"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 25, 2011

கதை 6. சிகரம் தொட.....

கதை 6. சிகரம் தொட.....அழுது வீங்கிய கண்களுடன் கலங்கிய முகத்துடன் ஐ சி யூ யூனிட் வெளியே பவானி காத்திருந்தாள்.... உள்ளே தன் ஒரே மகள் தற்கொலைக்கு முயன்று அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உண்டுவிட நாடித்துடிப்பு குறைந்துக்கொண்டே வருகிறது என்ற டாக்டர் ரேகாவின் சொல் கேட்டு அதிர்ச்சியோடு எல்லா ஸ்வாமிகளையும் கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள் மனமுருகி...

வெளியூருக்கு மீட்டிங் என்று போயிருந்த பரமேஷ் தூக்கம் தொலைத்த கண்களுடன் கசங்கிய உடையுடன் நேராக விமான நிலையத்தில் இருந்து ஆஸ்பிடலுக்கு விரைந்து வந்தான்.

அவனைக் கண்டதும் பவானி ஓடிப்போய் கட்டிக்கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்தாள்....

அவளை சமாதானப்படுத்தும் வழி அறியாது வழியும் கண்ணீரை துடைக்கும் சக்தி இல்லாது " இப்ப நம்ம சம்யுக்தா எப்படி இருக்கா " என்று கேட்டான்...

அபாயக்கட்டத்தை இன்னும் தாண்டலைன்னு சொல்றாங்க டாக்டர் என்று அழுதாள்...

பார்க்கமுடியுமா நம் குழந்தையை?

அனுமதி கிடையாதாம்பா.... தீவிரமா சிகிச்சை நடந்துக்கிட்டு இருக்கு.... உங்க வரவுக்கு தான் எதிர்ப்பார்த்திருந்தேன்...

என்ன நடந்தது? ஏன் இப்படி அவசர முடிவு என்று கேட்டுக்கொண்டே பவானியையும் கைத்தாங்கலாய் அங்கிருக்கும் சேரில் உட்காரவைத்து கேட்டான்.

பாம்பேல ஆடிஷன்ல நம்ம பொண்ணு எப்படியும் செலக்ட் ஆயிருவான்னு நம்பிக்கையோடு இருந்தோம்.. அப்ப திடிர்னு அனௌன்ஸ் பண்ணிட்டாங்க நம்ம பொண்ணு செலக்ட் ஆகலன்னு தெரிஞ்சதும் முகம் இறுகி ஒன்றும் சாப்பிடாம என்னோட ஒரு வார்த்தை கூட பேசாம அமைதியா வந்தா ப்ளைட்ல....வீட்டுக்கு வந்ததும் அவ ரூமில் போய் கதவை சாத்திக்கிட்டா.... நானும் சரி இன்னும் கொஞ்ச நாளில் சரியாயிரும்னு சாதாரணமா எடுத்துக்கிட்டேன்.....அது தான் தப்பாகிவிட்டது....

நீங்க தூக்கம் வரலன்னு டாக்டர் கிட்ட வாங்கி வெச்சிருந்த ஸ்லீப்பிங் பில்ஸ் மொத்தமும் போட்டுக்கிட்டு படுத்துட்டா... எப்ப மாத்திரை சாப்பிட்டான்னு தெரியலப்பா... காலை சரசு போய் கதவுத் தட்டி இருக்கா திறக்கலை... என்னிடம் வந்து சொன்னப்ப நானும் போய் கதவு தட்டினேன்... திறக்கலை.. அப்புறம் அக்கம் பக்கம் ப்ளாட் ஆட்களிடம் சொல்லி போலிசுக்கு சொல்லி அவங்க வந்து கதவு உடைத்துப் பார்த்தால் என்று நிறுத்தி மூச்சு விட முடியாது திணறினாள். மகளை அந்த கோலத்தில் எந்த தாய்க்கு தான் பார்த்து தாங்க முடியும்? அவன் அவளை தண்ணீர் குடிக்கவைத்து தேற்றினான்.

பவானி முகத்தை அழுத்தத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தாள்.. அப்புறம் ஆஸ்பிடலில் வேகமாக கொண்டு வந்து சேர்த்துட்டு உங்களுக்கு தகவல் சொன்னேன் என்றாள்...

நம்ம மகளுக்கு நல்லவை சொல்லி தானே வளர்த்தோம்... இது சின்னத் தோல்வி அவ்வளவே... இதுக்கு சாகும் அளவுக்கு போகவேண்டிய அவசியம் இல்லையே.. ஒரே மகள் என்று அவளுக்கு சுதந்திரம் கொடுத்தோம். நம் மகள் அதை மிஸ் யூஸ் செய்யாம படிப்பு பாட்டு நடனம் என்று எல்லாவற்றிலும் முதலில் வந்து நம்மை பெருமைப் படுத்தினாள் என்று சந்தோஷப்பட்டோமே என்று மனம் கலங்கி சொன்னான் பரமேஷ்....

அப்போது ஒரு நர்ஸ் வந்து " உங்களை டாக்டர் வரச்சொன்னாங்க" உங்க மகள் அபாயக்கட்டத்தை தாண்டியாச்சு என்று சொல்லி இருவர் முகத்திலும் தெளிவு வரவைத்துவிட்டு போனாள்...

இருவரும் டாக்டரின் ரூமுக்கு ஓடினர்...

உட்காருங்க என்று கனிவுடன் சொன்னாள் ரேகா....

டாக்டர் எங்க பொண்ணுக்கு என்று முடிக்குமுன்னே இடைமறித்த ரேகா புன்சிரிப்புடன் " உங்க மகள் இப்ப சௌக்கியமா இருக்கா... அவள் உயிரை காப்பாற்றிட்டோம்... ஆனால் அவ இப்படி செய்ததுக்கு காரணத்தை சொன்னால் அவள் மனதையும் சரி செய்து உங்களுடன் அனுப்புவோம். அதற்கு சில நாட்கள் கூட ஆகலாம் என்றாள் டாக்டர் ரேகா...

ஆடிஷனில் தோற்றவிவரம் சொன்னாள் பவானி.... எப்பவும் எல்லாவற்றிலும் முதலில் வரும் என் மகள் இந்த தோல்வியை தாங்கிக்க முடியாது இப்படி செஞ்சுட்டாள் என்று தலைகுனிந்து கண்ணீர் விட்டாள் பவானி...

டாக்டர் ரேகா அவர்கள் இருவரையும் தேற்றினாள்... இப்ப உங்க மகள் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்காள்... அவளை தொந்திரவு செய்யாது போய் பாருங்க. பார்த்துட்டு நீங்க வீட்டுக்கு போங்க... இன்னும் நாலே நாட்களில் உங்க மகள் புதிய ஜென்மம் எடுத்தது போல நம்பிக்கை மனதில் ஏற்றி வாழ்க்கையில் கிடைக்காத எதுக்கும் தற்கொலை தீர்வாகாதுன்னு சொல்லி புரியவைத்து அனுப்பி வைக்கிறேன். நம்புங்க என்று சொன்னதும் இருவரும் கையெடுத்துக் கும்பிட்டனர் ரேகாவை நோக்கி....

இருவரும் போய் சம்யுக்தா பார்த்தபோது பூ ஒன்று கசங்கி படுக்கையில் கிடந்தது போல் துவண்டு கிடந்தாள் சம்யுக்தா... பரமேஷ் சம்யுக்தாவின் அருகே போய் நெற்றியில் விழுந்து கிடந்த முடியை ஒதுக்கி முத்தமிட்டு சொன்னான் ஐ லவ் யூ மை ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல் இந்த அப்பாவும் அம்மாவும் வாழ்வதே என் தங்கம் உனக்காக தான் செல்லமே என்று சொல்லி இருவரும் மௌனமாக அழுதுப் பின் இறைவனுக்கு நன்றி கூறி வீடு திரும்பினர்.

மயக்கத்தில் இருந்து விழித்த சம்யுக்தா எங்கே இருக்கிறோம் என்று பார்த்தாள்.. மாத்திரை சாப்பிட்டோமே... செத்து எங்க வந்திருக்கோம்? வெள்ளை உடை தேவதைகள் காணவில்லையே என்று குழந்தைத்தனமாக எண்ணியபோது டாக்டர் ரேகா சிரித்த முகத்துடன் உள் நுழைந்தாள்... 

ஹை மை டியர் இப்ப எப்படி இருக்கு? அட என்ன விழிக்கிறே? நீ இன்னும் சாகலை... அதுக்குள்ள உங்கம்மா காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. உங்கம்மாவும் அப்பாவும் அழுத அழுகை கண்டு யாருக்குமே கண்கலங்கிவிடும்.. ஏனம்மா இப்படி என்று தலை கோதிக்கொண்டே கேட்டாள் டாக்டர்...

சாரி டாக்டர் சின்ன வயதில் இருந்து எப்பவும் எதிலும் முதலில் வந்தே பழக்கப்பட்ட எனக்கு இந்த தோல்வி ஜீரணிக்கமுடியலை என்று தலை திருப்பிக்கொண்டாள்....

சம்யுக்தா எழுந்து உட்கார மெத்தை சரி செய்து முதுகுக்கு சாய்வாக ரெண்டு தலைகாணி வைத்து உட்காரவைத்தாள் டாக்டர் ரேகா...

இப்ப எப்படி ஃபீல் செய்றே சொல்லு என்றாள் அவள் மனதிலுள்ளதை படிக்க முயன்று.....

தோற்றது தோற்றது தானே இனி என்னால் எப்படி என் காலேஜ் நண்பர்களின் முகத்தில் விழிக்க முடியும் என்று அழத்தொடங்கினாள்....

தோல்வி இறுதிப்படி இல்லை பெண்ணே.... தோல்வி தான் நீ வெற்றியை அடைய ஏறும் முதல் படி என்று சொன்னாள்...

புரியாமல் விழித்தாள் சம்யுக்தா....

ரஷ்பல் என்று வெளியே பார்த்து கூப்பிட்டதும் கோதுமை நிறத்துடன் அழகான களையான முகத்துடன் முகம் நிறைத்த சிரிப்புடன் பஞ்சாபி சூட் அணிந்த ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.. நுழைந்து கட்டிலை பிடித்துக்கொண்டு சம்யுக்தா அருகே போய் உட்கார்ந்தாள்...

ரேகா சம்யுக்தாவிடம் , " இவள் என் தோழியின் மகள் ரஷ்பல் பஞ்சாபில் இருக்காள்... இவளை எங்காவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா " என்று கேட்டாள்..

ஆச்சர்யத்துடன் சம்யுக்தா சொன்னாள், " இந்த பெண்ணும் இந்த ஆடிஷனில் வந்து தோற்றுப்போனவள்".

ஆனால் உன்னைப்போல் முட்டாள்தனமாக சாக முயற்சிக்கவில்லை.... நீ எல்லாவற்றிலும் முதலில் வருவே என்று சொல்கிறாயே... ரஷ்பலிடம் ஏதாவது வித்யாசம் காணமுடிகிறதா உன்னால் என்றாள் டாக்டர் ரேகா...

இல்லையே என சம்யுக்தா எனச் சொன்னாள்....

ரஷ்பல் பார்வையை இழந்து 4 வருடங்கள் ஆகிறது என்று சொன்னதும் அதிர்ச்சியுடன் சம்யுக்தா எழுந்து நன்றாக உட்கார்ந்தாள்...

என்ன சொல்ரீங்க டாக்டர் என்று கேட்டதும் ரஷ்பலுக்கு அவர்கள் பேசும் பாஷை புரியவில்லை என்றாலும் தன்னைப் பற்றி தான் பேசுகிறார் என்று அறிந்தாள்.

ஆமாம் சம்யுக்தா ரஷ்பலுக்கு 4 வருடம் முன்பு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடந்தப்பின் ஒரு நாள் மயங்கி விழுந்தாள் வீட்டில்...

என்னிடம் தான் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ப்ரெயின் ட்யூமர் என்று தெரிந்து சிகிச்சையை நம்பிக்கையுடன் தொடங்கினேன். கொடுத்த சிகிச்சை ப்ரெயின் ட்யூமர் சரியாக்கி இவள் பார்வையை பறித்தது. ஆனாலும் நம்பிக்கை இழக்காது இவள் கதக் ஒடிசி நடனத்தில் முழு ஈடுபாட்டுடன் பயிற்சியை தொடர்ந்தாள்.. சீக்கியர்களுக்கே உரிய வீரச்சண்டை வாள் சண்டையும் பார்வை போனப்பிறகே கற்றுத் தேர்ந்தாள். கல்யாணம் நடக்க மாப்பிள்ளை வீட்டினர் தடை சொல்லவில்லை. சந்தோஷமாக நிச்சயம் செய்த ரஷ்பலையே திருமணமும் செய்துக்கொண்டார் ரஷ்பலுக்கு நிச்சயித்த வீட்டினர். அதன்பின் திரும்ப ப்ரெயின் ட்யூமர் வரத்தொடங்கியது. சிகிச்சைக்குக் கட்டுப்படாத ப்ரெயின் ட்யூமருக்கு ஏற்கனவே தன் பார்வையை பறிகொடுத்த ரஷ்பல் நம்பிக்கையை மட்டும் விட்டுகொடுக்கவில்லை. முழு முயற்சியுடன் சிகிச்சைக்கு தன்னை உட்படுத்தினாள், இப்ப இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆடிஷனில் தனக்கு கண் தெரியாது என்று சொல்லி பரிதாபம் சம்பாதிக்க விரும்பாத ரஷ்பல் எல்லோரையும் போலவே போய் ஆடித் தோற்றாள்.. 

தோற்றதினால் வருத்தம் இல்லை அவளுக்கு... வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியுமே போராடி போராடித்தான் வாழ வரம் வாங்கினாள் இறைவனிடத்து..... இந்த வருடம் தோற்றால் என்ன அடுத்த வருடம் ஜெயிக்க ஒரு சந்தர்ப்பம் இருக்கே என்று தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும்போதும் நம்பிக்கையை இழக்காது இன்னும் பயிற்சியை கடினமாக்கிக்கொண்டு இருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதும்

சம்யுக்தா கண்ணில் நீருடன் ரஷ்பலின் கைகளை பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

இது எல்லாமே பரமேஷும் பவானியும் வெளியிலிருந்து வரும்போதே கேட்டனர். மனதில் அதே உற்சாகத்துடன் தன் மகள் இனி வாழ்க்கையை தொடர்வாள் என்ற நம்பிக்கையுடன் கையெடுத்து கும்பிட்டனர் இருவரும்...

ரஷ்பல் சம்யுக்தா இருவரும் நடனத்தை ஒன்றாய் பயிற்சி தொடங்கினர்.... பரமேஷ், ரேகா, பவானி மூவரும் முழு உற்சாகத்துடன் இருவருக்கும் ஒத்துழைத்தனர். 

ஒருபக்கம் சிகிச்சை, ஒரு பக்கம் பயிற்சி என்று ரஷ்பல்லின் தேகம் ஆரோக்கியம் குறையும்போதெல்லாம் மருந்து உணவு ப்ரார்த்தனை இவற்றின் உதவியால் ரஷ்பல்லின் ஆயுள் நீடிக்க வேண்டினர் இறையிடத்து சொந்தமும் சம்யுக்தாவின் பெற்றோரும்...

சோர்ந்து போகும் சம்யுக்தாவுக்கு மருந்தாக இருந்தது ரஷ்பல்லின் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள்....

இதெல்லாம் நடந்தது 2008 இல்....

இப்போது திரும்ப ஆடிஷனுக்கு போகிறார்கள் இருவரும்... தனித் தனியாக தங்கள் நடனத்திறமையை நிரூபித்து தேர்வாயினர் இருவரும்...

ஜீ டிவியில் டான்ஸ் இண்டியா டான்ஸ் போட்டியில் இருவரும் பங்குப் பெற்றனர்....

இருவரும் சேர்ந்து நடனமாடினர்... ரஷ்பல்லுக்கு இயற்கையிலேயெ கண் தெரியாது. சம்யுக்தா தன் கண்ணை ஜட்ஜ் ஒருவரிடம் சொல்லி கட்டச் சொன்னாள்.

இருவரும் சுழன்று சுழன்று ஆடினர்... ஜட்ஜ் மூவரும் ஆடியன்ஸ் அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்தனர்... எங்கும் ஒரு இடத்திலும் கூட சிறு தவறு கூட செய்யாது இருவரும் ஆடி அந்தரத்தில் கயிற்றில் தொங்கி சாகசங்கள் செய்து கதக் ஒடிசி எல்லாம் ஆடி முடித்து சல்சா என்றா மேற்கத்திய நடனமும் ஆடி அசத்தினர்..ஆடி முடித்ததும் கரகோஷம் வானைப் பிளக்கும் சத்தம் கேட்டது..

ஜட்ஜ் மூவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்..

அதன்பின் சம்யுக்தா கட்டியிருந்த கண்ணை கழட்டச் சொல்லி எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் ஜட்ஜ்களின் அனுமதியோடு என்று ஆரம்பித்தாள்...

எல்லோரும் அமைதியுடன் அமர்ந்து சம்யுக்தாவின் வார்த்தைகளைக் கேட்க ஆவலாயினர்.

இதோ இங்கு நிற்கும் ரஷ்பல்லுக்கு கண் தெரியாது என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

தன் தற்கொலைக்காரணத்தையும் தான் மீண்டு வந்ததும் இன்று நம்பிக்கையுடன் நடனத்தில் ஜெயித்ததற்கும் வாழ ஒரு அர்த்தம் கற்பித்தது இந்த ரஷ்பல்லே காரணம் என்று சொன்னதும் ஜட்ஜ் முதற்கொண்டு எல்லோரும் எழுந்து நின்று ஸ்டாண்டிங் ஓவியேஷன் செய்தனர். 

இருவருக்கும் முழு மார்க்குகள் ஜட்ஜ் மூவரும் கொடுத்தனர்... 

நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ரஷ்பல்லுக்காக இனி இந்தியா முழுக்க ப்ரார்த்திக்கும்.... சம்யுக்தா தன் கண்களை தானம் செய்யப்போவதாக அந்த ஸ்டேஜிலேயே அறிவித்தாள்...

இறைவன் நமக்கு பிறவி கொடுத்தது நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து நம்பிக்கையுடன் வெற்றிகளை சாதித்து எல்லோருக்கும் நல்லதை இறுதி வரை செய்ய மட்டுமே.....


"சாதிக்க தடைகள் ஒரு காரணம் இல்லை..... தடைகளைத் தாண்டி சாதிக்கத் தொடங்கினால் சிகரம் கூட நம் கைவசமே"

8 comments:

 1. எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை
  அழிவின் விளிம்பில் துவங்கி
  வெற்றியின் உச்சம் நோக்கி கதையை
  நகர்த்திப்போகும் அழகு ,சொல்லி செல்லும் விதம்
  அனைத்தும் அருமையிலும் அருமை
  நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ஹை ரமணி சார்.... அன்பு நன்றிகள் சார்.....

  ReplyDelete
 4. அன்பின் ரத்தினவேலு ஐயா, அன்பு நன்றிகள் தங்களின் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

  ReplyDelete
 5. இந்தக்கதையை மிக அழகாக நகர்த்திச்சென்று மிக அருமையாக முடித்துள்ளீர்கள், மஞ்சு.

  //இறைவன் நமக்கு பிறவி கொடுத்தது நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து நம்பிக்கையுடன் வெற்றிகளை சாதித்து எல்லோருக்கும் நல்லதை இறுதி வரை செய்ய மட்டுமே.....

  "சாதிக்க தடைகள் ஒரு காரணம் இல்லை..... தடைகளைத் தாண்டி சாதிக்கத் தொடங்கினால் சிகரம் கூட நம் கைவசமே"//

  சூப்பரான, தன்னம்பிக்கையளிக்கும் வரிகள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
 6. தோல்வி இறுதிப்படி இல்லை பெண்ணே.... தோல்வி தான் நீ வெற்றியை அடைய ஏறும் முதல் படி என்று சொன்னாள்...


  அருமையான தன்னம்பிக்கை கதை.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  இந்தக்கதையை மிக அழகாக நகர்த்திச்சென்று மிக அருமையாக முடித்துள்ளீர்கள், மஞ்சு.

  //இறைவன் நமக்கு பிறவி கொடுத்தது நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து நம்பிக்கையுடன் வெற்றிகளை சாதித்து எல்லோருக்கும் நல்லதை இறுதி வரை செய்ய மட்டுமே.....

  "சாதிக்க தடைகள் ஒரு காரணம் இல்லை..... தடைகளைத் தாண்டி சாதிக்கத் தொடங்கினால் சிகரம் கூட நம் கைவசமே"//

  சூப்பரான, தன்னம்பிக்கையளிக்கும் வரிகள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்//

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

  ReplyDelete
 8. //இராஜராஜேஸ்வரி said...
  தோல்வி இறுதிப்படி இல்லை பெண்ணே.... தோல்வி தான் நீ வெற்றியை அடைய ஏறும் முதல் படி என்று சொன்னாள்...


  அருமையான தன்னம்பிக்கை கதை.. பாராட்டுக்கள்..//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...