"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 24, 2011

கதை 13. உயிராய் நீ எனக்கு....


கதை 13. உயிராய் நீ எனக்கு....

மனோ என்ன பண்றே? கால் கழுவ நீர் வைக்கலையா நீ? என்று சொல்லிக்கொண்டே உள் நுழைந்தார் வாசுதேவன்.....

இதோ வந்துட்டேங்க மிளகாய்பொடி அரைக்கனும் தீர்ந்துட்டுது... அதான் பின்பக்கம் மிளகாய் தனியா காயவெச்சுட்டு இருந்தேன்..... என்றபடி வேகமாக சொம்பில் நீர் மொண்டு வைத்தாள் மனோரஞ்சிதம் வாசுதேவனின் தர்மபத்தினி...

நீயும் கூட சேர்ந்து காயனுமா ஏன் காக்கா கொத்திட்டு போயிருமா நீ காயவெச்ச மிளகாயும் தனியாவும் என்றபடி வாய் கொப்பளித்து முகம் கழுவி கால் கழுவினார் வாசுதேவன்...

என்ன செய்றான் ரமேஷ் வேலைக்கு அப்ளிஷேன் போடனும்னு காலை என்னிடம் பணம் கேட்டு வாங்கி கொடுத்தியே என்னாச்சு? என்றபடி ஈசி சேரில் சாய்ந்தார் வாசுதேவன்...

இதோ வர நேரம்தாங்க என்றபடி மோர் விளாவி கொண்டு வந்து கொடுத்தாள் குடிக்க..
ரமேஷ் அப்போது முகம் முழுதும் பூரிப்புமாக உள்ளே நுழைந்தான்...

என்னடா வேலை காயமா என்று கேட்டபடி ஃபேனை சுழலவிட்டாள் மனோ....

ஆமாம் பெரிய கலெக்டர் படிப்பு படிச்சு கிழிச்சிட்டான் பாரு உடனே கூப்பிட்டு வேலை கொடுக்க என்றபடி சலித்துக்கொண்டார்....

ரமேஷ் முகத்தில் அடிவாங்கியவனை போல நோக்கினான்....

அப்பா எனக்கு இந்த வேலை கண்டிப்பா கிடைச்சிரும் அது மட்டும் இல்லாம வேலை கிடைச்ச ஒரு வருஷத்தில் எனக்கு யூ எஸ் போக வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னான் ரமேஷ்... 

பார்ப்போம் பார்ப்போம் நீ இதுவரை பணவிரயம் செய்தது தான் அதிகம் என்று சொல்லிவிட்டு சாப்பாடு தயார் செய் உடுப்பு மாற்ற தன் அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டார். 

உடனே குரலை தழைத்துக்கொண்டு ரமேஷ் மனோரஞ்சிதம் காதுக்கருகில் , " அம்மா எப்படி தான் இவரோட நீ இத்தனை வருஷம் குப்பை கொட்டறியோ , எப்ப பாரு மெஷின் தனமா பேசுவார். என்னடா இப்படி பேசி காயபப்டுத்துறோமே மனதைன்னு நினைப்பதே இல்லை.. நீ எப்படிம்மா சமாளிக்கிறே?? என்று கேட்டான் ரமேஷ்.. 

மனோ அமைதியாய் ஒரு புன்னகை தவழ விட்டு சமையலறையில் நுழைந்தாள்....
வாசுதேவன் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே ரமேஷிடம் என்ன வேலை கிடைப்பது உறுதியா என்று கேட்டார்...

அதை கவனியாது போல் இருந்த ரமேஷ் , " அம்மா உங்க கையால மாங்கா வெல்லப்பச்சடி சாப்பிடுவது ரொம்ப பிரியம் அம்ம்மா எனக்கு என்றபடி கையில் இருந்ததை விடாமல் சாப்பிட்டான்....

என்னடா அப்பா கேட்கிறார் கேட்பதுக்கு பதில் சொல் என்றபடி இன்னும் கொஞ்சம் மாங்கா வெல்லப்பச்சடி போட்டாள் ரமேஷ் தட்டில்...

வாசுதேவன் சட்டென மனோவை கையமர்த்தினார்.. அவன் எதிர்க்காலம் நல்லா இருக்கனும்னு தான் நாம நினைக்கிறோம்...

என்னிக்கும் பிள்ளை கையை நம்பி இருக்கும் பெற்றோரா நம்மை நினைச்சுட்டான் போல என்றபடி மோர் சாதம் குழைத்தார் இலையில்...

கிடைக்கும்பா என்ற ஒற்றை வரியோடு தட்டை விட்டு வேகமாய் எழுந்தான் சிடு சிடுவென்ற முகத்தோடு...

மனோ கவலையுடன் ரமேஷ் போகும் வழியை பார்த்துக்கொண்டிருந்தாள்..

என்ன பிள்ளை மேலே கரிசனமோ மோர் டம்ளரில் ஊற்றிக்கொடு.. என்றபடி டம்ளர் எடுத்து வைத்தார். 

மனோ துளிர்க்கும் நீரை வாசுதேவன் அறியாது துடைத்துக்கொண்டாள்...

இதோங்க என்று மோர் விளாவி கொடுத்தாள்..
குடித்துவிட்டு ஏப்பம் விட்டபடி போய் படுத்துக்கொண்டார்.

ரமேஷ் தன் தாயிடம் வந்து குமுறினான்..
ஏம்மா வேலை கொடுத்தால் நானா வேண்டாம் என்கிறேன்? வேலை கிடைக்கலன்னா அதில் என் தவறு என்ன என்றபடி தன் அறைக்குள் போய் அறைந்து சாத்திக்கொண்டான் கதவை.
இரு துருவங்களாய் நிற்கும் கணவரையும் மகனையும் சேர்க்கும் வழி அறியாது திகைத்து நின்றாள்....

ஐந்து வருடம் கழித்து......

குறுகி கட்டிலில் இருப்பது ஒரு காலத்தில் தன்னை தன் அன்பால் தன் அழகால் தன் வசப்படுத்திய நம் மனோதானா என்று பார்க்க வைத்தது அவரை….. மனோவின் இடைவிடாத இருமல் அவரை இவ்வுலகம் அழைத்தது…. 

என்னடா என்று கனிவுடன் மனோவின் தலை முடியை கோதிவிட்டார்…. தண்ணி வேணுங்க குடிக்க….. மனோவை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு அசூயை பார்க்காது ரத்தம் வழிந்த அவள் உதட்டை துடைத்துவிட்டு தண்ணீர் பருகக் கொடுத்தார்.

மருந்தின் அயற்ச்சியில் கண்கள் சொருக அவர் மார்பில் தலை சாய்த்து உறங்க முயற்சித்தாள்..

பழைய நினைவுகளில் மூழ்கினார் வாசுதேவன்… ரமேஷ் வேலை கிடைக்காது சிரமப்பட்ட காலத்தில் தான் அவன் நல்லதுக்காக கண்டித்ததை அவன் வேறுவிதமாக எண்ணி தன்னை வெறுத்த நிலையை வேதனையுடன் நினைத்து பார்த்தார்….

ரமேஷுக்கு போன் செய்துவர நினைத்து மனோவை மெல்ல படுக்க வைத்துவிட்டு அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு நெற்றியில் படர்ந்த வெள்ளை முடியை ஒதுக்கி பாசமுடன் போர்த்திவிட்டு போன் செய்ய நகர்ந்தார்..

ரமேஷ் அங்கிருந்தபடி அப்பா அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு டாக்டர் என்ன சொல்கிறார் என்றான்..

அவர் கண்களில் பெருகிய நீரை கட்டுப்படுத்த தெரியாது டாக்டர் இன்னும் ஒரு மாதம் தாம்பா டைம் கொடுத்திருக்கார்… தினமும் வலி தாளாம அழறா… என்னை கொன்னுடுங்கோ அப்டின்னு என் கையை பிடிச்சு கெஞ்சுறா…. உன்னை ஒரு முறை பார்க்கனும்னு தவிக்கிறாப்பா.. முடிஞ்சா ஒரு முறை வந்துட்டு போயேன்பா மனைவி மகளோடு…

நானும் டிக்கெட்டுக்கு முயல்கிறேன் அப்பா…. கண்டிப்பா ஒரு வாரத்துக்குள் வந்துடறேன் என்று நம்பிக்கையுடன் சொன்னதை சந்தோஷமுடன் வந்து பகிர்ந்தார் மனோவிடம்…

அவள் கண்ணீருடன் மனதில் சந்தோஷமுடன் அவர் கைகளை பிடித்துக்கொண்டாள்..

ரமேஷ் ஊரில் இருந்து வந்ததும் அம்மாவை வந்து பார்த்தான்… அவன் கண்களில் கண்ணீர் பெருகியது... அன்பை மட்டுமே அவன் அறிந்தது தன் தாயிடமிருந்து.. இன்று காய்ந்த சருகாய் தன் தாய் கிடந்து படும் அவஸ்தை காணப்பொறுக்காமல் திரும்பிக்கொண்டான்.. 
வாப்பா நான் கொஞ்சம் போய் இவளுக்காக பால் வாங்கிட்டு வரலாம்னு போனேன்… உட்காருப்பா…

இப்ப தான் டாக்டர் வலி தாங்கமுடியாம இவ கதறினதை பார்த்து மயக்க ஊசி போட்டுட்டு போயிருக்கார்…

இருவர் பேசும் குரலில் சட்டென கண்விழித்தாள் மனோ.. ரமேஷை கண்டதும் குழி விழுந்த கண்கள் பெரிதாகி மலர பேச முயற்சித்தாள்... எலும்புக்கைகளை நீட்டினாள்....
அம்மா என்று கதறி அவள் நெஞ்சுக்கூட்டில் சாய்ந்தான் ரமேஷ்...இதயத்துடிப்பு கூட மெலிதாய் குறைந்துக்கொண்டே வருவதை அறிந்து மனம் துடித்தான்... அம்மாவை இப்படி ஒரு கோலத்தில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லையப்பா என்று அழுதான் ரமேஷ்....
மயக்கமருந்தின் வீரியத்தால் குழறிய குரலில் அழாதே கண்ணா என்று தன் காய்ந்த வரண்ட விரல்களால் அவன் கண்ணீரை துடைத்தாள்.. சாப்பிட்டியா தங்கம்? என்று மூச்சிரைக்கும் குரலில் கேட்டாள்... அம்மா என்று அவள் கையால் தன் முகத்தை பொத்திக்கொண்டு அழுதான்... அம்மா என்றால் அன்பு ஒன்று மட்டுமே பொருள் என்பது போல் இருந்தன அங்கே நடந்துக்கொண்டிருந்த நிகழ்வுகள்...

அப்பா டாக்டர் எங்கே? நான் அவரை பார்க்கனும் என்றபடி எழுந்தான்…

மனோவின் நிலை கண்டு ரமேஷின் கண்கள் குளமானது…

டாக்டர், " அம்மாவுக்கு வலி இல்லாமல் இருக்க ஒன்னும் செய்ய முடியாதா" என்றபடி அவரிடம் கெஞ்சினான்…

கடவுள் படைப்பில் இப்படி தான் அனுபவித்து சாகனும் என்று இருந்தால் என்ன செய்யமுடியும் ரமேஷ்.. மனதை திடப்படுத்திக்கோங்க..

ஏன் டாக்டர் மெர்சி கில்லிங் செய்து அம்மாவை என்று அவன் முடிக்குமுன் அவன் கன்னம் நெருப்பு தேய்த்தது போல் எரிந்தது….

எதிரில் கோபாவேசமாக வாசுதேவன் நின்றுக்கொண்டிருந்தார்…

ஏன் டா உன் அம்மாவை கொன்னுட சொல்லி கெஞ்ச தான் டாக்டர் எங்க இருக்காருன்னு கேட்டியா??

பாவி பாவி உன்னை எப்படி எல்லாம் வளர்த்தா… உன்னிடம் அவளை பார்த்துக்க சொல்லி நான் அழுதேனா? என் காலம் வரை நான் அவளை ராஜாத்தி போல பார்த்துப்பேன் டா..

வலி தாங்க முடியலை தான் அவளால்… அதனால் என்ன நான் இருக்கேன் டா அவ வலிகள் மொத்தம் சுமக்க நான் இருக்கேன் டா….

ஒரு மாதம் அவளோட காலம் அதை அவ அமைதியா கழிக்கட்டும் என்னோடு… அவள் போகும்போது நானும் இருக்கமாட்டேன் டா இந்த உலகில்….

உன்னிடம் நாங்க யாசகம் கேட்கமாட்டோம் போ போ உன் குடும்பத்தை கவனி… உனக்கு நேரமிருக்காது… போடா என்றபடி நெஞ்சை பிடித்தார்…

ஐயோ அப்பா என்றலறினான்…

என்னை சீக்கிரம் என் மனோ கிட்ட கூட்டிட்டு போ ரமேஷா என்று திக்கி திணறி பேசினார்…

டாக்டர் இவருக்கு முதல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்க்கனும் என்று கத்தினார்..

நோ டாக்டர் என்னை மனோ கிட்ட என்னை சீக்கிரம் கூட்டிட்டு போங்க.. 
அவளுக்கு முன்னாடி எனக்கு எதுவும் ஆகி நான் என் கண்மணியை அனாதையா விட்டுட்டு போகக்கூடாது….

அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து மனோவின் ரூம் அடையுமுன்னே மனோவின் இருமல் சத்தம் காதை கிழித்தது…

இவரை ஸ்ட்ரெச்சரில் பார்த்ததும் மனோ பதைத்து எழ முனைந்தாள்.. ஆனால் பாழாப்போன இருமலும் ரத்த வாந்தியும் அவளை எழ விடவில்லை…

என்னங்க என்று ஹீனமாக குரல் கொடுத்தாள்..

நான் வந்துட்டேன் மனோ.. எனக்கு ஒன்னுமே இல்லை இவங்க தான் பயந்துட்டாங்க…எப்பவும் போல் உன்னை என் மடியில் படுக்கவெச்சு தூங்கவைக்கனும்னு சொல்லிநான் தான் அடம்பிடிச்சு வந்தேன்.. வார்த்தைகள் கோர்வையாய் வராமல் சண்டித்தனம் செய்தது…

அவரை மெல்ல மனோவின் பக்கத்தில் உட்கார வைத்தனர்..

மெல்ல அவர் உடல் தளர்ந்து அவள் மேல் சாய்ந்தது… மனோவின் இருமல் சத்தமும் நின்றது…..

17 comments:

  1. அருமையான கதை ரமேஸ் போன்றவர்கள் வெளிநாடுகளில் மனித நேயத்தை தொலைத்து பணம் ஒன்றே குறிக்கோளாக ஓடும் இயந்திரங்கள்..? அவனை அப்படி ஓடவிட்டவரும் வாசுதேவந்தான் நாங்கள் பிள்ளைகளை பள்ளி அனுப்பும் போதே அவர்கள் வருங்கால பண இயந்திரங்கள் என்ற நினைப்போடுதான்  அனுப்புகிறோம்..!!? ஆனாலும் ஏன் உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை சாகடிக்கிறீர்கள்... வாசுதேவன் மனோரஞ்சிதத்தை கடைசிவரை நன்றாக பார்த்தார் என்று முடித்திருந்தால் காட்டான் சந்தோஷப்பட்டிருப்பான்.. என்றாலும் கதையின் ஆசிரியர் நீங்கள் முடிவு உங்களுடையதுதானே.. ஹி ஹி

    வாழ்த்துக்கள் சகோதரி..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  2. அடடா அன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே....

    உங்க முதல் பின்னூட்டம் மிக அருமை...

    கண்டுபிடிச்சிட்டீங்களா கண்டுப்பிடிச்சிட்டீங்களா? ஓகே இனிமே சாகடிக்கவே மாட்டேன் யாரையும்...

    உங்க தளம் வந்து பார்த்தேன்.... அதில் நீங்க இது சம்மந்தப்பட்ட கட்டுரை தான் போட்டிருந்தீங்க, மனம் கனக்க வைத்த பகிர்வுப்பா...

    அன்பு நன்றிகள் காட்டான்....

    இனி அடுத்த கதையில் சுபம் போடுகிறேன் சரியாப்பா?

    ReplyDelete
  3. அன்றில் பறவைகளாய் ஒரே சமயத்தில் கூட்டைவிட்டு பறந்த பறவைகள் மனதைக் கனக்கவைக்கிறார்கள்.

    ReplyDelete
  4. அருமையா சொல்லி இருக்கீங்க இராஜராஜேஸ்வரி.....

    அப்படி ஒரு பாக்கியம் கிடைப்பதே அரிது..

    இறைவன் சித்தம்.....

    அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  5. கதை கனக்க வைத்துவிட்டது ... தவறு தந்தையிடமிருந்து சென்று மகனை தொடர்ந்துவிட்டது.... பாவம் தாயவள் பாசத்தை தொலைத்து, பட்டவனிடம் பெற்ற போது உற்றவனோடு சென்றாள் மண்ணை விட்டு விண்ணில் ..... புரிந்து கொள்ளாமையும், பிரிவும் எவ்வளவு கொடுமை என்பதை கதையில் தெளித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உண்மையே மாய உலகம் ராஜேஸ்....

    கதை எழுதும்போதே மனம் என்னவோ போலிருந்தது உண்மை....

    அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  7. வணக்கம் மஞ்சு மேடம் நான் உங்க பதிவுக்கு வருவது இதுதான் முதல் முறை.
    மிகவும் அருமையான கதை. மனதை உலுக்கி விட்டது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அன்பு வரவேற்புகள் ராம்வி...

    உங்களை ரமணி சார் பதிவுகளுக்கு பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.. ஆனாலும் இந்த அன்புக்குழந்தையை இப்போது தான் என்னால உணர முடிந்தது...

    அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு..

    ReplyDelete
  9. தங்கள் படைப்புகள் எல்லாம்
    சோகத்தில் முடிவதுபோல் பட்டாலும்
    வாழ்வின் உன்னதங்களின் சிறப்பை உயர்த்திக்காட்டவே
    அதற்கு கொஞ்சம் அடிக்கோடிட்டு அழுத்தம் கொடுக்கவே
    அவ்வாறு செய்கிறீர்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது
    இதுவும் அத்தகைய தரமான பதிவே
    தங்கள் பாணி சிறப்பாகத்தான் உள்ளது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பிரிவின் கொடுமை ....
    அருமையான கதை...
    மனசை கனக்கவைத்தது.......

    ReplyDelete
  11. அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு...

    நானும் பார்க்கிறேன் இனி இது போல சோக முடிவு இருக்கும்படி கதை எழுதக்கூடாதுன்னு...

    ஒரு கதை எழுதிட்டு இருக்கேன்..வேலைப்பளு காரணத்தால் அரைகுறையா நிற்கிறது கதை... நான் கதை எழுதும்போது ஒரே மூச்சில் எழுதிவிடுவேன் அதன் தாக்கம் குறையுமுன்னரே எழுதிடவேண்டும் என்று...

    ஆனால் இப்ப எழுதிய கதை அப்படியே நிற்கிறது.. வெள்ளி சனி சுத்தமாக எழுதவே முடிவதில்லை...

    ஆனாலும் கதை மிக அருமையாக இருக்கிறது என்று சொன்னதற்கு என் அன்பு நன்றிகள் ரமணி சார்...

    ReplyDelete
  12. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  13. என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதர்க்கு நன்றி மஞ்சு.

    என் பதிவில் followers gadget இணைக்க முடியவில்லை. அதனால் பதிவிலுள்ள follow by e-mail லில் தங்களின் mail id ஐ பதிவு செய்து கொள்ளவும். நான் பதிவிடும் போதெல்லாம் உங்களுக்கு மெயிலில் தகவல் வந்து விடும்.

    ReplyDelete
  14. உறவுகளின் அருமையைப் புரிய வைக்க மரணம் வந்து சொல்ல வேண்டுமா..
    மனசு கனக்கிறது..

    ReplyDelete
  15. அன்பு நன்றிகள் ராம்வி இனி இணைத்துக்கொள்கிறென் உங்க வலைப்பூவில் வந்து என் மெயில் ஐடியை பதிக்கிறேன்பா...

    ReplyDelete
  16. அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு....

    அன்பு - உலகில் உயிரோடு இருந்து அல்லல்படுவதைவிட இல்லாமல் போய் இருப்பவர்களை தன்னை நேசிப்பவர்களை காப்பது சிறப்பு அல்லவா ரிஷபன்?

    ReplyDelete
  17. மிகவும் அருமையாக ஆரம்பித்து அற்புதமாகவே முடித்துள்ளீர்கள். இதுபோன்ற அன்பான ஆதரவான அதிசயமான அபூர்வமான பாசமிக்க ஒற்றுமையான தம்பதியினருக்கு, ஒருவரை விட்டுப் பிரிந்து மற்றொருவர் வாழ்வது என்பது மிகவும் நினைத்துப்பார்க்கவே முடியாத ஓர் விஷயம் தான்.
    கதைக்கு இந்த முடிவைத் தவிர வேறு எந்த முடிவு கொடுத்தாலும் அது சரியாகவே இருக்க முடியாது.

    இருப்பினும் இதுபோன்று சேர்ந்தே சாவது என்பது ஏதோ லட்சத்திலோ கோடியிலோ ஒரு ஜோடிக்கே கிடைக்கக்கூடும். எல்லோருக்கும் இதுபோன்ற சந்தர்ப்பம் வாய்ப்பு அமையாது என்பதே உண்மை.

    பெரும்பாலன வாசகர்கள் சுபமான முடிவினைத் தான் விரும்புகிறார்கள். அதனால் நானும் தவிர்க்க முடியாத ஓரிரு கதைகள் தவிர மற்ற எல்லாவற்றிலும் சுபமான முடிவுகளாகவே கொடுத்து வந்துள்ளேன்.

    வலைப்பதிவில் என்னுடைய முதல் சிறுகதையான
    “இனி துயரம் இல்லை” என்பது கூட இதே போல சென்று வேறு விதமான முடிவுடன் இருக்கும்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

    மிகவும் நல்லதொரு படைப்பு மஞ்சு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இதுபோல தாங்கள் எவ்வளவு நல்ல படைப்புகள் வெளியிட்டு நான் படிக்காமல் விட்டுப்போய் உள்ளனவோ. ஒவ்வொன்றாக இனிமேல் தான் நான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

    ஏதோ இன்று நமக்குள் நடந்த வேறு ஒரு நிகழ்வினால், இந்த இணைப்பை அனுப்பி வைத்து என்னைப் படிக்கச் சொல்லியுள்ளீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.

    பிரியமுளள
    VGK

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...