட்டில் உட்காரவெச்சுட்டு கார் ஓட்டிக்கிட்டு பாடி ப்ரிட்ஜ் கிட்ட வரும்போது பின்னாடி வந்த வண்டி ஒன்று ஓவர் டேக் பண்ணும் அவசரத்தில் இவன் வண்டியை முட்டி மோதிருச்சு என்று சொல்லி முடிக்குமுன் எனக்கு மயக்கம் வந்தது.
“ஐயோ அஞ்சான் அஞ்சான் அஞ்சான் ” விழுந்தேன்.

இவர் பயந்து ” ஷோபி அஞ்சான் எங்கே அவனுக்கு ஒன்னும் ஆகலையே ”என்று எல்லோரும் கதறினார்கள்.

“இதோ இதோ அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல மஞ்சு கண் முழி அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல நல்லாருக்கான் இதோ பாரு இதோ பாரு அஞ்சான் அம்மாவை பாருடா ” என்று சொல்லி என் பிள்ளையை காட்டினாள்.

 என் பிள்ளையின் அழுத முகம்.. நான் எப்போதோ சின்ன வயதில் அடிக்கும்போது என் பிள்ளை அழுதமுகத்தை பார்த்திருக்கிறேன், அதோடு இத்தனை வருடம் கழித்து என் பிள்ளையை இப்படி பார்த்ததும் மனம் சமாதானம் ஆகலை.

 ” என்னாச்சு அஞ்சான் என்னாச்சுடா ”என்று கத்தினேன்.

”எனக்கு ஒன்னும் இல்லம்மா… வண்டி மோதினதுல கார் பல்டி அடித்து உருள ஆரம்பித்து தரையை தலைகீழ் தேய்த்துக்கொண்டே போய் சுவற்றில் இடித்து நின்றது.

ஜன்னல் கண்ணாடி உடைந்து “ சீட் பெல்ட் போடாததால் “ வெளியே போய் விழுந்துட்டேன்மா “ என்றான்.

” ஐயோ பெரியம்மாக்கு ரெண்டு பெரியம்மாவுக்கும் என்னடா ஆச்சு ” என்றேன் பதட்டத்துடன்…

” ஒரு பெரியம்மாவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இன்னொரு பெரியம்மா கால் சீட்டுக்கு இடையில் மாட்டிக்கொண்டு எடுக்க வராததால் வண்டியை திருப்பி மெல்ல அவரை மீட்டோம் “ என்றான்.

”போலீஸ் விரைந்து வந்தது ஸ்பாட்டுக்கு. முகம் தெரியாதவர்கள் எல்லாம் உதவினார்கள் அம்மா ” என்றான்.

” ஐயோ கடவுளே இருவருக்கும் ஒன்றும் ஆகக்கூடாது..”
இரண்டு பெரியம்மாவும் போலிசிடம் ” இது எங்கப்பிள்ளை தான். இவன் பெயரில் தப்பில்லை.. பின்னாடி இருந்து வந்த வண்டி முட்டி மோதி வேகமாக போய்விட்டது. எங்களால் வண்டியை பார்க்க முடியவில்லை ” என்று சொல்ல அஞ்சான் மேல் எந்த வித கேசும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது.

இந்த விபத்தில் அஞ்சான் மட்டும் சின்ன சின்ன காயங்களோடு எப்படி தப்பினான் என்று போலிசுக்கள் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். என் தங்கையும் பெரியம்மா மகளும் சொல்றாங்க பாபா தான் அஞ்சான் உயிரை பத்திரமா காப்பாற்றி இருக்கிறார் என்று.
”சீட் பெல்ட் எப்போதும் போடுடா போடுடா ” என்றால் போடவே மாட்டான்.

அன்றும் சீட் பெல்ட் போடாததால் உயிர் தப்பியிருக்கான்.
நான் கீர்த்தி வினாயகரிடம் போய் உட்கார்ந்து அழுகிறேன். ” என் பிள்ளைக்கு ஏதாவது ஒன்று ஆனால் சத்தியமாக நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். தெரியும் உனக்கு. என் மேல் எத்தனை கருணை பகவானே உனக்கு.”

முகம் தெரியாதவர் எத்தனையோ பேர் அருகே இருந்து உதவி இருக்கிறார்கள். போலிஸ் ஸ்டேஷனிலும் ஆஸ்பிட்டலிலும் அஞ்சானைக்காப்பாற்றும் முயற்சியில் தான் இரண்டு பெரியம்மாக்களும் இருந்திருக்கிறார்கள். இருவரின் ஓயாத வேண்டுதல். அஞ்சான் நல்லபடியா குவைத் போய் சேரவேண்டும். அவன் அப்பா அம்மாவிடம் பத்திரமாக சென்று சேரவேண்டும்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் அத்தனைப்பேரும் அஞ்சானுக்காகவும். இரண்டு பெரியம்மாக்களுக்காகவும் பிரார்த்தித்தனர்.
அத்தனைப்பேரின் ஆசிகள், பிரார்த்தனைகள் பத்திரமாய் சரியாக சொன்ன தேதியில் வந்து இறங்கினான் அஞ்சான்.

கடவுளின் கருணையை நினைத்து தினமும் இடைவிடாது நன்றிகள் சொல்லிக்கொண்டு.. இந்த விபத்தில் ஒரு பெரியம்மாவுக்கு மட்டும் இன்னும் ஆபரேஷன் நடந்து படுக்கையில்.. அவரும் எழுந்து வேகமாக நடமாடவேண்டும். பூரண நலம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்ந்துக்கொண்டே….

எப்போதும் சிறு வயதில் இருந்து அஞ்சானிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். “ ஸ்வாமி கிட்ட கண்மூடி உட்காருடா கொஞ்சம் நேரமாவது. “எனக்காக உட்காருவான். நான் சொல்கிறேனே என்று உட்காருவான். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின்னர் தினமும் ஸ்வாமி கிட்டே உட்காருகிறான் ஒரு மணி நேரம். பிரார்த்திக்கிறான்.

இந்த விபத்து நடந்தப்பின் நண்பர்களும் உறவினர்களும் சொன்ன வார்த்தைகள் ஒரே போல்…

” அஞ்சான் நல்லப்பையன். உதவி என்று கேட்டால் எப்போதும் இன்முகத்துடன் செய்பவன். அவனுக்கு என்றும் நல்லதே நடக்கும்.  ”

”அம்மா அப்பா நீங்கள் இருவருமே யாருக்கும் ஒரு கெடுதலும் செய்ததில்லை. மனதாலும் நினைத்ததில்லை. நாங்கள் இருவரும் செய்த நல்லவையே என் பிள்ளையின் உயிரை காப்பாற்றியதாக சொல்கிறார்கள் எல்லோரும்…”

இது நடந்தது மார்ச் மாதம்.. இறைவன் அருளால்.. எல்லோரின் ஆசீர்வாதத்தால்.. அஞ்சான் என்னும் விக்னேஷ்ராம் இங்கே நல்ல வேலையில் இருக்கிறான்.“ இந்த வேலை கிடைத்ததும் என் அன்புத்தோழியின் உதவியால் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் என் தோழியை “ வேலை வாங்கித்தந்த என் தோழி சொல்கிறாள் இப்போது

“ மஞ்சு சீக்கிரம் பையனுக்கு பொண்ணு பாரு.. கல்யாணச்சாப்பாடு எப்பப்போடப்போறே? “

எல்லாமே பகவான் செய்துக்கொண்டிருக்கிறார்… முயற்சி மட்டுமே நம்முடையது.  அந்தந்த நேரம் வரும்போது தானாகவே நல்லது நடக்கும் ஜெம்னி என்று சொன்னேன் ஆசுவாசம் ஆனது எனக்கு.


நல்லதே நினைத்து… நல்லதே பேசி… நல்லதே பகிர்கிறோம்.. எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்.. இறைவன் நம்முள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்..

எனக்கு கெடுதல் செய்ய நினைப்போருக்கும் சரி, எனக்கு கெடுதல் செய்வோருக்கும் சரி, என்னைத்தூற்றுவோருக்கும் சரி நான் பதிலுக்கு எந்த கெடுதலும் செய்ததில்லை. இனியும் செய்யப்போவதில்லை..என்னைப்பொறுத்தவரை எல்லோரும் நலமுடன் இருக்கவேண்டும். நான் பட்ட இந்த அவஸ்தைகள் யாருக்கும் வராதிருக்கவே வேண்டுகிறேன்.

Tuesday, September 24, 2013

என் நண்பன்....

” மூச்சு திணறுதுப்பா ” என்று சொல்லும்போதே இரும ஆரம்பித்தேன்.

சொல்பேச்சை கேட்கவே மாட்டான் என்னுடன் வேலை செய்யும் எகிப்தியன். என்னை விட சர்வீசிலும் வயதிலும் மூத்தவன்.

நல்லவன்… மனைவி குழந்தைகளோடு எப்போதும் சந்தோஷமாக இருந்தாலும் இந்த பாழாப்போன சிகரெட்டால் எனக்கும் இவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்..

சில சமயம் வாக்குவாதம் முற்றி இனி உன்னோடு பேசமாட்டேன் என்று இருவருமே முகம் திருப்பிக்கொள்வோம்.

ஆனால் குழந்தைப்போல இவனே தன் வயதை மறந்து என்னிடம் சொல்ல வருவான். சந்தோஷம் , சோகம், கோபம் எல்லாமே என்னிடம் பகிர்ந்துக்கொள்ளும் அருமையான நண்பன்..

என்ன ஒரு பிரச்சனைன்னா இவனுக்கு ஆங்கிலம் அவஸ்தை சுட்டுப்போட்டாலும் வராது. என்னிடம் எதையாவது சொல்லும்போது இவன் மொழியில் பேசிக்கொண்டே தையத்தக்கா என்று பாவனையில் எப்படியாவது தான் சொல்ல நினைப்பதை சொல்லி முடித்துவிடுவான்.
நானும் இவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக ரசித்து கேட்பதும் உண்டு.

இவனிடம் எனக்கு பிடிக்காத விஷயம். எரிச்சல் தரும் விஷயம், இவனை கொல்லனும்னு தோணும் விஷயம் இவன் இடைவிடாமல் பிடிக்கும் சிகரெட் மட்டுமே.. இதைத்தவிர இவனிடம் எந்தவித கெட்ட குணங்களும் கிடையாது.

பெண்களிடம் வந்து வழிய மாட்டான் பிறரைப்போல. நேர்மையான வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுப்படுத்திக்கொள்வான். எந்த நேரத்திலும் என்ன உதவி யார் கேட்டாலும் முன்பு நிற்பான் செய்ய…
இப்படியே சில வருடங்கள் உருண்டுக்கொண்டு தான் இருந்தது.சண்டையும் சச்சரவும் அன்பும் பாசமுமாக..

தினமும் சரியா நான் டிபன் பாக்ஸ் பசியோடு திறக்கும்போது இவன் சிகரெட் புகை வாசம் வந்து எனக்கு ஹலோ சொல்லும் என்னையும் எடுத்துக்கோ என்று.. கோபமாக எடுக்கும் கவளத்தை பாக்ஸ்லயே போட்டு ஆத்திரமாக மூடுவேன் மூடியை.. அறிவுக்கெட்டவன்.. எவண்டா கண்டுப்பிடிச்சான் இந்த சிகரெட்டை… என்று எரியும் எனக்கு.

திடிர்னு ஒரு நாள் இவன் சத்தமும் காணோம். சிகரெட் புகையும் காணோம். ஹப்பா நிம்மதி இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடலாம்னு டிபன் பாக்ஸ் திறந்தால் போன். இவன் சீரியசாக ஹாஸ்பிட்டலில் கிடக்கிறான் மாசிவ் ஹார்ட் அட்டாக்..

ஐயோ அடிச்சு பிடிச்சு எல்லோருமாக கிளம்பி போக நினைத்தோம். ஆனால் ஆபிசில் அனுமதி இல்லை எங்களுக்கு போக..
பொறுத்திருந்து மாலை வீட்டுக்கு சென்று என் குடும்பத்தினருடன் கிளம்பி மருத்துவமனைக்கு போனோம்.

பிரக்ஞையின்றி படுக்கையில் கிடந்தான். பார்க்கவே மனம் பதறியது. எவ்ளோ திட்டினியோ என்னை.. பாரு என்ன நிலைமையில் கிடக்கிறேன் என்று என்னை  கேட்பது போல் இருந்தது..

ஒருவழியாக எல்லோரின் பிரார்த்தனையாலும் டாக்டர்களின் உதவியாலும் உயிர்ப்பிழைத்து வந்து மறுபடி சேர்ந்தான் வேலையில்..
நான் சொல்லிவிட்டேன். ”ஹப்பா இனிமே என் நண்பன் புகைக்கமாட்டான் ”என்று. சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் பேக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து வாயில் வைத்துக்கொண்டான்..” போடா நீ உருப்படவே மாட்டே ”என்று திட்டிவிட்டு வந்து என் சீட்டில் உட்கார்ந்துவிட்டேன்.
என் சீட்டருகே வந்து என்னை கேட்டான். எனக்கு சிகரெட் பழக்கம் இருப்பதால் உனக்கு என்ன பிரச்சனை?

”எனக்கு பிரச்சனை இந்த நாற்றம்.. உன் குடும்பத்தினருக்கு பிரச்சனை உன் ஆரோக்கியம். இதை ஏண்டா புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறே ”என்று தலையில் அடித்துக்கொண்டேன்.

மெல்ல நகர்ந்து தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.
இப்படியே நாட்கள் கடந்தது. சண்டை மட்டும் ஓயவே இல்லை எனக்கும் அவனுக்கும்.

சில சமயம் சமாதானம். சில சமயம் இருவருமே முகம் சுணங்கி பேசுவதில்லை. எல்லாம் இந்த சிகரெட் அவஸ்தையால் தான்..
ஹெட் ஆபிசு போய் வந்த காதர் என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ”உனக்கு விஷயம் தெரியுமா? இனிமே உனக்கு நிம்மதி.. சிகரெட் நாற்றம் நாளை முதல் இருக்காது..”

”ஏண்டா ”என்றேன். ”அவன் பழக்கத்தை விட்டுட்டானா என்ன ”என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். மழை தான் வரும் என்று தோணித்து எனக்கு.
”இல்ல ”என்று சொல்லி நிறுத்தினான் காதர்..

”என்னன்னு தான் சொல்லேன் ”என்று உலுக்கினேன் காதரை..

”டர்மினேட் பண்ணிட்டாங்கப்பா யூஸ்ரியை ”என்றான் காதர்.

அதிர்ச்சியில் எழுந்துவிட்டேன்.

”ஐயோ … இவன் ஒருத்தன் சம்பளத்தில் தான் குடும்பம் முழுவதும்..
இனி என்ன செய்வான்.. ”

இவன் முகம் பார்த்து பேச எனக்கு சங்கடமாக இருந்தது.

கடவுளே இவனை அப்புறப்படுத்தச்சொல்லி நான் வேண்டவில்லையே. இவன் சிகரெட் புகைப்பது தானே நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.
மனம் ஒரே ஆராட்டம் ஆனது.. என்ன சொல்வது எப்படி சமாதானம் சொல்வது ஒன்றும் புரியாமல் வியர்க்க ஆரம்பித்தது. மனம் பதட்டத்தில்..
யூஸ்ரி சிரித்துக்கொண்டே என் கேபினுக்குள் நுழைந்தான்…

”கையைக்கொடு.. கடைசில நீ வணங்கும் கடவுள் உன்னை காப்பாத்திட்டாரு” என்றான்.

எனக்கு கஷ்டமாக இருந்தது அவன் செயலைப்பார்க்க..

”யூஸ்ரி சாரிப்பா.. சத்தியமா  உனக்கு இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷம் இல்லை ப்ளீஸ் நம்பு ”என்றேன்.

”ஹே விடுப்பா.. ”

”வேற வேலை கிடைக்குமா ”என்றேன்.

”பைத்தியக்காரி இனி வேலை செய்ய என் உடம்பும் ஒத்துழைக்காது.. ஊர் போய் சேரவேண்டியது தான்.”

”நீ சந்தோஷமா இரு.”

”இத்தனை நாள் உன்னை நான் ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டேன். ”
”என் நல்லதுக்காக தான் நீ சொன்னே ஒவ்வொரு முறையும் சிகரெட் விடச்சொல்லி..”

”நான் உன் பேச்சை கேட்டிருந்தால் அட்லீஸ்ட் என் ஆரோக்கியம் நலமாக இருந்திருக்கும்” என்றான், முகமே பார்க்க பரிதாபமாக இருந்தது.
உதடு கடித்து அழுகையை அடக்கமுயன்றான். முடியாமல் கண்ணீர் உருண்டது அவன் கன்னத்தில்..

”ஆம்பிளை அழக்கூடாதுல்ல? அசிங்கம் ”என்று சொல்லிக்கொண்டு சமாளித்தான் யூஸ்ரி..

”ஆல் த வெரி பெஸ்ட் யூஸ்ரி.” என் குரல் எனக்கே கேட்கவில்லை..
மனம் உடல் எல்லாம் தளர்ந்தது போல் ஒரு நிலை எனக்கு.

”கடவுளே இப்படி ஒரு நிலையை காண வைத்துவிடாதே என்னை மீண்டும் “ என்று நினைத்துக்கொண்டே கைக்கொடுத்தேன் யூஸ்ரிக்கு.

”நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும். 

உன்னை தினமும் என் பிரார்த்தனையில் நினைவுக்கொள்வேன்.” அழுகையை என்னாலும் அடக்கமுடியவில்லை…


Thursday, September 5, 2013

ஆசிரியர் தின அன்பு வாழ்த்துகள்....அட எல்லாரும் இன்னைக்கு ஆசிரியர் தினத்தை நினைவுக்கொண்டு ஆசிரியர்களைப்பற்றி பகிர்வு பகிர்ந்து தன் அனுபவங்களை சொல்லும்போது எனக்கும் நான் பள்ளியில் படிக்கும்போது பண்ண சேட்டைகள் என்னை பொறுமையாக பொறுத்துக்கொண்ட ஆசிரியர்களைப்பற்றி சொல்லியே ஆகணும்னு தோணுகிறது.. சொல்லட்டுமா?

எல் கே ஜி ல மேரி மிஸ்...
 மாலை மணி 3 ஆனால் ஒரு மசால் வடையும் ஒரு கப் டீயும் குடிப்பாங்க உதட்டில் இட்டிருக்கும் லிப்ஸ்டிக் அழியாம இருக்கே இவங்க வடை சாப்பிட்டு டீ குடிச்சப்பின்னரும் அப்டின்னு அப்பவே எனக்கு ஒரே சந்தேகம். ஆனா கேட்கலை அவங்க கிட்ட...


யூ.கே.ஜி விஜி மிஸ்....
 ரொம்ப ரொம்ப ஸ்வீட்.. நான் வளர்ந்தப்புறமும் பஸ்ல அம்மாவை அடையாளம் கண்டுப்பிடிச்சு என்ன கொடுமை பாருங்க எனக்கு அடையாளம் தெரியல. அவங்களே வந்து பேசினாங்க...


ஒன்னாம் கிளாஸ் லூசி மிஸ்...
 அடங்கி ஒரு இடத்துல உட்காரவே மாட்டியா நீ??  இரு உங்க அம்மாக்கிட்ட வந்து கம்ப்ளெயிண்ட் பண்றேன்... வீட்டுக்கு வந்தாங்க கம்ப்ளெயிண்ட் பண்ண... அம்மாட்ட ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க.. :)

இரண்டாம் கிளாஸ் டாட் மிஸ்...
 ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. எந்த அளவு ஸ்ட்ரிக்ட் என்றால் காரணம் கேட்காமலே அடிக்க விரட்டுவாங்க. அடி வாங்காம நைசா க்ளாஸ் முழுக்க ஓடி அவங்களையும் மூச்சிறைக்க வைப்பதுண்டு...

மூன்றாம் கிளாஸ் அருணா மிஸ்....
 என்ன ஒரு அழகு.. என்ன ஒரு கலர்.. ஆனா விட்டேத்தித்தனம் ஜாஸ்தி.. பிள்ளைகள் படிக்கிறாங்களா இல்லையான்னு கூட கவனிப்பதில்லை.. எப்ப பார்த்தாலும் அவங்க பையன் படிக்கிற க்ளாஸுக்கு ஓடி போய் கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க :)

நான்காம் கிளாஸ் வசுமதி மிஸ்...
 என் குறும்புத்தனத்தையும் மீறி என்னை நேசித்த மிஸ்...நடனம்னா வெறும் பரதநாட்டியத்துலயே முட்டிக்கிட்டு இருக்காதேன்னு சொல்லி புரியவெச்ச மிஸ்....

ஐந்தாம் கிளாஸ் ஜெயந்தி மிஸ்.. ( எங்க எச் எம் பொண்ணு)
கோ எஜுகேஷன் என்பது மட்டுமில்லாம ஒரு பெஞ்ச்ல பொண்ணு பையன் அப்டி உட்காரவைச்சாங்க. என் பக்கத்துல உட்கார பசங்க பயந்தாங்க. நம்புங்க அப்ப ரொம்ப ரௌடி… யார் கிட்டயும் வம்புக்கு போகமாட்டேன். ஆனா என் பேச்சுக்கு வந்தா நல்லா அடிப்பேன்.. பாவம் மோஹன் தாஸ் என் பக்கம் உட்கார்ந்த பையன்.. எச் எம் பையன் என் பேக் தூக்கி போட்டதுக்கு மோஹன் தாஸ்னு நினைச்சு செம்ம அடி. அத்தனை அடியும் வாங்கிட்டு கடைசில சொல்றான் நான் இல்லப்பா விஜய் தான் தூக்கிப்போட்டான்னு..

ஆறாம் கிளாஸ் கௌசல்யா மிஸ்….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. ஆனா அவங்களே மிரண்டு போற மாதிரி ஒரு நாள் மன்ந்திலி டெஸ்ட் சைன்ஸ்… ஆனா ஜீரம் அதிகமாகவே  ரிக்‌ஷால ஸ்கூல் பாட்டியை துணைக்கு வைத்து வீட்டுக்கு அனுப்பினாங்க. அம்மா டூட்டிக்கு கிளம்பிட்டு இருக்காங்க. நான் வருவதை பார்த்து என்னது ஜுரமா? அதே சைக்கிள் ரிக்‌ஷால ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய் “ டாக்டர் பெயர் சம்பத்குமார் “ ஊசிப்போட்டு சூடா பாலுடன் மருந்து கொடுத்து அதே ரிக்‌ஷால உட்காரவெச்சு ஸ்கூலுக்கு திருப்பி விட்டுட்டாங்க. மிஸ் மிரண்டு போய் இப்படி ஒரு அம்மாவானாங்களே பார்க்கணும்…

ஏழாம் கிளாஸ் சரோஜா மிஸ்…
ரொம்ப கனிவான மிஸ்.. பிள்ளைகள் எல்லோருமே தன் பிள்ளைகள் போல பார்த்துக்கிட்டாங்க. யாராவது சாப்பிடாம வந்தா உடனே ஒரு பன் வாங்கி தருவாங்க சாப்பிட.. எங்க மாடி வீடு திடிர்னு தீப்பற்றி எரிந்தப்ப என்ன சொல்லி ஸ்கூல்ல லீவ் கேட்கலாம்னு யோசிச்சு இதைச்சொல்லி சரோஜா மிஸ்  கிட்ட நின்னப்ப உடனே  ப்யூனை கூப்பிட்டு பன் வாங்கி வரச்சொல்லி பிடிக்காத பன்னை என்னை தின்ன வெச்சாங்க பாருங்க….

ரங்கமணி மேத்ஸ் மிஸ்… அதே ஏழாம் கிளாஸ் தான்..
எல்லாரும் இனிமே க்ளாஸ்ல ஆங்கிலத்துல தான் பேசனும்னு சர்க்குலர் வந்தப்ப ” இங்கிலிஷ் பீரியட்ல இங்கிலீஷ்ல பேசனும், தமிழ் பீரியட்ல தமிழ்ல பேசனும் அப்டின்னு “
என் போறாத நேரம் என் நாக்கில் சனீஸ்வரர் டிஸ்கோ ஆடிண்டிருந்தார்… சும்மா இருந்தாரா? மிஸ் இங்கிலிஷ் பீரியட்ல இங்கிலீஷ்ல பேசனும், தமிழ் பீரியட்ல தமிழ்ல பேசனும் மேத்ஸ் பீரியட்ல மேத்ஸ்ல பேசனுமா? அப்டின்னு நான் கேட்டப்ப அவங்க மூக்குகண்ணாடி தாண்டி முறைச்சதை இப்பவும் நினைச்சு பார்க்கிறேன்..

அதே மிஸ் பாரதியார் பாட்டுப்போட்டிக்கு ஜட்ஜா மூணு பேர்ல ஒருத்தரா வந்து உட்காரணுமா ? மூணுல ஒருத்தர் இவர் இன்னொருத்தர் லலிதா மிஸ் என் பாட்டு டீச்ச்சர்.. இன்னொருத்தர் வேற.
நான் ரொம்ப  சுவாரஸ்யமா முப்பது கோடி முகமுடையாள் அப்டின்னு பாடும்போது இதோ இந்த பொண்ணு தான் இப்படி கேட்டு என்னை டென்ஷனாக்கினதுன்னு போட்டு உடைக்க.. ஐயோ எனக்கு பரிசு கிடைக்காதோன்னு பயந்தேன். ஆனால் எப்போதும் போல் எனக்கே முதல் பரிசு ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா..

எட்டாம் கிளாஸ் சரோஜா பேர் ஒன்னு ஆனா வேற மிஸ்…
இந்த வருடத்தில் இருந்து தான் ஆங்கிலமீடியமா இருந்தாலும் தமிழ் பீரியட்ல வர மிஸ்ஸை ” வணக்கம் ஆசிரியை “ அப்டி சொல்ல சொன்னாங்க. க்ளாஸ் முடிஞ்சு போகும்போது “ நன்றி ஆசிரியை “ அதனால் தான் என்னால் இயல்பாய் வயதில் மூத்தவர்களை ஐயான்னு கூப்பிடமுடிகிறதுன்னா அப்ப தொடங்கின பழக்கம் தான்… 


ஒன்பதாம் கிளாஸ் தனலக்‌ஷ்மி மிஸ்…
எதையும் கண்டுக்கமாட்டாங்க. ஆனா கோபம் வந்தால் யாரேனும் மிஸ்சிவ்ஸ் பண்ணினா நேரா ப்ரின்ஸ்பல் ரூமுக்கு அனுப்பிருவாங்க.

பத்தாம் கிளாஸ் சியாமளா மிஸ் (தேவதை என்னைப்பொறுத்தவரை)
சியாமளா என்ற பெயர் கேட்டால் எப்போதும் எனக்கு ஒரு ஈர்ப்பு.. இத்தனை அழகான தேவதை முதல் நாள் கிளாசுக்குள் நுழைந்தப்ப ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன அழகு அப்படின்னு எல்லோரும் ஆச்சர்யப்பட்டோம்.. நீளமான தலைமுடி.. வலது கையில் தான் வாட்ச்.. தங்கக்கைக்கெடிகாரம்… அழகு முகம்.. மஹாலக்‌ஷ்மி களை… ஆங்கிலத்தில் ஃப்ளூயண்டா பேச வைத்த பெருமை இவர்களுக்கு தான் சேரும்..  நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்..

ஐயோ ஐயோ முடிச்சதுமே கொண்டு போய் அம்மா திருச்சில எஸ் ஆர் சி ல பி என் ஆர் எம் பாலிடெக்னிக் ல தள்ளிட்டாங்க..
புதிய இடம், புதிய மாணவிகள், புதிய அசிரியர்கள்.. ஆமாம் ஆசிரியர்களும் உண்டு..
முக்கியமா ரமேஷ்பாபு மாஸ்டர்.. எனக்கு பயம்னா பயம்… தினமும் வந்து எதுனா கேள்வி கேட்டு எழுந்து நிக்க வைப்பார்.. பிடிக்கவே பிடிக்காது எனக்கு… தினமும் தவறாம வேண்டிப்பேன். பகவானே இன்னைக்கு மாஸ்டர் பாத்ரூம்ல வழுக்கி விழுந்து வரக்கூடாது க்ளாசுக்கு என்று.. ஆனா ஒரு நாள் கூட லீவ் எடுக்காமல் வந்தார் மாஸ்டர்.. 3 வருஷம்.


எல்லா ஆசிரியர்களும் என் வால்தனத்தை பொறுத்துக்கொண்டதற்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்…. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..

Friday, August 30, 2013

ப்ரியங்கள்....
உன்னைப்பார்க்கவே மாட்டேன்
வறட்டுப்பிடிவாதம் கொண்டு...
ப்ரியங்களில் ஊறிய மனம் மட்டும்
உன்னையே நினைத்துக்கொண்டு....

Thursday, August 29, 2013

ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ:


ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் கனவில் ஒரு வயதானவர் தலையில் வெள்ளைத்துணி முறுக்கி… திண்ணையில் “ அப்ப எங்க வீட்டில் திண்ணை இருந்தது “  ஒய்யாரமாக சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார்…

யார் இந்த தாத்தா? எனக்கு தெரியவில்லை.. எங்கள் குடும்பத்தில் தாத்தா யாராவது இறந்தவர் வந்தாரோ கனவில் என்றே நினைத்தேன்..

மூன்று முறை கனவு வந்தது.. முதல் முறை இவர் எங்க வீட்டு திண்ணையில்.. இரண்டாவது முறை ஒரே மண் திட்டு அங்கே ஒரு கல்.. அந்த கல்லின் மேல் உட்கார்ந்துக்கொண்டு ஒரு கால் மீது இன்னொரு கால் வைத்துக்கொண்டு கையை அருள் பாலிப்பது போன்று… சுற்றி எந்த அரவமோ அலங்காரமோ இல்லை.. சிதிலமடைந்த இடம் போன்று… மூன்றாவது முறை எங்க வீட்டின் சுவர் மேல் உட்கார்ந்துக்கொண்டு என்னையே பார்ப்பது போன்று….

எனக்கு தெரியவில்லை இவர் யாரு என்று..

பள்ளிப்படிப்பு, கல்லூரி முடிந்து திருமணம் முடிந்து பிள்ளைப்பேறும் முடிந்து என் கணவர் குவைத் செல்லும் வாய்ப்பு வந்தபோது மும்பையில் ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனை… அப்போது அங்கிருந்த ஏதோ ஒரு கோயிலில் நுழைந்து நல்லபடியாக குவைத் போய் சேர வேண்டும் என்று வேண்டினார்.. வேண்டிவிட்டு பார்த்தால் அது பாபா கோயில்… அங்கிருந்தோர் சொன்னது ஷீர்டி பாபா கோயில் இது.. வேண்டிக்கிறது எல்லாம் கண்டிப்பா நடக்கும் என்று…

முதல் விடுமுறைக்கு நேராக சென்னை வராமல் எங்களை மும்பை வரச்சொல்லி 1993 யில் எல்லாம் நண்டு சிண்டு எங்க குழந்தைகள் தான் நான் என் மகன் விக்னேஷ் ராம், என் தங்கை, தங்கை கணவர், அவர்களின் இரண்டு குழந்தைகள் கணேஷ் ராம் தத், விஜய விமோஹிதா, அம்மா எல்லோரும் கிளம்பிச்சென்றோம்..
நாங்கள் ஷீர்டி செல்வது இப்போது போல அப்போது அத்தனை எளிதன்று.. எங்கும் சாப்பாடு சரியாக கிடைக்காமல்… குடிக்க நீர், பிள்ளைகள் மூவரும் கைப்பிள்ளைகள் அவர்களுக்கு உணவு, சுடும் வெயில்… காற்று இப்படி எல்லாம் தாண்டி ஒருவழியாக சென்று அடைந்தோம் ஷீர்டி.. அந்த இடம் எனக்கு முன்பே கண்டது போலவே இருந்தது..

இப்போது போல தார் ரோடு, கடைகள் சுற்றி இப்படி இல்லை அப்போது வெறும் மணல் திட்டு தான் எங்கும்…

உள்ளே நுழைந்தால் பாபா… என் கனவில் கண்ட பாபா.. எத்தனை கருணை பாபாவுக்கு என் மேல்…


இரண்டாவது பிரசவம் மிக சிக்கலானபோதும், இவருக்கு ஆபிசில் ஒரு பெரிய பிரச்சனை வந்தபோதும், என் மூத்த மகன் கார் ஆக்சிடெண்டில் பிழைத்ததும் இந்த ஷீர்டி பாபாவின் கருணையே.. அற்புதங்கள் நடக்க ஆரம்பித்தது அன்று முதல் இதோ இன்று வரை…

Wednesday, August 28, 2013

பக்தமீரா தொடர்ச்சி (9)25.
உடுத்தும் உடையிலும் நீ
வணங்கும் இறையிலும் நீ
உரசிச் செல்லும் காற்றிலும் நீ
என்னிலும் நீ எந்தன் பாட்டிலும் நீ 


26.
நீ எங்கே எங்கே என்று
தேடி அலையும் என் மனதில்
உன்னை முழுதும் நிறைந்தவன் நீ
காணும் பொருளினும் உன்னை
காண்பித்தவனும் நீ 


27.

கண்ணா கண்ணா என்று உருகி அழைக்க
மாயவனாய் வந்து மறைந்து போகும்
உந்தன் போக்கு வேண்டாம் கண்ணா
கண்ணாய் எந்தன் இமையாய்
என்றும் நீ இருந்துவிடு கண்ணா...

Saturday, August 24, 2013

என் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....ரூம் எல்லாம் நல்லா இருக்கணும்பா…

முன்னாடி நல்லா டெகொரேஷன் பண்ணிருங்க..

சரிங்க சார்… அட்வான்ஸ் பே பண்ணிட்டு போங்க..

ஓகே..

பாவா பாவா… சீக்கிரம் கிளம்புங்க.. எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தரணும்…

ஓகே ஷோபி…

சத்திர ஓனர் : ஏம்மா பாப்பா எந்த கிளாஸு படிக்கிறே??

ஷோபி மூக்குக்கண்ணாடியை கில்லிப்படத்துல வர விஜய் தங்கைப்போல விசுக்குனு பார்த்துட்டு சொன்னது… ஹலோ கல்யாணமே எனக்கு தான்…

கல்யாணத்துக்கு சத்திரம் பார்க்க என் வீட்டுக்காரருடன் போய் ஓகே சொன்ன மணப்பெண்.. பார்க்க பொம்மை மாதிரி அழகா இருப்பா…

குட்டிப்பொண்ணு போலவே.. க்யூட்டா… இத்தனை வயதானாலும் ஷோபி சிரித்தால் குழந்தை சிரிப்பது போல செம்ம க்யூட்டா இருக்கும்…

ஷோபி பட்டு சாரிக்கு மேட்சா ப்ளவுஸ் தைச்சாச்சாடி?

தைச்சாச்சு மஞ்சு…

எனக்கு ட்ரெஸ் பாவா ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டியா?

முடிஞ்சுது மஞ்சு…

இப்டி தன் கல்யாணத்துக்கு தனக்கானவையும் எடுத்து வெச்சு அழகா எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கூட பார்த்து பார்த்து செய்த என் அன்புத்தங்கை… ஹுஹும் எனக்கு அம்மான்னு சொன்னா சரியா இருக்கும்… 

எங்க வீட்டு பம்ப்ளிமாஸ் ( இப்ப இளைச்சு அழகாயிட்டா... ) என் அன்புத்தங்கை திருமதி ஷோபி ஸ்ரீதர் 23 ஆம் வருட திருமண நாள்..


திருமதி ஷோபிஸ்ரீதர் ( பாருடி தங்கையா இருந்தும் உனக்கு திருமதி எல்லாம் போட்டு எவ்ளோ மரியாதையா விஷ் பண்றேன்னு ) கல்யாண நாள் இன்று 24.08.1990 இருபத்தி மூன்றாம் வருட திருமண நாளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளுடனான ஆசிகள் தம்பதியருக்கு…


ஷோபி நல்லாருந்தா நான் கண்டிப்பா சௌக்கியமா இருப்பேன்.. இன்னும் என் தங்கையைப்பற்றி சொல்ல நிறைய இருக்கு… அவளுடைய பிறந்தநாள் வருது.. அதில் சொல்கிறேன் ஷோபியின் சாகசங்களை…


எப்போதும் நான் வேண்டுவது என் தங்கையும் தங்கையின் கணவர், குழந்தைகள் எல்லோரும் சௌக்கியமாக நீடுழி வாழ வேண்டும் என்பதே...

ஏன்னா எங்க வீட்டின் அன்பு தேவதை என் தங்கை...

எனக்கு என்ன கஷ்டம் என்றாலும் சாமி கிட்ட சொல்லனும்னு தோணாது.. உடனே ஷோபிக்கு தான் போன் செய்வேன்... ஷோபிக்கிட்ட பேசிட்டா போறும்.. எனக்கு சரியாகிவிடும்.. உடல்நலம் சரி இல்லையென்றாலும் ஷோபிக்கிட்ட தான் முதல்ல சொல்வேன்...

ஒரு தடவை மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாகி ஷோபிக்கு கால் செய்தப்ப ஷீர்டி போயிருந்ததால் போன் அட்டெண்ட செய்யலை... ரொம்ப உடம்பு முடியாமல் நெஞ்சுவலி வந்து ஆஸ்பிட்டல் கொண்டு சென்றனர் நடுராத்திரி.. என் பலம்... எப்போதும் என் அன்புத்தங்கை... ஷோபி எனக்கு தங்கை என்று சொல்வதை விட.... என் அம்மா, என் தோழி, என் வழிக்காட்டி, என் தேவதை, என் காவல் தெய்வம்... இது தான்.. ஷோபி எனக்கு ஆசீர்வாதம் செய்தால் நாங்க எல்லோருமே சௌக்கியமா இருப்போம்..

ரொம்ப முக்கியமான விஷயம்.... என் கணவருக்கு ஷோபி ரொம்ப செல்லக்குழந்தை... ரொம்ப ரொம்ப ரொம்ப செல்லம்.... நான் எதுனா சொல்லி என் கணவர் மறுத்தால் ரெக்கமண்டேஷனுக்கு நான் போய் நிற்பது ஷோபிக்கிட்ட தான்.. ஏன்னா ஷோபி சொல்லி என் கணவர் மறுத்ததே இல்லை என்றும்....

என் பிள்ளை விக்னேஷ் ராமிடம் உன் அம்மா பெயர் சொல்லுன்னு சொன்னா டக்குனு அவன் வாயில் வருவது என் தங்கைப்பெயர் தான்... அத்தனை அந்நியோன்யம்.... குழந்தை பிறந்ததும் ஷோபி கையில தான் அதிகம் ராத்திரி எல்லாம் இருந்தான்... இன்றும் அஞ்சான் ஷோபியின் செல்லம்...

எங்கள் எல்லோரின் பிரார்த்தனைகள் எப்போதும் ஷோபிக்கும் ஷோபி குடும்பத்தினருக்கும்....
Thursday, August 22, 2013

முதல் பதிவு.....முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவுக்கு என்னை அழைத்த ஸ்ரீராம் சாருக்கு என் அன்பு நன்றிகள்…

நான் பாட்டுக்கு வேலைக்கும் வீட்டுக்கும் ஒரு இயந்திரம் போல போய்க்கிட்டு வந்துக்கிட்டு இருந்தேன்… பாட்டு நடனம் வரைதல் கவிதை எல்லாம் எப்பவோ தூக்கி பரண் மேலே போட்டாச்சு..

திரு ராஜா ஐயா அவர்கள் தான் என்னை முத்தமிழ் மன்றத்தில் சேர்த்து விட்டார்…

ஆனால் அதில் ஒரு சின்ன சங்கடம்.. அங்க எல்லாமே தமிழ்ல மட்டும் தான் டைப்பணும்.. ஆனா தமிழ் டைப்பிங் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது.. முத்தமிழ் மன்றத்தில் சேர்த்து விட்ட ராஜா ஐயாவுக்கு முதற்கண் என் நன்றிகள்… அப்படி என்னை சேர்த்துவிட்டதால் இப்போது எல்லா இடத்திலும் என்னால் தமிழில் டைப்ப முடிகிறது… கருத்து எழுத முடிகிறது.. கலாய்க்க முடிகிறது…

தமிழில் மெல்ல மெல்ல டைப் அடிக்க கற்றேன் www.higopi.com மூலமா… அதன்பின் ஆகஸ்ட் மாதம் 16, 2007 நைட் விருதைக்கண்ணன் என்ற ஒருவர் மேடம் நான் எழுதி இருக்கும் கவிதையில் பிழைத்திருத்திக்கொடுங்கன்னு கேட்டார்… திருத்திக்கொடுக்கும்போது யோசித்தேன் ஏன் நாமும் தொடரக்கூடாதுன்னு.. அப்படி தொடர்ந்தது தான்..

வலைப்பூவில் என் படைப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டே வந்தேன்.. பின்னூட்டம் எல்லாம் வரனும்னு கூட தெரியாது எனக்கு.. நல்லவேளை பின்னூட்டம் போட வந்திருந்தால் என் எழுத்தை பார்த்து உதைக்க வந்தால் எங்க தப்பி ஓடுவேன்?

எனக்கும் ஸ்ரீராம் சார் போலவே படைப்புகள் தருவது விட கருத்து எழுதுவது மிக விருப்பமான விஷயம்…  அதன்படி… ஒரு நாள் கூகுளில் என் மகன் இபானுக்கு  படம் தேடிப்போனால் நேரே கொண்டு வந்து ரமணி சார் வலைப்பூவில் விட்டது என்னை… அப்ப அவர் கவிதை படித்ததும் மிக எளிதாக அதே சமயம் கருத்துள்ளதாக தோணித்து.. கருத்து எழுத ஆரம்பித்தேன்.. எழுதினேன்…. தொடங்கியது இதோ இப்ப வரை தொடர்கிறது…

முதல் பதிவின் போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட… முதல் கருத்து பதிந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே சத்தியம்….

என் முதல் பதிவின் சந்தோஷம் தொடர் எழுத அழைத்த ஸ்ரீராம் சாருக்கு மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள்…

நான் இரண்டு பேரை அழைக்கனும்ல??

ஸாதிகா
சூரி சிவா என்னும் சுப்பு அப்பா..

இருவரையும் அன்புடன் இந்த தொடர் எழுதும்படி அழைக்கிறேன்…

Tuesday, August 20, 2013

வலைப்பதிவர் சந்திப்பு விழா இரண்டாம் ஆண்டு...

அன்பு நிறை நண்பர்களுக்கு...

வலைப்பதிவர் சந்திப்பு விழா 01.09.2013

தங்களின் வருகையை உறுதி செய்து கொள்ள கீழே கொடுத்துள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

விழா சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

விழா சிறப்பாக நடைபெறவும், எல்லோரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..மின்னல் வரிகள் பாலகணேஷ்
9003036166
bganesh55@gmail.com

மதுமதி
9894124021
kavimadhumathi@gmail.com

திண்டுகல் தனபாலன்
9944345233
dindiguldhanabalan@yahoo.com


kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com

சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

Sunday, August 11, 2013

கணிணியும் நானும்....

அன்பு சகோதரர் செய்தாலி http://nizammudeen-abdulkader.blogspot.com/ கணிணி தொடர் பகிர்வுக்கு என்னை அழைத்ததற்கு அன்பு நன்றிகள்… அதே சமயத்தில் அதிக காலதாமதம் செய்ததற்கு மன்னிப்பு வேண்டிக்கொள்கிறேன்… நாலு நாள் லீவுப்பா ரமதானுக்கு. அதான் வெளியே சுற்றக்கிளம்பிவிட்டதாலும் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்ததாலும் என்னால் உடனடியாக பதிவிடமுடியவில்லை…


போதும்மா… இந்த புராணம்… கணிணி முதன்முதல் எப்ப பாத்தீங்க, தொட்டீங்க.. பயிற்சி ஆரம்பிச்சீங்கன்னு சொல்லுங்கன்னு நீங்க எல்லோரும் கத்தறது எனக்கு காதில் கேட்கிறதுப்பா…


நான் மூன்றாம் வருடம் டிப்ளமா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிச்சிட்டு இருந்தப்ப தான் முதல் வருடம் கம்ப்யூட்டர் வந்தது எங்களுக்கு பயிற்சியாக…


டிவி பெட்டி மாதிரி வெள்ளைக்கலர்ல… உள்ள ஸ்க்ரீன் கறுப்புக்கலர்ல… எழுத்துகள் எல்லாம் பச்சை கலர்லன்னு முதன் முதல் எல்லோரும் கம்ப்யூட்டரை ஜூவில் சென்று புலியை பார்ப்பது போல் அதிசயமாக பார்த்தோம்…


ஒரு கமாண்ட் அடிக்க முழ நீளத்துக்கு ப்ரோக்ராம் எழுதும் அவஸ்தை எனக்கு பிடிக்காமல் போனது…. ஒருவழியா அந்த வருடம் முடிந்ததுமே கல்யாணம் ஆகிவிட்டதால் திரும்ப கணிணிப்பற்றிய எந்த பேச்சும் எழவில்லை… எதிர்லயும் மனதிலேயும்..
கல்யாணம் ஆகி அடுத்த வருட கல்யாண நாள் வருமுன் கையில் குழந்தை.. குழந்தைப்பேறுக்காக அம்மாவீட்டில் இருந்தபோது.. அம்மாவின் பணி கம்ப்யூட்டர் செக்‌ஷனுக்கு சூப்பர்வைசராக ப்ரமோஷன் கிடைக்கவே…


நைட் எல்லாம் அஞ்சான் அழுகையை சமாளிக்க மடியில் போட்டுக்கொண்டு நான் பாடிக்கொண்டிருக்க… எங்க அம்மா ப்ரோக்ராம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் ராத்திரிமுழுக்க.. புதிய விஷயம் எதுவென்றாலும் அதில் ஆர்வமும் ஈடுபாடும் அம்மாவுக்கு அதிகம்… கம்ப்யூட்டரில் அம்மா முத்துக்குளிக்க.. நான் சராசரி வாழ்க்கையில் மூழ்க.. அப்படியாக கணிணி இரண்டாம் முறையாக கண்முன் வந்து கண்ணாமூச்சி ஆடிவிட்டு போனது…

அஞ்சான் ஒன்னரை வயதாகும்போது என்னவர் குவைத்தில் வேலைக்கிடைத்து எங்களுக்கு டாட்டா காண்பித்துவிட்டு விதேசம் செல்ல… அஞ்சானும் நானுமாக நாட்கள் நகர ஆரம்பித்தது… வாரத்திற்கு ஒரு முறை என்னவரிடம் இருந்து கடிதமும், வாரத்திற்கு மூன்று முறை தொலைபேசியில் குரலும்.. யாராவது வந்தால் அவர்களிடம் இவர் ஆடியோ கேசட்டில் பேசியும் பாடியும் அனுப்ப வாழ்க்கை ஒருவிதமாக சென்றது ரம்மியமாக இல்லையென்றாலும் ஏதோ ஒருவிதமாக….


அப்ப அம்மாவும் என் பெரியம்மா மகனும் ஒரு முடிவெடுத்தனர்.. மஞ்சு இப்படி வீட்டில் கிடந்து தனியா அல்லல்படுவதை விட ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு அனுப்பினா தான் என்ன?? இப்படி அவர்கள் முடிவெடுத்து என்னை கம்ப்யூட்டர் க்ளாசுக்கு அனுப்பிய வருடம் 1993.


ஸ்ரீ வென்ஸ் இன்ஸ்ட்யூட்ல காலை டைப்பிங்கும் மாலை கம்ப்யூட்டர் க்ளாசுமாக செல்ல ஆரம்பித்தேன்.. கம்ப்யூட்டரில் என்ன படிப்பது?? ஞானப்பழமாச்சே நான் தான்.. ஒன்றும் தெரியாம திருதிருன்னு முழிக்க.. அங்கும் அம்மா வந்து இப்ப பிரபல்யமாக இருக்கும் விண்டோஸ் லோட்டஸ் ஒன் டூ த்ரீ இது ரெண்டும் எடுத்து படிக்கச்சொன்னாங்க…வாழ்க்கையில் மீண்டும் கம்ப்யூட்டர் முன்னாடி… என்ன வாழ்க்கைடா இது.. நொந்துக்கொண்டே மீண்டும் கம்ப்யூட்டர்ல புதியக்கோணத்தில்… ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது.. எல்லாவற்றுக்கும் ஷார்ட் கட் கீஸ்…  எனக்கும் இஷ்டமானது….எக்சாமுக்கு சரியாக இவரும் லீவுக்கு இந்தியா வர.. ரொம்ப சந்தோஷம் என்னவருக்கும்.. ஆனால் ஸ்ட்ரிக்டாக வேலைக்கு அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டார்…
எக்சாம் முடிந்து சர்டிபிகேட் வாங்கினப்ப எதையோ சாதித்த ஒரு சந்தோஷம்… 1995 ல நானும் அஞ்சானும் குவைத் பயணமானோம்… இங்கு குவைத் வந்தப்பின்னர் எனக்கும் போரடிக்கவே வேலைக்கு போகிறேனே என்றேன்.. ஹுஹும் என்று சொல்லிவிட்டார்.. திரும்ப கணிணிப்பற்றிய பேச்சு மூச்சு நின்றுவிட்டது….திரும்ப 1997 ல என் ஆசைக்காக எம் ஏ சோஷியாலஜி படிக்க ஆசைப்பட்டு இந்தியா வந்தேன்… ஹுஹும் வந்தோம் நானும் அஞ்சானும்… மீண்டும் அம்மா என்னை கம்ப்யூட்டர் கோர்ஸில் சேரச்சொல்லவே திரும்பவும்….கம்ப்யூட்டர் க்ளாசுக்கு போன இடத்தில் உஷா மேடம் என் நெருங்கிய தோழியாக ஆகிவிட்டார்.. பின்னர் அம்மாவிடம் பரிச்சயம் செய்து வைத்தப்பின் அம்மாவுக்கு க்ளோசாகிவிட்டார்..1999 ல மீண்டும் குவைத் பயணம்… நான் வேலைக்கு போகட்டுமா என்று கேட்க இவரும் சரி என்று சொல்லவே.. குவைத் வரும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றார்… ம்ம் என்னவா இருக்கும்…. யோசிச்சு ஒன்னும் தோணாம வீட்டுக்கு வந்தாச்சு.. என் கண்ணை மூடிக்கொண்டு போய் நிறுத்திய இடம் எங்க ரூம்ல அழகா கணிணி, ஸ்கேனர், ப்ரிண்டர்… எனக்காக என்னவர் கொடுத்த பரிசு..கணிணியும் நானும்…. மெயில் அனுப்பத்தொடங்கி..கம்ப்யூட்டரில் தான் என் வேலை முழுக்க…வேலைக்கும் முயற்சித்து வேலை கிடைத்ததுமே.. சந்தோஷமாய்… வேலை முழுக்க முழுக்க கணிணில தான்… அப்ப ஆரம்பிச்சது….2007 ல ராஜா ஐயா மூலம் முத்தமிழ்மன்றம் பிரவேசம்.. அங்கே எல்லாம் தமிழ்ல தான் பதிவுகள்… எனக்கோ தமிழ் டைப்பிங் தெரியாது… அவ்ளோ தான் விட்டாச்சு.. மீண்டும் ஆகஸ்ட் 15 நைட் தமிழ்ல டைப்பிங் www.higopi.com  ல போய் தமிழ்ல அடிச்சு காப்பி பேஸ்ட் பண்ண ஆரம்பிச்சு தொடங்கிய பயணம் இதோ இன்று கணிணி பகிர்வு வரை தொடர்கிறது….


இடையே எனக்கு எலும்பு தேய்மானம் காரணமாக இனிமே கணிணி முன்னாடி மட்டுமல்ல கணிணி பக்கமே திரும்பக்கூடாதுன்னு டாக்டர் சொல்ல… நானும் சமர்த்தா கேட்பது போல கேட்டுட்டு அப்புறம் அதை காத்துல பறக்கவிட்டுட்டு இதோ இங்கே….


இருக்கும்வரை தொடரும் இந்தப்பயணம்….


இந்த தொடர் பகிர்வில்…. நான் ரமணி சார் அவர்களையும் ரிஷபன் சார் அவர்களையும் வை.கோ அண்ணா அவர்களையும் தொடரும்படி வேண்டுகிறேன்…

வாய்ப்புக்கொடுத்த செய்தாலிக்கு மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள்…


Related Posts Plugin for WordPress, Blogger...