"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 31, 2011

வரவேற்போமா 2012 அன்புடன்?

2011  முடிந்து 2012  ஆரம்பிக்க போகிறது…

எல்லோர் வலைப்பூவிலும் அழகழகாய் வாழ்த்துகளும் அன்பு நிறைந்த கருத்து செரிவுள்ள நல்லவைகளும் பார்த்து மனம் நிறைந்தது…

சரி நாமும் எதுனா எழுதுவோமே என்று ஆரம்பித்தால் மனம் அமைதியாக இருக்கிறது… நினைவுகள் இல்லா அமைதி…. ஆழ்ந்த அமைதி… ஒரு நாள் முன்புவரை கூட மனம் ஒரு போராட்டத்துடன் துடித்துக்கொண்டு வெளியே சிரித்துக்கொண்டு பணியிடத்தில் வேலைகள் நடந்துக்கொண்டு வாழ்க்கை நகர்ந்துக்கொண்டு தான் இருந்தது…

தினம் தினம் வரும் மெயிலில் இதோ இப்போது நான் பார்க்கும் அத்தனை அன்பு உள்ளங்களிடமிருந்து மெயில்கள் வந்தவண்ணம்…. என்னப்பா எப்ப வரப்போறீங்க எங்க தளத்துக்கு? உங்க பதிவும் பின்னூட்டமும் இல்லாம ஹுஹும் நல்லாவே இல்லையே’ என்ற அன்பு விசாரிப்பும்….

அக்கா இதுவும் கடந்து போகும் கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாகும் என்று சிலர், மஞ்சு நீங்க அப்படியே சோர்ந்து உட்கார்ந்தால் கவலைகள் உங்களை எழவிடாமல் தடுக்கும்… கொஞ்சம் அப்டியே வலைப்பூவுக்கு வாங்க, எங்க படைப்புகள் படிங்க…. மனசு கண்டிப்பா லேசாகும்னு சொல்லும் சிலர்,

அன்பு விதைத்தாலும் நஞ்சை ருசிக்க தரும்போது மனம் அதிர்ச்சியாகிறது தான்…. ஆனால் அதுவும் இறைவன் தரும் பிராசதமாய் எடுத்துக்கோ மஞ்சு… கடவுள் எதுவும் காரணத்தோடு தான் செய்வார் என்பதை புரிஞ்சுக்கோ அப்டின்னு பாட்டி லெவலுக்கு எனக்கு அன்பான அறிவுரை சொல்வா என் தங்கை ( என் தாய் என்று சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும் )

எத்தனை புண்ணியம் செய்திருப்பேன் போன பிறவியில்…
என்னவா பிறந்திருப்பேனோ….
நல்லது செய்தேனா? செய்ததனால் இப்பிறவியா?

நல்ல தாய், என்னை உயிராய் காக்கும் என் தங்கை, என்னை குழந்தையாய் பார்த்துக்கொள்ளும் என் அன்பு கணவர், என் மேல் அன்பை பொழியும் என் பிள்ளைகள்….

இதெல்லாம் தான் என்னை இத்தனை கட்டிப்போட்டுவிட்டதா?

குண்டு சட்டில குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்னு சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும்… ஆமாம் சின்ன வட்டத்துக்குள் அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து அன்பையே உண்டு அன்பையே பகிர்ந்து நிறைந்த அன்பை மனதில் நிறைத்துக்கொள்கிறேன்…

இடையில் நடந்தவை எல்லாம் மறக்கமுயல்கிறேன். இறைவன் எப்பவும் சந்தோஷம் மட்டுமே தருவார்னு எதிர்ப்பார்ப்பது தப்பில்லையா? சோதனைகளும் தருவார் தானே? சந்தோஷம் தரும்போது துள்ளிக்குதித்து சோதனைகள் வரும்போது சோர்ந்து விழுந்து எழமுடியாமல் ஏன் வதைத்துக்கொள்கிறேன்..

என்னை வேண்டாம் என்பவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்…
என் நட்பு தீயாய் தகிக்கிறது என்று ஒதுங்கியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்….

மாறாமல் இன்னும் அதே அன்புடன் இருக்கும் காலம் வரை நல்லவை கண்டு நல்லவை பேசி நல்லதைக்கேட்டு நல்லதையே தருவோமே…

முத்தமிழ்மன்றம், ஈகரை, தமிழ்த்தோட்டம், நிலாமுற்றம், தமிழ்மன்றம் இப்படி சில தமிழ் தளங்கள் சென்றிருக்கேன்.. சென்ற இடத்திலெல்லாம் நல்லவரையே  நல்ல உள்ளங்களையே கண்டேன்…

இதோ இங்கு ஒவ்வொரு வலைப்பூவிலும் நான் செல்லும்போது அன்புடன் தோளணைக்கும் தாயன்பு நிறைந்த அன்பையே ஒவ்வொரிடமும் காண்கிறேன்….

இந்த அன்பு என்னை சோர்ந்து போக விடாமல் காத்ததை நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்….

இனி வரும் புதுவருடத்தில் மனதில் ஒரு உறுதி எடுத்துக்கொள்கிறேன்…

  1.   என் மனம் புண்படும்படி இனி யார் எப்படி பேசினாலும் செயல்களால் காண்பித்தாலும் பதிவுகளால் தாக்கினாலும் அமைதியாக ஒதுங்கி விடுவேன்.
  2.  யார் மனமும் புண்படும்படியான எந்த சொல்லும் சொல்லமாட்டேன், பதிவும் நான் இடமாட்டேன்.

எல்லோருக்கும் என் மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா….

Thursday, November 24, 2011

மனைவி அமைவதெல்லாம்.....

”கிருஷ்ணா உன் மாமியார் அங்க தான் இருக்கா.... அதை மனசுல வெச்சுக்கிட்டு நடந்துக்கோ புரிஞ்சுதா??” அம்மாவின் போதனையைக்கேட்டு புதுக்கல்யாணம் ஆகி மஞ்சளின் மெருகு குறையாமல் கயிறு பளபளக்க நின்றிருக்கும் கிருஷ்ணா செக்குமாடு போல் மண்டையை ஆட்டினாள்....

”எடுத்ததுமே எல்லா வேலையும் எனக்கு தெரியும் என்பது போல பாய்ஞ்சு பாய்ஞ்சு செய்துடாதே என்ன நான் சொல்வது கேக்குதா மரமண்டை போல் நிக்குறியே” என்று உலுக்கினாள் அம்மா....

”சரிம்ம்மா.... கிளம்பறோம் என்னை ஆசீர்வாதம் பண்ணு...”

”என் கண்ணே நீ இங்க எவ்ளோ சுதந்திரமா இஷ்டப்பட்டதை சாப்பிட்டு நிம்மதியா காலாட்டிக்கிட்டு இருந்தியே என் தங்கம்... இனி போகும் இடத்தில் எப்படி எல்லாம் இருப்பியோ கஷ்டப்படுவியோ தெரியலையே” என்று மூக்கு சிந்தினாள் அம்மா கற்பகம்....

”போதும் போதும் உன் போதனை முதல்ல மகளை நல்லதைச்சொல்லி அனுப்புவியா இப்படி பொல்லாப்பு விஷயங்களை உருவேத்தி அனுப்புறியே” என்று சங்கடப்பட்டார் சுந்தரம்....

இது எதுவும் கண்டும் காணாதபடி அமைதியாக தன் லேப்டாப்பில் வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீநாத்....

மருமகளை வரவேற்கும் முயற்சியில் துரிதமாக இயங்கிக்கொண்டிருந்தாள் முத்துமணி கணவனை இழந்தததால் தான் சென்று முன்பில் நிற்கவேண்டாமென்று உறவுக்கார பெண்மணியை ஆரத்தி கரைக்க தயார் செய்ய சொன்னாள்...

கணவனை இழந்தப்பின் மகனை படிக்கவைக்க எல்லா சராசரி பெண்களைப்போலவே தானும் ஒற்றையாய் நின்று போராடி ஜெயித்து தாயின் அன்பில் உருகும் மகனை நல்லமுறையில் படிக்கவைத்து வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு வந்தபோதும் தன் தாய்நாட்டில் இருப்பதையே ஸ்ரீநாத்தும் விரும்பினான் இரண்டு காரணங்களால் ஒன்று தாய்மண்ணை விட்டு பிரிய இஷ்டமில்லாததால் இன்னொன்று தன் தாயை தன் தாய்நாட்டில் இருந்து பிரித்துச்செல்ல இஷ்டப்படாததால்....

”கார் வந்திருச்சு வாங்க வாங்க ஆரத்தி ரெடியா?” என்று எங்கிருந்தோ ஒரு கிழவி குரல் கொடுக்க புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து நின்றது கார் வீட்டருகே...

பெரிய மாளிகை போல் இல்லை என்றாலும் தோட்டம் நிறைந்த அழகு வீடாக தான் இருந்தது முத்துமணி கைவண்ணத்தில் உருப்பெற்ற செடிகொடிகள் மரங்கள் எல்லாமே கிருஷ்ணாவை நலம்விசாரித்தது இளங்காற்றை வீசி....

பறக்கும் தலைமுடியை அடக்கமாய் கையில் ஒதுக்கி அமைதியாக கீழிறங்கினாள் கிருஷ்ணா. பின்னே ஸ்ரீநாத்தும் இறங்கினான் லேப்டாப்பை விடாது கையில் எடுத்துக்கொண்டு....

சமையற்கட்டில் இருந்து எட்டி எட்டி தன் மருமகளின் மகனின் வரவை பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் முத்துமணி....

ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்த பெண்மணியை தலைநிமிர்ந்து பார்த்து அத்தை எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் கிருஷ்ணா...

”அட அவளெல்லாம் வரக்கூடாதும்மா நல்ல காரியத்துக்கு” என்று சொல்லிக்கொண்டே ஆரத்தி தட்டை சுற்றத்தொடங்கினாள் அந்த பெண்மணி..

கிருஷ்ணா தடுத்து நிறுத்திவிட்டு ”அம்மா எங்க இருக்கீங்க?” என்று குரல் கொடுத்தபோது அதிர்ச்சியுடன் முத்துமணி வந்து நின்றாள் கூச்சத்துடன்...

”எங்கள் வாழ்வு நல்லா இருக்கனும்னு நினைப்பதில் உங்களை விட மனம் நிறைந்து ஆசி தர யாரால் முடியும்? வாங்க நீங்க தான் ஆரத்தி சுத்தனும்” என்று அன்புடன் அணைத்து முன்பு இழுத்தாள் கிருஷ்ணா முத்துமணியை...

எல்லோரும் ஆ என்று வாய் பிளக்க கண்ணில் துளிர்த்த நீரை பெருமிதத்துடன் சுண்டி விட்டு ஆரத்தி சுற்றினாள் முத்துமணி...

ஆச்சர்யத்துடன் பார்த்தான் ஸ்ரீநாத்.....

வீட்டில் அங்கே மாமியார் கொடுத்த போதனை என்ன ஆனால் இவளென்னடான்னா என்று வியந்தான்....

உள்ளே வந்ததும் கூட்டம் நெம்பி தள்ளி புது மருமகளை எட்டி பார்த்தது....

முத்து மணி அவர்களை உட்காரவைத்துவிட்டு பால் பழம் கொண்டு வர ஓடினாள்...

”அம்மா இருங்க... முதலில் மாமனார் படத்திற்கு விளக்கேற்றிவிட்டு அதன்பின் சாப்பிடலாம்...” என்று சொன்னதும் முத்துமணி மனம் நெகிழ்ந்து போய் பார்த்தாள் தன் மருமகளை....

அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளோர் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர் இப்படி ஒரு காட்சியை தொலைக்காட்சியில் கூட கண்டு பழக்கமில்லாதோர் எப்படா மாமியார் மருமகள் சண்டை வரும் இடையில் போய் பஞ்சாயத்து செய்யலாம்னு காத்திருந்த கிழடுகள் எல்லோரும் வாயடைத்து போனர்...

இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா என்று ஆச்சர்யப்பட்டனர்....

எல்லோரும் சாப்பிடும்போது மாமியாரை தன் பக்கத்திலேயே அமர்த்திக்கொண்டாள் கிருஷ்ணா...

சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் ஆளாளுக்கு கிளம்ப பாத்திரங்கள் எல்லாம் அப்படியே கிடந்தது...

கிருஷ்ணா உடனே புடவையை இழுத்துக்கட்டிக்கொண்டு சாமான் எல்லாம் பர பரவென்று தேய்க்க ஆரம்பித்தாள்..

”உனக்கு ஏம்மா சிரமம் நீ போய் கொஞ்சம் ஓய்வெடு நான் செய்துப்பேன் தானே?” என்று தடுத்தாள் முத்துமணி...

மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சொன்னாள், ”அம்மா நீங்களும் தானே களைப்பா இருக்கீங்க நீங்க ஓய்வெடுங்க” என்று....

இரவு மெல்லிய வெளிச்சத்தில் நறுமணத்துடன் வந்து அமர்ந்தாள் கிருஷ்ணா ஸ்ரீநாத் அருகே...

மெல்லிய இசையில் ”ஜெய க்ருஷ்ணா முகுந்தா முராரே” பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது ரூமில்....

ஸ்ரீநாத் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அமைதியாக அவளைப் பார்த்தான்...

”என்ன பாக்குறீங்க?” என்று தலைகுனிந்தாள்..

”எனக்கு ஒரு விஷயம் புரியலை க்ருஷ்” என்றான்...

”என்னவாம்...?”

“உங்கம்மா கிளம்பும்போது உனக்கு சொன்னது என்ன ஆனால் நீ இங்க செய்வது” என்ன என்றான்...

”நீங்க நினைப்பது சரியே”....

”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் எங்கம்மாவும் சொன்னாங்க”...

”ஆனால் எங்களுக்குன்னு அறிவு இருக்கு தானே?”

”அது என் வீடுன்னா இதுவும் என் வீடு தானே?”

”அங்க இருப்பது என் அம்மா அப்பான்னா இங்க உங்களை நம்பி என்னையே கொடுத்தப்பின் இன்னும் என்ன வேற்றுமை? இங்க இருப்பதும் என்னை தங்கம் போல் பார்த்துக்கும் அம்மாவே தான்னு நான் நம்பி தானே என்னை கொடுத்தாங்க?”

”வீடு என்னிக்கு கோவிலாகும் தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்

”ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் க்ருஷ்...தொடங்கிட்டியா லெக்சர்?” என்று கொட்டாவி விட்டான்....

”ஹே... கிண்டலா?” என்று அவன் தோளில் வலிக்காது குத்தினாள்...

”இல்லப்பா சும்மாத்தான்...”

”ஆனால் மனம் கொள்ளும் அளவுக்கு ஐயா சந்தோஷமா இருக்கேன்...”

”ஏனாம்?” நாணத்துடன் கேட்டாள்...

”என்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களை நான் சொல்லாமல் நீயே புரிஞ்சு என்னை நல்லபடி பார்த்துக்க எனக்கு தாயன்புடன் கூடிய ஒரு இணை கிடைத்ததுக்கு தான்” என்று இழுத்து அணைத்துக்கொண்டான்....

வளையல் ஓசையுடன் சிணுங்கல் ஓசை வெளியே விளக்கணைக்க வந்த முத்துமணி காதில் விழ இறைவனுக்கு நன்றி கூறி விளக்கணைத்தாள்.... நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு கண்டிப்பாக கோவிலாகும் என்பதில் என்ன சந்தேகம்???

கதை படிச்சதும் எல்லாரும் ஆச்சர்யமா கேப்பீங்களே என்ன ஒரு ட்விஸ்டும் இல்லை ஒரு த்ரில்லிங்கும் இல்லைன்னு.....

அன்பை மட்டுமே முதலீடா போட்டு தொடங்கும் வாழ்க்கை கண்டிப்பா வெற்றியுடன் நன்மக்களைப்பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லப்பிள்ளைகளை உருவாக்கித்தருவாங்க என்பதில் என்ன சந்தேகம்?

அன்பு மட்டுமே அளவில்லாமல் இருக்கும் இடமெல்லாம் சண்டை சச்சரவு ஏது??

“ட்விஸ்ட் எதிர்ப்பார்த்து வந்தவங்களுக்கு வெவ்வெவ்வ்வ்வெவ்வ்வே... ”

Wednesday, November 16, 2011

அன்பு உள்ளங்களே உடல்நலம் சற்று தேறிவிட்டதுப்பா....

மனநலம் உடல்நலம் குன்றிய நிலையில் குவைத் வந்து சேர்ந்தேன். இந்த சில நாட்களில் கொஞ்சம் தேறிக்கொண்டிருந்த என் உடல்நலம் கடந்த மூன்று நாட்களிலும் இதோ இப்ப இந்த நிமிடமும் அதிகமாக நலிவடைந்ததால் என்னால் பதிவுகள் இடமுடியாத நிலையில் இருக்கிறேன்.

என்னை மன்னித்து பொறுத்துக்கொள்ளுங்கள்......

இறைவன் துணையுடன் உடல்நலம் மனநலம் சரியானப்பின் கண்டிப்பாக வந்து பதிவுகள் தொடர்வேன். அதுவரை என்னை மன்னிப்பீர்களாக.... :(


உடல்நலம் கொஞ்சம் தேறினதும் கை பரபரத்தது வேறெதுக்கு பதிவர்களின் பதிவுகளை படித்து கருத்து எழுத.....  மீண்டு வரவைத்த அன்பு உள்ளங்களின் அன்பை கண்டு மனம் நெகிழ்கிறது..... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா எல்லோருக்குமே....

Tuesday, November 1, 2011

நான் என்ற ஆணவம் அழிய.....

நான் என்ற ஆணவம் அழிய
உடற்கூட்டினை எரித்துப்பார்

ஆன்மாவில் சஞ்சரிக்கும்
அத்தனை உயிர்களுக்கும்

உடல்கொடுத்த இறைவனை
நேரில் வந்தால் கேட்டுப்பார்

தீவிரவாதமும் தீராத நோயுமாய்
ஏழையை சுரண்டும் பணக்காரனாய்

லஞ்சப்பேய் தலைவிரித்து ஆடி
வஞ்சகத்தால் பதவி பிரமாணம் செய்து

ஈவிரக்கமின்றி கொன்றுகுவிக்கும்
வெறியர்களாய் உருவாக்கியதும் ஏன்?

அன்பும் கனிவும் கருணையும் பாசமும்
பண்பும் பணிவும் ஆதரவும் அரவணைப்பும்

ஒருங்கே ஒன்றாய் கூட்டினில் அடக்கி
உலகை அமைதிப்பூங்காவாய் மாற்றாது

இப்படி விளையாடி தீர்ப்பது ஏன்??

தானும் தன் மனைவி மக்களும் மட்டும்
நன்றாய் வாழ்ந்தால் போதுமா?

நம்பி வாக்குகள் இட்டு
நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு

துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை
இறைவன் காத்திருந்து தண்டிக்ககூடாது

அன்றே அப்போதே அந்த நிமிடமே
துடிக்கவிட்டு கதறவிட்டு.....

இனியொருவன் இப்படி நாட்டை
வைத்து விளையாடமாட்டான்...

நேர்மையும் உண்மையும் இனியாவது
உயிர்த்தெழட்டும்.....

Friday, October 28, 2011

காதல் உயர்வாய் தெரிகிறது.....

மௌனம் கலையும்போது
சோகங்கள் விடியும்போது
கண்ணீர் உறையும்போது
கோபங்கள் வடியும்போது

அன்பு தலைதுவட்டும்போது
இனிமை மனதில் தித்திக்கும்போது
ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது

அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது

காதல் உயர்வாய் தெரிகிறது.....

Wednesday, October 12, 2011

நாளை இந்தியா போய்விட்டு நவம்பர் 8 வந்துருவேன்...

அன்பின் நண்பர்களே,

நான் நாளை இந்தியா போவதால் இங்க கொஞ்ச நாள் காலியா இருக்கும்பா..

நவம்பர் 8 வந்துருவேன் குவைத்துக்கு... அதன்பின் தொடர்வேன்பா...

அன்பு நன்றிகள் எல்லோருக்கும்...

Thursday, October 6, 2011

காதல்..... காதல்......



காதல்.... காதல்...

நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்.....

அன்பைக்கொடுத்து கைக்கோர்த்தவரை
அன்பையே தந்து சொர்க்கம் காட்டிவிடும் காதல்.....

கண்ணியம் குறையாது மாசற்ற மனத்தவரை
கண்ணீரால் பாவங்களை கரைத்துவிடும் காதல்.....

மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்.....


காதலுக்காக எந்த விலை கொடுக்கவும்
காதலுக்காக எதையும்  இழக்கவும்   
உலகே தயாராய் இருப்பதுவும்
உண்மையில் இதனால் தானே  

Friday, September 30, 2011

கதை 16. கலைக்கண்...










” கமலம் கமலம் “ என்று குரல் கொடுத்தபடி புஷ்பா அந்த குடிசை 
வீட்டினுள் நுழைந்தாள்...
 ” குழந்தை அழும் சத்தம் வெளியே வரை கேட்கிறதே கமலம் 
எங்கடி போனே “ என்று அழும் குழந்தையை தூக்கி வைத்து 
அணைக்கும்போது 
பாலுக்கு குழந்தை தேடுவதை உணர்ந்தாள்....

அடடா பசிக்கு அழுகிறதே குழந்தை “ எனும்போது 
கமலம் அசதியான முகத்துடன் கையில் பால் டின்னோடு உள்ளே நுழைந்தாள்..

என்னடி இது குழந்தையை இப்படி விட்டுட்டு போயிருக்கியே வீட்டை 

திறந்து போட்டு” 
என்று கடிந்துக்கொண்டாள் புஷ்பா..

அட நீங்க வேறக்கா இந்த வீட்டில் அப்டி என்ன சொத்தா கொட்டி கிடக்குது...

 பசிக்கு குழந்தைக்கு கொடுக்க பால்பவுடர் தீந்துடுச்சுக்கா”... 

இந்த மனுஷனை பத்தி தான் தெரியுமே உனக்கு செண்ட்ரிங் போட 

ஆள் தேடிட்டு இருக்கும்போது இந்தாள் குடிச்சிட்டு மல்லாக்க கிடந்தது...

ஹூம் நான் போய் ரத்தம் கொடுத்துட்டு கிடைச்ச காசுல பால்டின்
 வாங்கியாந்தேன்கா” என்று அசதியுடன் சிதிலமடைந்த சுவற்றோடு சாய்ந்து 
உட்கார்ந்தாள் கமலம்.
புஷ்பா ஆறுதலாக கமலம் தோளைத்தொட்டாள்....
கமலம் தட்டி விட்டாள் ”வேணாம்கா எனக்கு தெரியும் 
நீ என்ன சொல்ல வரேன்னு”...

எனக்கு இஷ்டமில்லக்கா மானத்தை வித்து என் பிள்ளைய 
வளர்க்கவேண்டிய அவசியமில்ல..... முடிஞ்சா கிட்னிய கூட விப்பேன்”..

அதுக்கப்புறம் என்னடி செய்வே? ”

ரத்தம் இருக்கு வித்தே
கிட்னியையும் வித்துட்டு அதுக்கப்புறம் என்னடி செய்வே?”

பொட்டப்புள்ளைய பெத்து வெச்சிக்கிட்டு நீ இப்படி வீம்பா இருப்பது சரியில்ல 
நான் சொல்றதை கேளு ஒரே ஒரு நாள் தானே கைல சுளையா
 5000 ரூபாய் தருவாங்க....நீ தான் வேணும்னு கேக்கிறாங்கடி சொன்னா கேளு”...

கண்ணீர் கண்களுடன் கையெடுத்து கும்பிட்டாள் ”அக்கா நீ முதல்ல 
இங்கருந்து கிளம்பு அந்தாள் வர நேரமாச்சு... குடிச்சிட்டு வந்தால் அந்தாளுக்கு 
எதிர்ல நீ இருப்பதை பார்த்தால் என்னை கொலையே பண்ணிருவான் 
நீ கெளம்பு வெரசா” என்று விரட்டினாள்....

குழந்தைக்கு பால் கலந்து கொடுத்துக்கொண்டிருந்த புஷ்பா , 
“ இப்ப இல்ல என்னிக்காவது கண்டிப்பா நீ யோசிப்பே அக்கா நமக்கு 
நல்ல வழி தான் காமிச்சான்னு புரிஞ்சுப்பே 
அதுவரை நான் உன்னை விடமாட்டேன் “ கண்ணீரை துடைத்துக்கொண்டு 
புஷ்பா கிளம்பினாள்...

கிளம்பும்போதே தள்ளாடியபடி ஒரு உருவம் ”அடியேய் எனக்கு சுள்ளுனு 
கருவாடு போட்டு கொழம்பு வெச்சு சாதம் வடிடி இதோ கொஞ்சம் படுக்கிறேன்” 
என்றபடி அப்படியே வாசற்படியிலேயே உருண்டு விழுந்தான்...

தடுக்க போன புஷ்பாவை கையமர்த்திவிட்டு கமலம் அவனை 
தன் எலும்பு கைகளால் எழுப்ப சிரமப்பட்டு முடியாமல் பரிதாபமாய் 
புஷ்பாவை பார்க்க புஷ்பாவும் கமலமும் 
குப்புசாமியை இழுத்துக்கொண்டு வந்து வீட்டுக்குள் படுக்கவைத்துவிட்டு புஷ்பா 
கமலத்தை ஏறிட்டு பார்த்தாள்... 

நான் சொன்னதை யோசனை செய் கமலம்... 
நாளை நான் வரும்போது உன் முடிவு நல்லமுடிவா இருக்கனும்”....

மறுநாள்....

புஷ்பா மெல்ல அந்த சாக்கடை ஓடும் நீரின் ஓரமாக நடந்து கமலத்தின் வீட்டை 
அடையுமுன் ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழும் சத்தம் 
கேட்டு பதறி ஓடினாள்....

அங்கே ரத்தவாந்தி எடுத்தபடி குப்புசாமி விழி விறைக்க செத்துக்கிடந்தான்... 
உரிமையாய் ஒரு  போய் அவன் திறந்த கண்களில் உட்கார்ந்திருந்தது....

என்ன செய்வேன் இனி நான் இந்த பச்சப்புள்ளைய வெச்சுக்கிட்டு ஐயோ 
யக்கா என்னக்கா செய்வேன் ” என்று அழுதாள்.....

புஷ்பா ஆதரமாய் அணைத்துக்கொண்டாள்...

தன் புடவை முந்தியில் சுருட்டி வைத்திருந்த காசெடுத்து சாவு காரியங்களை 
செய்ய உதவினாள்....

வீட்டுக்காரம்மாவிடம் பாக்கி வைத்திர்ந்த காசை கொடுத்துட்டு கமலத்தை 
அவள் குழந்தையை கூட்டிக்கொண்டு தன் சேரிக்கு சென்றாள் புஷ்பா...

இரவில் குழந்தை அழுதுக்கொண்டே இருக்கவே கமலம் என்னென்னவோ 
செய்து பார்த்தாள்... குழந்தை அழுவதை நிறுத்தவே இல்லை...

புஷ்பா எழுந்து ”என்னடி குழந்தை ஏன் அழுது பால் கொடுக்கலையா?” என்றாள் 
கண்ணை கசக்கியபடி...

பால் தீர்ந்துட்டுதுக்கா” என்றாள்....

நாளையாவது வரியா நான் சொன்ன இடத்துக்கு உனக்கு ஒரு 
குறையும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்” என்று புஷ்பா
 மெல்ல பேசினாள்...
வரட்டுச்சிரிப்பு கமலம் முகத்தில்...

புருஷன் செத்து முழுசா ஒரு வாரம் கூட ஆகலையேக்கா 

அதுக்குள் எப்படிக்கா இப்படி என்னை நீ” என்று அழுதாள்.....

ஒரே ஒரு நாள் தானே நீ தான் வேணும்னு அவங்க பிடிவாதமா கேட்பதால் 

தான் உன்னை கேட்கிறேன்.. நான் வரேன்னா இல்ல வேண்டாம் 
நீ தான் வேணும்னு கேக்கிராங்க”..

குழந்தைக்காக பார்த்து முடிவெடு என்றபடி படுத்துக்கொண்டாள் புஷ்பா...
இரவு முழுதும் தூங்காது விழித்தபடி கண்ணீருடன் உட்கார்ந்திருந்து காலை 
விடிந்ததும் குளித்துவிட்டு புஷ்பாவை எழுப்பினாள்..

அக்கா வா போலாம் நீ சொன்ன இடத்துக்கு”... 
குழந்தைய பத்திரமா பார்த்துக்க என்றபடி...
புஷ்பா சந்தோஷத்துடன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு 
கமலத்தையும் அழைத்துக்கொண்டு ஓடினாள்.....
அங்கே குறைந்தது இருபது பேர் உட்கார்ந்திருந்தனர்......
கூனிக்குறுகி கமலம் சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு நின்றாள்....
இந்தாங்கம்மா நீங்க சொன்னபடி என் தங்கச்சிய கூட்டிட்டு வந்துட்டேன்....

இதப்பாரும்மா இது ஒன்னும் தப்பான தொழில்னு நினைக்காதே”.....

இங்க இருக்கிறவங்க எல்லாரும் உன் உடம்பை 
காமக்கண்ணுடன் பார்க்க மாட்டாங்க”.....

அவர்களுக்கு தேவை உன் உடம்பு மட்டுமே......
சேலையை கழட்டிரும்மா....
உடம்பில் ஒட்டுத்துணியும் இருக்கக் கூடாது சரியா?”
அழுகையுடன் உடைகளை கழற்றினாள்....
வற்றிய உடம்பில் அங்கங்கே தீக்காயங்களுடன் சோகம்
 நிறைந்த கண்களுடன் வறுமைத்தின்ற அவள் உடலை 
ஒரே நேரத்தில் அத்தனைப்பேரின் கண்களும் 
வேகமாய் கண்டு வரைய ஆரம்பித்தது....
கண்ணீருடன் உடலை மறைக்கப்போன 
கைகளை வெறுமனே விட்டு நின்றாள் கமலம்...
அங்கே குழந்தை இவளை 
இந்த கோலத்தில் பார்த்து புன்னகைத்தது.....











Related Posts Plugin for WordPress, Blogger...