"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 28, 2010

பார்த்த தருணங்கள்.....

பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

தவிப்பும் துடிப்பும் காணும் வரையில் மட்டுமே
கண்டப்பின்னோ சந்தோஷிப்பது என் மனமுமே
கவிதையும் அணைத்தாண்டும் கரையாக புரளுமே
காத்திருப்பின் பலனும் கண்டும் அனுபவித்தோமே

தாலாட்டும் கனவுகளும் சற்றே ஓய்வெடுத்து
உன் மடியும் என் உடல் பாரத்தை சுமந்து
உன் கன்னக்கதுப்பை தொட்டு விளையாடும்
என் விரல்களை உன் கைகளும் மன்னித்து

தொடரும் உறவாக இணைந்து கைக்கோர்த்து
அன்பாய் அழகாய் மெல்ல நீயும் புன்னகைத்து
உன்னுடன் கதைத்த நொடிகள் கண்ணே மறவாது
இறுதி மூச்சும் மெல்ல பிரியும் உன்னோடு பிணைந்து.....

உன்னையே சுவாசித்துக்கொண்டு....

நிமிடத்தில் மாறிய மனதிற்காக
காதலின் இனிய மொழிக்காக
காத்திருக்கும் அன்பு இதயத்திற்க்காக
மௌன மொழி பேசும் கண்களுக்காக
கண்ணே நானும் உன் வழி பார்த்திருப்பேன்
உன்னையே சுவாசித்துக்கொண்டு என்றும் உனக்காக....

Wednesday, July 21, 2010

உனக்கும் எனக்குமான....

உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்

நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்

நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்

நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்

பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்

நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்

உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்

நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்

பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்

உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்

உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....

Monday, July 12, 2010

கூசிடாது வாங்கும் லஞ்சம்....

காசுகொடுக்காமல் வேலை நடக்க
இந்தியத்தாத்தா நடமாடவில்லையே

காசுகொடுத்தாலாவது வேலை நடக்க
கைக்கட்டி வரிசையில் நிற்கையிலேயே

குறைகளை சுட்டிக்காட்டி ஒதுக்கித்தள்ளி
போய்வா மற்றொருநாள் பார்க்கலாம்

அசட்டையான பதிலும் காவியேறிய பற்களும்
கறைபடியாத கையும் இல்லை காப்பாற்ற நாதியுமில்லை

லஞ்சத்தின் பிறப்பு திருட்டுத்தனமாய் தொடங்கி
தொடர்ந்து கொண்டாடும் பகிங்கர விழாவாகிவிட்டது

உழைத்தவர்களின் வயிறுகட்டி வாய்க்கட்டி
உண்டுகளிப்பவர்களின் கையில் கொட்டி

இன்னமும் வேலை நடக்கவில்லை ஐயா...
நெஞ்சுபொறுக்குதில்லையே ஐயா....

இந்தியனே வெட்கப்படும் கேட்டினை
கேட்டு கண்டிக்க ஆளே இல்லையா?

Thursday, July 8, 2010

நீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்...

உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
நீ வேண்டும்....

மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்....

இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
நீ வேண்டும்....

உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க
நீ வேண்டும்....

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
நீ வேண்டும்....

துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
நீ வேண்டும்...

கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
நீ வேண்டும்....

இறுதிமூச்சிலும் உன்மடியில் சாய
நீ வேண்டும்.....

நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

Wednesday, May 12, 2010

எப்போது எப்போது?

நட்பு கொள்ள துடித்திடும் மனது
காதலை சொல்ல தயங்கிடும் வயது

உழைப்பைக்கொண்டு முன்னேறும்போது
தன்னடக்கம் கொண்டு பணிவுடன் நிற்கும்போது

வெற்றிகள் வந்து குவிந்திடும்போது
அன்பு புன்னகையை பகிர்ந்திடும்போது

தயங்காது காதல் சொல்லிவிடு அப்போது
அன்போடு அணைத்துக்கொள்வாள் இசைவோடு....

காதலுக்கு வலிமை கூட்டி....

உயிர் உயிராய் உயிருடன் இருக்க
எத்தனை பெருகவேண்டும் காதல்?
அன்பு அன்பாய் அன்புடன் இருக்க
எத்தனை நிரூபிக்கவேண்டும் அன்புக்காதல்?

பெருகினாலும் குறைந்தாலும்
மாறுபாடு காதலுக்கில்லை
காதல் என்றும் ஒன்றே தான்
உயிர்விடத்தோன்றும் காதலும் ஒன்றேதான்

உண்மை உரைக்கும் உறுதிக்காதல்
பிடிவாதம் கொஞ்சம் தளர்த்திவிடும்
வீம்பாய் பொய்க்கோபம் கொள்ளும்
தன்னுடையது தனக்கே என்று வாதிடும்

உயிர்விட்டு காதலை வலுப்படுத்தும்
காதலுக்கு வலிமை சேர்ப்பதில் அழகில்லை
மனதுக்கு வலிமை கூட்டி காதல் செய்வதை 
அன்றி வேறெதுவுமில்லை....

Wednesday, May 5, 2010

மழையே உனக்கு நன்றி....

அனுமதி கேளாது உள்ளத்தில் நுழைந்துவிடு
முடிந்தவரை உண்டு முடியாததை முத்தமிடு
மென்று முடித்த கணங்களை
கம்பீரமாய் நினைத்துவிடு

ஆண்டு அனுபவித்த பொழுதுகளை
சுகமாய் அசைப்போட்டுவிடு
ஒட்டிக்கிடக்கும் தேகத்தை
முத்தத்தால் இன்னும் இறுக்கிவிடு

மழைத்துளிகள் உடல்களைப் போர்த்திக்கொள்ள
காதல் அரங்கேற்றம் நடத்திவிடு
மூச்சுக்காற்று போட்டியிட
முத்தத்துக்கு முதலிடம் கொடுத்துவிடு

உடைகளற்ற உடல்களை
மழைக்குக் கொஞ்சம் விட்டுக்கொடு
மழைக்கவிதை எழுதிவிட
முத்தங்களை சாரலாய் தெளித்துவிடு

காதல் பெருகி காமம் உருகி
தேகம் பதறி முத்தங்கள் சிதறவிடு
ஜில்லென்ற மழையின் சாரலில்
தேகச்சூட்டின் ஏக்கங்கள் கரைத்துவிடு

உடலை வான்மழையில் நனைத்துவிடு
உள்ளத்தை எனக்கு மட்டும் தந்துவிடு
மெல்லிய அதரங்களின் மினுமினுப்பை
முரட்டு இதழ்களில் சத்தமில்லா ஒப்பந்தமிடு

உள்ளத்தில் எழும் தீயை அணைத்துவிட
மழையை கொஞ்சம் தூதுவிடு
வெட்கமில்லாது பார்க்கும் மேகங்களை
காதலின் சாட்சிக்கு அழைப்புகொடு

விலகாத காதல் விலகிய உடைகள்
சிதறாத காமம் சிதறிய மழைத்துளிகள்
சங்கமம் வெகு நன்றாய் நடந்துவிட
நன்றிகள் அதிகம் மழைக்கு சொல்லிவிடு

அடுத்தப்பிறவி....

போகும் வழியெல்லாம்
தடுக்கி விழும்போது
நெருப்பின் நாக்குகள்
அணைக்க தாவுகிறது

தப்பிப் பிழைத்தபோதோ
கூரிய அம்பாய்
குறி தவறாது வார்த்தைகள்
மனதைத் துளைக்கிறது

பொத்தலான இதயத்துடன்
கண்ணீருடன்
அபயம் கூறி
கை நீட்டுகிறது

இறைவா என்று...
விடாது துரத்திய தீ நாக்கு
கொழுந்துவிட்டெரிந்து
நீட்டிய கைகளை அணைத்து

உடம்போடு மொத்தமாய்
எரித்துச் சொன்னது
பிழைக்காது நீ
செத்துப்போ
இப்பிறவியில்
பட்டது போதும்

இனி நீ துன்பப்பட
ஒன்றுமில்லை இப்புவியில்
ஆதலால் உனக்கு
ஜென்மமும் இல்லை
அடுத்த பிறவியில்.....

உயிர்வலி....

மனம் மரத்து தான் போகிறது
உயிர்விடும் வழி தேடுகிறது
வலியும் வேதனையும் கூடுகிறது
வேண்டாததை நினைக்க வைக்கிறது

சம்மட்டி அடி இதயத்தில் அறைகிறது
உடம்பு மேலும் கனத்து போகிறது
உயிர் உடலை துறந்துவிட
மனதிடம் பேராசையோடு யாசிக்கிறது

திருவிளையாடல் இவ்வளவுதானா?
இறைவனை நோக்கி தொழுகிறது
கைகள் பின்னப்பட்ட நிலையிலும்
முறையிட்டு அழுது தொலைக்கிறது

பண்பட்ட மனதாயிருக்க முயல்கிறது
முடியாததால் கண்ணீர் கரைபுரள்கிறது
இனியும் உயிரோடு இருக்கப்பிடிக்காது
உயிர்வலி போகும்வரை கதறிதீர்க்கிறது
Related Posts Plugin for WordPress, Blogger...