"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, September 30, 2011

கதை 16. கலைக்கண்...


” கமலம் கமலம் “ என்று குரல் கொடுத்தபடி புஷ்பா அந்த குடிசை 
வீட்டினுள் நுழைந்தாள்...
 ” குழந்தை அழும் சத்தம் வெளியே வரை கேட்கிறதே கமலம் 
எங்கடி போனே “ என்று அழும் குழந்தையை தூக்கி வைத்து 
அணைக்கும்போது 
பாலுக்கு குழந்தை தேடுவதை உணர்ந்தாள்....

அடடா பசிக்கு அழுகிறதே குழந்தை “ எனும்போது 
கமலம் அசதியான முகத்துடன் கையில் பால் டின்னோடு உள்ளே நுழைந்தாள்..

என்னடி இது குழந்தையை இப்படி விட்டுட்டு போயிருக்கியே வீட்டை 

திறந்து போட்டு” 
என்று கடிந்துக்கொண்டாள் புஷ்பா..

அட நீங்க வேறக்கா இந்த வீட்டில் அப்டி என்ன சொத்தா கொட்டி கிடக்குது...

 பசிக்கு குழந்தைக்கு கொடுக்க பால்பவுடர் தீந்துடுச்சுக்கா”... 

இந்த மனுஷனை பத்தி தான் தெரியுமே உனக்கு செண்ட்ரிங் போட 

ஆள் தேடிட்டு இருக்கும்போது இந்தாள் குடிச்சிட்டு மல்லாக்க கிடந்தது...

ஹூம் நான் போய் ரத்தம் கொடுத்துட்டு கிடைச்ச காசுல பால்டின்
 வாங்கியாந்தேன்கா” என்று அசதியுடன் சிதிலமடைந்த சுவற்றோடு சாய்ந்து 
உட்கார்ந்தாள் கமலம்.
புஷ்பா ஆறுதலாக கமலம் தோளைத்தொட்டாள்....
கமலம் தட்டி விட்டாள் ”வேணாம்கா எனக்கு தெரியும் 
நீ என்ன சொல்ல வரேன்னு”...

எனக்கு இஷ்டமில்லக்கா மானத்தை வித்து என் பிள்ளைய 
வளர்க்கவேண்டிய அவசியமில்ல..... முடிஞ்சா கிட்னிய கூட விப்பேன்”..

அதுக்கப்புறம் என்னடி செய்வே? ”

ரத்தம் இருக்கு வித்தே
கிட்னியையும் வித்துட்டு அதுக்கப்புறம் என்னடி செய்வே?”

பொட்டப்புள்ளைய பெத்து வெச்சிக்கிட்டு நீ இப்படி வீம்பா இருப்பது சரியில்ல 
நான் சொல்றதை கேளு ஒரே ஒரு நாள் தானே கைல சுளையா
 5000 ரூபாய் தருவாங்க....நீ தான் வேணும்னு கேக்கிறாங்கடி சொன்னா கேளு”...

கண்ணீர் கண்களுடன் கையெடுத்து கும்பிட்டாள் ”அக்கா நீ முதல்ல 
இங்கருந்து கிளம்பு அந்தாள் வர நேரமாச்சு... குடிச்சிட்டு வந்தால் அந்தாளுக்கு 
எதிர்ல நீ இருப்பதை பார்த்தால் என்னை கொலையே பண்ணிருவான் 
நீ கெளம்பு வெரசா” என்று விரட்டினாள்....

குழந்தைக்கு பால் கலந்து கொடுத்துக்கொண்டிருந்த புஷ்பா , 
“ இப்ப இல்ல என்னிக்காவது கண்டிப்பா நீ யோசிப்பே அக்கா நமக்கு 
நல்ல வழி தான் காமிச்சான்னு புரிஞ்சுப்பே 
அதுவரை நான் உன்னை விடமாட்டேன் “ கண்ணீரை துடைத்துக்கொண்டு 
புஷ்பா கிளம்பினாள்...

கிளம்பும்போதே தள்ளாடியபடி ஒரு உருவம் ”அடியேய் எனக்கு சுள்ளுனு 
கருவாடு போட்டு கொழம்பு வெச்சு சாதம் வடிடி இதோ கொஞ்சம் படுக்கிறேன்” 
என்றபடி அப்படியே வாசற்படியிலேயே உருண்டு விழுந்தான்...

தடுக்க போன புஷ்பாவை கையமர்த்திவிட்டு கமலம் அவனை 
தன் எலும்பு கைகளால் எழுப்ப சிரமப்பட்டு முடியாமல் பரிதாபமாய் 
புஷ்பாவை பார்க்க புஷ்பாவும் கமலமும் 
குப்புசாமியை இழுத்துக்கொண்டு வந்து வீட்டுக்குள் படுக்கவைத்துவிட்டு புஷ்பா 
கமலத்தை ஏறிட்டு பார்த்தாள்... 

நான் சொன்னதை யோசனை செய் கமலம்... 
நாளை நான் வரும்போது உன் முடிவு நல்லமுடிவா இருக்கனும்”....

மறுநாள்....

புஷ்பா மெல்ல அந்த சாக்கடை ஓடும் நீரின் ஓரமாக நடந்து கமலத்தின் வீட்டை 
அடையுமுன் ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழும் சத்தம் 
கேட்டு பதறி ஓடினாள்....

அங்கே ரத்தவாந்தி எடுத்தபடி குப்புசாமி விழி விறைக்க செத்துக்கிடந்தான்... 
உரிமையாய் ஒரு  போய் அவன் திறந்த கண்களில் உட்கார்ந்திருந்தது....

என்ன செய்வேன் இனி நான் இந்த பச்சப்புள்ளைய வெச்சுக்கிட்டு ஐயோ 
யக்கா என்னக்கா செய்வேன் ” என்று அழுதாள்.....

புஷ்பா ஆதரமாய் அணைத்துக்கொண்டாள்...

தன் புடவை முந்தியில் சுருட்டி வைத்திருந்த காசெடுத்து சாவு காரியங்களை 
செய்ய உதவினாள்....

வீட்டுக்காரம்மாவிடம் பாக்கி வைத்திர்ந்த காசை கொடுத்துட்டு கமலத்தை 
அவள் குழந்தையை கூட்டிக்கொண்டு தன் சேரிக்கு சென்றாள் புஷ்பா...

இரவில் குழந்தை அழுதுக்கொண்டே இருக்கவே கமலம் என்னென்னவோ 
செய்து பார்த்தாள்... குழந்தை அழுவதை நிறுத்தவே இல்லை...

புஷ்பா எழுந்து ”என்னடி குழந்தை ஏன் அழுது பால் கொடுக்கலையா?” என்றாள் 
கண்ணை கசக்கியபடி...

பால் தீர்ந்துட்டுதுக்கா” என்றாள்....

நாளையாவது வரியா நான் சொன்ன இடத்துக்கு உனக்கு ஒரு 
குறையும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்” என்று புஷ்பா
 மெல்ல பேசினாள்...
வரட்டுச்சிரிப்பு கமலம் முகத்தில்...

புருஷன் செத்து முழுசா ஒரு வாரம் கூட ஆகலையேக்கா 

அதுக்குள் எப்படிக்கா இப்படி என்னை நீ” என்று அழுதாள்.....

ஒரே ஒரு நாள் தானே நீ தான் வேணும்னு அவங்க பிடிவாதமா கேட்பதால் 

தான் உன்னை கேட்கிறேன்.. நான் வரேன்னா இல்ல வேண்டாம் 
நீ தான் வேணும்னு கேக்கிராங்க”..

குழந்தைக்காக பார்த்து முடிவெடு என்றபடி படுத்துக்கொண்டாள் புஷ்பா...
இரவு முழுதும் தூங்காது விழித்தபடி கண்ணீருடன் உட்கார்ந்திருந்து காலை 
விடிந்ததும் குளித்துவிட்டு புஷ்பாவை எழுப்பினாள்..

அக்கா வா போலாம் நீ சொன்ன இடத்துக்கு”... 
குழந்தைய பத்திரமா பார்த்துக்க என்றபடி...
புஷ்பா சந்தோஷத்துடன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு 
கமலத்தையும் அழைத்துக்கொண்டு ஓடினாள்.....
அங்கே குறைந்தது இருபது பேர் உட்கார்ந்திருந்தனர்......
கூனிக்குறுகி கமலம் சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு நின்றாள்....
இந்தாங்கம்மா நீங்க சொன்னபடி என் தங்கச்சிய கூட்டிட்டு வந்துட்டேன்....

இதப்பாரும்மா இது ஒன்னும் தப்பான தொழில்னு நினைக்காதே”.....

இங்க இருக்கிறவங்க எல்லாரும் உன் உடம்பை 
காமக்கண்ணுடன் பார்க்க மாட்டாங்க”.....

அவர்களுக்கு தேவை உன் உடம்பு மட்டுமே......
சேலையை கழட்டிரும்மா....
உடம்பில் ஒட்டுத்துணியும் இருக்கக் கூடாது சரியா?”
அழுகையுடன் உடைகளை கழற்றினாள்....
வற்றிய உடம்பில் அங்கங்கே தீக்காயங்களுடன் சோகம்
 நிறைந்த கண்களுடன் வறுமைத்தின்ற அவள் உடலை 
ஒரே நேரத்தில் அத்தனைப்பேரின் கண்களும் 
வேகமாய் கண்டு வரைய ஆரம்பித்தது....
கண்ணீருடன் உடலை மறைக்கப்போன 
கைகளை வெறுமனே விட்டு நின்றாள் கமலம்...
அங்கே குழந்தை இவளை 
இந்த கோலத்தில் பார்த்து புன்னகைத்தது.....Saturday, September 24, 2011

செல்லக்கூடல்....


அன்பு குறைய ஆரம்பித்தால்
குறைகள் கண்ணுக்கு தெரியுமாம்

குறைகள் தெரிய வந்துவிட்டால்
அன்பில் விரிசல் தொடங்குமாம்

இயல்பான வார்த்தைகள் வெளிவந்தால்
குற்றம் சாட்டுவது போல் அமையுமாம்

இன்பமாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
நரகவேதனையாய் நகர்ந்து முடியுமாம்

பொறுமைக்காத்து வேண்டி நின்றால்
தவறை உணர்ந்து தத்தளித்து நிற்குமாம்

விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....

Sunday, September 18, 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்??


வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்

மனம் சுருங்கி தடுமாற நின்றேன்
வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி
போனது எல்லாம் மறக்க வேண்டினேன்

நட்புகள் எங்கும் மலர்வதும் சாத்தியம்
அன்புடன் என்றும் வளர்வதும் சத்தியம்
அன்பினை முதலாய் இட்டால் தான்
அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே

பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்

கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது

அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
உறவு கொண்டு தன்னை நேசம் என்றது
உள்ளத்துள் வைத்து நிலையாய் பூஜித்தது
இது தான் நேசமென்று பறைசாற்றியது....

Related Posts Plugin for WordPress, Blogger...