"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, June 26, 2011

கதை 7. நண்பனே எனது உயிர் நண்பனே.....
கடற்கரையில் மணலை அளைந்துக்கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தான் விக்ரமா....

என்ன ஐயா பயங்கர யோசனையில் இருக்கீங்க? என்றபடி அடிக்கும் காற்றில் பறக்கும் தலைமுடியை ஒதுக்கியபடி அவன் அருகில் அமர்ந்தாள் அஷ்வதி.... 

இருவரும் காதலித்து ஜெயித்து இதோ திருமணமும் நடக்க போகிறது...

என்னப்பா கல்யாணத்தை பத்தி யோசனையா இல்ல கல்யாணம் ஆனப்பின் மாமியார் கிட்ட நல்லப்பெயர் எடுக்கும் மருமகளாக பேர் எடுக்கும் என்னை பத்தி யோசனையா? என்று அவன் தலையை கலைத்தாள் அஷ்வதி....

என்னப்பா இவ்ளவு கேட்டும் பதில் சொல்லமாட்டேங்குறீங்க என்று அவன் மோவாயை நிமிர்த்தியவள் விக்ரமனின் கண் கலங்கி இருப்பதை கண்டு திடுக்கிட்டாள்..

என்ன ஆச்சு விக்ரமா சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்தில் கண்ணீர் என்று புடவைத்தலைப்பால் அவன் கண்ணீரை ஒற்றி எடுத்தாள்...

அஷ்வதி , " உனக்கு தெரியும் தானே திவாகர் என் நண்பன் போனமாதம் கூட நான் பேசவில்லை என்று விஷம் குடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்தானே " 

ஆமாம் உங்கள் நண்பர் தான் பிழைத்துக்கொண்டாரே அதைப்பற்றி இப்ப ஏன்பா நினைச்சு வருத்தப்படறீங்க என்று ஆதரவாய் அவன் தோளைத் தொட்டாள்.

நேற்று அம்மாவுக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணை உனக்கு சொல்லனும் அஷ்வதி...

சொல்லுங்கப்பா என்று அவன் முகத்தைப் பார்த்தாள்...

விக்ரமனின் தாயார் இட்லி தட்டில் வைத்து சட்னியை ஊற்றிக்கொண்டே மகனின் முகம் பார்த்தார்.

என்னம்மா என்னைப் பார்க்கிறீங்க? என்றபடி இட்லி விண்டு சட்னியில் தோய்ப்பதில் மும்முரமானான்.

தம்பி உன் கல்யாணத்துக்கு எல்லாருக்கும் பத்திரிகை வெச்சுட்டியாப்பா? என்று கனிவுடன் கேட்டார்.

வெச்சுட்டேனேம்மா என்று சொல்லும்போது குரல் பிசிறியது...

திவாகருக்கு?

அம்மா திவாகர் நம் வீட்டில் ஒருத்தன்.. அவனைக் கூப்பிட்டு என் கல்யாணத்துக்கு வர அளவுக்கு அந்நியமா போயிட்டானாம்மா என்று சொல்லும்போது அவன் குரல் கம்மிற்று....

தம்பி முன்பு போல் நிலைமை இருந்திருந்தால் திவாகர் நீ கூப்பிடுமுன் அவனே நம் வீட்டில் வந்து கல்யாண வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வானே.... ஆனால் இப்போது?

பின்ன என்னம்மா குழந்தை போல நான் பேசலைன்னு சாப்பிடாமல் இருப்பதும் நான் பேசலைன்னு விஷம் குடிச்சிட்டு அதை சொல்லும்போதே அவனால் கண்ணீரை அடக்கமுடியவில்லை....

அம்மா அவன் நான் பேசலை என்ற ஒரே ஒரு காரணத்துக்காக இப்படி விஷம் குடிச்சிட்டானே... பிழைச்சுட்டான் நல்லவேளை.. வேற ஏதாவது ஆகி இருந்தால் காலத்துக்கும் என்னால் இதை தாங்க முடியுமா சொல்லுங்கம்மா... ஒரு உயிர் போக நாம் காரணமாகி விட்டோமே என்று தினம் தினம் செத்து இருப்பேனே அம்மா... அவன் செய்தது சரியா நீங்களே சொல்லுங்க...

சரிப்பா தவறு செஞ்சுட்டான் தான்... மனுஷா தானேப்பா.. யார்ப்பா இந்த உலகத்தில் பர்ஃபெக்டா இருக்காங்க சொல்லுப்பா...எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் தவறு செஞ்சுடறாங்க தெரியாமயோ தெரிஞ்சோ... ஆனால் தவறு என்று தெரிந்து தெளிந்து உணர்ந்தப்பின் அவர்களை மன்னிப்பதில் என்னப்பா தவறு?

நீ அவனை மன்னிக்க கூடாதாப்பா? உன் மேல் அவனுக்கு ஏன் இத்தனை அன்புன்னு நீ கேட்கலாம்.. உன்னைப் போலவே அப்பா இல்லாமல் வளர்ந்தப் பிள்ளை... உன் மேல் கொண்ட அன்பினால் தானே நீ படித்த காலேஜுக்கே தானும் அப்ளிகேஷன் போட்டு வந்து சேர்ந்தான்? அன்பு ஒன்று தாம்பா மனதை பிணைக்கும் சக்தி கொண்டது... அந்த அன்பு எந்த ரூபத்தில் வருது என்பது விஷயம் இல்லப்பா.. தாயாக நானும் உன்னை கட்டிக்க போகும் மனைவியா அஷ்வதியும் நண்பனாக திவாகரும் எல்லோருமே காண்பிப்பது அன்பு தானேப்பா... அன்பில் என்றும் குறை காண முடியாதுப்பா... குறை கண்டுவிட்டாலோ அங்கு அன்பு இருப்பது இல்லையப்பா... உன் உயிர் நண்பனா ஒரு காலத்தில் இருந்தான் தானே? நீ கொடுத்த இடமும் உரிமையும் தானே அவனை இந்த அளவுக்கு போக வெச்சது? முதலில் இருந்தே நீ அவனுடன் நண்பனாக பழகாமல் இருந்திருந்தால் அவன் உன்னிடம் இத்தனை உரிமை எடுத்திருப்பானா சொல்லுப்பா....

உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது விக்ரமனுக்கு....

தம்பி எல்லோரும் நீ நல்லா இருக்கணும்னு வாழ்த்தும்போது தாயாகிய என் மனசு நிறைகிறதுப்பா...

திவாகரும் நீ திருமணம் செய்து நல்லா இருக்கணும்னு வாழ்த்துவான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மனம் நிறைந்து வாய் நிறைய நீயே அவனை உன் திருமணத்துக்கு கூப்பிட்டால் சந்தோஷப்படுவேன் விக்ரமா....அவனை உன் கல்யாணத்துக்குக் கூப்பிட எதுப்பா உன்னை தடுக்கிறது சொல்லு?

இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறினான் விக்ரமன்... நான் திவாகர் மேல் அன்பாகவும் இருக்கும் நல்ல நண்பன் தானே? பின் என்னைத் தடுப்பது எது? சாப்பிட பிடிக்காமல் கையை கழுவிக் கொண்டு போய் படுக்கையில் விழுந்தான் விக்ரமன்.. உறக்கம் வராது புரண்டான்....

அஷ்வதி அவனை கனிவுடன் பார்த்தாள்.... விக்ரமா அம்மா கேட்டதையே நானும் உங்களிடம் கேட்கிறேன் எதுப்பா உங்களை தடுக்கிறது?

திவாகர் உங்களுக்கு நல்ல நண்பர்... உங்க சந்தோஷம் வேண்டும் நண்பர்.. நம்ம கல்யாணம் நடக்கனும்னு அவரும் ஸ்வாமிக் கிட்ட இத்தனை நாள் வேண்டிக்கொண்டவர்... உங்க கல்யாணத்துக்கு நீங்களே உங்க நண்பரைக் கூப்பிட்டால் அம்மாவை போல நானும் சந்தோஷப்படுவேன்...

பதில் சொல்லாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்..

ஹே அலை எப்படி வருது பாருங்க... வாங்க கொஞ்சம் நேரம் அலையில் நிற்கலாம் என்று அவன் மூட் மாற்ற எழுப்பி இழுத்துக்கொண்டு ஓடினாள் சின்ன குழந்தைப் போல...

அவனுக்கு இஷ்டம் இல்லை என்றாலும் அஷ்வதியின் மனத் திருப்திக்காக போய் தண்ணீரில் நின்றான்.

அஷ்வதி விக்ரமனின் காதருகில் வந்து கிசு கிசு வென்று சொன்னாள் , " என்னங்க ஒரு விஷயம் தெரியுமா? "

சொன்னாத் தானே தெரியும் என்று சிரிக்க முயன்று தோற்றான்..

அட சந்தோஷமா இருங்கப்பா நம்ம கல்யாணம் நடக்கப் போகுது... வாழ்க்கையில் முதல் ஜெயிப்புப்பா இது நமக்கு..இன்னும் காலம் முழுக்க இருக்கே... அது மட்டுமில்ல விக்ரமா கோவம் அதிகம் பட்டால் ரெண்டே வருஷத்துல மாரடைப்பு வருமாம்.... அதனால் கோபம் என்னும் நெருப்பை சிரிப்பு எனும் குளிர்ந்த நீரால் அணைச்சுரனுமாம்.. அதான் உங்களை தண்ணீரில் கொண்டு வந்து நிற்க வைத்தேன்... இப்ப கோபம் எல்லாம் போயிருச்சு தானே?? 

ஹே வாலு என்று கையை ஓங்கினான் விளையாட்டாய்....

ம்ம் அப்ப திவாகரை கூப்பிடுவதில் இனி தடை இல்லை தானே? ஹே புருஷா நீங்க கூப்பிடறீங்களா இல்ல நானே போன் செஞ்சு அண்ணா நான் தான் அஷ்வதி பேசறேன் எங்க கல்யாணத்துக்கு வாங்கன்னு கூப்பிட்டு விடுவேன் சொல்லிட்டேன் அவ்ளோ தான் என்று குழந்தையாக அழகாய் சிரித்தாள்....

அஷ்வதி மணி பாரு வீட்டுக்கு போகனும். நிறைய வேலை இருக்கு என்று அவளை விடாப்பிடியாக தண்ணீரில் இருந்து இழுத்துக்கொண்டு வந்தான் வெளியே...

அதே நேரம் திவாகர் வீட்டில்....

திவாகர் அருகே கட்டிலில் அமர்ந்தார் திவாகரின் தாயார். 

என்னப்பா தூங்கிட்டியா என்றபடி கேட்டார் மெல்ல...

இல்லம்மா சொல்லுங்க....

என்ன யோசனைப்பா என்று திவாகரின் கையைப் பற்றி உட்காரவைத்தார்....

ஒன்னும் இல்லம்மா....

மறைக்க நினைக்காதேப்பா... விக்ரமனின் கல்யாணத்துக்கு விக்ரமன் கூப்பிடலையே என்ற வருத்தம் தானே உனக்கு என்று கனிவுடன் கேட்டார்...

இல்லம்மா.. என்று சொல்லும்போதே அழுகையை அடக்க சிரமப்பட்டான் திவாகர்...

திவாகர் நீ உன் நண்பன் விக்ரமன் மேலே வைத்திருக்கும் அன்பு உண்மை தானே?

ஆமாம்மா... உண்மை அன்புன்னா எப்படி இருக்கனும் தெரியுமாப்பா? 

சொல்லுங்கம்மா...

திவாகர் உன் அன்பு விக்ரமனை பலவிதத்தில் தொந்திரவுப்படுத்தி இருக்கு.. ஒத்துக்கிறியாப்பா? 

அழுகையுடன் ஆமாம் என்று தலை அசைத்தான்...

உன் அன்பில் நான் குறை சொல்லலப்பா மகனே.... ஆனால் விக்ரமனிடம் நீ பேசும்போது குழந்தையை போல் ஆகிவிடுகிறாய்....

அவன் எத்தனையோ வேலைகளுக்கிடையில் இல்லை ப்ரச்சனைகளுக்கிடையில் தவித்துக்கொண்டிருக்கும்போதும் நீ கொஞ்சம் இல்ல அவன் பேசலை என்று சாப்பிடாமல் இருந்திருக்கிறாய்...

சின்ன சின்ன ப்ரச்சனைகளை பெரிதாக நினைத்து சாப்பிடாமல் உன்னை வருத்திக்கொண்டால் அது விக்ரமனுக்கு சந்தோஷம் தரும்னு நினைக்கிறியாப்பா?

நீயும் சந்தோஷமா கலகலப்பா இருந்துக்கிட்டு விக்ரமனையும் உன் சந்தோஷத்தால் கலகலப்பாக்கி இருந்தால் நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்பா...

நீ எங்களுக்கு ஒரே பிள்ளை.... விக்ரமன் பேசலை என்றதும் விஷம் குடிச்சியே... அது தப்பில்லையாப்பா?

அழுகையுடன் ஆமாம்மா என்றான்....

அவன் பேசலை என்று சொன்னது உன் மனசுக்கு தாங்க முடியலை அதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன்னு சொல்றியே.. நீ ஒரு வேளை செத்திருந்தால்?? அது விக்ரமனுக்கு நீ கொடுத்த ஆயுள் தண்டனை போல ஆயிருக்காதாப்பா?

மன்னிச்சிருங்கம்மா.. என் தவறை நான் அன்றே உணர்ந்தேன்.. இனி இப்படி செய்யமாட்டேன் என்று சத்தியமும் செய்கிறேன்..விக்ரமன் என்னுடன் பேசினால் போதும்மா...

பேசலைன்னா?? மறுபடி முயல்வாயா என்று கேட்டார் தாயார்...

ஐயோ இல்லம்மா நீங்கள் என்னை கொல்லாதீங்கம்மா.. அவசரப்பட்டு செஞ்சுட்டேன்... மன்னிச்சிருங்கம்மா...

அந்த பிள்ளை என்ன தவறுப்பா செஞ்சான்.. நீ பிழைத்துவிட்டாய்... இல்லன்னா உலகம் அந்த பிள்ளையை தானே குற்றம் சொல்லி இருக்கும் சொல்லுப்பா...

அம்மா அம்மா தேம்பிதேம்பி அழ ஆரம்பித்தான்.. விக்ரமன் என்னுடன் பேசவில்லை எனும்போது அனாதையாக உணர்ந்தேன் அம்மா....

இதோ இந்த நிமிஷம் வரை என் நண்பன் என்னை கூப்பிடமாட்டானான்னு தவம் போல் காத்திருக்கேன்மா.... அம்மா அம்மா என்னுடன் பேசவே மாட்டானா விக்ரமன்? என்று தாயின் மடியில் தலை வைத்து அழுதான்..

முதுகு குலுங்கி சிறுபிள்ளை போல் அழும் பிள்ளையை தேற்ற வழி தெரியாது தாயாரும் அழுதார்...

அம்மா அனாதை போல் இருக்கேன்மா.. விக்ரமனை என்னோட பேசச் சொல்லுங்கம்மா...

அவன் என்னோட நட்பு கொள்ள வேண்டாம்.. அன்பு காட்ட வேண்டாம்... என் மீது கருணை கூட வேண்டாம்.. ஆனால் பேசச் சொல்லுங்கம்மா ப்ளீஸ்ம்மா.... என் உயிர் நண்பனின் கல்யாணம் நானில்லாமலேயே நடக்கும் ஆனால் என் ஆசி என்றும் உண்டும்மா அவனுக்கும் தங்கை அஷ்வதிக்கும் என்று அழுகையுடன் சொன்னான்...

தம்பி எழுந்திரு முகம் கழுவு என்று சொன்னார்....

திவாகர் ஆச்சர்யத்துடன் பார்த்தான் அம்மாவை...

ம்ம் போன் செய் விக்ரமனுக்கு.... என்னடா என் மேல் இன்னும் கோபமா என்று கேள்... மன்னிச்சிருடா என்னுடைய சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்கு என்று மனமார மன்னிப்பு கேள் என்றார்....

அம்மா என் மனதில் இருப்பதை அப்டியே சொல்லிட்டீங்க. ஆனால் என் போன் எடுப்பானா என்று தயக்கமாக இருக்கிறது என்றான்...

அதே நேரம் அங்கே விக்ரமனின் தாயாரும் அஷ்வதியும் அவனிடம் போனை கொடுத்து திவாகரை கல்யாணத்துக்கு அழைக்க கூப்பிடுமாறு சொன்னார்கள்..

விக்ரமனும் திவாகரும் ஒரே நேரத்தில் முயன்றபோது எங்கேஜ்ட் சவுண்ட் போனது இருவருக்கும்.....

இருவருமே தளர்ந்து அமர்ந்தனர்...

சட்டென விக்ரமன் போன் எடுத்து திவாகரின் எண் டையல் செய்தபோது ரிங் டோன் கேட்டது

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது 
இன்று போல் என்றுமே தொடர்கவே.....

ஒன்றும் பேசத்தோன்றாது பாட்டை கேட்டுவிட்டு கட் செய்துவிட்டான்....

திவாகர் வேகமாய் போன் எடுத்தபோது கட்டாகிவிட்டது....

நோக்கியபோது அது விக்ரமனின் நம்பர்

உடனே திவாகர் முயன்றான்...

அடுத்தப்பக்கமும் இதே ரிங்டோன் கேட்டது...

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது 
இன்று போல் என்றுமே தொடர்கவே.....

இம்முறை திவாகர் விக்ரமனுடன் பேசாது போன் வைக்கப்போவதில்லை.....

திவாகரின் தாயாரும் அங்கே விக்ரமனின் தாயாரும் அஷ்வதி எல்லோருமே சந்தோஷத்துடன் நண்பர்கள் இணையும் அந்த அற்புத தருணத்தை காண காத்திருந்தனர்....


உண்மை அன்பும் சரி உண்மை நட்பும் சரி என்றும் தோற்பதே இல்லை...

12 comments:

 1. இன்றுதான் எண்ணிக்கையைக் கவனித்தேன்
  ஜூன் மாதம் மட்டும் 35 பதிவுகள் படைத்துள்ளீர்கள்
  அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் அதுவும்
  தரத்துடன் தருவது எவ்வளவு கடினம் ?
  அதை சாதாரணமாக செய்து போகிறீர்கள்
  தாங்கள் தேர்ந்தெடுக்கும் கதைக்கான கரு
  கதையைத் துவங்கும் இடம்
  அதை சொல்லிச் செல்லும் விதம்
  முடிக்கிற நேர்த்தி அனைத்தும்
  மிகச் சிறப்பாக உள்ளன
  அதுவும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு
  செல்வது போல நம்பிகையின்மையிலிருந்து
  நம்பிக்கையை நோக்கி கதையை மட்டும் அல்ல
  படிப்போரையும் அழைத்துச் செல்லும்
  உங்கள் பாணி அருமை. தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நட்பிற்காக உயிரை விடும் அளவிற்குப் போகும் நண்பனா.. அதுவும் இந்த காலத்திலா.. என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு விறுவிறுப்பாய் கதை..
  //அம்மா திவாகர் நம் வீட்டில் ஒருத்தன்.. அவனைக் கூப்பிட்டு என் கல்யாணத்துக்கு வர அளவுக்கு அந்நியமா போயிட்டானாம்மா //
  இந்த வரியில் பளிச்சிட்டு நிற்கிறது உயிர் நட்பு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அன்பின் ரமணி சார்,

  மனமும் உடலும் ஒத்துழைத்தால் நிறைய எழுத ஆசை...லீவ்ல இருந்ததால் இதுவாவது செய்ய முடிந்தது. நேற்று டூட்டியில் ஜாயின் செய்துவிட்டேன். சரியான வேலை....
  எனக்கே தெரியவில்லை என் படைப்பின் சிறப்பு.... நீங்கள் மனமுவந்து என்னை பாராட்டியமைக்கு என் அன்பு நன்றிகள் ஐயா... கடலில் கடுகு போல் நான்... ஆனால் எழுத்துக்களில் உணர்வை கொண்டு வந்து படிப்போரை பிரமிக்க வைக்க ஆசை... தெரியலை எப்படி செய்வேன் என்று.....உங்கள் அன்பினை தான் இங்கு கருத்தாக காண்கிறேன்.. மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள் சார்....

  ReplyDelete
 5. அன்பு நன்றிகள் சரவணன் இங்கு வந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

  ReplyDelete
 6. அன்பின் ரிஷபன்,

  இது கதையல்லப்பா.. உண்மையாய் நடந்தது......

  அன்பு நன்றிகள் ரிஷபன்...

  ReplyDelete
 7. அன்பு நன்றிகள் விடிவெள்ளி...

  ReplyDelete
 8. உண்மையான நட்பு பற்றிய கதை .மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
  ஆனால் கதை மாந்தர்களை சிறுவர்களாக காட்டி இருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும். பருவமடைந்த நண்பர்களின் செயல்கள் போல் இல்லை.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அன்பு நன்றிகள் சிவகுமாரன் இங்கு வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

  என்ன செய்வதுப்பா... சில சமயங்களில் பெரியவர்கள் சிறு பிள்ளைகளைப்போல் நடந்துக்கொள்கிறார்கள்....

  ReplyDelete
 10. உண்மை அன்பும் சரி உண்மை நட்பும் சரி என்றும் தோற்பதே இல்லை..

  ReplyDelete
 11. ஆமாம் இராஜராஜேஸ்வரிம்மா....

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...