"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, September 24, 2013

என் நண்பன்....

” மூச்சு திணறுதுப்பா ” என்று சொல்லும்போதே இரும ஆரம்பித்தேன்.

சொல்பேச்சை கேட்கவே மாட்டான் என்னுடன் வேலை செய்யும் எகிப்தியன். என்னை விட சர்வீசிலும் வயதிலும் மூத்தவன்.

நல்லவன்… மனைவி குழந்தைகளோடு எப்போதும் சந்தோஷமாக இருந்தாலும் இந்த பாழாப்போன சிகரெட்டால் எனக்கும் இவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்..

சில சமயம் வாக்குவாதம் முற்றி இனி உன்னோடு பேசமாட்டேன் என்று இருவருமே முகம் திருப்பிக்கொள்வோம்.

ஆனால் குழந்தைப்போல இவனே தன் வயதை மறந்து என்னிடம் சொல்ல வருவான். சந்தோஷம் , சோகம், கோபம் எல்லாமே என்னிடம் பகிர்ந்துக்கொள்ளும் அருமையான நண்பன்..

என்ன ஒரு பிரச்சனைன்னா இவனுக்கு ஆங்கிலம் அவஸ்தை சுட்டுப்போட்டாலும் வராது. என்னிடம் எதையாவது சொல்லும்போது இவன் மொழியில் பேசிக்கொண்டே தையத்தக்கா என்று பாவனையில் எப்படியாவது தான் சொல்ல நினைப்பதை சொல்லி முடித்துவிடுவான்.
நானும் இவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக ரசித்து கேட்பதும் உண்டு.

இவனிடம் எனக்கு பிடிக்காத விஷயம். எரிச்சல் தரும் விஷயம், இவனை கொல்லனும்னு தோணும் விஷயம் இவன் இடைவிடாமல் பிடிக்கும் சிகரெட் மட்டுமே.. இதைத்தவிர இவனிடம் எந்தவித கெட்ட குணங்களும் கிடையாது.

பெண்களிடம் வந்து வழிய மாட்டான் பிறரைப்போல. நேர்மையான வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுப்படுத்திக்கொள்வான். எந்த நேரத்திலும் என்ன உதவி யார் கேட்டாலும் முன்பு நிற்பான் செய்ய…
இப்படியே சில வருடங்கள் உருண்டுக்கொண்டு தான் இருந்தது.சண்டையும் சச்சரவும் அன்பும் பாசமுமாக..

தினமும் சரியா நான் டிபன் பாக்ஸ் பசியோடு திறக்கும்போது இவன் சிகரெட் புகை வாசம் வந்து எனக்கு ஹலோ சொல்லும் என்னையும் எடுத்துக்கோ என்று.. கோபமாக எடுக்கும் கவளத்தை பாக்ஸ்லயே போட்டு ஆத்திரமாக மூடுவேன் மூடியை.. அறிவுக்கெட்டவன்.. எவண்டா கண்டுப்பிடிச்சான் இந்த சிகரெட்டை… என்று எரியும் எனக்கு.

திடிர்னு ஒரு நாள் இவன் சத்தமும் காணோம். சிகரெட் புகையும் காணோம். ஹப்பா நிம்மதி இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடலாம்னு டிபன் பாக்ஸ் திறந்தால் போன். இவன் சீரியசாக ஹாஸ்பிட்டலில் கிடக்கிறான் மாசிவ் ஹார்ட் அட்டாக்..

ஐயோ அடிச்சு பிடிச்சு எல்லோருமாக கிளம்பி போக நினைத்தோம். ஆனால் ஆபிசில் அனுமதி இல்லை எங்களுக்கு போக..
பொறுத்திருந்து மாலை வீட்டுக்கு சென்று என் குடும்பத்தினருடன் கிளம்பி மருத்துவமனைக்கு போனோம்.

பிரக்ஞையின்றி படுக்கையில் கிடந்தான். பார்க்கவே மனம் பதறியது. எவ்ளோ திட்டினியோ என்னை.. பாரு என்ன நிலைமையில் கிடக்கிறேன் என்று என்னை  கேட்பது போல் இருந்தது..

ஒருவழியாக எல்லோரின் பிரார்த்தனையாலும் டாக்டர்களின் உதவியாலும் உயிர்ப்பிழைத்து வந்து மறுபடி சேர்ந்தான் வேலையில்..
நான் சொல்லிவிட்டேன். ”ஹப்பா இனிமே என் நண்பன் புகைக்கமாட்டான் ”என்று. சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் பேக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து வாயில் வைத்துக்கொண்டான்..” போடா நீ உருப்படவே மாட்டே ”என்று திட்டிவிட்டு வந்து என் சீட்டில் உட்கார்ந்துவிட்டேன்.
என் சீட்டருகே வந்து என்னை கேட்டான். எனக்கு சிகரெட் பழக்கம் இருப்பதால் உனக்கு என்ன பிரச்சனை?

”எனக்கு பிரச்சனை இந்த நாற்றம்.. உன் குடும்பத்தினருக்கு பிரச்சனை உன் ஆரோக்கியம். இதை ஏண்டா புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறே ”என்று தலையில் அடித்துக்கொண்டேன்.

மெல்ல நகர்ந்து தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.
இப்படியே நாட்கள் கடந்தது. சண்டை மட்டும் ஓயவே இல்லை எனக்கும் அவனுக்கும்.

சில சமயம் சமாதானம். சில சமயம் இருவருமே முகம் சுணங்கி பேசுவதில்லை. எல்லாம் இந்த சிகரெட் அவஸ்தையால் தான்..
ஹெட் ஆபிசு போய் வந்த காதர் என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ”உனக்கு விஷயம் தெரியுமா? இனிமே உனக்கு நிம்மதி.. சிகரெட் நாற்றம் நாளை முதல் இருக்காது..”

”ஏண்டா ”என்றேன். ”அவன் பழக்கத்தை விட்டுட்டானா என்ன ”என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். மழை தான் வரும் என்று தோணித்து எனக்கு.
”இல்ல ”என்று சொல்லி நிறுத்தினான் காதர்..

”என்னன்னு தான் சொல்லேன் ”என்று உலுக்கினேன் காதரை..

”டர்மினேட் பண்ணிட்டாங்கப்பா யூஸ்ரியை ”என்றான் காதர்.

அதிர்ச்சியில் எழுந்துவிட்டேன்.

”ஐயோ … இவன் ஒருத்தன் சம்பளத்தில் தான் குடும்பம் முழுவதும்..
இனி என்ன செய்வான்.. ”

இவன் முகம் பார்த்து பேச எனக்கு சங்கடமாக இருந்தது.

கடவுளே இவனை அப்புறப்படுத்தச்சொல்லி நான் வேண்டவில்லையே. இவன் சிகரெட் புகைப்பது தானே நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.
மனம் ஒரே ஆராட்டம் ஆனது.. என்ன சொல்வது எப்படி சமாதானம் சொல்வது ஒன்றும் புரியாமல் வியர்க்க ஆரம்பித்தது. மனம் பதட்டத்தில்..
யூஸ்ரி சிரித்துக்கொண்டே என் கேபினுக்குள் நுழைந்தான்…

”கையைக்கொடு.. கடைசில நீ வணங்கும் கடவுள் உன்னை காப்பாத்திட்டாரு” என்றான்.

எனக்கு கஷ்டமாக இருந்தது அவன் செயலைப்பார்க்க..

”யூஸ்ரி சாரிப்பா.. சத்தியமா  உனக்கு இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷம் இல்லை ப்ளீஸ் நம்பு ”என்றேன்.

”ஹே விடுப்பா.. ”

”வேற வேலை கிடைக்குமா ”என்றேன்.

”பைத்தியக்காரி இனி வேலை செய்ய என் உடம்பும் ஒத்துழைக்காது.. ஊர் போய் சேரவேண்டியது தான்.”

”நீ சந்தோஷமா இரு.”

”இத்தனை நாள் உன்னை நான் ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டேன். ”
”என் நல்லதுக்காக தான் நீ சொன்னே ஒவ்வொரு முறையும் சிகரெட் விடச்சொல்லி..”

”நான் உன் பேச்சை கேட்டிருந்தால் அட்லீஸ்ட் என் ஆரோக்கியம் நலமாக இருந்திருக்கும்” என்றான், முகமே பார்க்க பரிதாபமாக இருந்தது.
உதடு கடித்து அழுகையை அடக்கமுயன்றான். முடியாமல் கண்ணீர் உருண்டது அவன் கன்னத்தில்..

”ஆம்பிளை அழக்கூடாதுல்ல? அசிங்கம் ”என்று சொல்லிக்கொண்டு சமாளித்தான் யூஸ்ரி..

”ஆல் த வெரி பெஸ்ட் யூஸ்ரி.” என் குரல் எனக்கே கேட்கவில்லை..
மனம் உடல் எல்லாம் தளர்ந்தது போல் ஒரு நிலை எனக்கு.

”கடவுளே இப்படி ஒரு நிலையை காண வைத்துவிடாதே என்னை மீண்டும் “ என்று நினைத்துக்கொண்டே கைக்கொடுத்தேன் யூஸ்ரிக்கு.

”நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும். 

உன்னை தினமும் என் பிரார்த்தனையில் நினைவுக்கொள்வேன்.” அழுகையை என்னாலும் அடக்கமுடியவில்லை…


48 comments:

 1. உன் பதிவு கண்டு மனம் வலிக்கிறது மஞ்சு! வேறென்ன சொல்ல! நீஎப்படி இருக்கிறாய் மகளே!

  ReplyDelete
  Replies
  1. அப்பா எனக்கும் அதே மனநிலை தான். இறைவன் அருளாலும் உங்கள் ஆசிர்வாதத்தாலும் சௌக்கியம் அப்பா....

   Delete
 2. //”நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும்.

  உன்னை தினமும் என் பிரார்த்தனையில் நினைவுக்கொள்வேன்.” அழுகையை என்னாலும் அடக்கமுடியவில்லை…//

  மிகவும் அருமையான கதை மஞ்சு. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள். மஞ்சுவைப்போலவே ஒரு கதாபாத்திரத்தைப்பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிம்மா, மஞ்சு.,

  ReplyDelete
  Replies
  1. அண்ணா இது கதை இல்லை. இந்த கதையில் வரும் நண்பர் யூஸ்ரி என் ஆபிசில் கார் இன்சுரன்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்பவர் அண்ணா... அவரை தான் டர்மினேட் செய்துவிட்டார்கள். வயது 60 க்கு மேல் ஆனதால் 28 பேர்களை டர்மினேட் செய்திருக்காங்க. சோகம் அண்ணா...

   Delete
 3. இதில் என்ன வந்துவிடப் போகிறது என்று நினைத்தே ஆரோக்கியத்தைத் தொலைத்து விடுகிறார்கள்.. உங்கள் நண்பருக்கு எங்கள் பிரார்த்தனைகளும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மையேப்பா... உங்கள் பிரார்த்தனைகள் சேரட்டும்பா. அன்பு நன்றிகள்.

   Delete
 4. ஒரு மனிதருடனான கனமான நினைவுகள்.... பளிச் எழுத்து நடை.... அவர் ஊருக்குப் போயாவது அதை விடட்டும்....

  ReplyDelete
  Replies
  1. என் பிரார்த்தனையும் அதுவே தான் சரவணா... அன்பு நன்றிகள்.

   Delete
 5. என்னுடைய சில நண்பர்களுடன் எப்போதும் இதே விஷயத்திற்காக சண்டை போட்டிருக்கிறேன்.... இன்னமும் விட முடியாது தொடரும் அவர்களிடம் எனது சண்டையும் தொடர்கிறது. இனிமேல் ஒவ்வொரு முறை அவர்களுடன் சண்டையிடும் போதும் யூஸ்ரி நினைவில் வருவார்....

  அவருக்காக எனது பிரார்த்தனைகளும்.....

  ReplyDelete
  Replies
  1. உங்களோட இந்த முயற்சி தொடரட்டும்பா வெங்கட்... ஏன்னா இந்த பழக்கத்திற்காக நாம அவர்கள் நல்லவைகளை மறக்க இயலாது... அன்பு நன்றிகள்பா.

   Delete
 6. கதையின் ஓட்டமும் இடையிடையே
  உணர்வுபூர்வமாக வந்து விழுந்த வார்த்தைகளும்
  (எவண்டா இந்த சிகரெட்டைக் கண்டு பிடிச்சான்...)
  நிச்சயம் இது கதையல்ல எனப் புரிந்து விடுகிறது
  அந்த சகோதரர் பூரண நலமும் வளமும் பெற
  நாங்களும் மனதார வேண்டிக் கொள்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. உண்மையே ரமணி சார். நீங்க எளிதாய் கண்டுப்பிடிச்சிட்டீங்க. அன்பு நன்றிகள் ரமணி சார். உங்க பிரார்த்தனைகள் யூஸ்ரி குடும்பத்திற்கு சேரட்டும்.

   Delete
 7. உங்கள் நண்பர் நலமுடன் வாழ வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பிரார்த்தனைகளுக்கு அன்பு நன்றிகள்பா...

   Delete
 8. நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும்.

  பிரார்த்தனையின் நம்பிக்கை ஒளி வாழ்க்கைக்கு வழித்துணையாகட்டும் ..!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் ராஜிம்மா..

   Delete
 9. சொல்லி சென்ற விதம் மனதை தொட்டது....அவன் வேலையை மட்டும் இழக்க வில்லை ஒரு நல்ல தோழி அல்லது சகோவின் அருகில் வாழும் வாய்ப்பை இழந்துவிட்டான்


  ஒரு வேளை அவன் உங்கள் அருகில் இருந்தால் அவனது சாவு உங்களை மிகவும் பாதிக்கும் என்பதால்தான் நீங்கள் வணங்கும் கடவுள் அவனை தொலை தூரத்திற்கு கொண்டு சென்றுவிட்டாரோ என்னவோ எல்லாம் நல்லதுக்குதான்

  ReplyDelete
  Replies
  1. வரிகள் படிக்கும்போதே அதிர்கிறதுப்பா மனசு.. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்பா. அன்பு நன்றிகள்பா....

   Delete
 10. மனம் கனக்கிறது சகோதரி. சகோதரர் பூரண நலமும் வளமும் பெறட்டும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆசிகளுக்கு நிறைவான நன்றிகள் ஐயா...

   Delete
 11. இனி நடப்பதாவது அவருக்கு நன்மை தரட்டும்

  ReplyDelete
 12. நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும்.

  உன்னை தினமும் என் பிரார்த்தனையில் நினைவுக்கொள்வேன்.” அழுகையை என்னாலும் அடக்கமுடியவில்லை…//

  உண்மையான நட்பு இதுதான் .

  உங்கள் நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.
  அவருக்கு நல்ல வேலை கிடைத்து அவர் குடுமபம்
  நல்லபடியாக இருக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ததாஸ்து கோமதிம்மா. உங்க வாக்கு பலிக்கட்டும்... அன்பு நன்றிகள்.

   Delete
 13. சில உறவுகள் என்னதான் சண்டை போட்டாலும் பிரியாது என்பதற்கு உங்களின் இந்த பதிவும் ஒரு சாட்சி....!

  உங்கள் நண்பர் நலம்பெற வேண்டுகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. உண்மையேப்பா மனோ. அன்பு நன்றிகள் மனோ.

   Delete
 14. உங்கள் நண்பர் வாழ்வும் வளமும் பெற வாழ்த்துகிறேன் மஞ்சு.புகைப் பிடிப்பவர்களின் மனதைப் படம் பிடித்துக் காட்டி விட்டது உங்கள் பதிவு. இதைப் படிக்கும் ஒருவராவது புகைப் பிடிப்பதை நிறுத்தி விட்டால் தேவலை தான்.

  ReplyDelete
  Replies
  1. நிறுத்தினால் சந்தோஷப்படுவேன் கண்டிப்பாக. எல்லோருமே சுபிக்‌ஷம் பெறுவர். அன்பு நன்றிகள்பா உங்க வாழ்த்துகளுக்கு.

   Delete
 15. முதலில் கதை என்று தான் நினைத்து படிக்கத் தொடங்கினேன்.. சில வரிகளிலேயே தெரிந்துவிட்டது உங்கள் அலுவலகக் கதை என்று...

  யுஸ்ரி எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும்

  ReplyDelete
 16. மனம் கனத்துப்போய் விட்டது மஞ்சு.முகம் தெரியாத உங்கள் நண்பரை நினைக்கையில் மனதோரம் பச்சதாபம் தலைதூக்குகிறடது.இனிமேலாவது அவருக்கு நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாக்கு பலிக்கட்டும்பா...

   Delete
 17. நட்புகளுக்காக நம்மால் செய்ய முடிந்தது அவர்களின் நல்ல எதிர்காலத்தை நினைப்பது மட்டுமே... உங்களின் இந்தப் பதிவு உண்மையிலேயே சிகரெட் , மது போன்ற பழக்கங்களின் அடிமையானவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களைச் சார்ந்தோரையும் வருத்தப்பட வைக்கிறோம் என உணர்வை ஏற்படுத்த வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சரியாவே சொன்னீங்க எழில். அன்பு நன்றிகள்பா...

   Delete
 18. நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களுக்காக நாம் வருந்தி பயனில்லை !

  ReplyDelete
  Replies
  1. அப்படி என்னால் நிர்தாட்சண்யமாக ஒதுக்கமுடியலையே சார்.

   Delete
 19. அன்பு நன்றிகள் ரமணி சார்.

  ReplyDelete
 20. சுவாரசியமான பரிதாபம்.

  ReplyDelete
 21. மனசை அசைச்சுடுச்சு மஞ்சு! இனி வரும் நாட்கள் நண்பனுக்கு வசந்தமாய் அமையட்டும். எங்கிருந்தாலும் நலமாய் வாழ்கவென்று வாழ்த்துகிறேன் நானும்!

  ReplyDelete
  Replies
  1. உங்க ஆசிகள் யூஸ்ரி குடும்பத்துக்கு சேரட்டும் கணேஷா. அன்பு நன்றிகள்பா..

   Delete

 22. உங்கள் நண்பர் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு வணக்கங்களுடனான நன்றிகள்பா.

   Delete
 23. உங்கள் நண்பருக்குகாக எங்கள் பிரார்த்தனைகளும், மஞ்சு!

  ReplyDelete
 24. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html

  ReplyDelete
 25. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..! ;)))))
  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...