"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, June 20, 2011

கதை 4. ஓடி விளையாடு பாப்பா....





4.ஓடி விளையாடு பாப்பா.....

என்னடா இது முகத்தில் காயம்?? பதட்டத்துடன் ஆர்யாவின் கன்னம் தடவிக்கேட்டாள் தாய் ப்ரதீபா...

ஒன்னும் இல்லம்மா விழுந்துட்டேன் கீழே என்று காயம் மறைக்கப் பார்த்தான் ஆர்யா...

பொய் சொல்லாதே பிச்சுருவேன் சொல்லு யார் தள்ளிவிட்டா இல்லன்னா யார் அடிச்சா??

அது உமர் தாம்மா கன்னத்துல குத்திட்டான்.. லேசா தாம்மா...

அவன் கிட்ட பேசாதே பேசாதேன்னு பலமுறை சொல்கிறேன்.. கேட்பதில்லை நீ என்று கத்தினாள்....

அவன் உன்னை விட வயசுல சின்னவன்... நீ தான் அவன் பின்னாடியே ஓடுறே... உமர் உமர்
என்று.. அவன் உன்னை சட்டையே செய்வதில்லை...

ஆர்யா ஒன்றும் பதில் பேசாது போய் சேரில் உட்கார்ந்து அவன் புத்தகம் திறந்து படிப்பது போல் தலை குனிந்தான்..

ஏழு வயசு பையனுக்கு எத்தனை பிடிவாதம் என்று கோபமாக பார்த்தாள் ப்ரதிபா....

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக கண்டும் காணாது இருந்த ராகேஷ் பேப்பர் படிப்பது போல தலையை பேப்பர்க்குள்ளே நுழைத்துக்கொண்டான் ஆர்யாவின் தந்தை....

பரிதாபமாய் அம்மாவின் திட்டில் இருந்து தப்பிக்க அப்பாவின் துணையை நாடினான்....

என்னங்க உங்களைத் தானே.. எத்தனை முறை சொல்கிறேன் இவன் பாருங்க சொல்பேச்சு கேட்பதில்லை.. இந்த வயசுலயே எத்தனை பிடிவாதம்... அந்த பையன் உமர் இவனை மதிப்பது கூட இல்லை இவனை விட வயசுல சின்னப்பையன்.. ஆனால் இவன் தான் அவன் பின்னாடியே ஓடுகிறான்... பலமுறை சொல்லிட்டேன் அந்த பாகீஸ்தானி பையன் கிட்ட பேச்சு வெச்சுக்காதேன்னு கேட்பதில்லை.. இனி பேசட்டும் அப்ப இருக்கு இவனுக்கு கதை என்று உறுமினாள்...

உடனே ராகேஷ் எழுந்து வேகமாய் வந்து பளாரென்று அறைந்தான் ப்ரதீபாவை...

அதிர்ச்சியுடன் ப்ரதீபா ஆர்யா இருவரும் ராகேஷை பார்த்தார்கள்....

கன்னம் வீங்கினதை அதிர்ச்சியுடனும் பயத்துடனும் பார்த்த ஆர்யா ப்ரதீபாவின் பின் ஒளிந்தான்.....

ராகேஷ் ச்சே அவசரப்பட்டுட்டோமே என்று போய் சோபாவில் உட்கார்ந்தான்....

ப்ரதீபா இத்தனை நேரம் நீ பிள்ளையை திட்டினதே எனக்கு பிடிக்கலை.. ஆனாலும் நான் அமைதியாக இருந்தேன். ஏன் தெரியுமா? நீ பிள்ளையை கண்டிக்கும்போது நான் உள்ளே நுழைந்தால் அவனுக்கு பயம் விட்டுருமேன்னு..

நம் வீட்டுப் பிள்ளை ஏன் அந்த பாகீஸ்தானி பையனுடன் பழகக்கூடாது காரணம் சொல்ல முடியுமா உன்னால்??? 

ஏண்டி அறிவுகெட்டவளே.... நம்மை விட உழைப்பிலும் அறிவிலும் மானத்திலும் எதிலும் குறைந்தவர் இல்லடி உமரின் பெற்றோர்... நீ இத்தனை பேசுறியே உமர் பெற்றோருக்கு
இருக்கும் மனிதாபிமானம் உனக்கு இருக்கா?? சொல்லு இருக்கான்னு கேட்கிறேன்....

நம்ம பிள்ளை மாடியில் இருந்து உருண்டு விழுந்து ரத்தம் கிடைக்காமல் ஹாஸ்பிடலில் தவித்தபோது ஓடி வந்து உதவினது இதோ இப்ப நீ பேசக்கூடாதுன்னு விரட்டும் உமரின் அம்மாவும் அப்பாவும் தான் அப்ப நம்ம பிள்ளைக்கு ரத்தம் கொடுத்து உதவினர்.... 

அப்ப உனக்கு உமரின் அம்மாவும் அப்பாவும் பாகீஸ்தானின்னு தெரியலையா?? நீ இத்தனை சுயநலக்காரியா இருப்பேன்னு நான் நினைக்கலை....

இல்லங்க நான் சொல்ல வந்தது என்னன்னா எப்பவும் அடிச்சிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டே இருக்கான் அந்த உமர் பையன். இதை பார்த்து நம்ம பையனும் கெட்டு போக கூடாதுன்னு தான் என்று சொல்லுமுன் கோபமாய் போய் அவளை இழுத்துக்கொண்டு வந்து பால்கனி வாசலில் எட்டி பார்க்க சொன்னான்..

அங்கே எல்லா நாட்டு பிள்ளைகளும் பங்களாதேஷ், இந்தியர், இலங்கை, பாகீஸ்தான், பிலிப்பைன் எல்லோரும் ஒன்றாய் சந்தோஷமாய் விளையாடிக்கொண்டு இருப்பதை காண்பித்தான்.

பார்த்தியா ப்ரதீபா..... பிள்ளைகளுக்குள் என்றும் வேற்றுமை என்பதே இருப்பதில்லை.....பிள்ளைகளை
வேற்றுமை இல்லாது வளர்க்க பெற்றோர் தான் சொல்லித்தரனும். தீவிரவாதம் சொல்லி வளர்க்கும் பாகீஸ்தானி மக்களுக்கும் நமக்கும் என்னடி வித்யாசம்?? நாம் மனிதாபிமானம்னா என்னன்னு சொல்லி வளர்க்கனும் பிள்ளைகளை.. வேற்றுமை பாராட்டாது இருக்கனும்னு சொல்லி வளர்க்கனும்.. இவன் ஹிந்து இவன் முஸ்லிம் இவன் க்ரிஸ்துன்னு பிரிச்சு பழக சொல்லித் தராம அவர்களிடம் இருக்கும் நல்லவைகளை கற்க சொல்லிக் கொடுக்கனும்...

நம்மிடம் இருக்கும் அன்பை அவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு இந்தியர்கள் எப்படி அவர்களின் அன்பு எப்படின்னு புரியும்படி நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரனும்.. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவன் பாகீஸ்தானி இவன் பங்களாதேஷ் என்று பேதம் பார்த்து வளர்வது???

இனி வரும் சந்ததியாவது தீவிரவாதம் தொலைத்து அன்பை மலரச்செய்யட்டும்....

வீட்டிலயே அடைத்து வைத்து பிள்ளைகளை கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட வைத்து மூளையை மழுங்கடித்து கார்ட்டூன் பார்க்கவைத்து மூளையை உபயோகிக்க செய்யாது இன்னும் எத்தனை காலத்துக்குடி??

பிள்ளைகளை திடம்மா மனத்திண்ணமா தைரியமா வெளியே எல்லோருடன் பழக விடனும்.... நல்லா எல்லோருடனும் சேர்ந்து விளையாட விட்டு அவர்களுடனும் நம்ம பிள்ளைகளும் தன்னிடம் இருக்கும் நல்லதை கற்க சந்தர்ப்பம் கொடுத்து தானும் மற்ற பிள்ளைகளிடமிருந்து நல்லவைகளை கற்கனும்...

அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது....

ராகேஷ் போய் திறந்தபோது வெளியே உமர் நின்றுக்கொண்டிருந்தான் அகண்ட கண்களில் மகிழ்ச்சியும் புன்னகையுடன்...

அங்கிள் ஆர்யாவை என்னுடன் விளையாட விட முடியுமா?? என்று ஹிந்தியில் கேட்டபோது

ப்ரதீபா சிரிப்புடன் ஆர்யாவை கூப்பிட்டு முகம் துடைத்துவிட்டு குடிக்க தண்ணீர்கொடுத்து உமரிடம் சிரித்து உள்ளே வந்து உட்காரச்சொல்லி அவனுக்கும் சாப்பிட பிஸ்கெட் கொடுத்து சண்டை போடாம விளையாடுங்க சரியா என்று ஆங்கிலத்தில் சொல்லி அனுப்பினாள்..

அப்போது உமர், " சாரி ஆண்ட்டி நான் ஆர்யாவின் கன்னத்தில் குத்திட்டேன்.... சாரி ஆர்யா இனி அப்படி செய்யமாட்டேன் " என்று பணிவுடன் சொன்னான்...

ப்ரதீபா தன் அடி வாங்கிய கன்னத்தை தடவிக்கொண்டு பரவாயில்லப்பா என்று சொல்லி ஆர்யாவை அனுப்பினாள்...

ஆர்யா சந்தோஷத்தோடு உமருடன் ஓடினான் க்ரிக்கெட் பேட் எடுத்துக்கொண்டு.....

ராகேஷ் கதவை சாத்திவிட்டு ப்ரதீபாவின் கன்னம் தடவிக்கொடுத்து கோபமா டியர் என்று கேட்டான்...

இல்லங்க... அடி தான் கொஞ்சம் வேகம்.. வலிக்குது என்று கன்னம் தடவினாள்....

நம் பிள்ளையை நீங்கள் சொன்னது போலவே தான் இனி வளர்ப்பேன் என்று அவன் கையை பிடித்தாள்...

ராகேஷ் ப்ரதீபாவின் கன்னம் தடவிக்கொடுத்து வெரி சாரி அடி பலமா என்று கேட்டான்....

இல்லப்பா என்றாள்.. இனி இப்படி நடந்துக்கமாட்டேன்பா... என்று தலைகுனிந்தாள் ப்ரதீபா..

நல்லதொரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் மகிழ்வுடன் பெற்றோர் மகிழ்வுடன் பால்கனியில் நின்று எட்டிப்பார்த்தனர்...

5 comments:

  1. சிறுவர்கள் கதை மூலம் பெரியவர்களுக்கு
    மிகப் பெரிய கருத்தைச் சொல்லிப்போகிறீர்கள்
    மிகச் சரியாக உப்பு போடப்பட்ட பண்டம் போல
    சொல்லவேண்டிய கருத்தை கதையின் இடையில்
    சுருக்கமாக ஆனால் மனதில் மிகச் சரியாக
    பதியும் வண்ணம் சொல்லிப்போகும்
    நேர்த்தி பாராட்டுக்குரியது
    நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாங்க ரமணி சார்... அன்பு நன்றிகள் ரமணி சார் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

    ReplyDelete
  3. ///இவன் ஹிந்து இவன் முஸ்லிம் இவன் க்ரிஸ்துன்னு பிரிச்சு பழக சொல்லித் தராம அவர்களிடம் இருக்கும் நல்லவைகளை கற்க சொல்லிக் கொடுக்கனும்...///

    வலிமையான வரிகள்...

    கதைலாம் சூப்பரா எழுதிறீங்க.... பல்துறை வித்தகி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாங்க ஷீநிசி எப்படி இருக்கீங்க?
    அன்பு நன்றிகள் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

    ஹை நல்லவேளை கதை விடறேன்னு சொல்லலையே :)

    ReplyDelete
  5. இனி வரும் சந்ததியாவது தீவிரவாதம் தொலைத்து அன்பை மலரச்செய்யட்டும்....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...