"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, November 1, 2012

பகவத்கீதா...” விஷ்ரூத்... விஷ்ரூத் கண்ணா எங்கேப்பா இருக்கே? ” அழைத்துக்கொண்டே தோட்டப்பக்கம் வந்தார் சௌடாம்பிகை.

” அம்மா நான் இங்க தான் இருக்கேன் இந்த ரோஜாச்செடி அழகா துளிர் விட்டதே இப்ப 3 மொட்டுக்கள் விட்டிருக்கு பார்த்தீங்களா ” என்றபடி காண்பித்தான் விஷ்ரூத்...

” அட ஆமாம்ல? நம்ம பகவத் கீதாவுக்கு அடர் சிகப்பு கலர்ல ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்குமே..அட பேச்சு விஷயத்துல சொல்லமறந்துட்டேன்பா....”

”என்னம்மா?” என்றபடி புல்வெளியில் சேரில் அமர்ந்து அம்மாவுக்கும் உட்கார சேரை நகர்த்திக் கொடுத்தான் விஷ்ரூத்..

”பகவத் கீதா ஆபிசுல இருந்து மாலை வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்காடா... என்னன்னு கேட்கமாட்டியா நீ? “

” அம்மா பகவத் கீதா ரொம்ப மென்மையான மனசு வைத்திருப்பது சிரமம்மா.... சரி என்னன்னு கேட்கிறேன்.... நாளை அவளுக்கு பிறந்தநாள் அதுக்குள்ள இந்த மொட்டுக்கள் பூத்துவிட்டால் இதையே பரிசாக கொடுத்துடுவேன்மா” என்று சிரித்தான் விஷ்ரூத்

” என்னடா வேற எதுவும் வாங்கி தரமாட்டியா பகவத் கீதாவுக்கு? “

” அவ ரொம்ப சிம்பிள்மா எதையும் விரும்பமாட்டா... ஆனா பூ அவளுக்கு பிடிக்கும்.. அதனால் தான்...”

” சரி சரி முதல்ல அவளை சமாதானப்படுத்து ”என்றபடி எழுந்து சென்றார் சௌடாம்பிகை....

சிரித்துக்கொண்டே எழுந்து சமையலறைப்பக்கம் வந்தான்.. முறுகலான அடை வார்க்கும் மணமும் அவியலின் மணமும் அவன் மனதை நிறைத்தது....

” என்னவாம் எங்க கண்ணாட்டிக்கு ”என்றபடி பகவத் கீதாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் விஷ்ரூத்..

”விடுங்க “ என்றபடி விலகிச்சென்றாள்...அழுதழுது கண் வீங்கி இருந்தது பகவத் கீதாவுக்கு.

” சாப்பிட வரீங்களா ” என்றபடி அடைகளை தட்டில் அடுக்கினாள்....

” தாயேன் சாப்பிட்டு சீக்கிரம் படுக்கணும்.. நாளை ஆடிட்டிங் இருக்கு வேறு...” என்றபடி அடையை ருசித்தான் விஷ்ரூத்....

சௌடாம்பிகை இருவரின் சம்பாஷணையில் குறுக்கிடாது தனக்கு இரவு உணவாக பாலும் பழமும் எடுத்துக்கொண்டு தன் அறைக்கு நகர்ந்தார்.

பாத்திரம் எல்லாம் ஒழித்துவிட்டு தான் சாப்பிட்டேன் பேர்வழி என்று விஷ்ரூத் அடை சாப்பிட்டு மீதி வைத்திருந்த இரண்டு விள்ளலை வாயில் போட்டுக்கொண்டு முகம் கைகால் அலம்பிக்கொண்டு படுக்கச்சென்றாள்....

அங்கே விஷ்ரூத் என்னவோ ஃபைல் வைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்...

அவனிடம் ஒன்றும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் பகவத்கீதா...

விஷ்ரூத் திரும்பிப்பார்த்துவிட்டு ஓ இன்று மாலை அழுததற்கு என்ன ஏது என்று கேட்காததால் வருத்தமா? என்றபடி பகவத்கீதாவை எழுப்பி உட்காரவைத்தான்...

கன்னங்களில் கண்ணீரை உணர்ந்த விஷ்ரூத் பகவத்கீதாவின் கண்களை துடைத்துவிட்டான்...

அவள் அருகே உட்கார்ந்து மெல்ல பகவத்கீதாவை எழுப்பி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்....

அழுகை நின்றபாடில்லை....

” என்ன பிரச்சனை ”என்று மெல்லக்கேட்டான்....

”ஒன்னுமில்லங்க.... லீவுக்கு ரகுபதி சார் போயிருப்பதால் இப்ப அந்த சீட்டில் நான் இருக்கிறேன். அக்கவுண்ட்ஸ் எல்லாம் இப்ப தான் செக் பண்ணிட்டு இருக்கேன்... அதற்குள் என்னை அழைத்து....”

” யாரு மேனேஜரா?”

”ஆமாம் ” என்று மூக்குறிந்துக்கொண்டே... திட்டு திட்டுன்னு ஒரே திட்டு ஏன் ரெடி செய்து வைக்கலை நாளைக்குள் நான் ரெடி செய்து வைக்கலன்னா இன்னும் திட்டு கிடைக்குமாம்.... அழுகை இன்னும் வெடித்தது....

”அட அசமண்டு இதுக்கு போய் அழலாமா? தவறு உன்னிடம் இல்லை எனும்போது என்ன செய்யனும்? அழாம பொறுமையா விளக்கிச்சொல்லனும்...”

” பேச விட்டால் தானே? படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டு போ அப்டின்னு அனுப்பியாச்சு....” உதட்டை கடித்து அழுகையை அடக்க முயன்றாள்....

”அசடு... அழறதை முதல்ல நிறுத்து.... நாளை காலை ஒருமணி நேரம் முன்னாடி கிளம்பு ஆபிசுக்கு.. ஃபைல் எல்லாம் செக் பண்ணு எங்க தவறு இருக்குன்னு புரியவர உனக்கு ஒரு மணி நேர அவகாசம் போதாதா? “

” கண்டிப்பா போதும் ” என்றபடி அழுகையை நிறுத்தத்தொடங்கினாள் பகவத்கீதா...

”எல்லாத்தையும் மேனேஜர் வருமுன் அவர் டேபிளில் கொண்டு வெச்சிரு.... மேனேஜர் திரும்ப உன்னை அழைத்து எதுனா கேட்கும்போது உன் நிலையை விளக்கிச்சொல்லு... அழாம சொல்லு.. நீ ஒன்னும் குழந்தை இல்லை தெரியுமா? வீட்டில் நீ எனக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான்... ஆனா ஆபிசுல எல்லாம் போய் அழுது குழந்தைப்போல நல்லாவா இருக்கும்? குட்டி பகவத்கீதா அழுதா ரசிக்கலாம்? வளர்ந்த பகவத் கீதா அழுதா ரசிக்கமுடியுமா? ”

”போங்க நீங்க என்னை கேலி பண்றீங்க ” என்று விஷ்ரூத் நெஞ்சில் வலிக்காமல் குத்தினாள்...

” ஹப்ப்ப்ப்பா.... ”

”ஐயோ என்னப்பா? “

” வலிக்கலை... சும்மா.. ” என்றபடி சிரித்துக்கொண்டே சொன்னான் “ நம் மேல் தவறில்லாத பட்சத்தில் அது மேனேஜரா இருந்தாலும் சரி பொறுமையாக அழுத்தமாக அமைதியாக உன் கருத்தை சொல்லனும் புரிகிறதா மண்டு? அதற்கு மனோதிடமும் தைரியமும் தன்னம்பிக்கையயும் வளர்த்துக்கணும் என்ன?” என்றபடி நெற்றியோடு நெற்றியை முட்டினான் விஷ்ரூத்....

”நிறுத்திட்டேன் அழுகையை... நாளை என் வேலையை முடிச்சுட்டு அதன்பின் பேசிக்கிறேன் ”என்றபடி எழ முனைந்தாள்...

” இரு இரு... இவ்ளோ நல்ல ஐடியா கொடுத்த எனக்கு ஒன்னும் இல்லையா?? “ என்றபடி அணைக்க முற்பட்டான் விஷ்ரூத்....

” ஹூஹூம்... ”

” ஒரு முத்தம் கூடவா இல்லை?? ” என்றபடி பாவமாக முகம் வைத்தபடி கேட்டான்....

” நாளைக்கு எங்க மேனேஜர் கிட்ட நீங்க சொன்ன ஐடியா இம்ப்ளிமெண்ட் பண்ணி பார்த்து சக்ஸஸ் ஆச்சுன்னா கண்டிப்பா ஒன்னு இல்ல ரெண்டு முத்தா தரேன் ”

” அப்ப பர்த்டே பேபிக்கு நான் தரேன் பரிசு ” என்றபடி அணைத்து மென்மையாக நெற்றியில் முத்தமிட்டுச்சொன்னான் ” ஹாப்பி பர்த்டே என் செல்ல கண்ணாட்டி “

” ம்ம்ம்ம்ம்.. நாளைக்கு தான் உங்களுக்கு பர்த்டே ட்ரீட்... ” என்றபடி விளையாட்டாய் அவனை தள்ளிவிட்டு எழுந்து சென்று முகம் அலம்பிக்கொண்டு வந்து படுத்தாள்....

மறுநாள் காலை வேகமாக வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு ஆபிசுக்கு கிளம்பினாள் பகவத்கீதா...

” இரும்மா விஷ்ரூத் வரட்டும் வண்டில போகலாம்ல? ” சௌடாம்பிகை கனிவுடன் சொன்னார்....

” இல்லேம்மா இன்னைக்கு எங்க ஆபிசுல வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு... அதனால நான் பஸ்லயே கிளம்பறேன் ” என்று சௌடாம்பிகையின் காலை தொட்டு வணங்கிவிட்டு கிளம்பினாள்....

” என்னடா இப்படி ஓடுறா?”

”ஆபிசுல ஒரு சின்ன பிரச்சனையாம் அம்மா.. இன்னைக்கு சரியாகிடும்னு நினைக்கிறேன்....”

”அட மொட்டு மலர்ந்து அழகா பூத்திருக்கு பாருடா....”

” அட ஆமாம் ” என்றபடி அந்த பூவை மெல்ல வலிக்காமல் பறித்தான்.....

மணி டாண் டாண் என்று பத்து அடிக்கவும் மேனேஜர் ஆபிசுக்குள் நுழைந்து பகவத் கீதாவை சீட்டில் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் தன்னறைக்குள் நுழைந்து பெல்லடித்து ப்யூனை கூப்பிட்டு பகவத் கீதாவை கூப்பிடுப்பா என்று சொல்லுமுன்....

” மே ஐ கமின் சார்? ” என்றபடி பகவத் கீதா ஃபைல்களுடன் நின்றாள்....

” யெஸ் ப்ளீஸ்.....”

” சார் இதோ உங்க ஃபைல்கள் எல்லாம் ரெடி.... நான் சரி பார்த்துட்டேன்.... நீங்க செக் பண்ணிரலாம்....” என்றபடி ஃபைல்களை டேபிள் மீது வைத்தாள்....

” உங்களுக்கு ஏன் சிரமம் பகவத்கீதா? ப்யூன் கிட்டயே கொடுத்தனுப்பி இருக்கலாமே? ” சொன்னபடி ப்யூனை வெளியே போகச்சொன்ன மேனேஜர், ” உட்காருங்க பகவத்கீதா ” என்று சொல்லவே...

” இட்ஸ் ஓகே சார்.. என் வேலையை நானே செய்ய தான் விரும்புவேன்... ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்...

” பகவத்கீதா நேற்று நடந்ததுக்கு....”

சென்றவள் நின்று திரும்பி... ஆரம்பித்தாள்... ” எக்ஸ்க்யூஸ்மீ சார்... நேற்று நீங்க என்னை திட்டுமுன் விஷயம் என்னவென்று கேட்டிருந்திருக்கலாம்.. வேலை தாமதததிற்கான காரணம் அறிய முயன்றிருக்கலாம்.. எதுவுமே செய்யாமல் நீங்கள் என்னை திட்ட ஆரம்பிச்சுட்டீங்க. இதெல்லாம் ரகுபதி சார் லீவுக்கு போகுமுன் முடிக்காமல் விட்ட வேலைகள்... நேற்று தான் அவர் சீட்டுக்கு வந்தபோது அறிந்தேன். எனக்கு கால அவகாசம் நீங்க தராதது மட்டுமல்லாது நீங்க என்னை கத்தி பேசினபோது எனக்கும் வருத்தம் அதிகமானது....”

” நேற்றைய சம்பவத்திற்கு சாரி பகவத்கீதா.. அண்ட் விஷ் யூ வெரி ஹாப்பி பர்த்டே ” என்றபடி பகவத்கீதாவிடம் அடர் சிகப்பு ரோஜாப்பூக்கள் மூன்றை எடுத்து நீட்டினான் மேனேஜர் விஷ்ரூத்....
49 comments:

 1. இன்று அலுவலகத்தில் பிரச்சனை பிரச்சனை என
  அழுது புலம்புவோருக்கு பகவத் கீதா நல்ல
  அருமையான தீர்வைச் சொல்கிறது
  தலைப்பும் பதிவும்
  கதையைத் தொடங்கிய விதமும்
  முடித்த விதமும் அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //” என்னடா வேற எதுவும் வாங்கி தரமாட்டியா பகவத் கீதாவுக்கு? “

  ” அவ ரொம்ப சிம்பிள்மா எதையும் விரும்பமாட்டா... ஆனா பூ அவளுக்கு பிடிக்கும்.. //

  ;))))) அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  பல்வேறு சூழ்நிலைகளால் விரிவாகக் கருத்திட முடியாமல் உள்ளது, மஞ்சு.

  அன்புடன்
  கோபு அண்ணா

  ReplyDelete
 3. கதை எங்கேயோ போய் எப்படியோ சுபமாய் முடிந்திருச்சே அக்கா.

  படிக்கும் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக படைப்புகளை அமைத்தலே ஒரு படைப்பாளியின் உன்னத திறமை என்று படித்த வரிகள் நினைவிற்கு வருகின்றன.

  கணவன் விஷ்ரூத் தான் மேனேஜர் என்ற வகையில் இருந்திருக்குமானால் கதைக்கு இன்னும் கொஞ்சம் மெருகு தேவைப்படுகின்றது அக்கா.

  மனோதைரியம் இருந்தால் மட்டுமே இது போன்ற சூழல்களில் நாம் நம்மை மீட்டிட முடியும் இல்லையெனில் அழுதே மனம் கலங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

  ஆதரவாய் இரவில் அனைத்த தோளின் ஊக்கம் தான் அடுத்த நாள் பகவத் கீதாவின் வெற்றிக்கு கிரியாயூக்கியாக இருந்திருப்பதில் அன்பே சகலத்திற்கும் சரியான மருந்து என்ற கருத்தை வெளிக்காட்டி நிற்கின்றது அக்கா.

  சிறப்பான கதையினை பகிர்ந்தமைக்கு நன்றி

  அதனை மெய்பிக்கும் விதமாக தங்களது கதை அமைந்திருக்கின்றது அக்கா.


  ReplyDelete
 4. அலுவலகத்தில் சட்டென்று அழுது விடுகிற பெண்கள் இப்போதும் இருக்கிறார்கள். உங்கள் கதை அவர்களுக்கு ஒரு தெளிவைத் தரட்டும் இந்த வரிகள் மூலம்.

  எல்லாத்தையும் மேனேஜர் வருமுன் அவர் டேபிளில் கொண்டு வெச்சிரு.... மேனேஜர் திரும்ப உன்னை அழைத்து எதுனா கேட்கும்போது உன் நிலையை விளக்கிச்சொல்லு... அழாம சொல்லு.. நீ ஒன்னும் குழந்தை இல்லை தெரியுமா? வீட்டில் நீ எனக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான்... ஆனா ஆபிசுல எல்லாம் போய் அழுது குழந்தைப்போல நல்லாவா இருக்கும்? குட்டி பகவத்கீதா அழுதா ரசிக்கலாம்? வளர்ந்த பகவத் கீதா அழுதா ரசிக்கமுடியுமா? ”

  ReplyDelete
 5. மஞ்சுபாஷிணி "கீதாவும்" மிக அழகாய் மனதைத் தொடும் விதமாய்.. எதிர்பாரா முடிவோடு சுபமாய்.. கங்கிராட்ஸ் :)

  ReplyDelete
 6. மிக மிக அருமை! கதையை நகர்த்திய விதம், உணர்வுகளை பதிவிட்ட விதம், ஏற்ற இறக்கங்கள் என அனைத்தும் சிறப்புற அமையப்பெற்ற கதை. தன்னம்பிக்கை தரும் நல்ல கதை கடமை உணர்வையும் சுட்டி காட்டுகிறது. மிக மிக அருமை அக்கா!

  ReplyDelete
 7. எளிய நடையில் அருமையா எழுதியிருக்கீங்க மஞ்சு.. வீட்டிலும் வெளியிலும் கணவன் மனைவியின் அன்பு பரிமாற்றம், மாமியார் மருமகளின் மேல் காட்டும் பாசம், எழுத்தில் நல்லா புரிய வச்சிருக்கீங்க..அருமையான சிறுகதை எழுத்தாளர் மஞ்சு பாஷிணி .. தொடருங்கள் அடுத்த சிறுகதையை ..

  ReplyDelete
 8. அழகான கதை. எளிமையாக இருந்தாலும் கடைசி திருப்பத்தில் ஒரு பன்ச், சிறப்பாக இருக்கு மஞ்சு.

  ReplyDelete
 9. //” நேற்றைய சம்பவத்திற்கு சாரி பகவத்கீதா.. அண்ட் விஷ் யூ வெரி ஹாப்பி பர்த்டே ” என்றபடி பகவத்கீதாவிடம் அடர் சிகப்பு ரோஜாப்பூக்கள் மூன்றை எடுத்து நீட்டினான் மேனேஜர் விஷ்ரூத்....//

  ” இவரேதான் அவரே! அவரேதான் இவரே! “ – நல்ல கதை! நல்ல திருப்பம்!

  ReplyDelete
 10. சிறப்பான கதை.

  இப்படித்தான் முடியப்போகிறது என சின்னதாய் யூகம் செய்திருந்தேன்... என் யூகம் சரியாகத்தான் இருந்தது...

  ReplyDelete
 11. அழகா துளிர் விட்ட அடர் சிவப்பு ரோஜா தந்த திருப்பம் மிகவும் ரசிக்கவைத்தது....பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. மிகவும் அருமையான கதை... வாழ்த்துக்கள்...

  நன்றி...

  tm5

  ReplyDelete
 13. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 14. அட! என்று விழிகளை உயர்த்தி ரசிக்க வைத்தது கடைசி பஞ்ச். பகவத் கீதான்ற பேரே ரொம்ப அருமையா இருக்கு மஞ்சு. அதே மாதிரிதான் அந்த கேரக்டரும். மானேஜரா மட்டும் இருந்திருந்தா என்ன பிராப்ளம்னு கேட்டிருப்பார். அவரே கணவனாவும் ஆயிட்டதாலதான் அப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு திட்டியிருப்பாரோன்னு தோணுது, அப்றம் வீட்ல வந்து சமாதானம் வேற. உதைக்கணும் விஷரூத்தை. மானேஜரை சமாளிக்க ஐடியா தந்தும். ரோஜாப்பூ குடுத்தும் காரியத்தை சாதிக்கறது ஆண்கள் சைகாலஜியை நல்லா அலசிப் பிழிஞ்சு காயப் போட்டிருக்கீங்க. இன்னும் நிறைய இதுமாதிரி சிறுகதைகளை நீங்க தரணும்... நாங்க ரசிக்கணும் அக்கா... ஸாரி. சிவஹரி கமெண்ட்டை படிச்சுட்டே கருத்திட்டதால வந்த பாதிப்பு... மஞ்சு!

  ReplyDelete
 15. முடிவை நிச்சயமாய் எதிர்பார்க்கலைதான். :)))) ஆனாலும் ஏதோ ஒரு சின்னக் குறை தெரியறது. சின்ன விஷயத்துக்கு அழுத பகவத்கீதாவா? அவள் ஏன் அழுகிறாள் என்பது தெரிந்தும் அதைத் தெரியாதது போல் அவளுக்கு எப்படி நடந்துக்கணும் அலுவலகத்தில்னு சொல்லிக் கொடுத்த விஷ்ரூத்தா? ம்ஹூம், புரியலை. ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இருக்கு.

  அலுவலகம் செல்லும் பெண்கள் அங்கே இம்மாதிரியான நிகழ்வுகளை எதிர்பார்க்கத் தானே வேண்டும். அப்படியும் இவ்வளவு மென்மையாகவா பகவத்கீதா இருப்பது? ஒருவேளை கணவனே மானேஜர் என்பதால் அதிக உரிமையோ? ம்ம்ம்ம்ம்ம்????

  இன்னிக்குத் தான் உங்க வலைப்பக்கம் வர முடிஞ்சது. மிச்சத்தையும் படிக்கணும். மெதுவாப் படிக்கிறேன்.:)))

  ReplyDelete
 16. மஞ்சுபாஷினியா கொக்கா .கதை சொல்ல நாமும் கேட்க நேரே நடப்பதுபோல் இருக்கும் என் கண்முன்னே காட்சி படிந்துவிடும் . இப்படிவரும் என்று நினைத்தேன், அதுவே முடிவாகியது. எழுதுங்கள் எழுதுங்கள் நாகல் வருவோம்ல

  ReplyDelete
 17. நல்ல திருப்பம் முடிவில். பகவத் கீதா என்ற பெயரும் புதிதாக இனிமையாக  இருந்தது.

  ReplyDelete
 18. கதை அருமை....முடிவு எல்லாரும் எதிர்பார்த்தது தான்..
  கதையை விட அதைக் கொண்டு சென்ற நடை சூப்பர் என்று தான் சொல்வேன்...


  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 19. அட ! வாசிக்கும் பொழுது ரமணி சந்திரன் கதையோ! என்றும் எண்ணம் தான் வந்தது.அருமை. முடிவில் இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கலை.விஷ்ரூத், பகவத் கீதா,சௌடாம்பிகைன்னு பெயர் செலக்‌ஷன் சூப்பர் மஞ்சு.

  ReplyDelete
 20. ஆஹா! நல்லா கொண்டு போயிருக்கீங்க! முடிவை வேறுவிதமாய் யோசித்தேன்.. நல்ல திருப்பத்துடன் சுபம் கார்டு போட்டுவிட்டீர்கள்.. சபாஷ்!

  ReplyDelete
 21. :))))))))))))

  கதாப்பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 22. பேரெல்லாம் வித்தியாசமா சூப்பரா இருக்கு. முடிவை நானே ஓரளவுக்கு யூகிச்சுட்டேன். எனக்கே தெரியுதுன்னா மத்தவங்களுக்கு?!

  ReplyDelete
 23. அருமையான கதை .பூவைக்கு பூதான் பிடிக்கும் சமாதானம் செய்யவும் ,சந்தித்து மகிழவும் பூ இருந்தால் போதும் என்பதை சொல்லியுள்ளீர்கள்

  ReplyDelete
 24. கடைசி தூக்கி வாரிப் போட்டது !
  எப்படி முடிச்சீங்க! சிறுகதை மன்னி தான்(மன்னன்).
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 26. இது நியாயமா இது? இந்த கடைசி வரி ட்விஸ்ட் நியாயமான்னு கேட்டேன்! இப்படியா ரெட்டை முகம் காட்டுவாங்க? ஆனாலும் நல்ல ட்விஸ்ட் தான்! யாரோ மேனேஜர் திட்டினா அழுகை வராது... காதல் கணவனே திட்டினா அதுதான் அழுகை!

  பகவத் கீதா, விஷ்ரூத்.... வித்தியாசமான பெயர்கள்.

  ReplyDelete
 27. இனிய மண நாள் வாழ்த்துகள்.... இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

  ReplyDelete
 28. அட?? யாருக்கு?? நானும் வாழ்த்தறதிலே கலந்துக்கறேன். இனிய மண நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. //Ramani said...
  இன்று அலுவலகத்தில் பிரச்சனை பிரச்சனை என
  அழுது புலம்புவோருக்கு பகவத் கீதா நல்ல
  அருமையான தீர்வைச் சொல்கிறது
  தலைப்பும் பதிவும்
  கதையைத் தொடங்கிய விதமும்
  முடித்த விதமும் அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்//

  உண்மையே ரமணிசார்..... பிரச்சனைகள் இல்லாத இடம் இல்லை. ஆனால் பிரச்சனைகளை எதிர்க்கொண்டு அதை தீர்க்கும் முயற்சியில் முனைப்பாக இருக்கவேண்டும்...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 30. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  //” என்னடா வேற எதுவும் வாங்கி தரமாட்டியா பகவத் கீதாவுக்கு? “

  ” அவ ரொம்ப சிம்பிள்மா எதையும் விரும்பமாட்டா... ஆனா பூ அவளுக்கு பிடிக்கும்.. //

  ;))))) அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  பல்வேறு சூழ்நிலைகளால் விரிவாகக் கருத்திட முடியாமல் உள்ளது, மஞ்சு.

  அன்புடன்
  கோபு அண்ணா//

  அதனால் என்ன அண்ணா.... மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா தங்களின் கருத்து பகிர்வுக்கு

  ReplyDelete
 31. //சிவஹரி said...
  கதை எங்கேயோ போய் எப்படியோ சுபமாய் முடிந்திருச்சே அக்கா.

  படிக்கும் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக படைப்புகளை அமைத்தலே ஒரு படைப்பாளியின் உன்னத திறமை என்று படித்த வரிகள் நினைவிற்கு வருகின்றன.

  கணவன் விஷ்ரூத் தான் மேனேஜர் என்ற வகையில் இருந்திருக்குமானால் கதைக்கு இன்னும் கொஞ்சம் மெருகு தேவைப்படுகின்றது அக்கா.

  மனோதைரியம் இருந்தால் மட்டுமே இது போன்ற சூழல்களில் நாம் நம்மை மீட்டிட முடியும் இல்லையெனில் அழுதே மனம் கலங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

  ஆதரவாய் இரவில் அனைத்த தோளின் ஊக்கம் தான் அடுத்த நாள் பகவத் கீதாவின் வெற்றிக்கு கிரியாயூக்கியாக இருந்திருப்பதில் அன்பே சகலத்திற்கும் சரியான மருந்து என்ற கருத்தை வெளிக்காட்டி நிற்கின்றது அக்கா.

  சிறப்பான கதையினை பகிர்ந்தமைக்கு நன்றி

  அதனை மெய்பிக்கும் விதமாக தங்களது கதை அமைந்திருக்கின்றது அக்கா.//

  உண்மையே தம்பி..... இனி எழுதும் கதைகளில் கவனம் கொள்கிறேன் தம்பி. மனம் நிறைந்த அன்புநன்றிகள் கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 32. //ரிஷபன் said...
  அலுவலகத்தில் சட்டென்று அழுது விடுகிற பெண்கள் இப்போதும் இருக்கிறார்கள். உங்கள் கதை அவர்களுக்கு ஒரு தெளிவைத் தரட்டும் இந்த வரிகள் மூலம்.

  எல்லாத்தையும் மேனேஜர் வருமுன் அவர் டேபிளில் கொண்டு வெச்சிரு.... மேனேஜர் திரும்ப உன்னை அழைத்து எதுனா கேட்கும்போது உன் நிலையை விளக்கிச்சொல்லு... அழாம சொல்லு.. நீ ஒன்னும் குழந்தை இல்லை தெரியுமா? வீட்டில் நீ எனக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான்... ஆனா ஆபிசுல எல்லாம் போய் அழுது குழந்தைப்போல நல்லாவா இருக்கும்? குட்டி பகவத்கீதா அழுதா ரசிக்கலாம்? வளர்ந்த பகவத் கீதா அழுதா ரசிக்கமுடியுமா? ”

  ரிஷபன் said...
  மஞ்சுபாஷிணி "கீதாவும்" மிக அழகாய் மனதைத் தொடும் விதமாய்.. எதிர்பாரா முடிவோடு சுபமாய்.. கங்கிராட்ஸ் :)//

  அப்படியே ஆகட்டும்பா....மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா....

  ReplyDelete
 33. //வே.சுப்ரமணியன். said...
  மிக மிக அருமை! கதையை நகர்த்திய விதம், உணர்வுகளை பதிவிட்ட விதம், ஏற்ற இறக்கங்கள் என அனைத்தும் சிறப்புற அமையப்பெற்ற கதை. தன்னம்பிக்கை தரும் நல்ல கதை கடமை உணர்வையும் சுட்டி காட்டுகிறது. மிக மிக அருமை அக்கா!//

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 34. //ராதா ராணி said...
  எளிய நடையில் அருமையா எழுதியிருக்கீங்க மஞ்சு.. வீட்டிலும் வெளியிலும் கணவன் மனைவியின் அன்பு பரிமாற்றம், மாமியார் மருமகளின் மேல் காட்டும் பாசம், எழுத்தில் நல்லா புரிய வச்சிருக்கீங்க..அருமையான சிறுகதை எழுத்தாளர் மஞ்சு பாஷிணி .. தொடருங்கள் அடுத்த சிறுகதையை ..//

  ஹை கண்டுப்பிடிச்சிட்டீங்கப்பா அன்பே பிரதானம்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 35. //RAMVI said...
  அழகான கதை. எளிமையாக இருந்தாலும் கடைசி திருப்பத்தில் ஒரு பன்ச், சிறப்பாக இருக்கு மஞ்சு.//

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பகிர்வுக்கு..

  ReplyDelete
 36. //தி.தமிழ் இளங்கோ said...
  //” நேற்றைய சம்பவத்திற்கு சாரி பகவத்கீதா.. அண்ட் விஷ் யூ வெரி ஹாப்பி பர்த்டே ” என்றபடி பகவத்கீதாவிடம் அடர் சிகப்பு ரோஜாப்பூக்கள் மூன்றை எடுத்து நீட்டினான் மேனேஜர் விஷ்ரூத்....//

  ” இவரேதான் அவரே! அவரேதான் இவரே! “ – நல்ல கதை! நல்ல திருப்பம்!//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 37. //வெங்கட் நாகராஜ் said...
  சிறப்பான கதை.

  இப்படித்தான் முடியப்போகிறது என சின்னதாய் யூகம் செய்திருந்தேன்... என் யூகம் சரியாகத்தான் இருந்தது... //

  அட கண்டுப்பிடிச்சிட்டீங்களாப்பா? மனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 38. //இராஜராஜேஸ்வரி said...
  அழகா துளிர் விட்ட அடர் சிவப்பு ரோஜா தந்த திருப்பம் மிகவும் ரசிக்கவைத்தது....பாராட்டுக்கள்..//

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜேஸ்வரி கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 39. //திண்டுக்கல் தனபாலன் said...
  மிகவும் அருமையான கதை... வாழ்த்துக்கள்...

  நன்றி...

  tm5
  November 2, 2012 5:15 AM
  திண்டுக்கல் தனபாலன் said...
  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...//

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை இங்கு தெரியப்படுத்தியமைக்கும்....

  ReplyDelete
 40. //பால கணேஷ் said...
  அட! என்று விழிகளை உயர்த்தி ரசிக்க வைத்தது கடைசி பஞ்ச். பகவத் கீதான்ற பேரே ரொம்ப அருமையா இருக்கு மஞ்சு. அதே மாதிரிதான் அந்த கேரக்டரும். மானேஜரா மட்டும் இருந்திருந்தா என்ன பிராப்ளம்னு கேட்டிருப்பார். அவரே கணவனாவும் ஆயிட்டதாலதான் அப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு திட்டியிருப்பாரோன்னு தோணுது, அப்றம் வீட்ல வந்து சமாதானம் வேற. உதைக்கணும் விஷரூத்தை. மானேஜரை சமாளிக்க ஐடியா தந்தும். ரோஜாப்பூ குடுத்தும் காரியத்தை சாதிக்கறது ஆண்கள் சைகாலஜியை நல்லா அலசிப் பிழிஞ்சு காயப் போட்டிருக்கீங்க. இன்னும் நிறைய இதுமாதிரி சிறுகதைகளை நீங்க தரணும்... நாங்க ரசிக்கணும் அக்கா... ஸாரி. சிவஹரி கமெண்ட்டை படிச்சுட்டே கருத்திட்டதால வந்த பாதிப்பு... மஞ்சு!//

  ம்ம்ம்ம்.... பகவத்கீதா என்ற பெயர் என் தங்கையின் கணவரின் நண்பரின் மனைவியின் பெயர் பகவத்கீதா... அதை தான்பா கதைக்கு எடுத்துக்கிட்டேன்...

  அட உங்களுக்கும் அக்கா தாம்பா :-) நான்...

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கணேஷா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 41. //Geetha Sambasivam said...
  முடிவை நிச்சயமாய் எதிர்பார்க்கலைதான். :)))) ஆனாலும் ஏதோ ஒரு சின்னக் குறை தெரியறது. சின்ன விஷயத்துக்கு அழுத பகவத்கீதாவா? அவள் ஏன் அழுகிறாள் என்பது தெரிந்தும் அதைத் தெரியாதது போல் அவளுக்கு எப்படி நடந்துக்கணும் அலுவலகத்தில்னு சொல்லிக் கொடுத்த விஷ்ரூத்தா? ம்ஹூம், புரியலை. ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இருக்கு.

  அலுவலகம் செல்லும் பெண்கள் அங்கே இம்மாதிரியான நிகழ்வுகளை எதிர்பார்க்கத் தானே வேண்டும். அப்படியும் இவ்வளவு மென்மையாகவா பகவத்கீதா இருப்பது? ஒருவேளை கணவனே மானேஜர் என்பதால் அதிக உரிமையோ? ம்ம்ம்ம்ம்ம்????

  இன்னிக்குத் தான் உங்க வலைப்பக்கம் வர முடிஞ்சது. மிச்சத்தையும் படிக்கணும். மெதுவாப் படிக்கிறேன்.:)))//

  ஆஹா... அன்பு வரவேற்புகள்பா கீதா...

  இனி அடுத்த முறை எழுதும்போது கவனத்தில் கொள்கிறேன்பா...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா கீதா தங்களின் கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 42. வழக்கம்போல இறுதியில் ஒரு பஞ்ச்!

  கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம்.உங்கள் கதை என்றாள் இப்படித்தான் என்று வாசகர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதற்குள் உங்கள் கதைகளின் போக்கினை மாற்றி விடுங்கள் மஞ்சு!போன கதை அன்பின் பிணைப்பும் இந்தக் கதையும் ஒரே மாதிரியான முடிவு!

  தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  அன்புடன்,
  ரஞ்ஜனி

  ReplyDelete
 43. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
  உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும்
  இந்நாள் என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும்......

  ReplyDelete
 45. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 46. I liked the way the story has been dealt with... Very smooth! Very nice names...

  ReplyDelete
 47. அட!
  போட வைக்குது கதை.

  பக்வத்கீதா, சௌடாம்பிகை, விஷ்ரூத்... பேர் எப்படி வைக்கறீங்க?

  ReplyDelete

 48. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...