"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, October 23, 2012

அன்புப்பிணைப்பு...”இது தான் உங்க முடிவா???”  அழுது அழுது சிவந்த முகத்தைக்கூட துடைக்க இயலாமல் துவண்டவளாய் சுவரில் சாய்ந்தாள் மதுமிதா...

” முடிவு இல்லைடி இது தான் தொடக்கமே எனக்கு.... சந்தோஷமா வாழப்போற வாழ்க்கையின் தொடக்கம்....”

” இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது? ”

” வேறே எப்படி சொல்லச்சொல்றே சொல்லு “... பெட்டியில் வேகமாக துணிகளை அடுக்கிக்கொண்டே தர்மா...

” என்னைவிட்டு நீங்க போகவிடமாட்டேன் நான் “ ஆவேசமாக எழ முனைந்தாள் மதுமிதா...

” இங்கப்பாரு இந்த வீராவேசமான பேச்சு என்னிடம் வேண்டாம் சொல்லிட்டேன் “ அழுத்தமான குரலில் தர்மா....

” குழந்தைகளுக்காக கூட யோசிக்கலை இல்ல நீங்க? ”மூக்குறிஞ்சினாள் மதுமிதா....

” ஆமாம் அதனால தான் குழந்தைகள் ஸ்கூல்ல இருந்து வரதுக்கு முன்னாடி கிளம்பறேன்..” தலை சீவிக்கொண்டே தர்மா...

” மனசாட்சி இருக்கா உங்களுக்கு தெய்வம் எல்லாம் பார்த்துண்டு தான் இருக்கு “ கறுவினாள் மதுமிதா....

” தெய்வம் பார்த்துட்டு தான் இருக்கட்டுமே இல்ல பார்க்காமல் தான் போகட்டுமே நான் கண்டிப்பா எடுத்த முடிவுல இருந்து மாறப்போறதில்ல.. ஷர்மிக்கிட்ட போகத்தான் போறேன். உன்னால முடிஞ்சதை பார் “ சத்தமாய் பாத்ரூம் கதவு அறைந்து சாத்தப்பட்டது....

முகத்தில் அறைந்தது போல உணர்ந்து கோபமாய் எழுந்தாள்....

பெட்டியில் அடுக்கப்பட்ட உடைகள் எல்லாம் எடுத்து கிளறி எல்லாம் கலைத்தாள் மதுமிதா....

” நான் உங்களை போக விடமாட்டேன்.. என் உயிரே போனாலும் சரி.. எனக்கு நீங்க வேணும் குழந்தைகளுக்கும் நீங்க வேணும்... நீங்க இல்லன்னா எங்களால கண்டிப்பா சந்தோஷமா வாழமுடியாது.” மனதில் அழுத்தமாய் உறுதியுடன் சொல்லிக்கொண்டே பாத்ரூம் கதவருகே நின்று காத்திருந்தாள் தர்மாவின் வரவுக்கு....

ஷவர் நின்று கதவு திறந்தது.... கம கமவென்ற சாண்டல்வுட் சோப் வாசனையுடன் தர்மா வெளியேற...

சட்டென்று தர்மாவின் காலில் விழுந்து அழத்தொடங்கினாள் மதுமிதா....

” என்னை விட்டுட்டு அவக்கிட்ட போகும் அளவுக்கு என்னிடம் என்ன தவறு இருக்கு சொல்லுங்க....” கதறினாள் மதுமிதா...

” உன் இந்த பொய் அழுகை எல்லாம் என்னிடம் பலிக்காது மது... எழுந்திரு மரியாதையா.. காலை விடு... நான் கிளம்பணும்.. நீ என்ன சொன்னாலும் சரி... நான் போறதுல இருந்து பின் வாங்கப்போறதில்ல....”

” நானும் என் உறுதில இருந்து மாறப்போறதில்லை. உங்களை போகவும் விடப்போறதில்லை...”

” ஆங்காரமாய் கத்தாதே மதுமிதா... என் அருமை தெரியாத உன்னிடம் வாழறதை விட என்னையே வேணும்னு ஆசையா கேட்கும் ஷர்மியோட என் வாழ்க்கையின் மீதி நாட்களை வசந்தமா தொடரப்போகிறேன்....காலை விடு...” உதறத்தொடங்கின தர்மாவை கோபமுடன் பார்த்தாள்..

” உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து நான் செய்றமாதிரி அவ செய்வான்னு நினைக்கிறீங்களா?? ”குரோதமுடன் கேட்டாள் மதுமிதா...

” அவசியமே இல்லை மது.... எனக்கு என்ன பிடிக்குது பிடிக்காதுன்னு அவளை சிரமப்படுத்தமாட்டேன்... அவளுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதையே சாப்பிட பழகிப்பேன். அவளுக்கு பீட்ஸா பர்கர் பிடிக்கும்னா அதையும் நான் சாப்பிட பழகிப்பேன்...”

” ஐயோ உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கு....” பதறினாள் மதுமிதா....

” வாழ்க்கை வாழறதுக்கு தான் மது....”

” ஒவ்வொரு நாளும் அழுது வடியிற உன் முகத்தைப்பார்க்கிறதை விட எண்ணை வழிற உன் முகத்தை பார்க்கிறதை விட ஷர்மியின் முகத்தைப்பார்க்கலாம்.. இவ்ளோ பேசுறியே என்னைத்தேடி யாராவது ஃப்ரெண்ட்ஸ் வந்தா என்னைப்பேச விடாம விரட்டுறே... ”

” உங்க ஃப்ரெண்ட்ஸ் வந்தா நமக்கிடையில் பிரச்சனையை உண்டு செய்றாங்க வந்தாங்கன்னா சாப்பிட்டு சும்மா போகவேண்டியது தானே உங்க ஃப்ரெண்ட்ஸ்...” பொருமி தீர்த்தாள் மதுமிதா...

” இதோ இந்த உன் வாயாடித்தனம் தான் எனக்கும் பொறுக்கலை... நீ எப்ப கல்யாணம் ஆகி வந்தியோ அப்ப தொடங்கின வாய் இன்னும் அடங்குதா பாரு? ”தர்மாவின் நிஷ்டூரக்குரல்....

” எப்பவும் என்னையே குறைச்சொல்லுங்கோ.....கல்யாணம் ஆகிவந்து நான் என்ன சந்தோஷத்த கண்டேன்.... புலம்பல்கள் தொடர்ந்தன ”தர்மாவை..

” உங்களிடம் நான் சண்டை போடமாட்டேன்... ப்ளீஸ் என்னைவிட்டு போகாதேங்கோ ” தர்மாவின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சத்தொடங்கினாள் மதுமிதா.

“ எப்பவும் நான் உன்னிடமே இருந்தா ஷர்மி வருத்தப்படமாட்டாளா மது? கண்ணத்தொடச்சுக்கோ குழந்தைகள் வர நேரமாகிட்டுது பாரு துளசி மாடத்துல விளக்கேத்து.... ஷர்மி இப்ப குழந்தை உண்டாகியிருக்கா... உன்னைப்போல அவளும் எனக்கு மருமக தானே? மசக்கையா இருக்கும் அவளுக்கும் வாய்க்கு ருசியா எதுனா செய்து போட எனக்கு மனசு இருக்காதா நீயே சொல்லு மது? கவலைப்படாம இரும்மா... நான் போயிட்டு போன் செய்றேன்... ரெண்டு மாசம் இருந்துட்டு ஓடி வந்துடறேன் சரியா? என்ன தான் என் பிள்ளை காதல் திருமணம் பண்ணிண்டாலும் ஷர்மியும் நம்ம வீட்டு பொண்ணு தான்.... சமர்த்தா இரு.. அழுது ஊரைக்கூட்டாதே.... சேகர் வந்தான்னா அவன்கிட்ட சொல்லு.. ரெண்டே மாசம் ஓடி வந்துருவேன்.... உன்னை நான் மருமகளா பார்க்கல... என் மகளா தான் பார்க்கிறேன்.. குழந்தைகள் வந்துட்டா பாட்டி பாட்டின்னு என்னை போகவிடாது.. புரிஞ்சுக்கோம்மா மது ”மதுமிதாவின் கண்களை துடைத்துவிட்டு துரிதமாக வாசற்படி தாண்டினாள் தர்மாம்பாள் கையில் பெட்டி எடுத்துக்கொண்டு தன் இரண்டாது மகன் வீட்டுக்கு பஸ் ஏற....Tuesday, October 16, 2012

தேஜஸ்வினி” என்னது இது இப்படி தலைமுடி கொட்றதே “
கொத்தாய் கையில் உதிர்ந்த முடியை கவலையுடன் பார்த்தாள் தேஜஸ்வினி...

” என்னம்மா கொஞ்ச நாளா பாத்ரூம்ல ஒரே தலைமுடியா கிடக்குதே “ என்று அங்கலாய்த்தாள் வீட்டு வேலைக்காரி ரோஜா..

” என்ன தேஜா டாக்டர் கிட்ட ஒரு முறை போய் பார்த்துட்டு வந்தால் என்ன? “ என்று கேட்டுக்கொண்டே ஷூ லேஸை இறுக்கினான் நவநீத்..

” அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா பாருங்க என் பேக் மேலேல்லாம் ஒரே முடி இங்க நின்னு தலை வாராதீங்கன்னு எத்தனை முறை சொல்றது “ என்று பிரபாஸ்,
சுஜா இரு செல்வங்களின் அலறல் சத்தம் கேட்டது....

இது எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டே காலை டிபன் தயார் செய்துக்கொண்டிருந்தாள் தேஜஸ்வினி..

அவள் மனதிலும் இதே கேள்வி தான்..

” ஏன் கொஞ்ச நாளா அதிகமா முடி கொட்றது எனக்கு? ”

எல்லோரும் காலை டிபன் முடித்து வேலைக்கும் பள்ளிக்கும் ஓடியப்பின் நிதானமாக பாத்திரங்கள் எல்லாம் வேலைக்காரி கழுவ எடுத்து போட்டுவிட்டு ஆயாசமாய் உணர்ந்து சேரில் உட்கார்ந்தாள் தேஜஸ்வினி.

கொஞ்ச நாளா முடி கொட்டுவது மட்டுமில்லாது தன் வயிறும் உப்புவதைக் கண்ணாடியில் பார்த்தாள்.

மாதவிலக்கும் தள்ளி போயிருக்கு போலிருக்கே என்றபடி வேகமாக காலண்டரை எடுத்து பார்த்தாள் தேஜஸ்வினி.

”15 நாட்கள் தள்ளி இருக்கு எப்படி கவனிக்காமல் விட்டோம் “ என்றபடி காலண்டரை மாட்டிவிட்டு இட்லி விண்டு வாயில் வைக்கும்போது பசி மரத்து போனது போலிருந்தது... தட்டை தூக்கி பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டுவிட்டு வந்து படுத்தாள்... தலை சுற்றுவது போலிருந்தது....

மாலை எல்லோரும் வரும் சப்தம் கேட்டது..

ஆனால் கண் திறக்க முடியாதபடி ஒரு அசதி வந்து உடலுடன் ஒட்டியது..... எழ முயன்று தோற்று அப்படியே கண்மூடி படுத்திருந்தாள்...

” என்னாச்சும்மா?” என்றபடி ஆதரவுடன் தலைமுடி கோதினான் நவநீத்.

பிள்ளைகளும் அடுத்து வந்து நின்று பார்த்தன.. அம்மாவுக்கு என்னாயிற்றோ என்று..

” நீ கிளம்புடா நாம ஹாஸ்பிடல் போகலாம் “ என்று சொன்னபடி டாக்டர் வசந்தாவுக்கு தன் மொபைலில் அழைப்பு விடுத்தான் நவநீத்..

துரிதகதியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தேஜஸ்வினியை எழுப்பி காரை ஸ்டார்ட் செய்தான்.

இருபது நிமிடத்தில் டாக்டர் வசந்தாவின் முன்பு இருவரும்..

ஐம்பது வயது நெருக்கத்தில் டாக்டர் வசந்தா இனிமையான முகத்துடன் இருவரையும் உட்காரவைத்து எல்லா டெஸ்டும் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு..

“என்ன செய்கிறது தேஜா உனக்கு?” என்று டாக்டர் கேட்கவே

தேஜஸ்வினி தன் அவஸ்தைகளை சொல்ல சொல்ல குறிப்பெடுத்துக்கொண்ட டாக்டர், ” நாளை வெறும் வயிற்றில் காலை வந்து அட்மிட் ஆகவேண்டும் எல்லா டெஸ்டும் செய்யவேண்டும் “ என்று சொன்னதும் சரி என்று தலையாட்டிவிட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்..

ராத்திரிக்கு ஹோட்டலில் இருந்து உணவு வரவழைத்து எல்லோரும் உண்டனர்..

தேஜஸ்வினிக்கு பால் மட்டும் காய்ச்சி கொடுத்துவிட்டு உறங்க வைத்தான் நவநீத்....

அடுத்த நாள் காலை இருவரும் மருத்தவமனை அடைந்து அட்மிட் செய்து எல்லா டெஸ்டும் செய்ய வைத்து வீட்டுக்கு கூட்டி வந்தான் நவநீத்..
இரண்டு நாள் கழித்து நவநீத் மொபைல் சிணுங்கவே எடுத்து ” ஹலோ சொல்லுங்க டாக்டர் “என்றான்..

டாக்டர் சொன்ன செய்தி கேட்டு உறைந்தான்..

” தேஜஸ்வினிக்கு யூரின் போகும் இடத்தில் புற்றுநோய் இருக்கிறது நவநீத் “ சொன்ன டாக்டரின் குரலில் சோகம் இழைந்தோடியது...

” இது கடைசி ஸ்டேஜ் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை நவநீத்... ”

” இருக்க போகும் நாட்கள் இன்னும் மாதக்கணக்கில் மட்டுமே “

” வலி குறைய மாத்திரைகள் மருந்துகள் தரலாம் ஆனால் ஆயுளை நீட்டிக்க முடியாது “ என்று வருத்தத்துடன் சொன்னதும் அதிர்ச்சியுடன் அப்படியே சேரில் சாய்ந்தான் நவநீத்..

மாலை வீட்டுக்கு போனதும் தேஜஸ்வினி நவநீத்திடம் ” டாக்டர் கிட்ட ரிப்போர்ட் வந்துவிட்டதா கேட்டீங்களா? “ என்றாள்.

” ரிப்போர்ட் வந்திருச்சுடா “

” ஒன்னும் இல்லை நீ ரொம்ப அனிமிக்கா இருக்கேன்னு “ சொல்றாங்க என்றான் நவநீத்...

பாத்ரூமில் போய் ஷவர் திறந்து சத்தமாய் அழத்தொடங்கினான் நவநீத்
ஷவர் சத்தத்தில் அவன் கண்ணீரோடு சேர்ந்து அவன் அழுகை சத்தமும் கரைந்தது.....

”ஏங்க கோவிலுக்கு போகனும் போலிருக்கு கூட்டிப்போறீங்களா?” தேஜஸ்வினியின் குரலில் ஒரு பற்றற்றத் தன்மை இருப்பதை உணர்ந்தான் நவநீத்..

”அதுக்கென்னடா “ உடனே கிளம்பித் தயாரானான்..

கோவிலை நெருங்கியபோது உபன்யாசம் செய்யும் குரல் ஸ்பீக்கர் வழியே காதில் விழுந்தது..

தேஜஸ்வினியை அணைத்து கோவிலுக்குள் அழைத்துச்சென்றான் நவநீத்
உபன்யாசம் நடக்கும் இடத்தில் இருவரும் அமர்ந்தனர்..

கணீரென்ற குரலில் பாகவதம் உரைத்துக்கொண்டிருந்தார் உபன்யாசகர்..
”பரீக்‌ஷித் மஹாராஜா செய்த தவற்றுக்கு சாபம் பெறுகிறார் இன்னும் ஏழே நாட்களில் நீ இறப்பாய் என்று..”

”உடனே பரீக்‌ஷித் மஹாராஜா கேட்கிறார் ஏழு நாட்களுக்குள் நான் என் பாவங்களை தொலைக்க என்ன செய்யவேண்டுமென்று....”

 க்ருஷ்ணமஹாரஜ் தொடர்கிறார் தன் கணீர் குரலில்... பாகவதம் படி ஏழு நாட்களுக்குள் என்று.....

மயக்கமாக உணர்ந்தாள் தேஜஸ்வினி.... அப்படியே மயங்கி நவநீத் மடியில் சாய்ந்தாள்.....

உடனே எல்லோரும் பதறி நீர் கொண்டு வந்து மயக்கம் தெளியவைக்க உபன்யாசகர் வந்து துளசி தீர்த்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட மெல்லக் கண் திறந்தாள்...

பகவான் கருஷ்ணரே தன் கண்முன் நிற்பது போல் உணர்ந்தாள் தேஜஸ்வினி... கைக்கூப்பினாள்.....

நவநீத் கலங்கிய கண்களை துடைக்க முயலாது கண்ணீர் மல்க கதறி உபன்யாசகர் காலில் விழுந்து அழுதான்....

உபன்யாசகர் நவநீத்தின் முதுகை ஆதரவாய் தடவிக்கொடுத்தார்......

இருவரும் வீட்டுக்கு கிளம்புமுன் மறக்காது நவநீத்திடம் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார் உபன்யாசகர்....

இரவின் இருட்டில் மாத்திரையின் உதவியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தேஜஸ்வினி....

அப்போது மொபைல் சிணுங்கவே நவநீத் சென்று எடுத்தான்....

”என்னப்பா தேஜஸ்வினிக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று உபன்யாசகர் கேட்டதும் நவநீத் கவலையான குரலில் ”உறங்குகிறாள் மாமா” என்று சொன்னான்....

”என்ன பண்றது அவளுக்கு உடம்புக்கு?” என்று கேட்டார்....

அவன் தொண்டை அடைக்க அவளுக்கு இருக்கும் நோயைப்பற்றி சொன்னான் நவநீத்..

”கவலைப்படாதே.... நாளை நீ வந்தவாசி கிளம்பு தேஜஸ்வினியை கூட்டிண்டு.... நான் ஒரு முகவரி தருகிறேன்... அங்கேச் சென்று அவரிடம் சொல்லு நான் அனுப்பியதாக.... பகவான் இருக்கார்... நாம் மனுஷா தானே.... பகவான் தான் சூப்பிரியர் எல்லாத்துக்கும்.... அவரிடம் மன்றாடுவது என் வேலை.....”

”நீ அவளை அங்க கூட்டிண்டு போ எல்லாம் சரியாகும்” என்று நம்பிக்கைக்குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தார்....

நவநீத்துக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன....

மறுநாள் காலை குழந்தைகளைக் கொண்டுச் சென்று தன் தமக்கை வீட்டில் விட்டுவிட்டு கிளம்ப யத்தனித்தபோது...

”என்னடா குழந்தைகளை கூட்டிண்டு வந்தே தேஜஸ்வினிய கூட்டிட்டு வரலையா? “ என்று அன்பு ததும்பும் குரலில் கேட்ட அம்புஜத்திடம்...

”இல்ல அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால ட்ரீட்மெண்ட்டுக்கு போயிட்டு இருக்கேன் “

”என்னாச்சுடா?” என்று பதறினாள்..

”ஒன்னுமில்ல வயிற்றுவலி அதிகமா இருக்காம்... அல்சரா இருக்குமோ இல்ல குடல் வாலா இருக்குமோ தெரியலை அதான் கூட்டிண்டு போறேன் அதுவரை குழந்தைகளை பார்த்துக்கோ அக்கா” என்றான்...

வந்தவாசி நோக்கி வண்டி போனது....

பின்னிருக்கையில் நவநீத் மடியினில் தேஜஸ்வினியின் தலை சாய்ந்திருந்தது.....

ட்ரைவர் முருகன் வண்டியை ரோட்டைப்பார்த்து சீராக ஓட்டிக்கொண்டு இருந்தான்....

வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு தேஜஸ்வினியின் தலையை கோதினான் நவநீத்....

மனதில் திருமணம் ஆன முதல் நாள் தன்னிடம் வியர்க்க பதறி குழந்தையாய் தன்னிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த நாளை நினைத்துப்பார்த்தான்.

கல்யாணம் ஆன நாளில் இருந்து இன்றுவரை தன்னையும் குழந்தைகள் பிறந்தப்பின்பும் அன்பாய் அரவணைத்துச்செல்லும் தன் அன்புத்தங்கத்திற்கு இப்படி ஒரு சோதனை வரவேண்டுமா என்று துடித்து அழுதான் நவநீத்...

” ஏங்க எனக்கு என்னாச்சுன்னு இத்தனை பதட்டப்படறீங்க?”

”உனக்கு ஒன்னுமே இல்லடா....”

”நாம சந்தோஷமா ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வீட்டுக்கு திரும்ப போறோம்... அப்ப உனக்கு பிடிச்ச வெங்காய சருகு கலர்ல பட்டுப்புடவை எடுத்து தருவேன் நம்ம கல்யாண நாளுக்கு “ என்று அவள் பட்டுக்கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்....

சிணுங்கி வெட்கப்பட்டாள் தேஜஸ்வினி... தனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் இருக்கிறதோ என்று உள்ளூர பயம் இருந்தது அவளுக்கு...

நவநீத்தின் நம்பிக்கை வார்த்தைகளை கேட்டப்பின் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள் தேஜஸ்வினி...

வண்டி அந்த குடிலை நோக்கி நின்றது.....

மெல்ல தேஜஸ்வினியை இறக்கி உள்ளே அழைத்து சென்றான்....

உள்ளே 80 வயது உடைய பெரியவர் சிநேகபாவத்துடன் சிரித்தார்....

”வாங்கோ உட்காருங்கோ பெரியவா நேக்கு போன் பண்ணினா விவரமெல்லாம் சொன்னா...”

”ரிப்போர்ட் பேப்பரெல்லாம் கொண்டு வந்திருக்கேளா?....”

”வாம்மா தேஜஸ்வினி முகம் அலம்பிண்டு வந்து சாப்பிடுங்கோ முதல்ல...

நான் செத்த நாழில வரேன்” என்றபடி துண்டை எடுத்து போட்டபடி ரிப்போர்ட்ஸ் எடுத்துக்கொண்டு தன் ரூமிற்குள் நுழைந்தார்...

சுற்றுப்புறமும் அழகிய தோட்டங்களும் மூலிகை காற்றும் மனதுக்கு இதமாக இருந்தது....

மாதம் ஒன்றைக் கடந்தது....

முகத்தில் தெளிவும் மனதில் ஒரு நம்பிக்கையும் உடம்பில் ஒரு திடமும் தெம்பும் ஏற்படுவதும் முடி உதிர்வது குறைவதும் வயிறு உப்பசம் குறைவதையும் உணர்ந்தாள் தேஜஸ்வினி....

தினமும் போனில் பிள்ளைகளுடன் உரையாடினர் இருவரும்....

”பிள்ளைகள் சமர்த்தா இருக்காங்க.. தேஜா உடல்நலம் எப்படி இருக்கு?” என்றபடி போனில் அக்கறையாக விசாரித்தாள் அம்புஜம் நவநீத்தின் தமக்கை....

”இப்ப ரொம்ப நன்னா இருக்கா” என்று சொன்னபடி அருகில் இருக்கும் மனைவியை அன்புடன் அணைத்துக்கொண்டான்...

மூன்று மாதம் கடந்தது.....

உபன்யாசகர் போன் செய்து ”தேஜாவின் உடல்நலத்தில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா?” என்று கேட்டார்...

”அதீத முன்னேற்றம் ” இன்னும் ஒரு மாதத்தில் இருவரும் வீட்டுக்கு கிளம்பும் விஷயத்தை சந்தோஷத்துடன் பகிர்ந்தார் பெரியவர்....

இருவரும் கிளம்பும் அந்த நன்னாளும் வந்தது.....

பெரியவர் நவநீத் கையில் மருந்துகள் அடங்கிய பையும் ரிப்போர்ட்ஸ் இருக்கும் பைலையும் கொடுத்து ”இப்ப டாக்டர் கிட்ட போய் செக்கப் செய்யுங்க.... என்ன ரிப்போர்ட் வருதுன்னு பார்த்து சொல்லுங்க ”என்று சொல்லி காலில் விழுந்த தேஜஸ்வினியை ஆதரவுடன் நிமிர்த்தி

 ”நீ தீர்க்காயுசா இருப்பே என்னிக்கும் ”என்று வாழ்த்தி குங்குமம் நவநீத் கையில் கொடுத்து தேஜஸ்வினியின் நெற்றி வகிட்டிலும் நெற்றியிலும் இடச்சொல்லி ஆசீர்வாதம் செய்தார் இருவரையும்....

”எனக்கு சாதாரண வயிற்று வலி தானே அதுக்கு இத்தனை மாசம் இங்க இருந்து பிள்ளைகளை பிரிந்து அவசியமா?” என்று கேட்டாள் தேஜஸ்வினி....

சிரித்துக்கொண்டே அணைத்து நெற்றியில் மெல்ல முத்தமிட்டுச்சொன்னான்.... நீ எனக்கு பொக்கிஷம்டி செல்லம்..... நீ என்னை விட்டு தொலைந்து தொலைதூரம் போய்டுவியோ என்ற பயம் வரவே தான் உன்னை தக்கவைத்துக்கொள்ள எமனுடன் போராடினேன்... இதோ இப்ப இந்த நிமிஷம் என் செல்லக்குட்டி தேஜா என்னுடனே என்றும் “ என்று மீண்டும் அணைத்துக்கொண்டான்....

திரும்ப டெஸ்ட் செய்ததில் டாக்டர் வசந்தா ஆச்சர்யம் கலந்த முகத்துடன் ” இது சாத்தியமே இல்லை எப்படி எப்படி?” என்று கேட்கவே...

நவ்நீத் முகத்தில் அமைதியான புன்னகை....

”கடவுளின் கருணை மனித ரூபத்திலும் சித்த வைத்தியமும் என் தேஜாவை என்னுடனே தக்கவைத்துவிட்டது டாக்டர் “ என்றுச் சொன்னான்....

சிலுசிலுவென காற்று தொடங்கி சிறு தூறல்கள் பன்னீர் துளிகளாய் இருவரையும் நனைக்க இருவரும் ஒட்டி அணைத்து காருக்குள் ஏறினர்...

யுகம் யுகமாய் சௌக்கியமாக வாழ இறைவன் ஆசீர்வாதமாய் மழைத்துளிகளை அனுப்பினான்....

இது கதையல்ல.... நிஜம்..... உயிர்ப்பிழைத்து அதன்பின்னும் அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்து நவநீத் உயிர்நீத்தப்பின்னர்..... தன் எண்பத்தி ஐந்தாம் வயதில் மே மாதம் 2012 ல தான் தேஜஸ்வினி உயிர் நீத்தார்.....

பக்தமீரா தொடர்ச்சி - 719. 
போராட்டமே என் வாழ்க்கை என்றானபோதும்
போராது இன்னும் இன்னல்கள் தந்தபோதிலும்
கோணாது என் மனம் அறிவாயோ நீயும்
கோபாலனே மனம்கவர் கள்வனே கண்ணா

20.
உண்ணும் கவளம் என் உள்ளிறங்கவில்லை
உள்ளிருந்து நீயும் எனை உண்ணவைப்பதில்லை
உன்னுயிராய் நான் வாழவேண்டி தானே
உனக்காய் ஜென்மம் எடுத்தேனே கண்ணா

21.
பாதைகள் நமது வேறானது என்றாலும்
ராதைகள் கூட்டமாய் உனைசூழ்ந்த போதிலும்
கோதையாய் உன்னை என்ணி நானும்
பேதைமீரா உன்காதலுக்காய் காத்திருப்பேன் கண்ணா

ஓருடல் ஈருயிர் - நான்காம் பாகம்
இபான் விவான் இருவருக்கும் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலாயிற்று...

இருவரும் சரியாக சாப்பிடாமல் உறங்காமல் அப்பாவை நினைத்து வேதனையுடன் இருந்தனர்....

சில நாட்கள் இருவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர் முடங்கி....

கம்பனி மேனேஜர் சந்திரன் இருவரையும் வந்து பார்த்து ஆறுதல் சொன்னதோடு நிற்காமல், நீங்க இருவரும் கம்பனி பொறுப்புகளை ஏற்பது நலம்..அப்பாவின் விருப்பமும் அது தான் தயவு செய்து நாளை முதல் நீங்க இருவரும் கம்பனிக்கு வாங்க என்று சொல்லிவிட்டு வெளியேறினார்...

மறுநாள் இருவருமே கம்பனிக்கு சென்று அப்பாவின் அறைக்குள் நுழைந்தனர்... அங்கே அப்பாவின் பெரிய புகைப்படத்திற்கு சந்தனமாலையிட்டு இருந்தனர்... அறை சுத்தமாக இருந்தது...

பணியாளர்கள் பணிவு கலந்த அன்புடன் இருவரையும் வாங்க என்று அழைத்தனர்...

இருவருக்கும் கம்பனிக்கு போய் உட்கார்ந்து வேலைகளை கவனிக்க தொடங்கியபோது மனம் சிறிது ஆறுதலானது.

அன்று கடிதங்கள் சில வந்திருப்பதை கொண்டு வந்து கொடுத்தான் பணியாளன்.

இபான் நீ கடிதங்களை பாரு. நாம் ஏற்றுமதி செய்ய வேண்டிய ஆடைகள் பற்றிய ஃபைல் செக் செய்கிறேன் என்றபடி ஃபைலில் ஆழ்ந்தான் விவான்..

இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இயலாத நிலையில் இபான் ஒவ்வொரு கடிதமாக பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு கடிதம் அவனை ஈர்த்தது...

எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்...

அன்புள்ள கவிதா,
நீ சொன்னது போலவே நானும் சர்டிபிகேட்ஸ் காப்பி இதனுடன் இணைத்து  அனுப்பி இருக்கேன். கண்டிப்பா எனக்கு காலேஜ்ல சீட் வாங்கித்தர உன் அப்பாவை உதவச்சொல்லு.. இங்கே வீட்டில் என்னை எப்படியாவது எங்க மாமாவுக்கு திருமணம் செய்ய கட்டாயப்படுத்துறாங்க... எனக்கு மேற்கொண்டு படிப்பதில் தான் விருப்பம்...

இப்படிக்கு
ஷ்யாமளி

அதனுடன் இணைத்திருந்த சர்டிபிகேட்ஸ் காபிகளும் போட்டோவும் கண்டான். போட்டோவில் தேவதை போல் இருந்தாள் அந்தப்பெண்.. பார்த்ததுமே ஈர்த்துவிட்டது அவன் மனதை... சொல்லவொண்ணா சந்தோஷங்கள் மெல்ல அவன் மனதில் படர ஆரம்பித்தது... உடனே அனுப்பிய முகவரியை எடுத்து பார்த்தான்... முகம் மலர்ந்தது... மெல்ல அதற்கு பதில் எழுத ஆரம்பித்தான்...

அன்பே.....
தவம் செய்யாது
கிடைத்த வரமாய்
என் அனுமதியில்லாது
அமர்ந்தாய் என் மனதில்
மகாராணியாய்.....

இது எதுவுமே அறியாத விவான் ஃபைலில் மூழ்கி இருந்தான்...

கடிதத்தை பத்திரமாக ஷ்யாமளியின் முகவரி எழுதி பலமுறை சரிப்பார்த்துவிட்டு எழுதி போஸ்ட் செய்யவேண்டிய கடிதங்களுடன் சேர்த்து வைத்தான் இபான்.

பதில் கடிதம் பெற்ற ஷ்யாமளி குழம்பினாள்....

"இது என்னது? நாம் எழுதியது கவிதாவுக்கு தானே? இது எப்படி இது யார்? ஒன்றும் புரியவில்லையே.." என்று எண்ணியபடி கடிதத்தை பத்திரமாக தன் நோட்புக்ஸ்குள் ஒளித்துவைத்தாள் ஷ்யாமளி....

ஷ்யாமளி வாடி தோசை வார்த்திருக்கேன் சாப்பிட வா...

இதோ வரேன்மா....

கால்கள் தரையில் பாவாமல் பறப்பது போல் உணர்ந்தாள்..... முதன் முதல் தனக்கு ஒரு காதல் கடிதம்.... எழுதியவன் எப்படி இருப்பான்? யார் என்ற விவரம் தெரியாத நிலையில்.... பதில் எழுதி அனுப்புவோமா என்று யோசிக்க ஆரம்பித்தாள்...

நொங்கென்று தலையில் குட்டுவிழ அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் ஷ்யாமளி...\

"என்னத்த யோசிச்சுட்டு இருக்கே? சாப்பிடச்சொன்னால்?"

"என்னையும் உன்னையும் அனாதையா விட்டுட்டு ஓடிப்போயிட்டார் உங்கப்பா.. உன்னை ஒருத்தன் கைல சேர்க்கறதுக்குள்ள நான் படும் பாடு இருக்கே...."

பர்வதத்தின் புலம்பல்கள் தொடர்ந்தது...

ஷ்யாமளி சத்தமில்லாமல் நகர்ந்தாள்.. வந்த கடிதத்திற்கு பதில் எழுத.....

அன்புடைய....

பெருமதிப்பிற்குரிய....

யார் நீங்கள் ஏன் இப்படி எல்லாம்?

பலமுறை எழுதி கிழித்து கசக்கி எறிந்தாள்....

எப்படி எழுத ஆரம்பிப்பது? புரியாமல் குழம்பினாள் ஷ்யாமளி....

கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று முகவரியை மீண்டும் பார்த்தாள்....

அட..... இங்கிருந்து அரைமணி நேரம் தான் பஸ்ஸில் போனால்....

நேரில் சென்று போய் கோபமாக கேட்போமா? கடிதம் எழுதுவனை திட்டுவது போல அவனைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமே....

ஹுஹும் வேண்டாம். பெண் இத்தனை தைரியமாக தனியாக வந்திருக்கிறாளே என்று இளப்பமாக பார்த்துவிட்டால்?

என்னென்னவோ யோசனைகள் மனதில் எழுந்து அடங்கியது ஷ்யாமளிக்கு....

சிந்தனை முடிச்சுகளுடன் அப்படியே உறங்கிவிட்டாள்....

முகம் தெரியாத ராஜகுமாரன் குதிரையில் வெள்ளை உடையில் ஸ்லோமோஷனில் வந்து இவளை தட்டி எழுப்பி அலாக்காக தூக்கி குதிரையில் அமர்த்திக்கொண்டு திரும்பியபோது வெள்ளைக்குதிரைக்கு இறக்கைகள் முளைத்து விரிந்தன.... அப்படியே குதிரை வானில் பறக்க ஆரம்பித்தது இருவரை சுமந்துக்கொண்டு....

கனவில் ராஜகுமாரன்.... ஷ்யாமளி கனவின் மயக்கத்தில்.....

(தொடரும்..)

Monday, October 8, 2012

ஓருடல் ஈருயிர் - மூன்றாம் பாகம்விவான் கோபமே இல்லாத மனநிலை...

இபானுக்கு மூக்குநுனியில் எப்போதும் கோபம் நிற்கும்....

இபான் பலமுறை இழுத்த இழுப்பில் விவான் பக்கவாட்டில் விழுந்து நெற்றிப்பொட்டில் கால் முட்டியில் என்று அடிபடுவான்...  அதைப்பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இபான் விளையாட்டில் கவனம் செலுத்துவான்....

வைத்தியநாதன் இருவரையும் நல்லமுறையில் கல்வி, ஒழுக்கம், பண்பு எல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் இபானின் கவனம் எப்ப எழுந்து ஓடலாம் விளையாடலாம் எந்தெந்த பொருட்களை உடைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பான்...

பள்ளிக்கூடம் சென்று படிக்க சென்றால் எல்லோரின் பார்வை தன்னையே குறிவைப்பதாக சொல்லி ஆர்பாட்டம் செய்து பள்ளிக்கு போவதை தடுத்தான் இபான்... இபானின் இச்செயலால் அடிக்கடி வைத்தியநாதனின் மனம் வேதனைப்படும்... ஒரே மரத்தின் கனிகள் எல்லாமே இனிக்கவா செய்கிறது என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொள்வார்....

இபான் தினமும் டைரி எழுதும் பழக்கம் வைத்திருப்பான்.. அந்தபக்கம் திரும்பி விவான் படுத்தபின் டைரி எடுத்து அவனை தொந்திரவு செய்யாமல் உடல் அசைக்காமல் கைவிரலால் பென்னை பிடித்துக்கொண்டு லாவகமாக எழுதுவான் வேகமாக...

இப்படியாக பிள்ளைகள் இருவரும் வாலிபராக வளர்ந்தனர்.. இருவருக்கும் தந்தையின் மேல் அபார பிரியம், பாசம்... அவர் சொல்லை மட்டும் மீறாத நல்லப்பிள்ளைகள்....

வியாபாரமும் நல்லமுறையில் பெருகியது.....

இபானின் வியாபார நுணுக்கத்தை பார்த்து அசந்தார் வைத்தி... விவானின் அணுகுமுறை பணியாளர்களிடம் நல்லப்பெயரை வாங்கிக்கொடுத்தது... இருவரும் நல்ல நிலையில் வியாபாரத்தை கவனித்தது அவருக்கு மனநிம்மதியை கொடுத்தது. இனி இந்த பிள்ளைகளுக்கு திருமணம் எப்படி செய்வது என்ற கவலை அவர் மனதை அரிக்கத் தொடங்கிவிட்டது....

பணியாளர்கள் இபான் விவான் இருவரிடமும் அன்பும், மதிப்பும் வைத்திருந்தனர்....

இருவரும் இரவு படுக்க போகுமுன் தன்னை வந்து பார்க்குமாறு சொன்னார் வைத்தி....

இபான் விவான் இருவரும் வந்து தந்தையின் இருபக்கமும் அமர்ந்தனர்...

என்னப்பா கூப்டீங்க? வியாபாரத்தை பெருக்க ஏதாவது யோசனைகள்னா அது இபான் தான் தரமுடியும். விவான் அமைதியுடன் சொன்னான்...

அட அதென்ன பெரிய சிரமமா விவான் நீ சும்மா இரு அப்பா ஏதோ முக்கியமான விஷயம் பேசப்போறாருன்னு நினைக்கிறேன் என்றான்...

ஆமாம்பா பிள்ளைகளா... எனக்கு இப்பெல்லாம் கவலை என்னன்னா... என்று சொல்லி முடிக்குமுன் இபான் குறிக்கிட்டான்.

எங்கள் திருமணம் பற்றிய கவலை தானே?? வேண்டாம்பா விடுங்க.... நாங்கள் இருவருமே கல்யாணம் செய்துக்கொள்ளும்படி உடலும் இல்லை... மனமும் இலயிக்கவில்லை.. அதனால்...

என்னப்பா இப்படி சொல்றே? நம் குடும்பம் தழைக்கவேண்டாமா?? நம் பரம்பரை உங்களோடு நின்றுவிட வேண்டுமா அதற்குமேல் பேச இயலாமல் சோர்ந்து படுத்துக்கொண்டார்...

அவர் படும் அவஸ்தையை பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் விவான் வைத்திக்கு போர்த்திவிட்டு இருவரும் தம் அறைக்குள் நுழைந்து படுத்துக்கொண்டனர்....

நம்ம இப்படி இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கமுடியாது ஒத்துக்கிறேன்... நாம பிறந்தப்ப டெக்னாலஜி முன்னேறல அதனால் ஒட்டிப்பிறந்த நம்மை பிரிக்க இயலவில்லைன்னு விட்டாங்க... ஆனா இப்ப முயலலாமே விவான்.. என்ன நான் சொல்வது சரி தானே??

கேள்வி கேட்டுவிட்டு டைரி எழுதப்போகிறேன் என்று எழுத ஆரம்பித்தான் அன்றைய அப்பாவின் வார்த்தைகளை குறிக்கும்போது தான் விவானிடம் கேட்ட கேள்வியையும் டைரியில் எழுதிவைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்...

விவானுக்கு உறக்கம் வரவில்லை.. இபான் சொல்வது போல் செய்தால் என்ன என்று யோசித்துப்பார்த்தான்.. இபான் தன்னுடைய உடலின் ஒரு அங்கமாக இருந்துவிட்டதால் அவனை பிரிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் விவான் நினைத்துக்கூட பார்க்கவில்லை...

ஆனால் இபானின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதோ?? எது எப்படி என்றாலும் அது நன்மையை தரும் செயல் என்றால் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். நாளை அப்பாவிடம் இதைப்பற்றி பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டே உறங்கிவிட்டான் விவான்...

இபானின் கனவில் வெள்ளை உடை தேவதைகள் அவன் கேசம் கலைத்தனர்... அவன் கைகளை பிடித்துக்கொண்டு ஸ்லோ மோஷனில் ஆட ஆரம்பித்தனர்...

விவான் ஆழ்மனம் அமைதியாக இருந்ததால் அசையாமல் படுத்திருந்தான்....

மறுநாள் காலை வேலையாளன் வைத்தி அறையில் சென்று காபி வைக்க போனபோது வைத்தியிடம் அசைவில்லாததை அறிந்து பயந்து இபான், விவான் இருவரையும் ஓடிவந்து அழைத்தான்....

வைத்தி உறக்கத்திலேயே மரணம் எய்தினார்....


தொடரும்...

பக்த மீரா - 616.

சேவைகள் உனக்கு செய்யவே அருள்புரிவாய்
வேதனைகள் என்றும் நீங்கிட அருள்வாய்
பேதைஎன் பிழை பொறுத்து காத்தருள்வாய்
தேரையாய் உனக்குள் நான் கண்ணா

17. 

மாயங்கள் எத்தனை செய்திட்ட போதிலும்
மாறாது என் அன்பு உனைவிட்டு என்றும்
மாதங்கள் வருடங்கள் எத்தனை ஆனாலும்
மாதவனே உனக்காய் காத்திருப்பேன் கண்ணா

18.

நல்லவன் நீ உலகம் அறிந்திடும் இதை
நல்வாழ்வு என்றும் உன்னுடன் வாழ்ந்திடவே
நற்பண்புகளுடன் பொறுமையாய் நானும் காத்திருந்து
நயமாய் உன்னுடன் சேர்ந்திடவே என்றும் கண்ணா.....


Sunday, October 7, 2012

வலைச்சரம் - நட்பு - நிறைவான ஏழாம் நாள்

வலைச்சரம் - நட்பு - நிறைவான ஏழாம் நாள்


SUNDAY, OCTOBER 7, 2012


நட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )


உலகில் பிறந்த ஜீவராசிகளில் இருந்து மனிதர் வரை அன்பு என்ற இழை பிணைத்திருப்பதால் தான் ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகமுடிகிறது. மனதில் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது…. நட்பாய் தொடங்குகிறது…. நிலைத்தும் நிற்கிறது… ஆரோக்கிய நட்பு….. நேர்மையான நட்பு…. உண்மையான நட்பு….. இதெல்லாம் சொல்வது ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே… அன்பு…..

நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை… அழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..அன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது. அன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது. அந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...

எதிர்ப்பார்ப்புகள்பொசசிவ்நெஸ்அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம்கோபம்,சண்டைவருத்தம்கண்ணீர்பிரிவு...... நட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது. அன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும். அதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...

எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்.. எதிர்ப்பார்ப்புகளற்ற பொச்சிவ்நெஸ் இல்லாத நட்பும் சரி, உறவும் சரி என்றும் அன்பு நிறைந்து நிலைத்து இருக்கும்..

அதனால் தான் சொல்கிறேன் நட்பாய் இருக்க முக்கியமான ஒன்று வேண்டும்… அதுநம்பிக்கை மனதில்... நேர்மை கண்களில்….

நம்பிக்கையுடன் கைக்கோர்த்தால் நட்பும் நலமே…

ஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்க பரிந்துரைத்த வை.கோ அன்பு அண்ணாவுக்கும், பரிந்துரைத்த மஞ்சுவை நம்பிக்கையுடன் ஆசிரியராய் நியமித்த அன்பு சீனா அண்ணாவுக்கும், ஒவ்வொரு நாளும் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தும்போது தயங்காமல் சலிக்காமல் அறிமுகமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று அவர்களுக்கு அன்புடன் தெரிவித்த அன்பு நண்பர் தனபாலனுக்கும், இதுநாள் வரை என்னுடனே ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் அளித்து என்னுடனே பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த மனம் நிறைந்த பணிவான அன்பு நன்றிகள்.

இன்று என் மனம்கவர் பதிவர்கள் சிலரின் வலைப்பூக்களை பார்ப்போமாப்பா?எந்த ஒரு தகவலையும் பதியும்போதும் சரி, எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை பதியும்போதும் சரி அதை தவறு இல்லாமல் மிக கனகச்சிதமாக பகிர்ந்து தமிழை நேசித்து, சுவாசித்து அதையே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்பது போல் வாசகர் அனைவருக்கும் அன்புடன் பகிரும் மிக அற்புதமான மனிதநேய உள்ளம் கொண்ட தி. தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவுகள் சில பார்ப்போமா?
இந்த கண்ணனின் படத்தை உற்றுப்பார்த்தபோது பதிவர் மாநாட்டில் எடுத்த வல்லிம்மா படத்தில் இருக்கும் வல்லிம்மாவின் புன்னகைக்கும் இந்த உள்ளம் கவர் கள்வன் கண்ணனின் புன்னகையும் ஒரே போல் தோன்றியது எனக்கு. அத்தனை அன்பும் பரிவும் வாத்ஸல்யமும் வல்லிம்மாவின் பதிவுகளில் நான் கண்டேன். எப்போதோ ஒரு முறை எங்கள் பிளாக் என்ற வலைப்பூவில் மிக அருமையாக வல்லிம்மா பாடுவதைக்கேட்டு லயித்துப்போனேன் அவரின் இனியக்குரலில். இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில பார்ப்போமா?
புராணக்கதைகள் கேட்கணும்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதிலும் கண்ணன் இடம்பெறும் அத்தனை காட்சிகளும் எத்தனை படித்தாலும் திகட்டாது. தித்திக்க தித்திக்க கண்ணன் கதைகளைச்சொன்னால் அதில் வரும் ஒவ்வொருவரையும் கதையில் காட்சிகளாக விவரிக்கும்போது நம் கண்முன் அந்த காட்சி விரிகிறது. பீஷ்மரைப்பற்றி சொல்லும்போது பீஷ்மரின் தீட்சண்யப்பார்வை, கண்ணனின் குளுமையான அழகுப்புன்னகை...அத்தனையும் இவரின் பதிவுகளில் தவறாமல் காணலாம். ரசிக்கும்படி தலைப்புகளும் அத்தனை அசத்தல். பார்ப்போமா அழகு கண்ணனின் கதைகள் கொண்ட பகிர்வுகள் சில?

சத்யவதியின் மனோதிடம் 
இவங்க முகத்தைப்பார்த்தால் என்ன ஒரு துறு துறுன்னு ஆக்டிவா இருக்காங்க.... இதே சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் இவர்களின் பதிவுகளிலும் காணமுடிகிறது. நான் மிகவும் ரசித்து வாசித்தேன் நோகாமல் வடை சுடுவது எப்படின்னு....  நான் நேற்று மாலை வடை சுடும்போது (ஆஞ்சந்எந்த ஒரு பதிவும் பதிவும்போதே அதை வாசகர்கள் விருப்பத்திற்கிணங்க சுவாரஸ்யமா தருவது இவர்களின் அழகான பாங்கு. ஆசிரியை அல்லவா... அதான் அத்தனை பர்ஃபெக்‌ஷன். 2004 ஆம் ஆண்டில் இருந்து வலைப்பூவில் அட்டகாசமாக தொடரும் இவர் பயணம் இனியும் வெற்றியுடன் தொடரவும்... சமீபத்தில் நடந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காகவும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் மேடம்..  துளசி டீச்சரின் பதிவுகள் சில பார்ப்போமா?
இவங்க வலைப்பூவில் போய் பார்த்தால் அப்பப்பா ஒரே கதம்ப மணம் தான். குழம்பு மணக்கிறது, பொரித்த குழம்பும், வயதானவர்களுக்காக இலகுவான கஞ்சியும் இன்னும் என்னென்னவோ சமையலில் அசத்தி இருக்காங்க. நிதானமா நீங்க இவர் வலைப்பூவில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பா தினம் தினம் வெரைட்டியா சமைத்து அசத்தலாம் வீட்டிலும் பிள்ளைகளுக்கு வெரைட்டியா டிபன் கிடைக்கும். நல்லப்பெயரும் கிடைக்கும். அட அப்டின்னு அசந்து போறமாதிரி சமைக்கலாம் இவர் வலைப்பூவில் இருந்து சிலவற்றை பார்ப்போமா?

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு 
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா.... ஹுஹும் நிலா நம்மக்கிட்ட வராது... நாம தான் நிலாமகள் வலைப்பூவுக்கு சென்று பார்க்கவேண்டும்.. அப்படி போய் பார்த்தால் அழகிய அவரின் கவிதை பிரவாகங்களும், அருமையான மருத்துவ பயன்களும், பயன் தரும் அனுபவங்களும் மிக எளிய நடையில் பகிர்ந்திருக்காங்க. அன்பு நலன் விசாரித்தலும் உண்டு . பார்ப்போமா நிலாமகளின் சில நட்சத்திர பதிவுகள் ?

தாய்மை நிறைந்த இந்த படத்தை உற்றுப்பார்க்கும்போது இவரின் அன்பு மனதையும் அறியமுடிகிறது இவர் பதிவுகளில்.... குழந்தைகளில் பலவகை இருப்பார்கள். என் பொம்மை என்னுடையது எனக்கு மட்டும் தான்... இந்தா அழாதே என் பொம்மை நீ வெச்சுக்கோ என்று கொடுக்கும்... இன்னொரு குழந்தையோ வா நாம் இருவருமே ஒன்றாய் இந்த பொம்மையை வைத்து விளையாடுவோம் சண்டையே இடாமல்... மூன்று குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை பாருங்கள்.... குழந்தைகள் தான். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தை தான்... நாம் குழந்தையை நல்லவைகளை சொல்லித்தந்து வளர்ப்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருப்பது. ஏன் இதெல்லாம் வள வளன்னு சொல்றீங்க அப்டின்னு என்னை கேக்காதீங்கப்பா.. இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை போய் பார்த்தால் தாய்மை நிறைந்த அன்பு பதிவுகள் நிறைய இது போல் பயனுள்ளவை இருக்கிறது.. பார்ப்போமா அவற்றில் சில?

கதை எழுதுவது, கவிதைகள் புனைவது, படம் வரைவது, சிற்பங்கள் வடிப்பது இதெல்லாம் எப்படி ஒரு கலையோ அதுபோல் சமையலும் ஒரு கலை. சமைக்கும்போது நாம் என்ன மனநிலையில் சமைக்கிறோமோ அதே போல் பண்டமும் அமையுமாம்.  நல்ல மனநிலையில் சந்தோஷமான மனநிலையில் இசையைக்கேட்டுக்கொண்டோ அல்லது பாட்டு ஹம் செய்துக்கிட்டோ (பிடிச்சப்பாட்டு அல்லது ஸ்லோகங்கள்) சமைச்சுட்டு அதன்பின் ஈடுபாட்டோடு அதை பரிமாறி சுவைப்பவர் அதன்பின் சொல்லும் வார்த்தை ஆஹா இதுவல்லவா சமையல்... இப்டி எல்லாம் நான் சொல்லவே இல்லப்பா.. ராதாராணிம்மா கிச்சனுக்கு போய் பார்த்தால் இப்படி எல்லாம் தான் நினைச்சு செய்திருப்பாங்களோன்னு நினைக்கவைத்த அளவுக்கு தத்ரூபமா அழகான படங்களோட விதம் விதமா சமைச்சு அசத்தி இருக்காங்க. நாமெல்லாம் மாவுல இட்லி சுடுவோம் தோசை சுடுவோம். இவங்க பாருங்க சட்னி எல்லாம் செய்து அசத்தி இருக்காங்க...இவரின் அசத்தலான சில பதிவுகள் பார்ப்போமா?துரை டேனியல்.. அதிகம் எனக்கு பரிச்சயமே இல்லாத பதிவர்.. ஆனால் வலைச்சர ஆசிரியராய் நான் பணி தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து வந்து அருமையான பின்னூட்டங்கள் அளித்து ஊக்கம் தருபவர். சரி போய் தான் பார்ப்போமே இவர் வலைக்கு அப்டின்னு போய் பார்த்தால்... அட நிஜம்மாவே இவர் குடத்திலிட்ட விளக்கு தாம்பா.. அத்தனை திறமைகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு எத்தனை அடக்கமாக அமைதியாக வந்து பதிவுகளும் பதிவுகளுக்கு பாராட்டும் ஊக்கமும் தரும் பின்னூட்டங்களும் அளிக்கிறார்... அருமையான தலைப்புகள் தந்து பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து, அழகிய கவிதைகளை நம்முள் சிந்தனைகளை தூண்டிவிடும் இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?

என் பறை முழங்குகிறது 


இன்றைய நாள் மட்டுமல்லாது இனிவரும் எல்லா நாட்களும் எல்லோருக்கும் நல்ல நாளாக, வெற்றியைத்தரும் நாளாக நல்லவைகளைத்தரும் நாளாக சந்தோஷங்களைத்தரும் நாளாக (நாட்களாக) அமைய இறைவனை வேண்டிக்கொண்டு என் பணியை முடிக்கிறேன்பா..

அடுத்து ஆசிரியர் பணி தொடரும் அன்பு உள்ளத்திற்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

இன்றோடு என் பணி இங்கே முடிந்தது.... சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது.... 


Related Posts Plugin for WordPress, Blogger...