"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 17, 2012

காதலாய்.....
சுவாசிக்கும் மூச்சாய்…
தெறிக்கும் கோபமாய்….
சிந்திய புன்னகையாய்…
உறக்கத்தில் கனவாய்
துளிர்க்கும் அன்பாய்…
கண்ணீர் துளியாய்….
என்னில் நீயாய்…
உன்னில் நானாய்….
காதலாய்….

பக்தமீரா தொடர்ச்சி (8)22.
கண்ணனாய் பிறந்தாய் தேவகி துயர் தீர்த்தாய்
கீதையாய் மலர்ந்தாய் பாண்டவர் குறை தீர்த்தாய்
உனைச்சேராது வாழ்க்கை வீணென்றான போதும்
துறவியாய் வாழ வழிகாட்டுவாய் கண்ணா...

23. 
மலரும் மலர்களின் உள்ளிலும் உயிராய் நீ
கனவின் கற்பனையில் காதல்இணையாய் நீ
மதிமறந்த வேளையிலும் என்மனதில் நீ
என்னுள் உயர்ந்த உத்தமனே கண்ணா

24.
குழலூதி குறைகளை முற்றிலும் தீர்த்தாய்
மழலையாய் என்மனதில் நிறைந்து நின்றாய்
கேட்காது வரங்களை அள்ளிக் கொடுப்பவனே
கேட்கிறேன் உனையே தருவாய் என்றோ கண்ணா

Thursday, November 1, 2012

பகவத்கீதா...” விஷ்ரூத்... விஷ்ரூத் கண்ணா எங்கேப்பா இருக்கே? ” அழைத்துக்கொண்டே தோட்டப்பக்கம் வந்தார் சௌடாம்பிகை.

” அம்மா நான் இங்க தான் இருக்கேன் இந்த ரோஜாச்செடி அழகா துளிர் விட்டதே இப்ப 3 மொட்டுக்கள் விட்டிருக்கு பார்த்தீங்களா ” என்றபடி காண்பித்தான் விஷ்ரூத்...

” அட ஆமாம்ல? நம்ம பகவத் கீதாவுக்கு அடர் சிகப்பு கலர்ல ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்குமே..அட பேச்சு விஷயத்துல சொல்லமறந்துட்டேன்பா....”

”என்னம்மா?” என்றபடி புல்வெளியில் சேரில் அமர்ந்து அம்மாவுக்கும் உட்கார சேரை நகர்த்திக் கொடுத்தான் விஷ்ரூத்..

”பகவத் கீதா ஆபிசுல இருந்து மாலை வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்காடா... என்னன்னு கேட்கமாட்டியா நீ? “

” அம்மா பகவத் கீதா ரொம்ப மென்மையான மனசு வைத்திருப்பது சிரமம்மா.... சரி என்னன்னு கேட்கிறேன்.... நாளை அவளுக்கு பிறந்தநாள் அதுக்குள்ள இந்த மொட்டுக்கள் பூத்துவிட்டால் இதையே பரிசாக கொடுத்துடுவேன்மா” என்று சிரித்தான் விஷ்ரூத்

” என்னடா வேற எதுவும் வாங்கி தரமாட்டியா பகவத் கீதாவுக்கு? “

” அவ ரொம்ப சிம்பிள்மா எதையும் விரும்பமாட்டா... ஆனா பூ அவளுக்கு பிடிக்கும்.. அதனால் தான்...”

” சரி சரி முதல்ல அவளை சமாதானப்படுத்து ”என்றபடி எழுந்து சென்றார் சௌடாம்பிகை....

சிரித்துக்கொண்டே எழுந்து சமையலறைப்பக்கம் வந்தான்.. முறுகலான அடை வார்க்கும் மணமும் அவியலின் மணமும் அவன் மனதை நிறைத்தது....

” என்னவாம் எங்க கண்ணாட்டிக்கு ”என்றபடி பகவத் கீதாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் விஷ்ரூத்..

”விடுங்க “ என்றபடி விலகிச்சென்றாள்...அழுதழுது கண் வீங்கி இருந்தது பகவத் கீதாவுக்கு.

” சாப்பிட வரீங்களா ” என்றபடி அடைகளை தட்டில் அடுக்கினாள்....

” தாயேன் சாப்பிட்டு சீக்கிரம் படுக்கணும்.. நாளை ஆடிட்டிங் இருக்கு வேறு...” என்றபடி அடையை ருசித்தான் விஷ்ரூத்....

சௌடாம்பிகை இருவரின் சம்பாஷணையில் குறுக்கிடாது தனக்கு இரவு உணவாக பாலும் பழமும் எடுத்துக்கொண்டு தன் அறைக்கு நகர்ந்தார்.

பாத்திரம் எல்லாம் ஒழித்துவிட்டு தான் சாப்பிட்டேன் பேர்வழி என்று விஷ்ரூத் அடை சாப்பிட்டு மீதி வைத்திருந்த இரண்டு விள்ளலை வாயில் போட்டுக்கொண்டு முகம் கைகால் அலம்பிக்கொண்டு படுக்கச்சென்றாள்....

அங்கே விஷ்ரூத் என்னவோ ஃபைல் வைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்...

அவனிடம் ஒன்றும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் பகவத்கீதா...

விஷ்ரூத் திரும்பிப்பார்த்துவிட்டு ஓ இன்று மாலை அழுததற்கு என்ன ஏது என்று கேட்காததால் வருத்தமா? என்றபடி பகவத்கீதாவை எழுப்பி உட்காரவைத்தான்...

கன்னங்களில் கண்ணீரை உணர்ந்த விஷ்ரூத் பகவத்கீதாவின் கண்களை துடைத்துவிட்டான்...

அவள் அருகே உட்கார்ந்து மெல்ல பகவத்கீதாவை எழுப்பி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்....

அழுகை நின்றபாடில்லை....

” என்ன பிரச்சனை ”என்று மெல்லக்கேட்டான்....

”ஒன்னுமில்லங்க.... லீவுக்கு ரகுபதி சார் போயிருப்பதால் இப்ப அந்த சீட்டில் நான் இருக்கிறேன். அக்கவுண்ட்ஸ் எல்லாம் இப்ப தான் செக் பண்ணிட்டு இருக்கேன்... அதற்குள் என்னை அழைத்து....”

” யாரு மேனேஜரா?”

”ஆமாம் ” என்று மூக்குறிந்துக்கொண்டே... திட்டு திட்டுன்னு ஒரே திட்டு ஏன் ரெடி செய்து வைக்கலை நாளைக்குள் நான் ரெடி செய்து வைக்கலன்னா இன்னும் திட்டு கிடைக்குமாம்.... அழுகை இன்னும் வெடித்தது....

”அட அசமண்டு இதுக்கு போய் அழலாமா? தவறு உன்னிடம் இல்லை எனும்போது என்ன செய்யனும்? அழாம பொறுமையா விளக்கிச்சொல்லனும்...”

” பேச விட்டால் தானே? படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டு போ அப்டின்னு அனுப்பியாச்சு....” உதட்டை கடித்து அழுகையை அடக்க முயன்றாள்....

”அசடு... அழறதை முதல்ல நிறுத்து.... நாளை காலை ஒருமணி நேரம் முன்னாடி கிளம்பு ஆபிசுக்கு.. ஃபைல் எல்லாம் செக் பண்ணு எங்க தவறு இருக்குன்னு புரியவர உனக்கு ஒரு மணி நேர அவகாசம் போதாதா? “

” கண்டிப்பா போதும் ” என்றபடி அழுகையை நிறுத்தத்தொடங்கினாள் பகவத்கீதா...

”எல்லாத்தையும் மேனேஜர் வருமுன் அவர் டேபிளில் கொண்டு வெச்சிரு.... மேனேஜர் திரும்ப உன்னை அழைத்து எதுனா கேட்கும்போது உன் நிலையை விளக்கிச்சொல்லு... அழாம சொல்லு.. நீ ஒன்னும் குழந்தை இல்லை தெரியுமா? வீட்டில் நீ எனக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான்... ஆனா ஆபிசுல எல்லாம் போய் அழுது குழந்தைப்போல நல்லாவா இருக்கும்? குட்டி பகவத்கீதா அழுதா ரசிக்கலாம்? வளர்ந்த பகவத் கீதா அழுதா ரசிக்கமுடியுமா? ”

”போங்க நீங்க என்னை கேலி பண்றீங்க ” என்று விஷ்ரூத் நெஞ்சில் வலிக்காமல் குத்தினாள்...

” ஹப்ப்ப்ப்பா.... ”

”ஐயோ என்னப்பா? “

” வலிக்கலை... சும்மா.. ” என்றபடி சிரித்துக்கொண்டே சொன்னான் “ நம் மேல் தவறில்லாத பட்சத்தில் அது மேனேஜரா இருந்தாலும் சரி பொறுமையாக அழுத்தமாக அமைதியாக உன் கருத்தை சொல்லனும் புரிகிறதா மண்டு? அதற்கு மனோதிடமும் தைரியமும் தன்னம்பிக்கையயும் வளர்த்துக்கணும் என்ன?” என்றபடி நெற்றியோடு நெற்றியை முட்டினான் விஷ்ரூத்....

”நிறுத்திட்டேன் அழுகையை... நாளை என் வேலையை முடிச்சுட்டு அதன்பின் பேசிக்கிறேன் ”என்றபடி எழ முனைந்தாள்...

” இரு இரு... இவ்ளோ நல்ல ஐடியா கொடுத்த எனக்கு ஒன்னும் இல்லையா?? “ என்றபடி அணைக்க முற்பட்டான் விஷ்ரூத்....

” ஹூஹூம்... ”

” ஒரு முத்தம் கூடவா இல்லை?? ” என்றபடி பாவமாக முகம் வைத்தபடி கேட்டான்....

” நாளைக்கு எங்க மேனேஜர் கிட்ட நீங்க சொன்ன ஐடியா இம்ப்ளிமெண்ட் பண்ணி பார்த்து சக்ஸஸ் ஆச்சுன்னா கண்டிப்பா ஒன்னு இல்ல ரெண்டு முத்தா தரேன் ”

” அப்ப பர்த்டே பேபிக்கு நான் தரேன் பரிசு ” என்றபடி அணைத்து மென்மையாக நெற்றியில் முத்தமிட்டுச்சொன்னான் ” ஹாப்பி பர்த்டே என் செல்ல கண்ணாட்டி “

” ம்ம்ம்ம்ம்.. நாளைக்கு தான் உங்களுக்கு பர்த்டே ட்ரீட்... ” என்றபடி விளையாட்டாய் அவனை தள்ளிவிட்டு எழுந்து சென்று முகம் அலம்பிக்கொண்டு வந்து படுத்தாள்....

மறுநாள் காலை வேகமாக வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு ஆபிசுக்கு கிளம்பினாள் பகவத்கீதா...

” இரும்மா விஷ்ரூத் வரட்டும் வண்டில போகலாம்ல? ” சௌடாம்பிகை கனிவுடன் சொன்னார்....

” இல்லேம்மா இன்னைக்கு எங்க ஆபிசுல வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு... அதனால நான் பஸ்லயே கிளம்பறேன் ” என்று சௌடாம்பிகையின் காலை தொட்டு வணங்கிவிட்டு கிளம்பினாள்....

” என்னடா இப்படி ஓடுறா?”

”ஆபிசுல ஒரு சின்ன பிரச்சனையாம் அம்மா.. இன்னைக்கு சரியாகிடும்னு நினைக்கிறேன்....”

”அட மொட்டு மலர்ந்து அழகா பூத்திருக்கு பாருடா....”

” அட ஆமாம் ” என்றபடி அந்த பூவை மெல்ல வலிக்காமல் பறித்தான்.....

மணி டாண் டாண் என்று பத்து அடிக்கவும் மேனேஜர் ஆபிசுக்குள் நுழைந்து பகவத் கீதாவை சீட்டில் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் தன்னறைக்குள் நுழைந்து பெல்லடித்து ப்யூனை கூப்பிட்டு பகவத் கீதாவை கூப்பிடுப்பா என்று சொல்லுமுன்....

” மே ஐ கமின் சார்? ” என்றபடி பகவத் கீதா ஃபைல்களுடன் நின்றாள்....

” யெஸ் ப்ளீஸ்.....”

” சார் இதோ உங்க ஃபைல்கள் எல்லாம் ரெடி.... நான் சரி பார்த்துட்டேன்.... நீங்க செக் பண்ணிரலாம்....” என்றபடி ஃபைல்களை டேபிள் மீது வைத்தாள்....

” உங்களுக்கு ஏன் சிரமம் பகவத்கீதா? ப்யூன் கிட்டயே கொடுத்தனுப்பி இருக்கலாமே? ” சொன்னபடி ப்யூனை வெளியே போகச்சொன்ன மேனேஜர், ” உட்காருங்க பகவத்கீதா ” என்று சொல்லவே...

” இட்ஸ் ஓகே சார்.. என் வேலையை நானே செய்ய தான் விரும்புவேன்... ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்...

” பகவத்கீதா நேற்று நடந்ததுக்கு....”

சென்றவள் நின்று திரும்பி... ஆரம்பித்தாள்... ” எக்ஸ்க்யூஸ்மீ சார்... நேற்று நீங்க என்னை திட்டுமுன் விஷயம் என்னவென்று கேட்டிருந்திருக்கலாம்.. வேலை தாமதததிற்கான காரணம் அறிய முயன்றிருக்கலாம்.. எதுவுமே செய்யாமல் நீங்கள் என்னை திட்ட ஆரம்பிச்சுட்டீங்க. இதெல்லாம் ரகுபதி சார் லீவுக்கு போகுமுன் முடிக்காமல் விட்ட வேலைகள்... நேற்று தான் அவர் சீட்டுக்கு வந்தபோது அறிந்தேன். எனக்கு கால அவகாசம் நீங்க தராதது மட்டுமல்லாது நீங்க என்னை கத்தி பேசினபோது எனக்கும் வருத்தம் அதிகமானது....”

” நேற்றைய சம்பவத்திற்கு சாரி பகவத்கீதா.. அண்ட் விஷ் யூ வெரி ஹாப்பி பர்த்டே ” என்றபடி பகவத்கீதாவிடம் அடர் சிகப்பு ரோஜாப்பூக்கள் மூன்றை எடுத்து நீட்டினான் மேனேஜர் விஷ்ரூத்....
Related Posts Plugin for WordPress, Blogger...