"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, June 26, 2011

கதை 7. நண்பனே எனது உயிர் நண்பனே.....
கடற்கரையில் மணலை அளைந்துக்கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தான் விக்ரமா....

என்ன ஐயா பயங்கர யோசனையில் இருக்கீங்க? என்றபடி அடிக்கும் காற்றில் பறக்கும் தலைமுடியை ஒதுக்கியபடி அவன் அருகில் அமர்ந்தாள் அஷ்வதி.... 

இருவரும் காதலித்து ஜெயித்து இதோ திருமணமும் நடக்க போகிறது...

என்னப்பா கல்யாணத்தை பத்தி யோசனையா இல்ல கல்யாணம் ஆனப்பின் மாமியார் கிட்ட நல்லப்பெயர் எடுக்கும் மருமகளாக பேர் எடுக்கும் என்னை பத்தி யோசனையா? என்று அவன் தலையை கலைத்தாள் அஷ்வதி....

என்னப்பா இவ்ளவு கேட்டும் பதில் சொல்லமாட்டேங்குறீங்க என்று அவன் மோவாயை நிமிர்த்தியவள் விக்ரமனின் கண் கலங்கி இருப்பதை கண்டு திடுக்கிட்டாள்..

என்ன ஆச்சு விக்ரமா சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்தில் கண்ணீர் என்று புடவைத்தலைப்பால் அவன் கண்ணீரை ஒற்றி எடுத்தாள்...

அஷ்வதி , " உனக்கு தெரியும் தானே திவாகர் என் நண்பன் போனமாதம் கூட நான் பேசவில்லை என்று விஷம் குடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்தானே " 

ஆமாம் உங்கள் நண்பர் தான் பிழைத்துக்கொண்டாரே அதைப்பற்றி இப்ப ஏன்பா நினைச்சு வருத்தப்படறீங்க என்று ஆதரவாய் அவன் தோளைத் தொட்டாள்.

நேற்று அம்மாவுக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணை உனக்கு சொல்லனும் அஷ்வதி...

சொல்லுங்கப்பா என்று அவன் முகத்தைப் பார்த்தாள்...

விக்ரமனின் தாயார் இட்லி தட்டில் வைத்து சட்னியை ஊற்றிக்கொண்டே மகனின் முகம் பார்த்தார்.

என்னம்மா என்னைப் பார்க்கிறீங்க? என்றபடி இட்லி விண்டு சட்னியில் தோய்ப்பதில் மும்முரமானான்.

தம்பி உன் கல்யாணத்துக்கு எல்லாருக்கும் பத்திரிகை வெச்சுட்டியாப்பா? என்று கனிவுடன் கேட்டார்.

வெச்சுட்டேனேம்மா என்று சொல்லும்போது குரல் பிசிறியது...

திவாகருக்கு?

அம்மா திவாகர் நம் வீட்டில் ஒருத்தன்.. அவனைக் கூப்பிட்டு என் கல்யாணத்துக்கு வர அளவுக்கு அந்நியமா போயிட்டானாம்மா என்று சொல்லும்போது அவன் குரல் கம்மிற்று....

தம்பி முன்பு போல் நிலைமை இருந்திருந்தால் திவாகர் நீ கூப்பிடுமுன் அவனே நம் வீட்டில் வந்து கல்யாண வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வானே.... ஆனால் இப்போது?

பின்ன என்னம்மா குழந்தை போல நான் பேசலைன்னு சாப்பிடாமல் இருப்பதும் நான் பேசலைன்னு விஷம் குடிச்சிட்டு அதை சொல்லும்போதே அவனால் கண்ணீரை அடக்கமுடியவில்லை....

அம்மா அவன் நான் பேசலை என்ற ஒரே ஒரு காரணத்துக்காக இப்படி விஷம் குடிச்சிட்டானே... பிழைச்சுட்டான் நல்லவேளை.. வேற ஏதாவது ஆகி இருந்தால் காலத்துக்கும் என்னால் இதை தாங்க முடியுமா சொல்லுங்கம்மா... ஒரு உயிர் போக நாம் காரணமாகி விட்டோமே என்று தினம் தினம் செத்து இருப்பேனே அம்மா... அவன் செய்தது சரியா நீங்களே சொல்லுங்க...

சரிப்பா தவறு செஞ்சுட்டான் தான்... மனுஷா தானேப்பா.. யார்ப்பா இந்த உலகத்தில் பர்ஃபெக்டா இருக்காங்க சொல்லுப்பா...எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் தவறு செஞ்சுடறாங்க தெரியாமயோ தெரிஞ்சோ... ஆனால் தவறு என்று தெரிந்து தெளிந்து உணர்ந்தப்பின் அவர்களை மன்னிப்பதில் என்னப்பா தவறு?

நீ அவனை மன்னிக்க கூடாதாப்பா? உன் மேல் அவனுக்கு ஏன் இத்தனை அன்புன்னு நீ கேட்கலாம்.. உன்னைப் போலவே அப்பா இல்லாமல் வளர்ந்தப் பிள்ளை... உன் மேல் கொண்ட அன்பினால் தானே நீ படித்த காலேஜுக்கே தானும் அப்ளிகேஷன் போட்டு வந்து சேர்ந்தான்? அன்பு ஒன்று தாம்பா மனதை பிணைக்கும் சக்தி கொண்டது... அந்த அன்பு எந்த ரூபத்தில் வருது என்பது விஷயம் இல்லப்பா.. தாயாக நானும் உன்னை கட்டிக்க போகும் மனைவியா அஷ்வதியும் நண்பனாக திவாகரும் எல்லோருமே காண்பிப்பது அன்பு தானேப்பா... அன்பில் என்றும் குறை காண முடியாதுப்பா... குறை கண்டுவிட்டாலோ அங்கு அன்பு இருப்பது இல்லையப்பா... உன் உயிர் நண்பனா ஒரு காலத்தில் இருந்தான் தானே? நீ கொடுத்த இடமும் உரிமையும் தானே அவனை இந்த அளவுக்கு போக வெச்சது? முதலில் இருந்தே நீ அவனுடன் நண்பனாக பழகாமல் இருந்திருந்தால் அவன் உன்னிடம் இத்தனை உரிமை எடுத்திருப்பானா சொல்லுப்பா....

உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது விக்ரமனுக்கு....

தம்பி எல்லோரும் நீ நல்லா இருக்கணும்னு வாழ்த்தும்போது தாயாகிய என் மனசு நிறைகிறதுப்பா...

திவாகரும் நீ திருமணம் செய்து நல்லா இருக்கணும்னு வாழ்த்துவான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மனம் நிறைந்து வாய் நிறைய நீயே அவனை உன் திருமணத்துக்கு கூப்பிட்டால் சந்தோஷப்படுவேன் விக்ரமா....அவனை உன் கல்யாணத்துக்குக் கூப்பிட எதுப்பா உன்னை தடுக்கிறது சொல்லு?

இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறினான் விக்ரமன்... நான் திவாகர் மேல் அன்பாகவும் இருக்கும் நல்ல நண்பன் தானே? பின் என்னைத் தடுப்பது எது? சாப்பிட பிடிக்காமல் கையை கழுவிக் கொண்டு போய் படுக்கையில் விழுந்தான் விக்ரமன்.. உறக்கம் வராது புரண்டான்....

அஷ்வதி அவனை கனிவுடன் பார்த்தாள்.... விக்ரமா அம்மா கேட்டதையே நானும் உங்களிடம் கேட்கிறேன் எதுப்பா உங்களை தடுக்கிறது?

திவாகர் உங்களுக்கு நல்ல நண்பர்... உங்க சந்தோஷம் வேண்டும் நண்பர்.. நம்ம கல்யாணம் நடக்கனும்னு அவரும் ஸ்வாமிக் கிட்ட இத்தனை நாள் வேண்டிக்கொண்டவர்... உங்க கல்யாணத்துக்கு நீங்களே உங்க நண்பரைக் கூப்பிட்டால் அம்மாவை போல நானும் சந்தோஷப்படுவேன்...

பதில் சொல்லாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்..

ஹே அலை எப்படி வருது பாருங்க... வாங்க கொஞ்சம் நேரம் அலையில் நிற்கலாம் என்று அவன் மூட் மாற்ற எழுப்பி இழுத்துக்கொண்டு ஓடினாள் சின்ன குழந்தைப் போல...

அவனுக்கு இஷ்டம் இல்லை என்றாலும் அஷ்வதியின் மனத் திருப்திக்காக போய் தண்ணீரில் நின்றான்.

அஷ்வதி விக்ரமனின் காதருகில் வந்து கிசு கிசு வென்று சொன்னாள் , " என்னங்க ஒரு விஷயம் தெரியுமா? "

சொன்னாத் தானே தெரியும் என்று சிரிக்க முயன்று தோற்றான்..

அட சந்தோஷமா இருங்கப்பா நம்ம கல்யாணம் நடக்கப் போகுது... வாழ்க்கையில் முதல் ஜெயிப்புப்பா இது நமக்கு..இன்னும் காலம் முழுக்க இருக்கே... அது மட்டுமில்ல விக்ரமா கோவம் அதிகம் பட்டால் ரெண்டே வருஷத்துல மாரடைப்பு வருமாம்.... அதனால் கோபம் என்னும் நெருப்பை சிரிப்பு எனும் குளிர்ந்த நீரால் அணைச்சுரனுமாம்.. அதான் உங்களை தண்ணீரில் கொண்டு வந்து நிற்க வைத்தேன்... இப்ப கோபம் எல்லாம் போயிருச்சு தானே?? 

ஹே வாலு என்று கையை ஓங்கினான் விளையாட்டாய்....

ம்ம் அப்ப திவாகரை கூப்பிடுவதில் இனி தடை இல்லை தானே? ஹே புருஷா நீங்க கூப்பிடறீங்களா இல்ல நானே போன் செஞ்சு அண்ணா நான் தான் அஷ்வதி பேசறேன் எங்க கல்யாணத்துக்கு வாங்கன்னு கூப்பிட்டு விடுவேன் சொல்லிட்டேன் அவ்ளோ தான் என்று குழந்தையாக அழகாய் சிரித்தாள்....

அஷ்வதி மணி பாரு வீட்டுக்கு போகனும். நிறைய வேலை இருக்கு என்று அவளை விடாப்பிடியாக தண்ணீரில் இருந்து இழுத்துக்கொண்டு வந்தான் வெளியே...

அதே நேரம் திவாகர் வீட்டில்....

திவாகர் அருகே கட்டிலில் அமர்ந்தார் திவாகரின் தாயார். 

என்னப்பா தூங்கிட்டியா என்றபடி கேட்டார் மெல்ல...

இல்லம்மா சொல்லுங்க....

என்ன யோசனைப்பா என்று திவாகரின் கையைப் பற்றி உட்காரவைத்தார்....

ஒன்னும் இல்லம்மா....

மறைக்க நினைக்காதேப்பா... விக்ரமனின் கல்யாணத்துக்கு விக்ரமன் கூப்பிடலையே என்ற வருத்தம் தானே உனக்கு என்று கனிவுடன் கேட்டார்...

இல்லம்மா.. என்று சொல்லும்போதே அழுகையை அடக்க சிரமப்பட்டான் திவாகர்...

திவாகர் நீ உன் நண்பன் விக்ரமன் மேலே வைத்திருக்கும் அன்பு உண்மை தானே?

ஆமாம்மா... உண்மை அன்புன்னா எப்படி இருக்கனும் தெரியுமாப்பா? 

சொல்லுங்கம்மா...

திவாகர் உன் அன்பு விக்ரமனை பலவிதத்தில் தொந்திரவுப்படுத்தி இருக்கு.. ஒத்துக்கிறியாப்பா? 

அழுகையுடன் ஆமாம் என்று தலை அசைத்தான்...

உன் அன்பில் நான் குறை சொல்லலப்பா மகனே.... ஆனால் விக்ரமனிடம் நீ பேசும்போது குழந்தையை போல் ஆகிவிடுகிறாய்....

அவன் எத்தனையோ வேலைகளுக்கிடையில் இல்லை ப்ரச்சனைகளுக்கிடையில் தவித்துக்கொண்டிருக்கும்போதும் நீ கொஞ்சம் இல்ல அவன் பேசலை என்று சாப்பிடாமல் இருந்திருக்கிறாய்...

சின்ன சின்ன ப்ரச்சனைகளை பெரிதாக நினைத்து சாப்பிடாமல் உன்னை வருத்திக்கொண்டால் அது விக்ரமனுக்கு சந்தோஷம் தரும்னு நினைக்கிறியாப்பா?

நீயும் சந்தோஷமா கலகலப்பா இருந்துக்கிட்டு விக்ரமனையும் உன் சந்தோஷத்தால் கலகலப்பாக்கி இருந்தால் நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்பா...

நீ எங்களுக்கு ஒரே பிள்ளை.... விக்ரமன் பேசலை என்றதும் விஷம் குடிச்சியே... அது தப்பில்லையாப்பா?

அழுகையுடன் ஆமாம்மா என்றான்....

அவன் பேசலை என்று சொன்னது உன் மனசுக்கு தாங்க முடியலை அதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன்னு சொல்றியே.. நீ ஒரு வேளை செத்திருந்தால்?? அது விக்ரமனுக்கு நீ கொடுத்த ஆயுள் தண்டனை போல ஆயிருக்காதாப்பா?

மன்னிச்சிருங்கம்மா.. என் தவறை நான் அன்றே உணர்ந்தேன்.. இனி இப்படி செய்யமாட்டேன் என்று சத்தியமும் செய்கிறேன்..விக்ரமன் என்னுடன் பேசினால் போதும்மா...

பேசலைன்னா?? மறுபடி முயல்வாயா என்று கேட்டார் தாயார்...

ஐயோ இல்லம்மா நீங்கள் என்னை கொல்லாதீங்கம்மா.. அவசரப்பட்டு செஞ்சுட்டேன்... மன்னிச்சிருங்கம்மா...

அந்த பிள்ளை என்ன தவறுப்பா செஞ்சான்.. நீ பிழைத்துவிட்டாய்... இல்லன்னா உலகம் அந்த பிள்ளையை தானே குற்றம் சொல்லி இருக்கும் சொல்லுப்பா...

அம்மா அம்மா தேம்பிதேம்பி அழ ஆரம்பித்தான்.. விக்ரமன் என்னுடன் பேசவில்லை எனும்போது அனாதையாக உணர்ந்தேன் அம்மா....

இதோ இந்த நிமிஷம் வரை என் நண்பன் என்னை கூப்பிடமாட்டானான்னு தவம் போல் காத்திருக்கேன்மா.... அம்மா அம்மா என்னுடன் பேசவே மாட்டானா விக்ரமன்? என்று தாயின் மடியில் தலை வைத்து அழுதான்..

முதுகு குலுங்கி சிறுபிள்ளை போல் அழும் பிள்ளையை தேற்ற வழி தெரியாது தாயாரும் அழுதார்...

அம்மா அனாதை போல் இருக்கேன்மா.. விக்ரமனை என்னோட பேசச் சொல்லுங்கம்மா...

அவன் என்னோட நட்பு கொள்ள வேண்டாம்.. அன்பு காட்ட வேண்டாம்... என் மீது கருணை கூட வேண்டாம்.. ஆனால் பேசச் சொல்லுங்கம்மா ப்ளீஸ்ம்மா.... என் உயிர் நண்பனின் கல்யாணம் நானில்லாமலேயே நடக்கும் ஆனால் என் ஆசி என்றும் உண்டும்மா அவனுக்கும் தங்கை அஷ்வதிக்கும் என்று அழுகையுடன் சொன்னான்...

தம்பி எழுந்திரு முகம் கழுவு என்று சொன்னார்....

திவாகர் ஆச்சர்யத்துடன் பார்த்தான் அம்மாவை...

ம்ம் போன் செய் விக்ரமனுக்கு.... என்னடா என் மேல் இன்னும் கோபமா என்று கேள்... மன்னிச்சிருடா என்னுடைய சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்கு என்று மனமார மன்னிப்பு கேள் என்றார்....

அம்மா என் மனதில் இருப்பதை அப்டியே சொல்லிட்டீங்க. ஆனால் என் போன் எடுப்பானா என்று தயக்கமாக இருக்கிறது என்றான்...

அதே நேரம் அங்கே விக்ரமனின் தாயாரும் அஷ்வதியும் அவனிடம் போனை கொடுத்து திவாகரை கல்யாணத்துக்கு அழைக்க கூப்பிடுமாறு சொன்னார்கள்..

விக்ரமனும் திவாகரும் ஒரே நேரத்தில் முயன்றபோது எங்கேஜ்ட் சவுண்ட் போனது இருவருக்கும்.....

இருவருமே தளர்ந்து அமர்ந்தனர்...

சட்டென விக்ரமன் போன் எடுத்து திவாகரின் எண் டையல் செய்தபோது ரிங் டோன் கேட்டது

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது 
இன்று போல் என்றுமே தொடர்கவே.....

ஒன்றும் பேசத்தோன்றாது பாட்டை கேட்டுவிட்டு கட் செய்துவிட்டான்....

திவாகர் வேகமாய் போன் எடுத்தபோது கட்டாகிவிட்டது....

நோக்கியபோது அது விக்ரமனின் நம்பர்

உடனே திவாகர் முயன்றான்...

அடுத்தப்பக்கமும் இதே ரிங்டோன் கேட்டது...

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது 
இன்று போல் என்றுமே தொடர்கவே.....

இம்முறை திவாகர் விக்ரமனுடன் பேசாது போன் வைக்கப்போவதில்லை.....

திவாகரின் தாயாரும் அங்கே விக்ரமனின் தாயாரும் அஷ்வதி எல்லோருமே சந்தோஷத்துடன் நண்பர்கள் இணையும் அந்த அற்புத தருணத்தை காண காத்திருந்தனர்....


உண்மை அன்பும் சரி உண்மை நட்பும் சரி என்றும் தோற்பதே இல்லை...

Saturday, June 25, 2011

கதை 6. சிகரம் தொட.....

கதை 6. சிகரம் தொட.....அழுது வீங்கிய கண்களுடன் கலங்கிய முகத்துடன் ஐ சி யூ யூனிட் வெளியே பவானி காத்திருந்தாள்.... உள்ளே தன் ஒரே மகள் தற்கொலைக்கு முயன்று அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உண்டுவிட நாடித்துடிப்பு குறைந்துக்கொண்டே வருகிறது என்ற டாக்டர் ரேகாவின் சொல் கேட்டு அதிர்ச்சியோடு எல்லா ஸ்வாமிகளையும் கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள் மனமுருகி...

வெளியூருக்கு மீட்டிங் என்று போயிருந்த பரமேஷ் தூக்கம் தொலைத்த கண்களுடன் கசங்கிய உடையுடன் நேராக விமான நிலையத்தில் இருந்து ஆஸ்பிடலுக்கு விரைந்து வந்தான்.

அவனைக் கண்டதும் பவானி ஓடிப்போய் கட்டிக்கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்தாள்....

அவளை சமாதானப்படுத்தும் வழி அறியாது வழியும் கண்ணீரை துடைக்கும் சக்தி இல்லாது " இப்ப நம்ம சம்யுக்தா எப்படி இருக்கா " என்று கேட்டான்...

அபாயக்கட்டத்தை இன்னும் தாண்டலைன்னு சொல்றாங்க டாக்டர் என்று அழுதாள்...

பார்க்கமுடியுமா நம் குழந்தையை?

அனுமதி கிடையாதாம்பா.... தீவிரமா சிகிச்சை நடந்துக்கிட்டு இருக்கு.... உங்க வரவுக்கு தான் எதிர்ப்பார்த்திருந்தேன்...

என்ன நடந்தது? ஏன் இப்படி அவசர முடிவு என்று கேட்டுக்கொண்டே பவானியையும் கைத்தாங்கலாய் அங்கிருக்கும் சேரில் உட்காரவைத்து கேட்டான்.

பாம்பேல ஆடிஷன்ல நம்ம பொண்ணு எப்படியும் செலக்ட் ஆயிருவான்னு நம்பிக்கையோடு இருந்தோம்.. அப்ப திடிர்னு அனௌன்ஸ் பண்ணிட்டாங்க நம்ம பொண்ணு செலக்ட் ஆகலன்னு தெரிஞ்சதும் முகம் இறுகி ஒன்றும் சாப்பிடாம என்னோட ஒரு வார்த்தை கூட பேசாம அமைதியா வந்தா ப்ளைட்ல....வீட்டுக்கு வந்ததும் அவ ரூமில் போய் கதவை சாத்திக்கிட்டா.... நானும் சரி இன்னும் கொஞ்ச நாளில் சரியாயிரும்னு சாதாரணமா எடுத்துக்கிட்டேன்.....அது தான் தப்பாகிவிட்டது....

நீங்க தூக்கம் வரலன்னு டாக்டர் கிட்ட வாங்கி வெச்சிருந்த ஸ்லீப்பிங் பில்ஸ் மொத்தமும் போட்டுக்கிட்டு படுத்துட்டா... எப்ப மாத்திரை சாப்பிட்டான்னு தெரியலப்பா... காலை சரசு போய் கதவுத் தட்டி இருக்கா திறக்கலை... என்னிடம் வந்து சொன்னப்ப நானும் போய் கதவு தட்டினேன்... திறக்கலை.. அப்புறம் அக்கம் பக்கம் ப்ளாட் ஆட்களிடம் சொல்லி போலிசுக்கு சொல்லி அவங்க வந்து கதவு உடைத்துப் பார்த்தால் என்று நிறுத்தி மூச்சு விட முடியாது திணறினாள். மகளை அந்த கோலத்தில் எந்த தாய்க்கு தான் பார்த்து தாங்க முடியும்? அவன் அவளை தண்ணீர் குடிக்கவைத்து தேற்றினான்.

பவானி முகத்தை அழுத்தத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தாள்.. அப்புறம் ஆஸ்பிடலில் வேகமாக கொண்டு வந்து சேர்த்துட்டு உங்களுக்கு தகவல் சொன்னேன் என்றாள்...

நம்ம மகளுக்கு நல்லவை சொல்லி தானே வளர்த்தோம்... இது சின்னத் தோல்வி அவ்வளவே... இதுக்கு சாகும் அளவுக்கு போகவேண்டிய அவசியம் இல்லையே.. ஒரே மகள் என்று அவளுக்கு சுதந்திரம் கொடுத்தோம். நம் மகள் அதை மிஸ் யூஸ் செய்யாம படிப்பு பாட்டு நடனம் என்று எல்லாவற்றிலும் முதலில் வந்து நம்மை பெருமைப் படுத்தினாள் என்று சந்தோஷப்பட்டோமே என்று மனம் கலங்கி சொன்னான் பரமேஷ்....

அப்போது ஒரு நர்ஸ் வந்து " உங்களை டாக்டர் வரச்சொன்னாங்க" உங்க மகள் அபாயக்கட்டத்தை தாண்டியாச்சு என்று சொல்லி இருவர் முகத்திலும் தெளிவு வரவைத்துவிட்டு போனாள்...

இருவரும் டாக்டரின் ரூமுக்கு ஓடினர்...

உட்காருங்க என்று கனிவுடன் சொன்னாள் ரேகா....

டாக்டர் எங்க பொண்ணுக்கு என்று முடிக்குமுன்னே இடைமறித்த ரேகா புன்சிரிப்புடன் " உங்க மகள் இப்ப சௌக்கியமா இருக்கா... அவள் உயிரை காப்பாற்றிட்டோம்... ஆனால் அவ இப்படி செய்ததுக்கு காரணத்தை சொன்னால் அவள் மனதையும் சரி செய்து உங்களுடன் அனுப்புவோம். அதற்கு சில நாட்கள் கூட ஆகலாம் என்றாள் டாக்டர் ரேகா...

ஆடிஷனில் தோற்றவிவரம் சொன்னாள் பவானி.... எப்பவும் எல்லாவற்றிலும் முதலில் வரும் என் மகள் இந்த தோல்வியை தாங்கிக்க முடியாது இப்படி செஞ்சுட்டாள் என்று தலைகுனிந்து கண்ணீர் விட்டாள் பவானி...

டாக்டர் ரேகா அவர்கள் இருவரையும் தேற்றினாள்... இப்ப உங்க மகள் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்காள்... அவளை தொந்திரவு செய்யாது போய் பாருங்க. பார்த்துட்டு நீங்க வீட்டுக்கு போங்க... இன்னும் நாலே நாட்களில் உங்க மகள் புதிய ஜென்மம் எடுத்தது போல நம்பிக்கை மனதில் ஏற்றி வாழ்க்கையில் கிடைக்காத எதுக்கும் தற்கொலை தீர்வாகாதுன்னு சொல்லி புரியவைத்து அனுப்பி வைக்கிறேன். நம்புங்க என்று சொன்னதும் இருவரும் கையெடுத்துக் கும்பிட்டனர் ரேகாவை நோக்கி....

இருவரும் போய் சம்யுக்தா பார்த்தபோது பூ ஒன்று கசங்கி படுக்கையில் கிடந்தது போல் துவண்டு கிடந்தாள் சம்யுக்தா... பரமேஷ் சம்யுக்தாவின் அருகே போய் நெற்றியில் விழுந்து கிடந்த முடியை ஒதுக்கி முத்தமிட்டு சொன்னான் ஐ லவ் யூ மை ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல் இந்த அப்பாவும் அம்மாவும் வாழ்வதே என் தங்கம் உனக்காக தான் செல்லமே என்று சொல்லி இருவரும் மௌனமாக அழுதுப் பின் இறைவனுக்கு நன்றி கூறி வீடு திரும்பினர்.

மயக்கத்தில் இருந்து விழித்த சம்யுக்தா எங்கே இருக்கிறோம் என்று பார்த்தாள்.. மாத்திரை சாப்பிட்டோமே... செத்து எங்க வந்திருக்கோம்? வெள்ளை உடை தேவதைகள் காணவில்லையே என்று குழந்தைத்தனமாக எண்ணியபோது டாக்டர் ரேகா சிரித்த முகத்துடன் உள் நுழைந்தாள்... 

ஹை மை டியர் இப்ப எப்படி இருக்கு? அட என்ன விழிக்கிறே? நீ இன்னும் சாகலை... அதுக்குள்ள உங்கம்மா காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. உங்கம்மாவும் அப்பாவும் அழுத அழுகை கண்டு யாருக்குமே கண்கலங்கிவிடும்.. ஏனம்மா இப்படி என்று தலை கோதிக்கொண்டே கேட்டாள் டாக்டர்...

சாரி டாக்டர் சின்ன வயதில் இருந்து எப்பவும் எதிலும் முதலில் வந்தே பழக்கப்பட்ட எனக்கு இந்த தோல்வி ஜீரணிக்கமுடியலை என்று தலை திருப்பிக்கொண்டாள்....

சம்யுக்தா எழுந்து உட்கார மெத்தை சரி செய்து முதுகுக்கு சாய்வாக ரெண்டு தலைகாணி வைத்து உட்காரவைத்தாள் டாக்டர் ரேகா...

இப்ப எப்படி ஃபீல் செய்றே சொல்லு என்றாள் அவள் மனதிலுள்ளதை படிக்க முயன்று.....

தோற்றது தோற்றது தானே இனி என்னால் எப்படி என் காலேஜ் நண்பர்களின் முகத்தில் விழிக்க முடியும் என்று அழத்தொடங்கினாள்....

தோல்வி இறுதிப்படி இல்லை பெண்ணே.... தோல்வி தான் நீ வெற்றியை அடைய ஏறும் முதல் படி என்று சொன்னாள்...

புரியாமல் விழித்தாள் சம்யுக்தா....

ரஷ்பல் என்று வெளியே பார்த்து கூப்பிட்டதும் கோதுமை நிறத்துடன் அழகான களையான முகத்துடன் முகம் நிறைத்த சிரிப்புடன் பஞ்சாபி சூட் அணிந்த ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.. நுழைந்து கட்டிலை பிடித்துக்கொண்டு சம்யுக்தா அருகே போய் உட்கார்ந்தாள்...

ரேகா சம்யுக்தாவிடம் , " இவள் என் தோழியின் மகள் ரஷ்பல் பஞ்சாபில் இருக்காள்... இவளை எங்காவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா " என்று கேட்டாள்..

ஆச்சர்யத்துடன் சம்யுக்தா சொன்னாள், " இந்த பெண்ணும் இந்த ஆடிஷனில் வந்து தோற்றுப்போனவள்".

ஆனால் உன்னைப்போல் முட்டாள்தனமாக சாக முயற்சிக்கவில்லை.... நீ எல்லாவற்றிலும் முதலில் வருவே என்று சொல்கிறாயே... ரஷ்பலிடம் ஏதாவது வித்யாசம் காணமுடிகிறதா உன்னால் என்றாள் டாக்டர் ரேகா...

இல்லையே என சம்யுக்தா எனச் சொன்னாள்....

ரஷ்பல் பார்வையை இழந்து 4 வருடங்கள் ஆகிறது என்று சொன்னதும் அதிர்ச்சியுடன் சம்யுக்தா எழுந்து நன்றாக உட்கார்ந்தாள்...

என்ன சொல்ரீங்க டாக்டர் என்று கேட்டதும் ரஷ்பலுக்கு அவர்கள் பேசும் பாஷை புரியவில்லை என்றாலும் தன்னைப் பற்றி தான் பேசுகிறார் என்று அறிந்தாள்.

ஆமாம் சம்யுக்தா ரஷ்பலுக்கு 4 வருடம் முன்பு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடந்தப்பின் ஒரு நாள் மயங்கி விழுந்தாள் வீட்டில்...

என்னிடம் தான் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ப்ரெயின் ட்யூமர் என்று தெரிந்து சிகிச்சையை நம்பிக்கையுடன் தொடங்கினேன். கொடுத்த சிகிச்சை ப்ரெயின் ட்யூமர் சரியாக்கி இவள் பார்வையை பறித்தது. ஆனாலும் நம்பிக்கை இழக்காது இவள் கதக் ஒடிசி நடனத்தில் முழு ஈடுபாட்டுடன் பயிற்சியை தொடர்ந்தாள்.. சீக்கியர்களுக்கே உரிய வீரச்சண்டை வாள் சண்டையும் பார்வை போனப்பிறகே கற்றுத் தேர்ந்தாள். கல்யாணம் நடக்க மாப்பிள்ளை வீட்டினர் தடை சொல்லவில்லை. சந்தோஷமாக நிச்சயம் செய்த ரஷ்பலையே திருமணமும் செய்துக்கொண்டார் ரஷ்பலுக்கு நிச்சயித்த வீட்டினர். அதன்பின் திரும்ப ப்ரெயின் ட்யூமர் வரத்தொடங்கியது. சிகிச்சைக்குக் கட்டுப்படாத ப்ரெயின் ட்யூமருக்கு ஏற்கனவே தன் பார்வையை பறிகொடுத்த ரஷ்பல் நம்பிக்கையை மட்டும் விட்டுகொடுக்கவில்லை. முழு முயற்சியுடன் சிகிச்சைக்கு தன்னை உட்படுத்தினாள், இப்ப இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆடிஷனில் தனக்கு கண் தெரியாது என்று சொல்லி பரிதாபம் சம்பாதிக்க விரும்பாத ரஷ்பல் எல்லோரையும் போலவே போய் ஆடித் தோற்றாள்.. 

தோற்றதினால் வருத்தம் இல்லை அவளுக்கு... வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியுமே போராடி போராடித்தான் வாழ வரம் வாங்கினாள் இறைவனிடத்து..... இந்த வருடம் தோற்றால் என்ன அடுத்த வருடம் ஜெயிக்க ஒரு சந்தர்ப்பம் இருக்கே என்று தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும்போதும் நம்பிக்கையை இழக்காது இன்னும் பயிற்சியை கடினமாக்கிக்கொண்டு இருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதும்

சம்யுக்தா கண்ணில் நீருடன் ரஷ்பலின் கைகளை பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

இது எல்லாமே பரமேஷும் பவானியும் வெளியிலிருந்து வரும்போதே கேட்டனர். மனதில் அதே உற்சாகத்துடன் தன் மகள் இனி வாழ்க்கையை தொடர்வாள் என்ற நம்பிக்கையுடன் கையெடுத்து கும்பிட்டனர் இருவரும்...

ரஷ்பல் சம்யுக்தா இருவரும் நடனத்தை ஒன்றாய் பயிற்சி தொடங்கினர்.... பரமேஷ், ரேகா, பவானி மூவரும் முழு உற்சாகத்துடன் இருவருக்கும் ஒத்துழைத்தனர். 

ஒருபக்கம் சிகிச்சை, ஒரு பக்கம் பயிற்சி என்று ரஷ்பல்லின் தேகம் ஆரோக்கியம் குறையும்போதெல்லாம் மருந்து உணவு ப்ரார்த்தனை இவற்றின் உதவியால் ரஷ்பல்லின் ஆயுள் நீடிக்க வேண்டினர் இறையிடத்து சொந்தமும் சம்யுக்தாவின் பெற்றோரும்...

சோர்ந்து போகும் சம்யுக்தாவுக்கு மருந்தாக இருந்தது ரஷ்பல்லின் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள்....

இதெல்லாம் நடந்தது 2008 இல்....

இப்போது திரும்ப ஆடிஷனுக்கு போகிறார்கள் இருவரும்... தனித் தனியாக தங்கள் நடனத்திறமையை நிரூபித்து தேர்வாயினர் இருவரும்...

ஜீ டிவியில் டான்ஸ் இண்டியா டான்ஸ் போட்டியில் இருவரும் பங்குப் பெற்றனர்....

இருவரும் சேர்ந்து நடனமாடினர்... ரஷ்பல்லுக்கு இயற்கையிலேயெ கண் தெரியாது. சம்யுக்தா தன் கண்ணை ஜட்ஜ் ஒருவரிடம் சொல்லி கட்டச் சொன்னாள்.

இருவரும் சுழன்று சுழன்று ஆடினர்... ஜட்ஜ் மூவரும் ஆடியன்ஸ் அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்தனர்... எங்கும் ஒரு இடத்திலும் கூட சிறு தவறு கூட செய்யாது இருவரும் ஆடி அந்தரத்தில் கயிற்றில் தொங்கி சாகசங்கள் செய்து கதக் ஒடிசி எல்லாம் ஆடி முடித்து சல்சா என்றா மேற்கத்திய நடனமும் ஆடி அசத்தினர்..ஆடி முடித்ததும் கரகோஷம் வானைப் பிளக்கும் சத்தம் கேட்டது..

ஜட்ஜ் மூவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்..

அதன்பின் சம்யுக்தா கட்டியிருந்த கண்ணை கழட்டச் சொல்லி எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் ஜட்ஜ்களின் அனுமதியோடு என்று ஆரம்பித்தாள்...

எல்லோரும் அமைதியுடன் அமர்ந்து சம்யுக்தாவின் வார்த்தைகளைக் கேட்க ஆவலாயினர்.

இதோ இங்கு நிற்கும் ரஷ்பல்லுக்கு கண் தெரியாது என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

தன் தற்கொலைக்காரணத்தையும் தான் மீண்டு வந்ததும் இன்று நம்பிக்கையுடன் நடனத்தில் ஜெயித்ததற்கும் வாழ ஒரு அர்த்தம் கற்பித்தது இந்த ரஷ்பல்லே காரணம் என்று சொன்னதும் ஜட்ஜ் முதற்கொண்டு எல்லோரும் எழுந்து நின்று ஸ்டாண்டிங் ஓவியேஷன் செய்தனர். 

இருவருக்கும் முழு மார்க்குகள் ஜட்ஜ் மூவரும் கொடுத்தனர்... 

நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ரஷ்பல்லுக்காக இனி இந்தியா முழுக்க ப்ரார்த்திக்கும்.... சம்யுக்தா தன் கண்களை தானம் செய்யப்போவதாக அந்த ஸ்டேஜிலேயே அறிவித்தாள்...

இறைவன் நமக்கு பிறவி கொடுத்தது நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து நம்பிக்கையுடன் வெற்றிகளை சாதித்து எல்லோருக்கும் நல்லதை இறுதி வரை செய்ய மட்டுமே.....


"சாதிக்க தடைகள் ஒரு காரணம் இல்லை..... தடைகளைத் தாண்டி சாதிக்கத் தொடங்கினால் சிகரம் கூட நம் கைவசமே"

Tuesday, June 21, 2011

கதை 5. உன்னால் முடியும் தம்பி....


கதை .  5   உன்னால் முடியும் தம்பி....

என்னம்மா இன்னைக்கும் அதே இட்லி தானா என்று முகம் சுளித்தான் ராம்....

ஏன் டா இட்லி உடம்புக்கு நல்ல உணவு தானே?? அது மேல் ஏன் இத்தனை வெறுப்பு உனக்கு??

போங்கம்மா போரடிக்குது இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு..முறுகலா தோசை சுட்டு மிளகா சட்னி செஞ்சு கொடுத்தீங்கன்னா இந்தா இந்தான்னு ஒரு பத்து வெட்டி இருப்பேன்லா.... 

கண்ணா இப்ப உன்னுடைய உடம்பு வெயிட் எவ்ளவுப்பா??

ஏம்மா கேட்கிறீங்க? 

சும்மா சொல்லேன் அம்மாக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு...

100 கிலோவை நெருங்கிக்கொண்டு இருக்கேன்மா.... :(

இப்படி உடம்பு கனம் கூடிக்கொண்டே வந்தால் உனக்கு அது அன் ஈசியா இருப்பதில்லையா ராம் என்று மகனின் தலையில் எண்ணை வைத்தப்படியே கேட்டார்...

ஐயோ அம்மா என் தலையில் ஏன் எண்ணை வெச்சீங்க.. ஐயோ இன்னைக்கு மீட்டிங் இருக்கும்மா என்று அலறினான்...

கண்ணா தலையில் முடி இருந்தால் தான் அழகு... அழகை கூட்ட நீ எண்ணை வைப்பதை நிறுத்தினால் முடி கொட்டிவிடுமே.. முடி கொட்டிவிட்டால் அப்புறம் மீட்டிங் போக அழகு கூட்ட முடிக்கு எங்கே போவியாம் என்று மூக்கை திருகினாள் தர்ஷிணி.....

டிவியில் ரித்திக் ரோஷனின் படம் க்ருஷ் ஓடிக்கொண்டிருந்தது...

அதைப்பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டான் ராம்....

" அம்மா எனக்கு ரித்திக் ரொம்ம்ப பிடிக்கும்மா.. எனக்கும் ரித்திக் போலவே உடம்பு ஆகனும் என்ன செய்யலாம்மா?? "

கண்ணா ஒருத்தரை பிடிக்கும் என்றால் அவரை போலவே நம் உடைநடை பாவங்களை கூட மாற்றிக்கொள்ள முயற்சிப்போம் இல்லையா??

ஆமாம் என்றபடியே தலையில் இருந்த எண்ணையை துடைக்க முயன்றான் வேகவேகமாய்.

எனக்கு ரேவதின்னா ரொம்ப பிடிக்கும்... நான் காலேஜ் படிக்கும்போது ரேவதி போலவே என்னை காட்டிக்கொள்ள ரொம்ப விரும்புவேன்... என்னை பார்ப்பவரும் ரேவதி போலவே இருக்கேன்னு சொல்லும்போது ஒரே சந்தோஷமா இருக்கும்....

இப்ப எதுக்கும்மா இதெல்லாம் சொல்றீங்க? எனக்கு ரித்திக் மாதிரி உடம்பு வேணும் எனக்கு ஃபேட் பர்ன் டாப்லெட்ஸ் வாங்கி தாங்க என்றான் ராம்...

நான் வாங்கி தருவதில் ப்ரச்சனை இல்லப்பா.... ஆனால் அதற்கு முன் கூகுள் சர்ச் ல போய் இந்த உடம்பு குறைக்கும் டாப்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தேடி படிச்சுப் பாரு புரியும்...

ஐயோ அப்ப எப்படி தான் உடம்பை குறைப்பதாம் என்று அலுத்துக்கொண்டே கேட்டான்..

இப்ப கேட்டியே அது கேள்வி... எந்த ஒரு செயலும் முழு முயற்சியுடன் உடல் உழைத்து ஈடுபாட்டுடன் நேர்மையாக செயல்பட்டால் கண்டிப்பாக அதனுடைய ரிசல்ட் பாசிட்டிவா இருக்கும்...

அப்டின்னா என்று தலை சொறிந்தான் ராம்...

ரித்திக் எப்படி இது போன்ற உடலமைப்பு பெற்றான்னு தெரியுமா ராம் உனக்கு??

அவங்கப்பா ராகேஷ் ரோஷன் சினிமா ஃபீல்டில் பெரிய ஆள். தன் பிள்ளைகள் நல்லா படிச்சு முன்னுக்கு வரனும்னு நினைச்சார். அதனால் சினிமா வாசமே பிள்ளைகளுக்கு படக்கூடாதுன்னு தவிர்த்தார்...ஆனால் ரித்திக் அப்பாவுக்கு தெரியாமலேயே தன் திறமைகளை நடனத்திறமையை உடலை எந்த ஒரு ஜிம்மின் உதவி இல்லாமல் வீட்டிலேயே கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை சீராக்கி திறமைகளையும் கற்று அப்பாவிடம் அதற்கு பின் வந்து நின்று கேட்டான் அப்பா நீங்க ஒரு படம் எடுங்க அதில் என்னை ஹீரோவா போடுங்க. அந்த படம் ஹிட்டானால் தொடர்ந்து நடிக்க அனுமதி கொடுங்க. இல்லன்னா உங்க விருப்பப்படி நான் செய்கிறேன் என்றான். அவனை நம்பி அவங்கப்பாவும் கஹோ நா ப்யார் ஹை படம் எடுத்தார் சூப்பர் ஹிட்டாச்சு.. இதிலிருந்து என்ன தெரியுது உனக்கு ராம் என்று அவன் தலை கலைத்தபடி கேட்டாள் தர்ஷிணி.....

ம்ம்ம்ம் கடுமையான உழைப்பிருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை அடையமுடியும்னு தெரியுது என்றான் ராம்....

கடுமையான உழைப்பு மட்டுமில்ல ராம்... நம்பிக்கை விடா முயற்சி நேர்மை ஈடுபாடு.. இதனுடன் முழு முயற்சியுடன் உழைத்தால் உன் உடம்பும் குறைந்து நல்ல வலுவுடன் நீ ஆசைப்பட்டபடி ரித்திக் போலவே உடலமைப்பு பெறலாம்...

என்னால பசி பொறுக்க முடியாதும்மா என்று அலறினான்... சாப்பிடாம இருக்க என்னால முடியாது....

உன்னை பட்டினி இருக்க சொல்லலை கண்ணா.... சாப்பிடு ஆனால் சமைத்த உணவை கொஞ்சம் நாட்கள் நிறுத்திவிட்டு பச்சை காய்கற்களும் பழங்களும் மட்டும் சாப்பிடு.. நிறைய சுடு நீர் குடிச்சிட்டு அதிகாலை தூக்கம் கொஞ்சம் தியாகம் செஞ்சுட்டு ஓடு.. ஓடி ஓடி உடம்பை ஃப்ளெக்சிபிள் ஆக்கு.. பின் உடற்பயிற்சி தொடங்கு... உன்னால் முடியும் கண்டிப்பா.. நத்திங் இஸ் இம்பாசிபிள் கண்ணா....

அதுமட்டுமில்லை கண்ணா.... நீ இந்த காலத்துப் பெண்களின் மனநிலை அறிவாயா? மாப்பிள்ளை 
குண்டுன்னு வேண்டாம் அப்டி சொன்னால் உன் மனம் வேதனைப்படும்.... ஆனால் பெண்கள் ஸ்மார்ட் 
ஹாண்ட்சமா பார்க்க லட்சணமா நல்ல குணமுள்ளவனா இருக்கனும்னு தான் ஆசைப்படுறாங்க. 

இதைக்கேட்டதும் மிரண்டுப்போய் பார்த்தான் ராம்.....

அம்மா நாளை முதல் தொடங்குகிறேன் என்றான்...

இன்று முதல் அதுவும் இப்பவே எனத் தொடங்கும் செயல் தான் வெற்றி பெறும்.. நாளை என்று ஒத்திப்போடுபவன் சோம்பேறி என்றாள் குறுஞ்சிரிப்புடன் தர்ஷிணி....

இப்பவே ஓடுகிறேன் அம்மா.. 

இரு கண்ணா குடிக்க ஒரு சொம்பு முழுக்க வெது வெது தண்ணீர் தருகிறேன்.. குடிச்சிட்டு ஓடு....

தானும் அழகாய் உடல் குறைந்து அழகாய் எல்லோரும் பார்க்கும்படி உடலமைப்பு பெறும் வைராக்கியத்துடன் ஓடத் தொடங்கினான் ராம்

Monday, June 20, 2011

கதை 4. ஓடி விளையாடு பாப்பா....

4.ஓடி விளையாடு பாப்பா.....

என்னடா இது முகத்தில் காயம்?? பதட்டத்துடன் ஆர்யாவின் கன்னம் தடவிக்கேட்டாள் தாய் ப்ரதீபா...

ஒன்னும் இல்லம்மா விழுந்துட்டேன் கீழே என்று காயம் மறைக்கப் பார்த்தான் ஆர்யா...

பொய் சொல்லாதே பிச்சுருவேன் சொல்லு யார் தள்ளிவிட்டா இல்லன்னா யார் அடிச்சா??

அது உமர் தாம்மா கன்னத்துல குத்திட்டான்.. லேசா தாம்மா...

அவன் கிட்ட பேசாதே பேசாதேன்னு பலமுறை சொல்கிறேன்.. கேட்பதில்லை நீ என்று கத்தினாள்....

அவன் உன்னை விட வயசுல சின்னவன்... நீ தான் அவன் பின்னாடியே ஓடுறே... உமர் உமர்
என்று.. அவன் உன்னை சட்டையே செய்வதில்லை...

ஆர்யா ஒன்றும் பதில் பேசாது போய் சேரில் உட்கார்ந்து அவன் புத்தகம் திறந்து படிப்பது போல் தலை குனிந்தான்..

ஏழு வயசு பையனுக்கு எத்தனை பிடிவாதம் என்று கோபமாக பார்த்தாள் ப்ரதிபா....

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக கண்டும் காணாது இருந்த ராகேஷ் பேப்பர் படிப்பது போல தலையை பேப்பர்க்குள்ளே நுழைத்துக்கொண்டான் ஆர்யாவின் தந்தை....

பரிதாபமாய் அம்மாவின் திட்டில் இருந்து தப்பிக்க அப்பாவின் துணையை நாடினான்....

என்னங்க உங்களைத் தானே.. எத்தனை முறை சொல்கிறேன் இவன் பாருங்க சொல்பேச்சு கேட்பதில்லை.. இந்த வயசுலயே எத்தனை பிடிவாதம்... அந்த பையன் உமர் இவனை மதிப்பது கூட இல்லை இவனை விட வயசுல சின்னப்பையன்.. ஆனால் இவன் தான் அவன் பின்னாடியே ஓடுகிறான்... பலமுறை சொல்லிட்டேன் அந்த பாகீஸ்தானி பையன் கிட்ட பேச்சு வெச்சுக்காதேன்னு கேட்பதில்லை.. இனி பேசட்டும் அப்ப இருக்கு இவனுக்கு கதை என்று உறுமினாள்...

உடனே ராகேஷ் எழுந்து வேகமாய் வந்து பளாரென்று அறைந்தான் ப்ரதீபாவை...

அதிர்ச்சியுடன் ப்ரதீபா ஆர்யா இருவரும் ராகேஷை பார்த்தார்கள்....

கன்னம் வீங்கினதை அதிர்ச்சியுடனும் பயத்துடனும் பார்த்த ஆர்யா ப்ரதீபாவின் பின் ஒளிந்தான்.....

ராகேஷ் ச்சே அவசரப்பட்டுட்டோமே என்று போய் சோபாவில் உட்கார்ந்தான்....

ப்ரதீபா இத்தனை நேரம் நீ பிள்ளையை திட்டினதே எனக்கு பிடிக்கலை.. ஆனாலும் நான் அமைதியாக இருந்தேன். ஏன் தெரியுமா? நீ பிள்ளையை கண்டிக்கும்போது நான் உள்ளே நுழைந்தால் அவனுக்கு பயம் விட்டுருமேன்னு..

நம் வீட்டுப் பிள்ளை ஏன் அந்த பாகீஸ்தானி பையனுடன் பழகக்கூடாது காரணம் சொல்ல முடியுமா உன்னால்??? 

ஏண்டி அறிவுகெட்டவளே.... நம்மை விட உழைப்பிலும் அறிவிலும் மானத்திலும் எதிலும் குறைந்தவர் இல்லடி உமரின் பெற்றோர்... நீ இத்தனை பேசுறியே உமர் பெற்றோருக்கு
இருக்கும் மனிதாபிமானம் உனக்கு இருக்கா?? சொல்லு இருக்கான்னு கேட்கிறேன்....

நம்ம பிள்ளை மாடியில் இருந்து உருண்டு விழுந்து ரத்தம் கிடைக்காமல் ஹாஸ்பிடலில் தவித்தபோது ஓடி வந்து உதவினது இதோ இப்ப நீ பேசக்கூடாதுன்னு விரட்டும் உமரின் அம்மாவும் அப்பாவும் தான் அப்ப நம்ம பிள்ளைக்கு ரத்தம் கொடுத்து உதவினர்.... 

அப்ப உனக்கு உமரின் அம்மாவும் அப்பாவும் பாகீஸ்தானின்னு தெரியலையா?? நீ இத்தனை சுயநலக்காரியா இருப்பேன்னு நான் நினைக்கலை....

இல்லங்க நான் சொல்ல வந்தது என்னன்னா எப்பவும் அடிச்சிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டே இருக்கான் அந்த உமர் பையன். இதை பார்த்து நம்ம பையனும் கெட்டு போக கூடாதுன்னு தான் என்று சொல்லுமுன் கோபமாய் போய் அவளை இழுத்துக்கொண்டு வந்து பால்கனி வாசலில் எட்டி பார்க்க சொன்னான்..

அங்கே எல்லா நாட்டு பிள்ளைகளும் பங்களாதேஷ், இந்தியர், இலங்கை, பாகீஸ்தான், பிலிப்பைன் எல்லோரும் ஒன்றாய் சந்தோஷமாய் விளையாடிக்கொண்டு இருப்பதை காண்பித்தான்.

பார்த்தியா ப்ரதீபா..... பிள்ளைகளுக்குள் என்றும் வேற்றுமை என்பதே இருப்பதில்லை.....பிள்ளைகளை
வேற்றுமை இல்லாது வளர்க்க பெற்றோர் தான் சொல்லித்தரனும். தீவிரவாதம் சொல்லி வளர்க்கும் பாகீஸ்தானி மக்களுக்கும் நமக்கும் என்னடி வித்யாசம்?? நாம் மனிதாபிமானம்னா என்னன்னு சொல்லி வளர்க்கனும் பிள்ளைகளை.. வேற்றுமை பாராட்டாது இருக்கனும்னு சொல்லி வளர்க்கனும்.. இவன் ஹிந்து இவன் முஸ்லிம் இவன் க்ரிஸ்துன்னு பிரிச்சு பழக சொல்லித் தராம அவர்களிடம் இருக்கும் நல்லவைகளை கற்க சொல்லிக் கொடுக்கனும்...

நம்மிடம் இருக்கும் அன்பை அவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு இந்தியர்கள் எப்படி அவர்களின் அன்பு எப்படின்னு புரியும்படி நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரனும்.. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவன் பாகீஸ்தானி இவன் பங்களாதேஷ் என்று பேதம் பார்த்து வளர்வது???

இனி வரும் சந்ததியாவது தீவிரவாதம் தொலைத்து அன்பை மலரச்செய்யட்டும்....

வீட்டிலயே அடைத்து வைத்து பிள்ளைகளை கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட வைத்து மூளையை மழுங்கடித்து கார்ட்டூன் பார்க்கவைத்து மூளையை உபயோகிக்க செய்யாது இன்னும் எத்தனை காலத்துக்குடி??

பிள்ளைகளை திடம்மா மனத்திண்ணமா தைரியமா வெளியே எல்லோருடன் பழக விடனும்.... நல்லா எல்லோருடனும் சேர்ந்து விளையாட விட்டு அவர்களுடனும் நம்ம பிள்ளைகளும் தன்னிடம் இருக்கும் நல்லதை கற்க சந்தர்ப்பம் கொடுத்து தானும் மற்ற பிள்ளைகளிடமிருந்து நல்லவைகளை கற்கனும்...

அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது....

ராகேஷ் போய் திறந்தபோது வெளியே உமர் நின்றுக்கொண்டிருந்தான் அகண்ட கண்களில் மகிழ்ச்சியும் புன்னகையுடன்...

அங்கிள் ஆர்யாவை என்னுடன் விளையாட விட முடியுமா?? என்று ஹிந்தியில் கேட்டபோது

ப்ரதீபா சிரிப்புடன் ஆர்யாவை கூப்பிட்டு முகம் துடைத்துவிட்டு குடிக்க தண்ணீர்கொடுத்து உமரிடம் சிரித்து உள்ளே வந்து உட்காரச்சொல்லி அவனுக்கும் சாப்பிட பிஸ்கெட் கொடுத்து சண்டை போடாம விளையாடுங்க சரியா என்று ஆங்கிலத்தில் சொல்லி அனுப்பினாள்..

அப்போது உமர், " சாரி ஆண்ட்டி நான் ஆர்யாவின் கன்னத்தில் குத்திட்டேன்.... சாரி ஆர்யா இனி அப்படி செய்யமாட்டேன் " என்று பணிவுடன் சொன்னான்...

ப்ரதீபா தன் அடி வாங்கிய கன்னத்தை தடவிக்கொண்டு பரவாயில்லப்பா என்று சொல்லி ஆர்யாவை அனுப்பினாள்...

ஆர்யா சந்தோஷத்தோடு உமருடன் ஓடினான் க்ரிக்கெட் பேட் எடுத்துக்கொண்டு.....

ராகேஷ் கதவை சாத்திவிட்டு ப்ரதீபாவின் கன்னம் தடவிக்கொடுத்து கோபமா டியர் என்று கேட்டான்...

இல்லங்க... அடி தான் கொஞ்சம் வேகம்.. வலிக்குது என்று கன்னம் தடவினாள்....

நம் பிள்ளையை நீங்கள் சொன்னது போலவே தான் இனி வளர்ப்பேன் என்று அவன் கையை பிடித்தாள்...

ராகேஷ் ப்ரதீபாவின் கன்னம் தடவிக்கொடுத்து வெரி சாரி அடி பலமா என்று கேட்டான்....

இல்லப்பா என்றாள்.. இனி இப்படி நடந்துக்கமாட்டேன்பா... என்று தலைகுனிந்தாள் ப்ரதீபா..

நல்லதொரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் மகிழ்வுடன் பெற்றோர் மகிழ்வுடன் பால்கனியில் நின்று எட்டிப்பார்த்தனர்...
Related Posts Plugin for WordPress, Blogger...