"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

என்றும் இணைந்திருப்போம்..

ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டு
ஒருவர் மூச்சை
ஒருவர் உண்டு

கனவுகளை அழகாய்
சுமந்துக்கொண்டு
கற்பனை வானில்
மிதந்துக்கொண்டு

நம்மை நாமே
நன்றாய் ரசிப்போம்
நம் காதலை என்றும்
மறக்காதிருப்போம்

நம் கடமைகளில்
மூழ்கி இருப்போம்
அன்பால் இருவரும்
என்றும் இணைந்திருப்போம்...

ஆசை ஆசை....

ஆசை ஆசை....
உன் வசமாகிவிட ஆசை
உன் மனதில் என்றும்
இருந்து விட ஆசை

அன்பால் உன்னை
வளைத்துவிட ஆசை
உன் மூச்சை
கொஞ்சமே சுவாசிக்க ஆசை

உன் இதழில்
கவிதை வரைய ஆசை
உன் பாதம்
என் இல்லம் புக ஆசை

என் மனதில் நீ
என்றும் உறைந்திட ஆசை
வற்றாத அன்பை
நாம் பகிர்ந்துவிட ஆசை

என் காதலை
உன் காதில்
கிசுகிசுக்க ஆசை

கேட்டதும் நீ
நாணி தலைகுனிவதை
கண்டிட ஆசை

காதலுடன் நீயும்
என்னை ஏற்றுக்கொள்ள
ஆசை

ஒரு காதலின் பயணம்....!

நட்பாய் தொடங்கி காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடைபெற்றது
கன்னிக்காதல்...

பட்டம் பெற்றுவிட
தொட்டுவிடும் தூரம்தான்
என்றெண்ணி தொடர்ந்த
கல்லூரிவாழ்க்கையில்
இடம்பெறவில்லை
பருவக்காதல்....

உலகமறியாப்பருவத்தில்
அனுபவம் கற்கா வயதில்
கணவனோடு இணைத்தது
கல்யாணக்காதல்...

பிள்ளைகள் வளர்ந்த வேகத்தில்
திறமைகளை மறந்த நேரத்தில்
சுயமுகவரி தொலைத்து
பொறுமையாய் காத்திருந்தது
அன்புக்காதல்...

அன்புகூடிய அந்த கணங்களில்
சுயநலம் கொண்ட பிள்ளைகள்
வேண்டாமென ஒதுக்கிய பெற்றோரை
வாரி அணைத்தது
முதுமைக்காதல்...

கர்ப்பக்குழந்தையின் கதறல்..

விந்தை உலகம்
மொந்தைக் கள்ளாய்
பழமையைக் கொண்டாடும்
பழமைவாதிகளும்
புதியதை படைக்கும்
புதுமை விரும்பிகளும்

வரதட்சணையால்
வரன் தொலைத்த
பேரிளம்பெண்களும்
காதலைப்பேசி
காசைக் கரியாக்கும்
இன்றைய விடலைகளும்

கழுத்தை இறுக்கும்
லஞ்சமும் ஊழலும்
பொதுவாய் வந்து
பாவமாய் ஓட்டுப்போட்டு
விலகும் பொதுஜனமும்
மனைவியின் காசில்
வெட்டிப்பொழுதை
போக்கும் கனவான்களும்

வட்டித்தின்று
வயிற்றை வளர்க்கும்
ஈட்டிக்காரர்களும்

அழும் குழந்தைகளுக்கு
கள்ளிப்பாலால் அமுதூட்டி
வறுமைக்கு பெண்குழந்தையை
பரிதாபமாய் பலியாக்கி

கல்லுக்கு அபிஷேகம் செய்து
செய்யும் திருட்டுக்கெல்லாம்
இறைவனை உடந்தையாக்கும்
இன்றைய அரசியல்வாதிகளும்

ஐயோ அம்மா
வேண்டாம் வேண்டாம்
இந்த உலகம் காணும்
கொடிய பிறப்பு
எனக்கு வேண்டாம்

மூச்சை இறுக்கி
என்னை உன்னுள் வைத்து
அமிழ்த்தி சுகமாய்
இரு(ற)க்க விடு அம்மா..

சுவாசமாய் நிலைப்பேன் என்றும் உன்னோடு....

அன்பு பூசிய உறவு
நீடித்து என்றும் நிலைப்பதுண்டு
பண்பு இல்லா உறவு
வம்பு வந்து விலகுவதுமுண்டு

விருப்பப்பாடல்கள் கேட்டு
விரும்பிய கருத்துகள் பகிர்ந்து
விண்ணில் நீயும் பறந்து
விலகியது நாணமும் சிறிது

கவிதையில் காதல் கதைத்து
பொய்ப்பேசும் கண்களை தவிர்த்து
வாசமுடன் உன்னை அணைத்து
உன்னை என்றும் என்மனதில் வைத்து

உயிராய் தினமும்  பூஜித்து
ஜனனம் மீண்டும் எடுக்காது
உன்னிடமே சங்கமமாகி இறுதியில்
சுவாசமாய் நிலைப்பேன் என்றும் உன்னோடு.....

மூச்சு நின்றுவிடுமுன்...

காக்கவைத்து என்னை
வேதனைப்படுத்தாதே
நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்களும் இதோ
கரைந்துக்கொண்டே....

காத்திருக்கும் நேரமெல்லாம்
மனதைக் கொத்தும்
உன் நினைவுகளை
இதமாய் கோதிவிடுகிறேன்

இனியவையும் உண்டு
வருந்தியவையும் உண்டு
விளையாட்டாய் நாம்
பிணங்கியதும் உண்டு

உன் நினைவுகளை உண்டு
அவை தீருமுன் நீயும்
என்னெதிரே வந்துவிடு

காக்கவைத்து என்னை
வெற்றிக்கொள்ள நினைக்காதே

உன்னைக் காணாது தவித்து
என் மூச்சு நின்றுவிடுமுன்
வந்துவிடுவாய் தானே?

நூலிழை சுவாசத்தில்?

இத்தனை சக்தியா
நீ காட்டிய
நேசத்துக்கு?

என் சுவாசத்தை
இத்தனை நாள்
கட்டுப்படுத்தியது
நீதானா?

பிரிவு எனும் சொல்
சுவாசத்தை
தடை செய்யுமா?

அடங்கிக்கொண்டிருக்கும்
நூலிழை சுவாசத்தில்
துடிக்கவைக்கமுடியுமா?

உன்னை நினைக்கவைக்கமுடியுமா?
நெஞ்சை மிக பலமாய்
அடைக்கச்செய்யுமா?

அத்தனை சக்தியா
உன் நேசத்துக்கு?

எங்கோ இருந்துக்கொண்டு
உன் நேசத்தினால் என்னை
வாழவைக்கமுடியுமா?

கட்டுப்படுத்திய சுவாசம்
தடையில்லாமல்
உன்னுடனே கலக்க
அத்தனை அற்புதமா
நேசம்?

நீ என் அருகில்...

நீ என் அருகில் இருக்கும் நேரம்
என்னை மறக்கிறேன்
என்பது உண்மை

என் துன்பங்கள்
என்னை விட்டு
தூரப்போவதும் உண்மை

என் சந்தோஷங்கள்
மொத்தவடிவாய்
உன்னுருவில்
வந்தது உண்மை

அது என்றும் நிலைத்திருக்க
நீ என் அருகில்
என்றுமிருக்க
என் வேண்டுதல்
உன்னிடத்து
அதுவும் உண்மை

நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....

ஆயுட்காலம் பத்துவருடமாம் ஜோசியனின் கூற்று இது
வாழவே விரும்பாத எனக்கு
பத்துவருடமும் அதிகமே

கடமைகள் முடிக்க கொடுத்த கணக்கா
விட்டதை சரியாக்க கொடுத்த சந்தர்ப்பமா
விதியின் வழியில் செல்ல அச்சுறுத்தலா
உடலை உருக்கிப்பின் கொண்டுசெல்லவா?

சொந்தமும் நட்பும் பரிதாபம் கொள்ளவோ
பெற்ற குழந்தைகளுக்கு ஒரு சுமையாகவோ
வேண்டாதவருக்கு ஒரு பாரமாகவோ
வேண்டியவருக்கு கொடுத்த துன்பமோ

வயோதிகரை வணங்கி மூத்தோரை பணிந்து
இளையோரிடம் கருணையுடன் கனிவுகாட்டி
கொடுத்த கடமைகளை நன்றாய் முடித்து
தொடங்கவேண்டும் எனக்கான பயணத்துக்கு

மனிதவாசமில்லா வனாந்திரத்தில்
இறையை நினைத்து தொழுதுக்கொண்டே
என்னுயிர் மெல்ல பிரிந்துச்செல்ல
பிணம்தின்னி கழுகுகள் வானத்தில் வட்டமிட

வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஒர் அர்த்தமாகி
கூட்டை விட்டு பிரியட்டும் ஆத்மா
விட்டுச்சென்ற உடல் நாய்நரிக்கு உணவாகி
எஞ்சிய மிச்சங்கள் மண்ணுக்கு உரமாகட்டும்

உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்
அஞ்ஞானத்தில் மிதந்து காற்றோடு கலந்து

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

பிணக்கு.....

தத்தி தவறி வந்த தவறான வார்த்தைகள்
தளிர்நடை போடுமுன் மௌனமாகிவிட்டது

முகம் காட்ட மறுத்த நொடியிலும் தளராது
அவசியமற்ற வார்த்தைகள் வெளிவரதுடித்தது

ஊடல் கூடலாவதும் கூடல் ஊடலாவதும்
இயந்திர உலகில் சகஜமாகி போனது

புரிதல் இல்லாத இடங்களில் எப்போதும்
சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் ஆனது

வார்த்தைகள் தடித்து வெடித்து சிதறியது
மௌனம் கட்டோடு விடுபட்டு போனது

அன்பு இதில் எங்கே மறைந்துவிட்டது
காதல் இங்கே எங்கே ஒளிந்துக்கொண்டது

சமாதானத் தூதுவிட நினைவுகள் உதவட்டுமே
பிணக்கு தீர்ந்து காதல்மீண்டும் தொடரட்டுமே....
Related Posts Plugin for WordPress, Blogger...