"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, July 4, 2011

கதை 8.நமக்கும் மேலே ஒரு சக்தி.....

கதை 8.நமக்கும் மேலே ஒரு சக்தி.....

தாயம்மா சட்னி அரைச்சிட்டீங்களா? என்று குரல் கொடுத்துக்கொண்டே த்விஜோத்தமா இட்லிகளை லாவகமாக இட்லி தட்டில் இருந்து எடுத்து பாத்திரத்தில் கொட்டியபடி கேட்டாள்...

மிளகா சட்னி அரைச்சிட்டேன்மா , சாம்பாரும் கொதிக்குது பாருங்க கொத்தமல்லி தழை போட்டு இறக்கி மூடி வெச்சுருங்க....

ஜொஷில்லா பாப்பா சாமி கும்பிட செம்பருத்தி பூவும் பவழமல்லி பூவும் சங்கு பூவும் கேட்டிருக்கு அதை பறிச்சு மாலையாக்கி கொடுத்துடறேன். என்று தோட்டத்தில் இருந்து பதில் கொடுத்தாள் அந்த வீட்டு வேலைக்காரம்மா எனும் தாயம்மா...

ஜொஷில்லா பூஜை அறையில் இருந்து பாடும் சுப்ரபாதம் காதுக்கு கேட்க இனிமையாக இருந்தது... அதை கேட்டுக்கொண்டே கணவர் ஜோஷி இன்று பம்பாயில் இருக்கும் மீட்டிங்குக்கு புறப்பட எல்லாம் தயாராக வைக்க ஓடினாள் த்விஜோத்தமா...

தாயம்மா ஒரு தட்டில் அழகான சங்கு பூக்களும் சிவந்த செம்பருத்தி பூவும் காம்பு மட்டும் அழகு காவி கலரில் இருக்கும் பவழமல்லி கோர்த்து மாலைகளாக்கி கொண்டு வந்து வைத்தாள் ஜொஷில்லாவின் அருகே...

அந்த மாலைகளை கோர்த்து ஸ்வாமி படத்திற்கெல்லாம் போட்டு தீபாராதனை காட்டிவிட்டு காலேஜுக்கு ஓட ரெடியாகி சாப்பிட சாப்பாட்டு மேஜை அருகே வந்து அமர்ந்தாள் ஜொஷில்லா....

அங்கே அவளுக்கு முன்னே ஜோஷி பேப்பர் படித்துக்கொண்டே மிளகாய் சட்னியிலும் சாம்பாரிலும் இட்லிகளை தோய்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்..

குட்மார்னிங் டாட் என்றபடி தட்டு எடுத்து வைத்துவிட்டு அம்மா என்று குரல் கொடுத்தாள்...

வந்துட்டேன் என்றபடி த்விஜோத்தமா வியர்க்கும் முகத்தை துடைக்க நேரமில்லாது இட்லிகளை மகளின் தட்டில் வைத்து சட்னி வைத்தாள்...

இங்க வா த்விஜோ என்றார்...

என்னங்க என்று அருகே ஓடி வந்தாள்...

இப்படி சாப்பிடாம விரதம் விரதம்னு இருந்து என்ன சேர்த்து வெச்ச்சே?? என்றபடி த்விஜோத்தமாவின் முகத்தில் வியர்த்த வியர்வையை தன் கைக்குட்டையால் அன்பாய் துடைத்து விட்டு கேட்டார்.. என்ன விரதம் இன்னைக்கு என்று...

ப்ரதோஷம்... பால் எடுத்து வெச்சுர சொல்லிட்டேன் தாயம்மா கிட்ட... நந்தி அபிஷேகம் பார்த்துட்டு தான் சாப்பிடுவேன் மாலை என்றாள் த்விஜோத்தமா..

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவன் உன் புருஷன் டி.. நீ கடவுளுக்கெல்லாம் பூஜை விரதம் புனஸ்காரம் ஏழைகளுக்கெல்லாம் தானம் தர்மம்.. ஹும் எங்க போய் முடிய போகிறதோ என்று வலிக்காமல் தன் நெற்றியில் அடித்துக்கொண்டு கிளம்ப ஆயுத்தமானார்...

கனிந்த சிரிப்புடன் ஜோஷி துடைத்துவிட்ட முகத்தில் சில்லென காற்று பரவுவதை உணர்ந்து ஜோஷிக்கு டை கட்டி விட விரைந்தாள்...

இதை பார்த்துவிட்டு ஜொஷில்லா சிரித்துவிட்டு சொன்னாள்...

இத்தனை வயசாகியும் டை கட்ட தெரியாது மனைவி கை எதிர்ப்பார்க்கும் அப்பாவை போல இன்னும் நிறைய பேர் இருக்காங்க போல உலகத்துல...

வாயை மூடுடி வாலு... என்று சிரித்துவிட்டு சொன்னாள்... டை கட்டிக்க உங்க அப்பாவுக்கு தெரியாதுன்னா நினைக்கிற?

இந்த அவசர யுகத்துல அரக்க பரக்க ஓடும் எத்தனையோ கணவன்மார் மனைவியிடம் கொஞ்சி அன்பாய் பேச கிடைக்கும் ஒரு சில நொடிகளும் நிமிடங்களும் தான் இந்த டை கட்டி விட சொல்லும் நாடகம்... புரிஞ்சுதா என்று கன்னத்தில் தட்டிவிட்டு ஓடினாள் டை கட்டி விட....

ஜொஷில்லா சிரிப்புடன் காலேஜுக்கு கிளம்பி டாட், அம்மா தாயம்மா பை கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியை கிளப்பினாள்...

என்ன ஐயாவுக்கு டை கட்டிக்க தெரியாதோ என்று டை கட்டிக்கொண்டே கேட்டாள் த்விஜோத்தமா...

த்விஜோவின் இடுப்பில் கை கொடுத்து இழுத்து அருகே அணைத்தபடி காதில் கிசுகிசுத்தார்...

அடி என் பட்டிக்காட்டு அன்பு மனைவியே... இதெல்லாம் ஒரு ட்ரிக் தான்... எப்ப பார்த்தாலும் கோவில் கோவில்னு ஓடுவே... இல்லன்னா ஏழை பிள்ளைகளுக்கு பாட்டும் படிப்பும் சொல்லி கொடுத்துக்கிட்டு கதாகாலேட்சபம் பண்ணிக்கிட்டு இருப்பே...

எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.. உழைப்பும் நேர்மையும் தான் என்னை பொறுத்தவரை தெய்வம்.... மற்றவருக்கு கெடுதல் செய்யாது தன் வழியில் உழைத்து நேர்மையாக முன்னேறும் யாரும் தெய்வத்தை காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.. ஆனா என் பத்தாம்பசலி பொண்டாட்டியே நீ சாமி கும்பிடு.. அதை நான் தடுக்க மாட்டேன்.. இப்ப கூட பாரு இன்னைக்கு ப்ராஜக்ட்டுக்கு கொட்டேஷன் நாம கொடுத்தது தான் சரின்னு ஒத்துக்கிட்டு ப்ராஜக்ட் நம்ம கிட்ட கொடுத்தான்னா அதில் லாபம் நமக்கு ரெண்டு கோடி.. இப்படி உன் புருஷன் ஓடி ஓடி உழைக்கிறான்.. நீ என்னடான்னா.. இடைமறித்து அவன் வாயை பொத்தினாள்...

அன்பாய் கனிவாய் அவர் முகம் பார்த்து சொன்னாள்... பத்திரமா பார்த்து போயிட்டு வாங்க... இன்னைக்கு நந்தி அபிஷேகம் முடிஞ்சு பூஜை முடியுமுன் நீங்க வந்துருவீங்க.. சேர்ந்தே சாப்பிடுவோம் இரவு உணவு என்று அன்பாய் நெற்றியில் முத்தமிட்டு அவரை அனுப்பினாள் த்விஜோத்தமா...

சென்னை ஏர்ப்போர்ட்டில் எல்லா ஃபார்மாலிட்டீசும் முடித்துக்கொண்டு வேகமாக ஃப்ளைட்டில் சென்று அமர்ந்தார்...

விமானம் பம்பாய் ஏர்ப்போர்ட்டை அடைந்தது...

அவர் நினைத்தபடியே ப்ராஜக்ட் அவருடைய கம்பனிக்கே கிடைத்தது... சந்தோஷம் நெஞ்சை அடைத்தது அவருக்கு....

வேகமாக வீடு திரும்ப எண்ணினார்... காலையில் இருந்து விரதம் விரதம்னு சாப்பிடாம காத்திருப்பா என்று சொல்லிக்கொண்டே விரைந்தார்...

இங்கே த்விஜோத்தமா மணி மாலை மூணரை ஆகும்போதே தலை குளித்து நந்தி அபிஷேகத்துக்கான பால் பூஜைக்கான பொருள் எல்லாம் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு விரைந்தார்... 

அம்மா மொபைல் விட்டு போறீங்க என்று தாயம்மா குரல் கொடுத்ததும் சிரித்துக்கொண்டே சொன்னாள் கோவிலுக்கு தானே தாயம்மா.. வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு புறப்பட்டாள்...

ரோடு க்ராஸ் செய்து கோவிலை நெருங்குமுன் பத்து வயதுள்ள ஒரு சிறிய பெண் அழுக்காக பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தபோது.. சட்டென கண்ணை இருட்டி ரோடில் விழுந்தாள்...

எல்லோரும் எனக்கென்ன என்பது போல் அவரவர் வேலையில் கவனமாக த்விஜோத்தமா ஓடினாள் அந்த பெண் அருகே...

அந்த பெண்ணை தூக்கி தன் மடியில் படுக்க வைத்து அபிஷேகத்துக்காக வைத்திருந்த பாலை அந்த பெண்ணின் வாய் திறந்து புகட்டினாள்...

அந்த பெண் மெல்ல கண் திறந்து பார்த்தாள். " அம்மா நாலு நாளா பட்டினி சாப்பிட ஒன்னும் கிடைக்கல அதான் என்று சொல்லுமுன் இடைமறித்து த்விஜோத்தாமா சொன்னாள்.. முதல்ல இந்த பாலை முழுக்க குடிம்மா.. நீ இனி பிச்சை எடுக்க வேண்டாம் உனக்கு என் வீட்டிலேயே வேலை போட்டு தருகிறேன்.. அந்த பெண் நன்றியுடன் பாலை குடித்துக்கொண்டு இருக்கும் அதே நேரம்... 

விமானம் சென்னை தரையிறங்கும் நேரம் நெஞ்சில் சுருக் என்றது ஜோஷிக்கு.... என்ன என்று உணரும்முன்னே திரும்ப வலி தொடங்கியது.. வலி பரவி முகம் முழுக்க வேர்த்து மூச்சு விட ப்ரயத்தனம் செய்து தோற்றார்.. இதை தூரத்தில் இருந்து கண்ட ஹேர் ஹோஸ்ட் வேகமாக ஓடி வந்தார் இவர் அருகே.... ஃப்ளைட் தரை இறங்கியது.... உடனே ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.. துரிதமாக இவரை ஆஸ்பிடலில் கொண்டு சேர்த்தார்... டாக்டர் பரிசோதித்து சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்தமைக்கு அந்த நபருக்கு நன்றி சொல்லி இவருக்கு உடனடி மருத்துவம் செய்யத் தொடங்கினார்... 

கண் விழிக்க முயன்று கலங்கலான காட்சியாக உதவின அந்த நபரின் சட்டையில் அவர் பேர் பொறித்த இடத்தில் பேரை வாசிக்க முயன்றபோது நந்தீஷ்வர் என்ற பெயர் கண்டு ஆழ்ந்த மயக்கத்திற்கு போனார் ஜோஷி....

அபிஷேகத்துக்கு வேறு பால் வாங்கிக்கொண்டு அந்த சிறுமியையும் கூட்டிக்கொண்டு கோவிலுக்கு விரைந்து நந்தி அபிஷேகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது தாயம்மா பேயறைந்த முகத்துடன் நின்றுக்கொண்டு இருப்பதை கண்டாள் த்விஜோத்தமா...

என்ன தாயம்மா 

அம்மா இப்ப தான் ஆஸ்பிட்டல்ல இருந்து போன் வந்தது ஐயாவுக்கு நெஞ்சு வலின்னு சொல்ல முடியாது திணறினாள்...

உடனே த்விஜோத்தமா தாயம்மாவிடம் சிறுமியை ஒப்படைத்து குளிக்க வெச்சு வேறு உடை போட்டு விடுங்க தாயம்மா நான் ஆஸ்பிடலுக்கு கிளம்பறேன்.. ஐயாவுக்கு ஒன்னும் ஆகாது.. என்று தன் மனதை சமாதானப்படுத்திக்க முயன்று அழுகையை அடக்க முடியாமல் ஓடினாள் காரை எடுத்துக்கொண்டு...

டாக்டர் இப்ப இவருக்கு எப்படி இருக்கு என்று விசனத்துடன் பார்த்தாள் த்விஜோத்தமா...

சரியான நேரத்தில் இதோ இந்த நல்ல மனிதர் கொண்டு வந்து சேர்த்துட்டார்...

ரொம்ப நன்றிங்க என்று சொல்லிவிட்டு அவரை பார்க்கலாமா என்றபோது...

உறக்கத்திற்கான ஊசி போட்டிருக்கோம்... ரெண்டு மணி நேரம் கழிச்சு விழித்ததும் நீங்க போய் பார்க்கலாம் என்றார் டாக்டர்..

ஓடினாள் ஜோஷியைக் காண..

கூடவே ஓடி வந்தார் அந்த நபரும்....

இரண்டு மணி நேரமும் விடாது இறைவனை ப்ரார்த்திக்கொண்டே இருந்தாள் த்விஜோத்தமா...

கண் திறந்து மலங்க மலங்க பார்த்தார்...

யாரோ இருப்பதையும் சட்டை செய்யாது ஓடி போய் அணைத்துக்கொண்டாள் த்விஜோத்தமா ஜோஷியை..

உங்களுக்கு ஒன்னும் இல்லங்க.... நீங்க நல்லாயிட்டீங்க...

தெரியும் என் அன்புக்காதல் மனைவியே என்று மிக கஷ்டப்பட்டு சிரித்தார்....

என்னை காப்பாற்றியது யாருன்னு தெரிஞ்சா நீ ஆச்சர்யப்படுவே என்று மெல்ல முனகினார்...

இதோ இவர் தானே என்றாள் த்விஜோத்தமா...

ஆமாம் இவர் பெயர் நந்தீஷ்வர் என்று சிரித்துக்கொண்டே தெய்வத்தை நம்புவேன் த்விஜோ.... ஏன்னா என் மனைவியின் நல்ல குணத்துக்கு ஆண்டவன் என்னை காப்பாற்றி பத்திரமா என்னை உன்னிடம் சேர்த்திருக்காரே என்றார்....

இறைவனுக்கும் அந்த நந்தீஷ்வருக்கும் இருவரும் ஒன்றாய் நன்றி சொன்னர்.....


நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு.....நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு...

10 comments:

 1. நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அருமை அருமை
  ஆரம்பத்தில் ஏன் இப்படி கஷ்டப்பட்டு
  உச்சரிக்கிற பேராக வைத்திருக்கிறீர்கள் என
  யோசித்தபடிதான் பதிவைப் படிக்கத் துவங்கினேன்
  கடைசியில் அதை மிக அழகாக சேர்த்த விதம் அற்புதம்
  நல்ல கதை அருமையாகவும் சொல்லி இருக்கிறீர்கள்
  நம்பிக்கை ஏற்படும்படியாக மிக அழகாக கதை சொல்லிவிட்டு
  பரம ஏழைக்கு செய்யும் தொண்டே
  பரமேஷ்வரனுக்கு செய்யும் தொண்டு என்பதையும்
  மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டு
  கடைசியில் சொல்லியுள்ள அந்த நம்பினால் நம்புங்கள்
  என்ற வாசகம் தேவையா என்ற எண்ணத்தை தவிர்க இயலவில்லை
  சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் சதீஷ்குமார் உங்களின் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

  ReplyDelete
 4. அன்பு நன்றிகள் ரமணி சார்..... நீங்கள் ஆழ்ந்து என் படைப்புகளை படிக்கிறீர்கள் என்று அறிய முடிகிறது. தாங்கள் கூறியதை படித்து அந்த வாக்கியம் மாற்றி விட்டேன் சார்...

  ReplyDelete
 5. கஷ்டப்படுபவர்களுக்கு செல்லும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவை என்பதை வலியுறுத்தும் கதை வாழ்த்துக்கள்

  நேரமிருக்கும் போது என் தளத்திற்கு வருகை தாருங்கள்

  www.kudanthaiyur.blogspot.com

  ReplyDelete
 6. supper kathai
  arumaiyaay solliyirukkiringka.
  vaalththukkal....

  ReplyDelete
 7. ஒரு காலத்தில் கதைகளை தேடி தேடி படிப்பேன். இப்போது சிறுகதைகளை படிக்கும் ஆர்வம் குறைந்தவிட்ட எனக்கு உங்கள் கதைகளை படித்த பின் ஆர்வம் மீண்டும் துளிர்த்து வருகிறது. கதை அருமை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.. நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். சில நேரங்களில் நேரமின்மையால் பதில் போடவில்லை. அதற்க்காக மன்னிக்கவும்.

  ReplyDelete
 8. உண்மையே சரவணன்.... மனிதநேயத்துடன் இருந்து செய்யும் சேவை இறைவனை சென்றடைகிறது... கண்டிப்பாக உங்கள் தளத்தை வந்து பார்க்கிறேன் சரவணன்... அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 9. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 10. அன்பு நன்றிகள் சகோதரரே சிறுகதைகள் படிக்க ஆரம்பித்தமைக்கு, இங்கு வந்து கருத்து பதிந்தமைக்கும்....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...