"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

என் வீட்டுக்கண்ணாடி...

புவிப்பெண்ணின் காதல்......

எங்கேயடா பாரதி நீ??

தோற்றவனே ஜெயிக்கிறான்....

காதல்...

பாசாங்குக்காரி...

எண்ணிக்கொள் கண்ணே....

உன்னை அறிய முயல்வாயா??

அன்பு ஒன்றே....

கணவனே உன்னுடன்....

முத்துக்ருஷ்ணா செல்லக்ருஷ்ணா....

முத்தம்....

நீயில்லாத எதுவும்.....

கனவே கலைந்து விடாதே....

கனவே
என் கற்பனைகள்
சாதாரணமானதே
கலைந்துவிடாதே

கனவிலாவது
நல்ல உடை உடுத்தி
விரும்பிய பண்டம்
உண்டு மகிழும் என்னை

கனவே
கலைத்து விடாதே
பள்ளிக்கூடம் அனுப்ப
வசதியில்லாத
அம்மா அப்பாவை
எதிர்த்து விடாமல்
இருக்க கனவே
நீ கலைந்துவிடாதே

இருக்க வீடும் இல்லை
உண்ண உணவும் இல்லை
நல்ல மாப்பிள்ளை தேடி
குடிகார அப்பா

போகும் ஊரும்
குடி நிறைந்த இடமாம்
கனவே நீ
கலைந்துவிடாதே

குடிகார கணவனை
என்னுடன் இணைத்துவிடாதே
பணம் இல்லை
நகை இல்லை
வீடில்லை
வாசலும் இல்லை

ஆனாலும்
குடிக்கார மாப்பிள்ளை
இல்லையென்றால்
எனக்கு வாழ்க்கையும்
இல்லை

கனவே நீ
கலைந்துவிடாதே
கண் திறக்கவைக்காதே

மகனே என் மகனே....

துன்பங்களை
மனதில் புதைக்காதே
உன்னையே வெறுக்காதே
தாயாய் அணைக்கும்
என் மடியில்
உன்னை சாய்த்துக்கொள்

என் கைகள் கோடரி
அல்ல மகனே
உன் மனதை வருடி
தென்றலை
உன்னிடமே திருப்பி
உன்னை விழுங்க
துடிக்கும் சோகங்களை
வேரோடு அறுக்கும்
கோடரியடா என் கைகள்

நிம்மதி உறக்கம்
எந்தன் மடியில்
அன்பு உணவு
எந்தன் கைகளில்
கனிவும் கருணையும்
என்றும் என் ஆசியும்
உன்னுடன் உண்டு மகனே

என்னை பார்க்க நீ
வரவே இல்லையென்றாலும்
முதியோர் இல்லக்கதவுகள்
திறந்தே தான் உள்ளது

நீ வருவாய் என்றோ
வேறு ஒரு தாய் தன்
மகன் கொண்டு வந்து
விட்டு போவான் என்றோ
மகனே கதவுகள்
திறந்தே தான் உள்ளது

மணமகன் ஜாக்கிரதை....

கொடூர பற்கள்
கொண்ட நாய்
வீட்டினுள்
நாய்கள் ஜாக்கிரதை

திருமணம் செய்பவரே
பார்ப்பதில்லையா?
மணமகன் ஜாக்கிரதை

மாமியார் ஜாக்கிரதை
பலகை இல்லையே
ஐயோ பரிதாபம்

பெற்றக்கடன் தீர்க்க
கடன் புரட்டி நிலம் விற்று
நகைகள் செய்து

மணமகன் ஜாக்கிரதை
பலகையில்லா வீட்டில்
விட்(ற்றா)டாயிற்று

இனி தப்பிப்பதும்
இஷ்டப்பட்டு வாழ்வதும்
மகளே உன் சமர்த்து....

அரிதாரம் பூசாமல்.....

நடிக்க கற்றுக்கொண்டேன்
அரிதாரம் பூசாமல்
வாழ்க்கையில் நடிக்க
கற்றுக்கொண்டேன்

திருமண மேடையில்
முதல் பொய் சிரிப்பு
நடிக்க முயற்சி

புகுந்த வீட்டின் பெருமை
தாய் வீட்டில் மறைக்க
புன்னகை முகமூடி

துடிக்கும் வார்த்தைகள்
முகத்தில் காபியோடு
உமிழும்போது

கண்ணீர் மறைத்து
அழகாய் நடித்து
முயற்சியில் முதல் வெற்றி

சோகம் மனதில்
சிரிப்பு உதட்டில்
தாய் தந்தையோ

மனம் மகிழ்ந்தனர்
மகள் நன்றாய் வாழ்கிறாள்
என் நடிப்பு எப்படி??

நடித்து வாங்கியது
பதக்கம் அல்ல ஆனால்
கொடுப்பது சந்தோஷம்...

நடிப்பு தொடர்கிறது
வாழ்க்கை நீள்கிறது
ஆயாசம் தள்ளுகிறது

முதுமை வருகிறது
நடித்து நடித்து என்
உண்மை உணர்ச்சிகள்

மரத்தும் போனது
சுயம் மறந்து போனது
ஆனால் நடிப்பில் வெற்றி....

நினைவுப்பெட்டகம்...

மனமென்னும் பெட்டகத்தில்
வைத்து அழகு பார்த்தேன்
உன் நினைவென்னும்
அரிய பொக்கிஷத்தை

முகம் சுளித்து
கன்னத்தில் குழி விழ
சிரிக்கும் சிரிப்பை
பொக்கிஷமாக்கி சேர்த்தேன்

உன் உடன் நடந்து
பூவின் மணம் நுகர்ந்து
உன்மத்தம் ஆகி
அதையும் சேர்த்தேன்.....

உன் காலில் குத்திய
முள்ளை பத்திரமாய்
ரத்து துணுக்கோடு
சேர்த்து வைத்தேன்...

கனிவும் காதலும்
கலந்த பார்வையோடு
தலை சாய்த்து
கண் சிமிட்டினாயே
அதையும் தான்....

எத்தனை நாளானாலும்
வயது கூடினாலும்
நினைவுகளின் இளமை
அழிவதே இல்லை...

முதுமை வந்ததே
மறதியும் கூடியதே
ஆனால் உன்னை
முத்தமிட்ட நிமிடம்
மட்டும் மறக்கவே இல்லை.....

முதுமை நோயா??

ஒதுங்கி உட்காரு
இந்தா தனி தட்டு
அலுமினியத்தில்

ஏன் உன்னை
இப்படி தள்ளி
விடுகின்றார்?

உனக்கு நோயா?
உன்னை தொட்டால்
எனக்கும் ஒட்டிக்கொள்ளுமா?

உனக்கு மட்டும்
கிழிந்த போர்வை
எனக்கு மட்டும் கட்டில்

ஏன் பாட்டி இப்படி
பாசமாய் பேரன் கேட்கிறான்
என் கன்னம் தாங்கி

முதுமையும் ஒரு
நோய் தான் என்றேன்
கண்ணீர் மறைத்து.....

காண்பதெல்லாம்.....

காண்பதெல்லாம்
நல்லவையாகவே
தெரியும் அற்புதம்
ஏனடி கண்ணே??
என்னுள் நீ
நுழைந்ததால் ஏற்பட்ட
மாற்றமோ
சொல்லேன் கண்ணே.....

மனம் உருகி.....

மனம் உருகி
கரையும் வேளை
சோகம் உள்ளடக்கி
முடியாமல் போக
கண்ணீராய்
வெளியேறுகிறதே......

பாவக்கணக்கு...

பாவக்கணக்கு
குறித்து வைப்பதில்லை
மனிதனின் ஏட்டில்

இறைவன் சிரிக்கிறான்
குறித்தும் வைக்கிறான்
என்ன தண்டனை
யாருக்கு தெரியும்

பாவம் செய்பவன்
யோசிப்பதில்லை
கொலை செய்பவன்
நிதானிப்பதில்லை

கணவன் மனதை
புண்படுத்தும் மனைவியோ
அன்பை அறிவதில்லை

வரதட்சணை கொண்டு
வரவில்லையா..
கொளுத்திவிடுகிறாள்
அன்பு மாமியார்

பெண்ணாய் பிறந்தால்
கள்ளிப்பால் சிசுக்கொலை
இறைவன் பொறுப்பதில்லை

இதெல்லாமே பாவக்கணக்கு
எழுதிவைக்கப்படும்
கணக்கு தீர்க்கப்படும்

அதுவரை பாவம்
பாவத்தை தொலைப்பீர்
இறைவனை நினைப்பீர்
அன்பு கொள்வீர்.....

உன்னுடனே என்றும் இருந்துவிட....

கவிதையாய் உன் கைகளில்
என்னை தொலைத்துவிட
வார்த்தைகளாய் பிறந்து
வரிகளாய் அணைக்கிறேன்

கனவாய் உன் கண்களில்
என்னை தொலைத்துவிட
நினைவுகளால் நிறைந்து
மனதால் இணைகிறேன்

கண்ணீராய் உன் கன்னங்கள்
நனைத்து விட காரணம்
தேடி அலைகிறேன் பிரியா
வரம் கேட்டு அழுகின்றேன்

வாழ்விலும் சாவிலும் என்றும்
உன்னுடனே என்னை சேர்த்துவிட
ஆண்டவனை மன்றாடுகிறேன்
அரூபமாய் என்னை மாற்றிவிடு....

உன்னுள் நானாய் என்னுள் நீயாய்....

நீ விழுங்கும்
உமிழ்நீராய்
நான் பிறந்திருக்க கூடாதா?
நீ விழுங்கும்
ஒவ்வொரு துளியிலும்
உன்னுள் நான் கலந்து
கரைந்திருப்பேனே

உன் உடை கலைக்கும்
காற்றாய்
நான் பிறந்திருக்க கூடாதா
உன் அங்கம்
மறைத்து உன்னை
காத்திருப்பேனே
கழுகு கண்களிலிருந்து

நீ சுவாசிக்கும்
மூச்சாய்
நான் பிறந்திருக்க கூடாதா
உனக்கு உயிர் தரும்
உயிராய் உன்னுள்
உறைந்திருப்பேனே
உன்னுள் நானாய்
என்னுள் நீயாய்.....

நண்பனே நண்பனே....

நல்ல உறவாய்
கண்டெடுத்த நட்பாய்
உற்ற சொந்தமாய்
பெற்றெடுத்த தாயாய்

மகிழ்ந்த சேயாய்
என்னுடனே இருந்து
என்னை காப்பவனாய்
கண்ணீர் துடைப்பவனாய்

கருத்து மோதலாய்
கனிவாய் கருணையாய்
கண்டிக்கும் ஆசானாய்
கோபத்தை விட்டவனாய்

கைக்கூப்பும் இறையாய்
இருப்பவனே நீயே
என்றும் என்
உயிர் நண்பன் நீயே.....

மனவலிமை ஏற்றுங்கள்.....

கல்வியில் மேன்மை
மனதிலோ தின்மை
ஊனம் உடலில் தானேயன்றி
மனதில் இல்லை

லட்சியத்தில் முன்னேற்றம்
எடுத்த முயற்சியில் வெற்றி
படித்தவை எல்லாம்
தேர்வாய் எழுத வேண்டும் துணை

கைகளில்லாத பெண்ணுக்கு
உதவிட யாருமில்லை
கைக்கூப்பி கெஞ்ச கைகளுமில்லை
கண்ணீரால் அழைத்தாள் உதவிக்கு

உதவ வராத நல்உள்ளங்களை
சபிக்கவில்லை மன்னித்தாள்
படித்தவை வீணாகிறதே என்ற
வேதனையில் துடித்தாள்

உச்சி மாடி மீதேறினாள்
கீழ்நோக்கி விழுந்தாள்
உதவிடாத அத்தனை பேரும்
ஐயோ லட்சியப்பெண் அலறினர்

இத்தனை நாள் பொறுமை
காத்தவள் இன்று தன்
மனவலிமை இழந்தாளே
பூமித்தாய் கதறினாள்

கடலைமிட்டாய் ருசித்துக்கொண்டே
போனவன் எட்டிப்பார்த்து
கிண்டலாய் உரக்க சொன்னான்
காதலில் தோல்வி போலிருக்கு.....

இணைந்துவிடு.....

தீயாய் தகித்துவிடு
பனியாய் குளிர்ந்துவிடு
காற்றாய் கலைந்துவிடு
கண்ணீராய் வெளியேற்றிவிடு

காதலாய் அணைத்துவிடு
அன்பாய் கொடுத்துவிடு
கருணையாய் கலந்துவிடு
ஏக்கங்களாய் மிஞ்சிவிடு

கனவாய் தங்கிவிடு
நினைவாய் இருந்துவிடு
தாயாய் அணைத்துவிடு
யாதுமாய் இணைந்துவிடு
Related Posts Plugin for WordPress, Blogger...