"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, July 28, 2011

கதை 11. மரணம் பிரிக்குமா காதலை??

கதை 11. மரணம் பிரிக்குமா காதலை??


"அம்மு எந்திரிங்க.... "


உறக்கக் கண்களுடன் லீவு நாளில் கூட தூங்க விடமாட்டியா கண்ணுக்குட்டி என்று புரண்டான்..

"ஐயடா ஐயாவுக்கு என்ன இன்னைக்கு அத்தனை தூக்கம் எழுந்திருடா படவா "என்று முதுகில் செல்லமாய் வலிக்காது தட்டி எழுப்பினாள் வீணா.

"ஹே விடுப்பா மனுஷனை தூங்கவிடமா என்ன இது தொந்திரவு" என்று சந்தோஷமாய் அலுத்துக்கொண்டு திரும்ப புரண்டு படுக்க எண்ணி திரும்பியபோது வீணாவின் கண்களில் சோகம் கண்டு தூக்கத்தை விரட்டி எழுந்து உட்கார்ந்தான் வேகமாக.

"வீணா என்ன ஆச்சு என்ன முகத்தில் எப்பவும் போல் ஒரு சந்தோஷத் துள்ளல் இல்லையே."
"அட அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல ரௌடி எழுந்து பல் விளக்கிட்டு காபி குடிக்க வாங்க கிச்சனுக்கு".

"நிமிஷத்துல சோகம் மறைத்து சந்தோஷம் நிரப்பும் வித்தையை எங்கே வீணா கத்துக்கிட்டே? "
"அதெல்லாம் ஒன்னுமில்லப்பா" என்று துளிர்க்கும் கண்ணீரை மறைத்தபடி கிச்சனுக்குள் ஓடி மறைந்தாள்...

"யாரிடமிருந்து ஓடி ஒளிகிறேன் நான்? என்மேல் உயிராய் இருக்கும் என் கணவனிடமிருந்தா? அவர் அறியாத செயல்கள் ஒன்றும் செய்ததில்லையே நான்... என்ன ஆச்சு எனக்கு? இதெல்லாம் இந்த காலத்தில் நம்பனுமா என்ன? "

"இத்துணூண்டு மூளைக்குள் அப்படி என்ன தான் யோசனையாம் உன் பின்னாடி நான் வந்து நிற்பது கூட தெரியாம " என்று குட்டினான் விளையாட்டாய் வீணாவின் தலையில்.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் காலையிலயே தொடங்கிட்டீங்களா விடிஞ்சுது போங்க."

"அட அதனாலதானே என் கண்ணாட்டி எழுப்பினதும் சமர்த்தா எழுந்துட்டேன்.. சரி சரி காபி தா எனக்கு. இன்னைக்கு ஒரு நாள் ஜாலியா ஐயா வேலை இல்லாம பொண்டாட்டியை மட்டுமே சுத்தி சுத்தி வர வேலை தான்" என்றபடி வீணாவின் தலையோடு முட்டினான் மெதுவாய்.

இருவருமே சந்தோஷமூடில் இருக்கும்போது இது போல் நெற்றியுடன் இது போல முட்டிக்கொள்வது உண்டு.

வீணா சந்தோஷம் அனுபவிக்கும் மனநிலையில் இல்லை.

காபி கொண்டு போய் தமிழ்செல்வனிடம் கொடுத்தபோது அவன் உன்னிப்பாய் வீணாவின் முகத்தை கவனித்ததை வீணா அறியவில்லை.

தமிழ்செல்வன் காபி அருந்திக்கொண்டே அவள் முகத்தில் இருந்த பார்வையை எடுக்கவில்லை.

வீணா உன் மனதில் என்னவோ கவலை.. அதன் பிரதிபலிப்பு தான் எனக்கு சர்க்கரை இல்லாத காபி கொடுத்திருக்கிறாய்” என்றதும்

“அச்சச்சோ சாரிங்க கொடுங்க போய் சர்க்கரை போட்டு கொண்டு வரேன்என்று கை நீட்டியவளை இழுத்து தன் மடியில் சாய்த்துக்கொண்டான்

“என்னாச்சு என் தங்கத்துக்கு சொல்லு” என்றான் விடாது.

“விடுங்க போய் சமைக்கனும்” என்று அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றாள். முந்தி என்றால் அவனிடம் இருந்து விடுபட இஷ்டமே இல்லாது வெறுமனே போகிறேன் விடுங்க என்று போக்கு காண்பித்துவிட்டு அவன் அணைப்பிலேயே சுகமாய் இருப்பாள்

ஆனால் இப்போது தன் கலங்கின முகத்தையும் கண்ணீர் காய்ந்த கன்னத்தையும் கணவன் பார்ப்பதை விரும்பவில்லை.

“வீணா சீரியசா கேட்கிறேன் என்னாச்சு சொல்லு.. நமக்கு கல்யாணம் ஆகி இன்றோடு 16 வருஷம் முடியபோகுது. என்னிக்கும் நீ என்னிடம் இப்படி இருந்தது இல்லையே ப்ளீஸ் வீணா எனக்கு டென்ஷன் ஆகுது சொல்லு என்ன விஷயம்?”

வீணா கட்டுப்படுத்தமுடியாது அவன் தோளில் சாய்ந்து அழத்தொடங்கினாள் சத்தமாய்.

“ஹேஅதிர்ச்சியாக அவள் முகத்தை கைகளில் ஏந்தினான். “என்னடா ஐயோ இப்படி நீ அழற அளவுக்கு என்னாச்சு சொல்லு. நமக்கு குழந்தை இல்லன்னு யாராவது உன் மனம் நோகும்படி பேசிட்டாங்களா? இல்லை என்னுடைய வார்த்தை எதாவது உன் மனதை நோகடித்துவிட்டதா சொல்லுடாஎன்று கெஞ்சி கேட்க தொடங்கினான்.

“இல்லங்க. நீங்க என்னை பூ போல வெச்சு காப்பாத்தும்போது எனக்கு என்னங்க கவலை இருக்க முடியும்?”

“பின்ன இத்தனை காலையில் இத்தனை அழுகை ஏன்?”

“அது வந்து வந்து”....... என்று சொல்லி நிறுத்தினாள்..

“வந்தாச்சே இன்னும் இழுத்தடிக்காம சொல்லுஎன்று பரபரத்தான்.

“நேற்று பக்கத்து வீட்டு அலமு அக்கா ஜோதிடரை பார்க்க போகும்போது என்னையும் கூட்டிட்டு போனாங்க. “

“அதான் எனக்கு தெரியுமே.”

“அங்க போகும்போது நான் உங்க ஜாதகமும் என் ஜாதகமும் கொண்டுபோனேன். நமக்கு குழந்தை பாக்கியம் இல்லன்னு டாக்டர் சொன்னாலும் மனசுக்குள் ஒரு ஆசை எதுனா ஒரு அற்புதம் நடக்காதான்னு.”

“சரி போனே... போன இடத்தில் என்னாச்சு?”

“ஜோதிடர் உங்க ஜாதகம் பார்த்துட்டு இந்த ஜாதகத்துக்கு குழந்தை ப்ராப்தம் இருக்கு அப்டின்னு சொன்னார்.”

“அட” என்று ஆச்சரியப்பட்டு துள்ளி உட்கார்ந்தான்.. “என்ன வீணா சொல்றே? டாக்டர் நமக்கு குழந்தை பிறக்க வழியில்லன்னு சொன்னாரே. அப்ப ஜோதிடர் மட்டும் எப்படி இப்படி சொல்றார்.”

“அதை தாங்க நானும் கேட்டேன் அவரிடம். நிதானமாய் என் ஜாதகமும் பார்த்தார். பார்த்துட்டு என் முகம் பார்த்து உதடு பிதுக்கி சொல்ல சங்கடமா இருக்கு குழந்தே ஆனாலும் சொல்லித் தான் ஆகனும். உனக்கு ஆயுள் இன்னும் ஒரு வருடம் தான் என்றார். “ இதை சொல்லிவிட்டு திரும்ப அழத் தொடங்கினாள்.

ச்சீ பைத்தியம் முதல்ல கண்ணைத் துடை.. எழுந்திரு.. ஊரு உலகத்துல ஒரே ஒரு ஜோதிடன் தான் இருக்கானா என்ன? வா நாம வேற டாக்டர் கிட்ட போய் நம் இருவரும் முழுமையா டெஸ்ட் பண்ணிக்கலாம். உனக்கு ஒன்னும் ஆகாதுடா. நமக்கு குழந்தை பிறக்கும். நீ பேரன் பேத்தி கல்யாணம் தாண்டி இருப்பே.”. என்று அவளை சமாதானப்படுத்தினான். வீணா போய் பார்த்த ஜோதிடனின் முகவரியை கேட்டு வாங்கிக்கொண்டான் மறக்காமல்.

”இல்லங்க.. எனக்கு மனசு சரியில்லை. எங்கனா வெளியே போகலாமா என்றாள்...”.

”சரி வா போகலாம்... ஆனா என் செல்லம் இப்படி அழுதுட்டு இருந்தால் நான் என்ன செய்வதாம்? சிரிச்ச முகத்தோட இருப்பியாம். ஒரு குட்டி கவிதை சொல்லவாஎன்று காதில் கிசுகிசுத்தான். முன்பெல்லாம் இப்படி சொல்லும்போதே ஐயோ என்று காதை பொத்திக்கொண்டு பொய்யாய் அலறுவாள். இப்போதோ அவளுக்கு அவனுடைய கதகதப்பான அணைப்பும் அன்பும் அருகாமையும் கவிதையும் தேவையாய் இருந்தது.

”ம்ம்ம் சொல்லுங்க அம்முஎன்றாள்.....

மரணம் கூட பிரிக்காது நம்மை
ஏனெனில்
நாம் காத்திருக்கப்போவதில்லை அதுவரை
ஒன்றாய் சுவாசித்த நம் உயிர்
விதிவரும்வரை காத்திருக்காது
மரணத்தையும் வெல்வோம்
ஒன்றாய் நம் மூச்சை நிறுத்தி....

இதை கேட்டதும் தமிழ்செல்வனை அணைத்துக்கொண்டு சத்தமாய் அழத்தொடங்கினாள்.

”பைத்தியமே உனக்கெதுனா ஆகி நீ இல்லாம போயிட்டால் நான் மட்டும் தனியா எப்படி இந்த உலகத்தில் இருப்பேன்னு யோசிச்சியா மண்டு?”

”நீ இல்லாம எனக்கு ஒன்னுமே கிடையாதே.. என்னை குழந்தை போல இத்தனை வருஷம் பார்த்துக்கிட்டியே... எனக்கும் உனக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாரிருக்கா? ”

”தலை சீவ தெரியாது எந்த பேண்ட்டுக்கு எந்த ஷர்ட் போடனும்னு தெரியாது.. முக்கியமா ஒழுங்கா டை கட்ட தெரியாது. சுடுதண்ணி வைக்க கூட தெரியாது. இந்த குழந்தை பத்தி நினைச்சியா நீ? மரணம் உன்னை நோக்கி வரும் வரும்னு சொல்றியே எதிர்த்து போராட வேண்டாமா? என் புருஷனுக்கு என்னை விட்டால் ஒன்னும் தெரியாது அவனுக்கு நான் தான் உலகமேன்னு அந்த எமன் கிட்ட போராடமாட்டியா நீ? ”

”அம்மூஊஊஊஊஊஊ போதும் டாஎன்று சொல்லிக்கொண்டே அவனை இறுக்க அணைத்துக்கொண்டாள்.

”அப்ப இனி இப்படி பைத்தியம் போல அழமாட்டே தானே? ”என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களிலும் கன்னத்திலும் அன்பாய் முத்தமிட்டான்.

”இல்லடாஎன்று அவனைக் கட்டிக்கொண்டு அமைதியாய் கண்ணீர் வடித்தாள்.

”அம்மு காளிகாம்பாள் கோவிலுக்கு போகலாமாஎன்று மெல்லக் கேட்டாள்.

”ஐயே என் பட்டிக்காட்டு மனைவியே சரி சரி கிளம்பு வேகமாய்என்று சொல்லிவிட்டு குளிக்க பாத்ரூமுக்குள் புகுந்து கதவை தாழிட்டு ஷவரை திருப்பினான் அவன் அழும் சத்தம் வெளியே தெரியாதிருக்க...

’என் வீணா என் செல்லத்துக்கு இருக்கும் நோய் நான் அவளுக்கே தெரியாமல் மறைச்சு வெச்சிருந்தேனே கடவுளே... இப்படி ஜோதிட ரூபத்தில் வந்து என் வீணாவை கலங்கடித்துவிட்டாயே நியாயமாஎன்று கண்ணுக்கு தெரியாத இறைவனுடன் சண்டையிட்டான்.

குளித்துவிட்டு வெளியே வந்தபோது சந்தனக்கலர் பட்டுப்புடவை அரக்குபார்டர் கட்டி இருந்தாள்அதற்கு இணையாய் சிகப்புக்கல் கம்மலும் இட்டு பாந்தமாய் தலை சீவி மல்லிகைப்பூ மணக்க மணக்க வைத்திருந்தாள். முகத்தில் மட்டும் சோகம் டன் டன்னாய்.

”தலைமுடி கொட்டிட்டே இருக்கு அம்மு என்னன்னே தெரியலை” என்று ஒரு நாள் வீணா சொன்னபோது அதை கேட்டு சிரித்துவிட்டு சொன்னதை நினைத்து பார்த்தான்

" எனக்கு பிடிச்ச மல்லிகைப்பூ உன்னை தினம் தினம் கூடை கூடையாய் வெச்சுக்க சொல்லி படுத்துறேனே அதனால தான் இருக்கும்போல...”

ஒரு நாள் மாடியில் இருந்து நடந்து வரும்போதே தலை சுற்றி மாடியில் இருந்து உருண்டு விழுந்தாள்.

பதறியடித்துக்கொண்டு டாக்டரிடம் சென்றபோது ஸ்கேன் எடுத்துபார்த்துவிட்டு இன்னும் சில டெஸ்டுகள் செய்துவிட்டு ஒன்றுமில்லையே ரொம்ப வீக்கா இருக்காங்க அதான் என்று இருவர் மனதிலும் நிம்மதியை படரவிட்டார் டாக்டர்

சந்தோஷமாய் இருவரும் வெளியே வந்தபோது திரும்ப தலைசுற்றல் வந்து மயங்கி விழுந்தாள் வீணா.

ஐயோ என்றலறினான் தமிழ்செல்வன்

உடனே ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு போனார்கள்..

டாக்டர் தமிழ்செல்வனை வரச்சொல்லி தன் ரூமுக்கு அழைத்துச்சென்று அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை சொன்னார்.

”என்னிக்கோ இவங்க தலையில அடிப்பட்டு அதை சரியா கவனிக்காம விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன் செல்வா. ஸ்கேன் எடுத்து பார்த்தப்ப மூளைக்கு நெருக்கத்தில் ரத்தம் கட்டியாகி இருக்கு. ஆபரேஷன் செய்து எடுக்க முடியும்னு தோணலை. ஆபரேஷன் செய்தாலும் ரிஸ்கு தான். உயிர் பிழைக்கும் வாய்ப்பு பத்து சதவிகிதம் கூட இல்லை” என்றார் யோசனையாய் டாக்டர்.

அதிர்ச்சியில் மூளை உறைந்தது அவனுக்கு. கடவுளே எனக்கிருக்கும் ஒரே ஒரு உறவு அதையும் பறிக்க நினைக்கிறாயா என்று சபித்தான் இறைவனை.

”டாக்டர் எதுனா செய்து என் மனைவியை காப்பாற்ற முடியாதா?”

”வலி இல்லாமல் இருக்க ஏதோ என்னால் முடிந்தவரை மருந்துகள் தருகிறேன். ஆனால் உறுதியாய் என்னால் எதுவும் சொல்லமுடியாது செல்வா” என்றார் டாக்டர்.

”இனி அவர்கள் வாழும்வரை சந்தோஷம் மட்டுமே எல்லாவற்றிலும் காணும்படி செய்ங்க. உங்க சோகத்தை அவங்க கிட்ட காமிக்காதீங்க. புரிந்ததாஎன்றார் டாக்டர்.

”என் உயிரை எடுத்துக்கிட்டு என் மனைவியை பிழைக்கவைக்கும் சக்தி மட்டும் எனக்கு இருந்தால்........” என்று சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதான் தமிழ்செல்வன்.

”என்ன அம்மு என்னை சொல்லிட்டு அப்படி என்ன யோசனைஎன்று அவன் நெற்றியில் முட்டினாள்.

தமிழ்செல்வன் நினைவுக்கு வந்தவன் போல் பரக்க பரக்க விழித்தான்.

”வீணா நீ ரொம்ப அழகா இருக்கேடாஎன்றபடி இழுத்து அணைத்து முகம் முழுக்க முத்தமிட்டான்.

டாக்டர் சொன்ன கெடு ஒரு வருஷம் முடிய இன்னும் இரண்டே மாதம் தான் இருக்கிறது இந்த நிலையில் பாழா போன ஜோதிடன் ரூபத்தில் என் செல்லத்துக்கு இப்படி ஒரு துன்பம் ஆகிட்டுதே என்று மனதுக்குள் குமுறினான்.

வேகமாய் பட்டு வேஷ்டி ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டான். இருவரும் கிளம்பினர் காளிகாம்பாள் கோவிலுக்கு.

விதியின் விளையாட்டை யாரறிவார்??

கோவிலுக்கு சென்று அர்ச்சனைக்கு தட்டை கொடுத்துவிட்டு கண்மூடி இருவரும் உருக்கமாய் நின்றனர். இருவர் மனதிலும் ஒரே வேண்டுதல்....

”இறைவா நானில்லாமல் இவரிருக்கமாட்டார்... என் சாவை தள்ளிப்போடுவியா?”

”இறைவா இவளில்லாமல் என்னால் இருக்கமுடியாது என் வீணாவுடனே என் மூச்சும் நிற்கட்டும்...”

காளிகாம்பாளின் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது....

இருவரும் பூஜை முடித்து பிரகாரத்தை சுற்றி வந்தனர்

பிரசாதம் உண்டுவிட்டு கோவில் விட்டு வெளியே வந்தனர்.

”ஹோட்டல்ல சாப்பிட்டு கிளம்புவோமா பசிக்குதுஎன்றான் தமிழ்செல்வன்

”சரிங்க அம்முஎன்று சொல்லிவிட்டு அவன் கையை இறுக்க பற்றிக்கொண்டாள் ரோடு கிராஸ் செய்ய பயம் என்பதால்.

இருவரும் ரோடு கிராஸ் செய்யும்போது ராட்சசத்தனமாய் அலறிக்கொண்டு வந்த ஒரு தண்ணீர் லாரி வேகமாய் கடந்தது....

ஒரே நொடியில் வீணாவின் சந்தன நிறப்பட்டுப்புடவையும் தமிழ்செல்வனின் பட்டுவேஷ்டியும் சிகப்பு நிறத்தில் காற்றில் அலைபாய்ந்தது.

இறுக்க பற்றிய கைகளை கோர்த்தவாறு இருவரின் மூச்சும் ஒன்றாய் நின்றிருந்தது....
இருவரின் வேண்டுதலும் சாட்சியாய் அங்கே கோவிலில்.... 
சத்தமாய் கோவில் மணி அடிக்கத் தொடங்கியது....




Related Posts Plugin for WordPress, Blogger...