வாழவே விரும்பாத எனக்கு
பத்துவருடமும் அதிகமே
கடமைகள் முடிக்க கொடுத்த கணக்கா
விட்டதை சரியாக்க கொடுத்த சந்தர்ப்பமா
விதியின் வழியில் செல்ல அச்சுறுத்தலா
உடலை உருக்கிப்பின் கொண்டுசெல்லவா?
சொந்தமும் நட்பும் பரிதாபம் கொள்ளவோ
பெற்ற குழந்தைகளுக்கு ஒரு சுமையாகவோ
வேண்டாதவருக்கு ஒரு பாரமாகவோ
வேண்டியவருக்கு கொடுத்த துன்பமோ
வயோதிகரை வணங்கி மூத்தோரை பணிந்து
இளையோரிடம் கருணையுடன் கனிவுகாட்டி
கொடுத்த கடமைகளை நன்றாய் முடித்து
தொடங்கவேண்டும் எனக்கான பயணத்துக்கு
மனிதவாசமில்லா வனாந்திரத்தில்
இறையை நினைத்து தொழுதுக்கொண்டே
என்னுயிர் மெல்ல பிரிந்துச்செல்ல
பிணம்தின்னி கழுகுகள் வானத்தில் வட்டமிட
வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஒர் அர்த்தமாகி
கூட்டை விட்டு பிரியட்டும் ஆத்மா
விட்டுச்சென்ற உடல் நாய்நரிக்கு உணவாகி
எஞ்சிய மிச்சங்கள் மண்ணுக்கு உரமாகட்டும்
உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்
அஞ்ஞானத்தில் மிதந்து காற்றோடு கலந்து
இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி
Tweet |
No comments:
Post a Comment