"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 23, 2012

பக்தமீரா தொடர்ச்சி (5)


13. 
கசடில்லா வெண்ணையாய் உருகினேன் நானும்
கள்ளமின்றி காதலை வளர்த்திட்டேன் நாளும்
கபடமில்லா மனதால் வசியம் செய்தவனே
காந்த கண்ணழகனே மன்னனே என் கண்ணா...

14. 
உலகமே என்னை பழித்திட்ட போதும்
உனக்காய் உயிர் வாழ்வேன் நானும்
உனதன்பை பெறவே இத்தனை தவமும்
உன்மனதில் உறையவே காத்திருப்பேன் கண்ணா 

15.
தாளாத துயர் எல்லாம் உனக்காய் பொறுத்தேன்
மழலையாய் உன்மடி சேரக் காத்திருந்தேன்
உன் பார்வை என்மீது படாதது ஏன் கண்ணா
கற்கண்டே சுவையே என் இனியக்கண்ணா

Tuesday, September 18, 2012

கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா ஜூஸ்


காலை எழுந்ததும் அரக்க பரக்க ஏதோ ஒன்னு சாப்புட்டு ஓடுகிறோம்.  என்னிக்காவது நம்ம உடல்நலனில் நமக்கு அக்கறை இருக்கா? எடுத்துக்கிறோமா அதுவும் இல்லை. வீட்டில் எல்லோர் தேவைகளும் பார்த்து பார்த்து செய்கிறோம். பிரயோஜனமா இதை செய்வோமா இனி?

கறிவேப்பிலை  ஒரு கட்டு, புதினா ஒரு கட்டு, கொத்தமல்லி ஒரு கட்டு, நெல்லிக்கா முழுசு 4, இஞ்சி ஒரு துண்டு இதெல்லாம் போட்டு மிக்சில அரைச்சு ஜூஸ் எடுத்துக்கோங்க.

எலுமிச்சை ஒன்னு பிழிஞ்சு அதில் கலந்துக்கோங்க. சுகர் இருக்கிறவங்க உப்பு சேர்த்துக்கோங்க. பிபி இருக்கிறவங்க வெல்லம் சேர்த்துக்கோங்க. ரெண்டும் இருக்கிறவங்க அப்டின்னு கேட்டுராதீங்கப்பா ப்ளீஸ்....

தினமும் காலை இதை குடிங்க.... என்ன பயன்னு கேட்பீங்களே...

சரி குறிச்சுக்கோங்க...

நெல்லிக்காய் = இளமையா இருக்க உதவும், ஆயுளை நீட்டிக்கும். தோல் சுருக்கமில்லாம அழகா இருக்கும்.

புதினா, கொத்தமல்லி = ரத்தத்தை சுத்தப்படுத்தும், வாய் துர்நாற்றம் போக்கும்.

கறிவேப்பிலை = தலைமுடி உதிர்வுக்கு ரொம்ப நல்லது.

இஞ்சி = அனாவசியமான சதைகள் உடலில் சேர இடம் தராது....

எலுமிச்சை = உடல் உஷ்ணத்தை தீர்க்கும், பித்தம் போக்கும்..

போறுமா?

அப்ப நாளை முதல் உங்க வீட்டில் ஜூஸ் ரெடியா??

நானா?? நாங்க தான் தினமும் குடிக்கிறோமேப்பா...


ஓருடல் ஈருயிர்... இரண்டாம் பாகம்
10 நாட்கள் கழித்து.....

கண்கள் வெறித்த நிலையில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு சுவற்றின் மூலையில் உட்கார்ந்திருந்தார் வைத்தியநாதன்...

” இறைவனுக்கு ஏன் இப்படி கருணையே இல்லாமல் போனது... என் ஆசை மனைவியை என்னிடமிருந்து பிரித்து குழந்தைகளை இப்படி பிறக்கவைத்து.. என்னை தனியாக்கிட்டியே பகவானே ” துக்கத்தில் நெஞ்சடைத்தது வைத்தியநாதனுக்கு.

குழந்தைகள் மருத்துவர்கள் குழு தந்த போஷாக்கினால் அழகாய் கண்மலர்ந்து சிரித்து அழுது அமைதியாய் தூங்கி கழித்தன நாட்களை...

நேராய் குழந்தைகளை படுக்க வைக்கமுடியாததால் குழந்தைகளின் தலை ஷேப் மாறிவிடாமல் இருக்க குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொண்டு இருந்தனர்....

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் இத்தனை நாட்களாகியும் பெயர் வைக்கவில்லை

ஒரு குழந்தை எப்போதும் சிரித்து துறுதுறுவென்றும் மற்றொன்று மிக அமைதியாக தவம் செய்வது போல கண்களை மூடி மூடி திறப்பதும் காண அழகான காட்சியாக இருந்தது...

வைத்தியநாதன் அங்கே வந்து குழந்தைகளை பார்த்தார்....

குழந்தைகள் அப்பாவை கண்டதும் கைகால்களை அசைத்து கொட்டு கொட்டு என்று பார்த்தது....

டாக்டரின் அறைக்கு சென்று வைத்தியநாதன் டாக்டரிடம் பேச ஆரம்பித்தார்....

“ டாக்டர் இந்த குழந்தைகளை நான் எப்படி வளர்ப்பேன்?? ஒன்னுமே புரியவில்லை டாக்டர் “ என்று அழ ஆரம்பித்தார் வைத்தியநாதன்...

“ மிஸ்டர் வைத்தியநாதன் உங்களோட குழந்தைகள் எங்க மருத்துவத்துறைக்கே ஒரு சவாலா இருக்காங்க தெரியுமோ?? “

“ முதுகு ஒட்டி முதல் முறையா நம்ம ஊர்ல பிறந்து இன்னும் என்னென்ன சாதிக்கப்போறாங்கன்னு நாம இருந்து பார்க்க முடியலன்னாலும் பாருங்க என்னென்ன நடக்கப்போகுதுன்னு “ சிந்தனையுடன் பேசிக்கொண்டிருந்தார்....

“ அப்புறம் மிஸ்டர் வைத்தியநாதன் நீங்க இங்க இருக்கவேண்டாம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நல்ல இடம் ஒன்று சொல்றேன் அங்க கிளம்பிடுங்கோ.. கவலைப்படாதீங்க... நீங்க அங்க உங்களுக்கு வேலையும் தரச்சொல்லி என் நண்பனிடம் சொல்கிறேன்... “

“ குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க உங்களுக்கு நிறைய கௌன்சிலிங் தேவைபடுகிறது “

உங்க மனதை முதலில் தயார் பண்ணிக்கோங்க.... குழந்தைகளை தனி தனியா சமாளிப்பதே ரொம்ப சிரமம்... ஆனால் இந்த குழந்தைகளோ ஒட்டி பிறந்தவை... இதுகளுக்கு தேவையானபடி வசதிகளை செய்து தர வேண்டும்... அதுமட்டுமில்லை.. இந்த பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலத்தில் இன்னும் நிறைய பிரச்சனைகளை நீங்கள் எதிர்க்கொள்ள வேண்டி வரும்....

எல்லாத்துக்கும் நீங்கள் தயாராக இருக்கவேண்டும்.. எந்த நொடியிலும் உங்க கோபத்தையோ இயலாமையையோ பிள்ளைகள் எதிரில் காட்டிவிடாதீர்கள்....

அன்பு அன்பு அன்பு முழுமையான அன்பை குழந்தைகளிடம் செலுத்தி குழந்தைகள் மனதில் நீங்க ஒரு நல்ல அப்பா மட்டுமல்ல ஒரு தாயாகவும் இருக்கவேண்டும்... சொல்லி நிறுத்தினார் டாக்டர்...

கண்டிப்பாக  டாக்டர்.....

நிலம், வீடு, சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தார் மும்பை நோக்கி....

பிள்ளைகள் வளர வளர வைத்தியநாதனின் பொறுப்புகளும் கூடியது....

பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களையும் கவனித்துக்கொண்டு வேலைக்கு செல்ல இயலாததால் வேலையை விட்டுவிட்டார்..

குழந்தைகளுக்கு கவுன்கள் அழகாய் குட்டி குட்டியாய் தைத்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்... சின்ன குடவுனில் ஆரம்பித்த இந்த தொழில் நல்லமுறையில் வெற்றிகள் கண்டது....

குழந்தைகளுடன் பொழுது போக்கும்போது மனைவி இல்லாத கவலைகளை  மறந்தார்...

குழந்தைகளுக்கு முறையே விவான் இபான் என்று பெயர்கள் வைத்தார்....

விவான் = கிருஷ்ணனின் பெயர்

இபான் = பிள்ளையார் பெயர்

விவான் அமைதியாக எப்போதும் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பான்... பிரச்சனைகள் தரவே மாட்டான்...

ஆனால் இபான் ரொம்ப துறுதுறு.... விவான் அமைதியாக இருந்தாலும் இவன் திடிரென்று எழுந்து எதிர்திசையில் ஓட ஆரம்பிப்பான்... விவான் நிலைதடுமாறி விழுந்து எழுந்து இழுபட்டு அவனுடனே புரண்டோடுவான்....

விவான் கோபமே இல்லாத மனநிலை...

இபானுக்கு மூக்குநுனியில் எப்போதும் கோபம் நிற்கும்....

இபான் பலமுறை இழுத்த இழுப்பில் விவான் பக்கவாட்டில் விழுந்து நெற்றிப்பொட்டில் கால் முட்டியில் என்று அடிபடுவான்...  அதைப்பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இபான் விளையாட்டில் கவனம் செலுத்துவான்....


( தொடரும் )

Thursday, September 13, 2012

ஓருடல் ஈருயிர்....
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வலி தாளாமல் வைஜைந்தி அலறினாள்....

வைத்திய வசதி இல்லாத இடத்தில் கிராமத்தின் குடிசையில் வைஜைந்தியின் அலறல் சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது....

மருத்துவச்சியை அழைத்துவர அடாது மழைபெய்த வானத்தை சபிக்க மனமில்லாமல் வைத்தியநாதன் குடையை எடுத்துக்கொண்டு பதட்டத்துடன் நடக்க ஆரம்பித்தார்....

லாந்தர்விளக்கு அடிக்கிற காற்றுக்கு அலைபாய்ந்துக்கொண்டு இருந்தது....

உயிர் போய்விடுமோ பிறக்கும் குழந்தையை காணமுடியாமல் இறந்துவிடுவேனோ என்று பயம் நெஞ்சை அப்பிக்கொண்டது வைஜந்திக்கு...

கிருஷ்ணா கிருஷ்ணா என் குழந்தை எந்த சிரமும் இல்லாமல் இந்த உலகத்தை பார்க்கும்படி அருள்புரிப்பா வலியுடன் வேண்ட ஆரம்பித்தாள் வைஜந்தி....

அவளின் வேதனையான அழுகையை பிரார்த்தனையை ராதாகிருஷ்ண படத்தில் இருந்துக்கொண்டு வாத்சல்யத்துடன் சிரித்தார் கிருஷ்ணபகவான்....

மருத்துவச்சியை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தியநாதன்....

“ வேகமா சுடுத்தண்ணியும் வெள்ளை துணி நிறைய எடுத்துக்கொடுங்க “ விரட்டினாள் மருத்துவச்சி....

அந்த கிராமத்திலேயே இந்த மருத்துவச்சி கைராசியான கிழவி என்று சொல்லிக்கொள்வார்கள்...

இதுவரை எத்தனையோ பிரசவங்கள் பார்த்திருந்தாலும் இறப்பு சதவீதம் குறைவே இந்த மருத்துவச்சியிடம்... பெண் சிசுக்களை கொல்லாத நல்ல மருத்துவச்சி....

” மெதுவா மெதுவா தலைய தூக்கும்மா....” வைஜந்தியின் தலையை தூக்கி உயரமான தலையணையில் வைத்தாள்....

” பாட்டி பாட்டி எனக்கு நல்லபடியா பிரசவம் ஆகிடும் தானே? ” மருத்துவச்சியின் கைப்பிடித்துக்கொண்டு அழுதாள்....

“ நிறை பிள்ளைத்தாய்ச்சி இப்படி அழக்கூடாது  சாமியை வேண்டிக்கோ எல்லாம் நல்லபடியா நடக்கும் ” என்று தன் பணியை தொடர்ந்தாள்.

வயிறு அமுக்க அமுக்க குழந்தையின் தலை மெல்ல வெளியே வந்தது....

குழந்தையை இழுக்க முயன்றபோது என்னவோ தடுப்பதை மருத்துவச்சி உணர்ந்தாள்...

”ஐயோ என்னது இது அசம்பாவிதம்.. குழந்தையா இது குழந்தையா ?? “ மெல்ல இழுக்க இழுக்க இரண்டு தலைகளுடன் நான்கு கைகளுடன் நான்கு கால்களுடன் முதுகு ஒட்டி கண் இமைகள் மூடியிருக்க குழந்தையை தூக்கி பார்த்தாள் மருத்துவச்சி...

மயக்கம் வருவது போலிருந்தது குழந்தைகளின் தோற்றம்....

இரட்டை குழந்தைகள் ஆனால் முதுகு ஒட்டி.....

” இது என்ன கொடுமை இறைவா ” என்று வேகமாக மருத்துவச்சி குழந்தைகளின் வயிற்றிலிருக்கும் நஞ்சை தனியாக்கினாள்... அலறி அலறி குழந்தைகளின் இந்த ரூபத்தை பார்த்து மயங்கிவிட்டாள் வைஜைந்தி....

வைத்தியநாதன் ” ஐயோ “ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்....

” தம்பி நீ உடனே உன் பொஞ்சாதியை குழந்தைகளை பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போப்பா... எனக்கு பயமா இருக்கு... “

” ஐயோ மழை இப்படி விடாம பெய்கிறதே என்ன செய்வேன் “... என்று அரற்றினார்....

” கவலைப்படாதே கடவுள் கண்டிப்பா உனக்கு துணை இருப்பார் என்று சொல்லிக்கொண்டே எலே மாயாண்டி வண்டி எடுத்தாடா.... இங்க பிள்ளை பிறந்திருக்கு இவரோட சம்சாரத்தோட உடம்பு ரொம்ப மோசமா இருக்கு.... பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போடா ” என்று மழை சத்தத்திற்கு ஈடாக இரைந்தாள் மருத்துவச்சி....

மாயாண்டி வேகமாக வண்டி எடுத்துக்கொண்டு வந்து நின்றான்....

இரு குழந்தைகளை மெல்லிய துணியால் சுற்றிக்கொண்டு மனைவியை கைத்தாங்கலாக ஒரு பக்கம் மருத்துவச்சியும் இன்னொரு பக்கம் மாயாண்டியும் பிடித்துக்கொள்ள நடக்க இயலாமல் நடந்தாள் வைஜைந்தி....ஆஸ்பத்திரிக்கு மாடுகளை முறுக்கிவிட்டு விரட்டினான்.

ஆசுபத்திரி நெருங்கியதும் வைஜைந்தியை எழுப்ப முனைந்தார் வைத்தியநாதன்... மூச்சிழுக்க மறந்தவளாய் கண்கள் நிலைக்குத்தி கிடந்தா வைஜைந்தி....

”வைஜைந்தி “ என்ற அவர் அலறல் மழையின் சத்தத்தில் அமுங்கியது....

குழந்தைகளை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் விரைந்தனர்....

வைஜைந்தியின் இறந்த உடல் வண்டியில் கிடக்க.... மாயாண்டி வண்டியிலேயே உட்கார்ந்திருந்தான்...

மனித வாழ்க்கையின் இறப்பு பிறப்பை ஒன்றாய் கண்டது போல் மரத்து உட்கார்ந்திருந்தான்.....

மருத்துவர்கள் குழு குழந்தைகளை டயக்னைஸ் செய்ய ஆரம்பித்து விழித்தது...

இதுபோல சாத்தியமில்லாத விஷயங்கள் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்துக்கொண்டு தான் இருந்தது....

பிறந்த குழந்தைகள் கண் சிமிட்டி பார்த்தது... அதில் ஒன்று அழ முனைந்தது....

இந்த குழந்தைகளை பிரித்து எடுப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகளை பற்றி வைத்தியநாதனுக்கு விளக்கினர்....

வைத்தியநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்துக்கொண்டு டாக்டரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றார்....

சீஃப் டாக்டர் மோகன் குழந்தைகளை இங்கேயே சில நாட்கள் வைத்திருக்கவேண்டும் என்று சொல்லவும்...

வைத்தியநாதன் மீறி வந்த அழுகையை அடக்கமுடியாமல் மனைவியின் ஈமக்கிரியை சடங்குகள் முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி டாக்டரிடம் விடைப்பெற்று சென்றார்...

(தொடரும்...)

Sunday, September 9, 2012

அன்பின் வை.கோபாலகிருஷ்ணன் சாரிடமிருந்து 2 ஆவது விருது


அன்பின் வை.கோபாலகிருஷ்ணன் சாரிடமிருந்து இரண்டாவது விருது...

அடுத்தடுத்து அன்பு மழையில் நனையவைத்துவிட்டார்....  வலை உலகில் நான் இன்னும் மழலையாக தான் என்னை நினைக்கிறேன்.. கற்கவும், கற்றதை செயலாற்றவும் நிறைய இருக்கிறது... ஒன்றும் விவரங்களும் விஷய ஞானமும் இல்லாத எனக்கு இத்தனை விருதுகள் கொடுத்து தன் மனதில் உள்ள அன்பினை பகிர்ந்திருக்கிறார்....

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்....

விருது கொடுத்த நாள் : 30.07.2012
http://gopu1949.blogspot.com/2012/07/10th-award-of-2012.html

விருதின் பெயர் சன்ஷைன் ப்ளாகர் அவார்ட்

விருது கொடுத்தது அன்பு நண்பர் வை.கோபாலகிருஷ்ணன் சார்

இரண்டாவது விருது அன்பின் வை.கோபாலக்ருஷ்ணன் சாரிடம் இருந்து


VAI.GOPALAKRISHNAN

நான் விருது பெற்றதை எனக்கு அன்புடன் ஓடி வந்து சொன்னது அன்புத்தோழி இராஜராஜேஸ்வரி


இராஜராஜேஸ்வரி

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா எனக்கு விருது கிடைத்ததை என்னிடம் தெரிவித்தமைக்கு..

எனக்கு கிடைத்த விருதினை அன்புடன் நான் நண்பர்களுக்கு பகிர்கிறேன்....

1.  வேலன்


2. கௌரிபாலன்3. என் நிலவின் மறுபக்கம்
4. மௌனத்தின் சப்தங்கள்
5. ஷீநிசி கவிதைகள்

6.ஹிஷாலியின் கவிதைகள்
7. நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை

விருது பெற்ற அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்...


Thursday, September 6, 2012

காதல் தேவதை....


” எங்க ஒளிஞ்சிட்டிருக்கே??”

கொலுசு சத்தமும் வளையல் கிணுகிணுக்கும் சத்தமும் நோக்கி தேடினான் பார்த்திபன்.

” ப்ளீஸ்டா.... என்னை இப்படி அலைக்கழிக்கவிடாதே.. நானே மனசு சரியில்லாம இருக்கேன் “

சட்டென அவன் முகத்தை புடவை முந்தானை வந்து மூடி விலகியது.....

கலகலவென்று சிரித்துக்கொண்டே எதிரில் வந்து அமர்ந்தாள்...

“ உன் முகத்தில் கருணையும் கனிவும் தெரியறது தெரியுமா??? “

”சும்மா கிண்டல் பண்ணாதீங்க என்னை.... ஆமா என்னிக்கு தான் உங்களுக்கு மனசு சரியா இருந்திருக்கு?  இன்னைக்கு மகாராணி என்ன திட்டினா?? “

“ திட்றதுக்கு அவளுக்கு காரணம் அவசியமே இல்லை “ ஹூம் ஆயாசமாக சாய்ந்து உட்கார்ந்தான் பார்த்திபன்...

“ சரி சரி மனசை திசை திருப்புங்க... சும்மா அதையே நினைச்சுக்கிட்டு கவலைப்படாதீங்க “ என்றபடி அவன் தோளை அழுத்தினாள்..

” நீங்க என்னோட பேச ஆரம்பிச்சு சரியா ஒரு வாரமாகுது.. ஆனா என் பெயர் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?? “

“ அட ஆமாம் கேட்கவே மறந்துட்டேனே.. உன் பெயர் என்ன? “

“ ஏன் நீங்களே ஒரு பெயர் வைங்களேன் ” கன்னத்தில் குழிவிழ அழகாய் சிரித்தாள்...

” ம்ம்ம்ம்ம் ராகினி... பெயர் நல்லாருக்கா?? “

” ரொம்ப நல்லாருக்கு ” என்றபடி அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள் ராகினி...

” உன்னிடம் பேச வந்து உட்கார்ந்தாலே நான் எல்லாம் மறந்துடறேன் தெரியுமா ராகினி?? “

“ அப்டியா??” என்று கண்களை விரித்து உதடு சுழித்து சிரித்தாள்...

” நிஜம்மா தான்...எத்தனை மனசு வேதனையா இருந்தாலும் உன்னிடம் வந்து உன்னைப்பார்த்து பேசி உன் மடியில் கொஞ்சம் தலைவைத்து படுத்தாலே என் அத்தனை கவலைகளும் போய்டறது தெரியுமா?? “ என்றபடி ராகினியின் கன்னத்தை தன் கைகளில் ஏந்தினான்....

“ ம்ம்ம்ம் “ என்று சிணுங்கியபடி விலகி அவன் மூக்கை திருகினாள்....

“ நிஜம்மா தான் சொல்கிறேன் நம்பமாட்டியா “ என்ற ஏக்கக்கண்களுடன் ராகினியைப்பார்த்தான்.

“ நம்புவேன் கண்டிப்பா... “ என்றபடி பார்த்திபனை மெல்ல தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்...

“ ஒரு பாட்டு பாடேன் “

“ என்ன பாட்டு? “

” எதுனா.... என் மனம் அமைதியாகும்... அப்டியே உறக்கம் அணைக்கும் என்னை... பாடேன் “ என்றபடி ராகினியை கழுத்தை வளைத்தான் தன் பக்கம்...

“ மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா “

இனிய ராகத்தில் ராகினி பாடப்பாட மெல்ல கண் சொக்கி உறங்கினான் பார்த்திபன்....

“ எழுந்திருங்க.... அங்க உங்களுக்கு திட்டு விழும் சீக்கிரமா போகலன்னா.. நேத்தே டோஸ் வாங்கிட்டு தானே வந்திங்க?? “ விரட்டினாள் ராகினி.

“ எங்க இருக்கேன்?? “ அலங்க மலங்க விழித்து பின் சுதாரித்து எழுந்து வீட்டுக்கு கிளம்ப ஆயுத்தமானான் பார்த்திபன்....

“ மறுபடி எப்ப?? “

“ சீக்கிரமேடா.. நீ தானே என் உயிர்... நீ தானே என் ஸ்வாசம்.. நீ தானே என் எல்லாம்.. நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழமுடியாது.. வாழ்வது போல நினைச்சு கூட பார்க்கமுடியாதுடா.. “ ராகினியின் நெற்றியில் முத்தமிட்டு விரைந்தான் வீட்டுக்கு...

“ ம்க்கும் என்ன இன்னைக்கு ஏன் இவ்ளோ நேரம்?? இன்னைக்கு போய் புடவை எடுக்கணும்னு சொன்னேனே மறந்துட்டுதா “ கடூர குரலில் கத்தினாள் அகிலா...

“ சத்தம் போடாதே அகிலா.. அக்கம்பக்கம் பார்க்கிறாங்கல்ல?? “

“ இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.. ம்க்கும் “ தோளில் முகத்தை இடித்துக்கொண்டு நகர்ந்தாள்...

முணுமுணுப்பு ஆரம்பமானது... இந்த பாவிக்கு வாக்கப்பட்டு வந்து என்ன சுகத்த கண்டேன்.. சொந்த வீடும் இல்ல, சொகுசான வாழ்க்கையும் இல்ல, காசு இல்ல, ஓட்டை ஒடைசல் வீடு..வீட்டைச்சுத்தி கடன் வெச்சுக்கிட்டு என் நகை எல்லாம் அடமானத்துல வெச்சு அதுவும் முழுகிப்போச்சு... பாடாவதி வேலை.. கர்மம் கர்மம்... போயும் போயும் எங்கப்பன் இவனுக்கு கட்டிக்கொடுத்தான் பாரு.. என் தலை எழுத்து... இவன் கிட்ட போனாலே பொணநாற்றம் தாங்க முடியல... எப்படி இவனோடு குடும்பம் நடத்துறது.... எல்லாம் என் தலை எழுத்து....

பரிதாபமாக இதை எல்லாம் கேட்டபடி நகர்ந்தான் பார்த்திபன் குளியலறைக்கு....

குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான் பார்த்திபன்...

“ ஒன்னும் சமைக்கல.. புடவை வாங்க போகணும்ல? அதனால் நான் சமைக்கல...எனக்கு ஹோட்டல்ல பிரியாணி வாங்கித்தாங்க “ என்று சொன்னாள் அகிலா...

“ சரிம்மா கிளம்பு “ என்றபடி சட்டை போட்டுக்கொண்டு கிளம்பினான் பார்த்திபன்...

ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் புடவைக்கடையில் குவிந்தது போல அத்தனை கூட்டம்....

“ நீங்க உட்காருங்க.. நான் போய் எடுத்துட்டு வரேன் “ கூட்டத்தில் மறைந்தாள் அவன் பதிலுக்கு காத்திருக்காமல்...

ஹூம்....

கண்ணை சுழட்டியபடி பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு இடத்தில் அவன் கண்கள் நிலைக்குத்தியது..

“ ஆஹா என்ன ஒரு அழகான ஆகாய நீல நிறம்... ராகினிக்கு பொருத்தமா இருக்குமே.. ஆனா கைல இருக்குற காசுக்கு இவளுக்கு புடவை வாங்கவே பத்தாதே.. ராகினிக்கு இதுவரை நான் ஒன்னுமே வாங்கித்தரலையே...”என்று யோசித்தான்...

“ யோசித்து மட்டும் என்ன கிழியப்போகிறது வாங்குற சம்பளம் வாய்க்கும் கைக்குமே போறலை... ” என்று அவன் மனக்குரல் எழுப்பவே ஹூம்...மீண்டும் கண்மூடி ராகினியை நினைத்து கனவு காண ஆரம்பித்தான்...அவன் நினைவில் ராகினி மெல்ல அவனை அணைத்தாள்...

“ ஐயே உங்களத்தான் எந்திரிங்கன்னா... வந்து காசை கட்டுங்க ” என்று காட்டுக்கத்தல் கத்தினாள் அகிலா...

புடவைக்கு பணத்தை கட்டிவிட்டு ஹோட்டலுக்கு சென்று உணவருந்திவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்ததும் முகம் கைக்கால் கழுவிக்கொண்டு கிளம்பினான் பார்த்திபன்...

“ கிளம்பிட்டான் மறுபடி கர்மம் “ என்றபடி புடவையை எடுத்து தன் மேல் போர்த்திக்கொண்டு நடந்து பார்த்தாள் அகிலா...

மனம் நிறைய ராகினி நிறைந்திருக்க இன்று கொஞ்சம் பூவாவது வாங்கிச்செல்வோம் என்று நினைத்து மல்லிகைப்பூ 3 முழம் வாங்கினான்....

“ என்ன இன்னைக்கு ஒரே வாசனையா இருக்கு உங்கமேலே?? ” என்று அவனிடம் வந்து கை எடுத்து முகர்ந்தாள் ராகினி.

“ நிஜம்மா சொல்லு என் மேலே நல்ல வாசனையாவா இருக்கு? என் பொண்டாட்டி என் மேலே நாறுதுன்னு சொல்றா “ என்று கண்கலங்கினான்...

 ராகினி அவனை நெருங்கி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டுச்சொன்னாள்.... ” எனக்கு உங்க உள்ளத்தூய்மை தெரிகிறது..உங்க மனைவிக்கு உடலைமட்டும் பார்க்கிறா... உங்க வேலை அப்படி.. அதுக்கு நீங்க என்ன செய்யமுடியும்? செய்யும் தொழிலே தெய்வம் தெரியுமா? ஏமாத்தறது, திருடறது தவிர எந்த வேலையும் செய்யலாம்... தப்பில்ல... இன்னும் எவ்ளவு நேரம் தான் எனக்கு தெரியாம பூவை மறைச்சு வைப்பீங்க? வெச்சுவிடுங்க என் தலையில் “ என்றபடி திரும்பி நின்றாள் ராகினி..

ஆசையாக அவள் தலையில் பூ வைத்துவிட்டு அழகு பார்த்தான்... ” நீ உன் மனசைப்போலவே அமைதியான அழகு ராகினி.... உன்னைப்பார்த்ததுல இருந்து கேட்க தோணித்து.. உன் கை மணிக்கட்டு அறுபட்டிருப்பது போலிருக்கே என்னடா அது?

அதுவா.. ம்ச்சு அசுவாரஸ்யமாக திரும்பி தன் மணிக்கட்டை பார்த்தாள்... ஒன்னுமில்ல... என்றபடி அவன் அருகே வந்து நெருங்கி அமர்ந்தாள்....

“ எதுனா ஒரு கவிதை சொல்லக்கூடாதா என்னைப்பற்றி “

“ ஏன் எப்ப பார்த்தாலும் கவிதை சொல்லச்சொல்றே? நீயே ஒரு கவிதை.. உனக்கு நான் கவிதை சொல்வதா?? எனக்கு கவிதை எல்லாம் சொல்லத்தெரியாது ராகினி.. ஆனால் அழகை ரசிப்பேன்... ரசித்து ரசித்து மகிழ்வேன்... சொல்ல மறந்துட்டேனே... இன்னைக்கு அகிலாவை கூட்டிக்கிட்டு புடவை வாங்க கடைக்கு போனேன். அங்க உனக்கு பொருத்தமான சேலை ஒன்று பார்த்தேன். என் கையாலாகாத்தனம்.. எனக்கு பற்றாக்குறை... எங்கிருந்து உனக்கு சேலை வாங்குவது.... ” பெருமூச்சு கிளம்பியது பார்த்திபனிடமிருந்து....

“ நான் பார்த்த நாளில் இருந்து நீ ஒரே சேலை தான் கட்டிக்கிட்டு இருக்கே :( உனக்கு ஒரே ஒரு சேலையாவது வாங்கித்தரணும்னு ஆசையா இருக்கு ராகினி...”

கலகலவென்று சிரித்தாள் ராகினி... எனக்கு புடவை எல்லாம் வேண்டாம்.. நீங்க வாங்கிக்கொடுத்த பூவே எனக்கு போதும் என்றபடி மடியில் அவனை சாய்த்து படுக்கவைத்து பாட ஆரம்பித்தாள்....

“ நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை......” மெல்ல கண்ணுறங்க ஆரம்பித்தான் பார்த்திபன்...

” டேய் எந்திரிடா பொணத்து கால் கிட்ட தலை வெச்சு படுத்துக்கிட்டு இருக்கே?? எவனாவது பார்த்தா உன் வேலைக்கு வேட்டு விழும் எந்திரி... ஒரு வாரமா இந்த பொணத்தோட பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கான் லூசுப்பைய ” என்று தலையில் அடித்துக்கொண்டான் சுந்தரம் உடன் வேலை செய்பவன்...

” இந்த பொணத்தை வாங்க அவங்க அம்மாப்பா வந்துட்டாங்க... சீக்கிரம் எந்திரி ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சிட்டாங்களாம் “ பொணத்தை வாங்க வந்திருக்காங்க... சுந்தரம் பார்த்திபன் முதுகில் தட்டி உலுக்கி எழுப்பினான்...

வாயில் ஒழுகும் எச்சிலை துடைத்துக்கொண்டு வேகமாக எழுந்தான்....

தன் உயிரே தன்னை விட்டு போவது போல் உணர்ந்தான்.. இனி தோழியாக காதலியாக தன்னை அரவணைக்க ராகினி வரமாட்டாள் என்ற நிதர்சனம் உறைக்க எழுந்தான்....

ஐய என்னடா இது பொணத்து மேலே மல்லிப்பூவெல்லாம் போட்டிருக்கே என்று எல்லாம் எடுத்து குப்பையில் வீசினான்...

ஒரு வாரமாய் தன்னுடன் பேசி சிரித்து மகிழ்ந்த ராகினி இப்போது சலனமில்லாமல் கண்மூடி படுத்திருப்பதை பார்த்தான் பார்த்திபன்....

என் ராகினி.. என் ராகினி... மனம் முழுக்க எரிந்தது....

வெளியே குரல்கள் கேட்கவே எட்டிப்பார்த்தான் பார்த்திபன்...

ராகினி சாயலில் முகமெல்லாம் அழுது வீங்கி ஒரு பெண்மணி சோகமாய் சொல்லிக்கொண்டிருந்தாள் தன் கணவனிடம்...” உங்களால தான் நம்ம மக இப்ப நம்மை விட்டு போயிட்டா.. அவ காதலுக்கு நீங்க சரின்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் இப்படி கண்காணா இடத்தில் வந்து மணிக்கட்டு அறுத்துக்கிட்டு தற்கொலை செய்துக்கிட்டு இருந்திருக்கமாட்டா.. ஐயோ நம்ம ஒரே பொண்ணு... மீண்டும் அழத்தொடங்கினாள்....

மார்ச்சுவரியில் இருந்து பிணத்தை முழுவதுமாக போர்த்தி கட்டி வெளியே கொண்டு வந்து வைத்தபோது பார்த்திபன் நெஞ்சம் அறுக்க பார்த்துக்கொண்டே இருந்தான்....

” உன் டூட்டி முடிஞ்சிருச்சு... வீட்டுக்கு போ.. இவங்க கிட்ட பொணத்தை ஒப்படைச்சிட்டு நானும் கெளம்பறேன்... என்னடா பேயறைஞ்சமாதிரி இருக்கே? ” என்னாச்சு உலுக்கினான் சுந்தரம்....

“ ராகினி ராகினி ” என்று மனம் அரற்றியபடி பார்த்துக்கொண்டிருந்தான்.....

“ ஒன்னும் இல்ல வீட்டுக்கு கிளம்பறேன்..

 தன் சந்தோஷம் எல்லாம் வடிந்து உயிரற்ற உடலாய் வீட்டுக்கு நடந்தபோது....

“ என்னைப்பற்றி ரெண்டு வரி கவிதை சொல்லுங்களேன்... “ காதருகில் வந்த கிசுகிசுப்பாய் ராகினியின் குரல்....

” கனவில் வந்து
கற்பனையில் உதித்து
கவிதையாய் மகிழ்வித்து
மனதில் நீங்காது
நிலைத்து
காற்றில் கலைந்த
என் காதல் தேவதை நீ “

கவிதையே தெரியாதவனின் மனதில் தானாய் உதித்தது வரிகள்.....

Tuesday, September 4, 2012

அன்பின் ரமணிசாரிடம் இருந்து முதல் விருது


வலைப்பூவிற்கு வந்த இத்தனை வருடங்களில் நான் பெற்ற முதல் விருது ரமணி சாரிடம் இருந்து.... இதைப்பற்றிய விவரங்கள் ரமணி சார் வலைப்பூவில் இருந்தே அறியப்பெற்றேன்... அதை அப்படியே இங்கு தருகிறேன் ரமணி சார் அனுமதியுடன்....

லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு
வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது
இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்


இந்த விருதினை அன்போடு ரமணி சாருக்கு தந்த தம்பி மகிக்கும், அதை எனக்கு பகிர்ந்த எனது அன்பு நண்பர் ரமணிசார்
அவர்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...


தீதும் நன்றும் பிறர்தர வாரா “ ரமணிசார்”


தீதும் நன்றும் பிறர்தர வாரா


எனக்கு விருது கிடைத்திருக்கிறது என்று உடனே என்னை போனிலும் மெயிலிலும் அழைத்து அன்புடன் சொன்னார்கள் வேதாம்மா... அன்பு நன்றிகள் வேதாம்மா..

என் அன்பு  வேதாம்மா.. ”வேதா இலங்கைத்திலகம் “


வேதா இலங்கைத்திலகம்நான் பெற்ற விருதினை அன்புடன் 5 தோழமைகளுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
1. சிவஹரியின் சேமிப்பில் சில “ சிவஹரி “
சிவஹரியின் சேமிப்பில் சில

2. மனவிழி “சத்ரியன்”

மனவிழி


3. ஸ்ரவாணி

ஸ்ரவாணி

4.தென்றல் “சசிகலா”

தென்றல்

5. ராஜி

ராஜி

விருது பெற்ற 5 நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...


இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும்
5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள
வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.
இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்
அடையாளமாக அதன் படத்தை தங்கள்
தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்
மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்..Monday, September 3, 2012

பக்த மீரா தொடர்ச்சி... (4)

10.

உண்ணும்போதும் உன்நினைவே எனக்கு தந்தாய்

உறங்கும்பொழுதும் கனவாய் வந்து அணைத்தாய்

உயிரில்லா உடலாய் என்னை நடக்க விட்டாய்

உன்நாமமே சொல்லவைத்தாய் என்னை கண்ணா...

11. 

தேவகி வயிற்றில் ஜனித்தவன் நீயே

கோகுலத்தில் லீலைகள் புரிந்ததும் நீயே

பாஞ்சாலியின் துயர் தீர்த்ததும் நீயே

என்காதல் என்று உணர்வாய் கண்ணா?

12.

மன்னனுடன் வாழ்க்கை என்று ஆனபோதிலும்

மனதில் என்றும் நிலைத்து இருப்பவன் நீயே

மாயவனே உன்மனதில் இடமுண்டா எனக்கு

மீராவின் காதல் மறுப்பது ஏன் கண்ணா?

நீ மட்டுமே வேண்டும்....உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
இறுதிமூச்சிலும் உன்மடி சாய


நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

சொல்லிவிடு....


நீ அன்று குளிர் மழையில்
நனைந்தபடி என்னுடன் உடல்
ஒட்டி உரசியபடி  நடந்தபோது.....
பிறந்ததா உனக்குள் காதல்?

நம் பார்வைகள் ஒன்றோடொன்று
முட்டி மோதி பூகம்பமாய்
உனக்குள் புயல் உருவானபோது
பிறந்துவிட்டதா உனக்குள் காதல்?

கூட்ட நெரிசலில் மற்றவரின்
விகார பார்வையும் தொடுதலும்
பட்டுவிடாமல் நான் தடுத்தபோது
அப்போது பிறந்திருக்குமா என் மேல் காதல்?

நீ என்னை ரசித்த நொடியில்
உன் வசமிழந்து என் வசமான
அந்த அற்புத உணர்வை
உணர்ந்த நொடிகளை....

என் கல்லறையிலாவது
வந்து சொல்லிவிடு
Related Posts Plugin for WordPress, Blogger...