"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 13, 2011

பௌர்ணமிக்கு செய்யும் சத்யநாராயண பூஜைக்கு நான் வீட்டில் செய்யும் பிரசாதம்...


எப்போதும் பௌர்ணமி அன்று எங்கள் வீட்டில் சத்ய நாராயணா பூஜை நடக்கும்.. அதற்காக நெய்வேத்தியமாக செய்வதை உங்களுக்கு இங்க தருகிறேன்.. 

1. கோதுமை மாவு இனிப்பு 
2. வாங்கீ பாத் 
3. மிளகு சாதம் 
4. பகாளாபாத் 
5. புளியோதரை 
6. எலுமிச்சை சாதம் 
7. கல்கண்டு வடை 





1. கோதுமை மாவு இனிப்பு 

கோதுமை மாவு ஒரு கப், சர்க்கரை ஒரு கப், நெய் அல்லது ரீஃபைண்டு ஆயில் போதுமான அளவு. 


செய்முறை 

கோதுமை மாவை சிறு தீயில் வறுத்துக்கொள்ளவும் வாணலியில். நன்றாக வறுத்துக்கொண்டு இருக்கும்போதே சர்க்கரை சேர்த்து வறுக்கவும்... வறுக்க வறுக்க நல்ல மணம் வரும்.. நெய் சிறிது சிறிதாக சேர்த்து வறுக்கவும்... நல்ல ப்ரௌன் கலராக வரும், கரண்டியில் மாவு ஒட்டாமல் சோன்பப்டி வாசனையோட வரும்போது இறக்கி வைக்கவும்... அப்படியே சாப்பிடலாம். நல்ல சுவையாக இருக்கும்... 



2. வாங்கீ பாத் 

தேவை 

கத்திரிக்காய் 1/2 கிலோ 
அரிசி 3 கப் 
வெள்ளை மூக்கடலை வேகவைத்தது 1 க‌ப் 
வெங்காய‌ம் பெரிய‌து 1 
த‌க்காளி பெரிய‌து 2 
இஞ்சி பொடியாக‌ ந‌றுக்கிய‌து 2 டேபிள் ஸ்பூன் 
ந‌ல்லெண்ணை 
கடுகு 
கறிவேப்பிலை 
மஞ்சள் தூள் 
உப்பு தேவையான‌ அளவு 

வறுத்து பொடி செய்ய‌ 

மிள‌காய் வ‌ற்ற‌ல் 
முழு த‌னியா 
பெருங்காய‌ம் 

செய்முறை 

அரிசி முக்கா பதத்தில் வடித்து உதிரி உதிரியாக ஆறவைத்துக்கொள்ளவும். வாணலியில் மிளகாய் தனியா பெருங்காயம் வறுத்து பொடி செய்து வைக்கவும். 

வாணலி வைத்து எண்ணை ஊற்றி கடுகு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம் தக்காளி வேகவைத்த வெள்ளை சுண்டல் எல்லாம் வதக்கி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பின் கத்திரிக்காய் சிறு சிறு துண்டுகளாக செய்து அதையும் இட்டு வதக்கி தண்ணீர் விடாமல் சிறு தீயில் வதக்கி வெந்து சுருண்டு வரும்போது பொடி செய்த தூளையும் போட்டு கலந்து இறக்கி சாதத்தோடு கலக்கவும்...






3. மிளகு சாதம் 

சாத‌த்தை உதிரி உதிரியாக‌ வ‌டித்து ஆறவைத்து வாண‌லி வைத்து அதில் க‌டுகு, .ப‌ருப்பு, காய்ந்த‌ மிள‌காய் வ‌ற்ற‌ல் க‌றிவேப்பிலை தாளித்து உப்பு தூள் க‌ல‌ந்து இற‌க்கி சாத‌த்தோடு க‌ல‌ந்து பின்ன‌ர் க‌டைசியில் மிள‌கு தூளையும் சேர்த்து க‌ல‌க்க‌வும்.

4. பகாளாபாத் 

சாதத்தை நன்றாக குழைய வேகவைத்து கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாய் மிக்சியில் நன்றாக அடித்து சாதத்தில் கலக்கவும், பெருங்காய தூளை சாதத்தில் கலக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய காரட், மாங்காய் டூட்டி ஃப்ரூட்டி பழம் பொடியாக நறுக்கி அதையும் சாத்தில் சேர்க்கவும்.காய்ந்த திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவும், நன்கு சிவந்த மாதுளை முத்துக்கள் விதையில்லாதது சேர்க்கவும்.. பால் சேர்த்து இன்னும் சாதத்தை நன்றாக குழைக்கவும்... நிறைய பால் இழுக்கும் இந்த பகாளாபாத்... கடைசியில் வாணலி வைத்து சிறிது எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்... தயிர் 1/4 கப் சேர்த்து கலக்கவும். அதனால் பகாளாபாத் நிறைய நேரம் புளிக்காமல் இருக்கும்.. அசட்டு தித்திப்போடு சாப்பிட நன்றாக இருக்கும்.

5. புளியோதரை 

சாதத்தை உதிரி உதிரியாக வடித்து ஆறவைத்துக்கொள்ளவும். அம்மியில் (மிக்சியில் அல்ல) ஊற வைத்த புளி, காய்ந்த சிவப்பு மிளகாய், முழு தனியா உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்... பின் வாணலி வைத்து நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவெப்பிலை, பெருங்காயம் தாளித்து, அரைத்ததை இட்டு நன்றாக வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த கறுப்பு சுண்டல் இட்டு வதக்கி, தொக்கு போலவே சுருண்டு வரும்போது இறக்கி வைக்கவும். வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, .பருப்பு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வேர்க்கடலை தாளித்து சாதத்தில் கலக்கவும்... பின்னர் இந்த தொக்கையும் சேர்த்து கலக்கவும்... சாப்பிட புளிப்பாக கோயில் புளியோதரை போலவே இருக்கும். இதன் பெயர் அம்மி புளியோதரை.



6. எலுமிச்சை சாதம் 

ஒரு கிண்ணத்தில் உப்புத்தூள், மஞ்சள் தூள் இட்டு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் கலந்து அதிள் எலுமிச்சை பிழிந்து வைத்துக்கொண்டால் கசக்காது. வெறும் வாணலியில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் வறுத்து பொடி செய்து வைக்கவும், வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, .பருப்பு, .பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதில் இந்த கலந்து வைத்த எலுமிச்சை ரசத்தை ஊற்றியதும் அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் உதிரி உதிரியாக வடித்த சாதத்தில் இந்த கலவையை கலக்கவும், பொடி செய்த வெந்தயத்தையும் கலக்கவும்... வித்யாசமான ருசியில் இருக்கும் இந்த எலுமிச்சை சாதம்..

7. கல்கண்டு வடை 

ஊறவைத்த உளுத்தம்பருப்பை தண்ணீர் விடாமல் அரைக்கவும் கெட்டியாக தண்ணீருக்கு பதில் கடைசியாக கல்கண்டு சேர்த்து அரைக்கவும். அரைத்ததுமே கொஞ்சம் நீர்த்து போயிருந்தால் அதில் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து பிசைந்து வடை தட்டி போடவும் எண்ணை காய்ந்ததும்.. பொன்னிறம் வந்ததும் பொரித்து எடுக்கவும்... வித்யாசமான சுவையில் கல்கண்டு வடை..




14 comments:

  1. ஆத்தாடி... என்ன சகோதரி பிரான்சில நான் இருக்கிறதோ ஒரு அடுக்குமாடி குடியிருப்பில.. நீங்களோ புளியோதரைக்கு அம்மிதான் தேவை என்கிறீர்கள் உங்களிடம் ஏதாவுதல் மறைமுகதிட்டம் இருக்கிறதா காட்டானை வீட்டை காலிசெய்ய வைக்க...!!!???

    ReplyDelete
  2. எல்லா பதார்த்தமும் செய்வதற்கு அழகாய் விளக்கியுள்ளீர்கள் சகோதரி...

    காட்டான் குழ போட்டான் ஓட்டோடு..

    ReplyDelete
  3. மன்னித்துக்கொள்ளுங்க சகோதரி என்னால் ஓட்டு போட முடியவில்லை.. ஏன் திரட்டிகளில் இனைக்கவில்லை..??

    ReplyDelete
  4. உங்களின் பதிவு மிகவும் சிறப்பானது நான்இருப்பதோ கல்லுரி .அங்குள்ள உணவக சாப்பாடு வீட்டு நினைவை உண்டாக்குகிறது பாராட்டுகள் நன்றி தொடர்க

    ReplyDelete
  5. அன்பு நன்றிகள் சகோதரரே....

    கண்டிப்பாக அடுக்கு மாடி இருந்தால் அங்கு அம்மி இருக்கனும்னு கட்டாயம் இல்லை, கண்டிப்பாக புளியோதரை தொக்கு செய்து கூட செய்யலாம்....

    ReplyDelete
  6. ம்....வாயில் உமிழ் நீர் ஊற வைக்கிறீங்க மஞ்சும்மா! நல்ல படங்கள் இப்பவே சாப்பிடு என்று தூணடுது.....வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  7. சொல்லிச் செல்லும் விதமும்
    படங்களும் ஒரு ஏக்கப்பெருமூச்சு விடவைக்கிறது
    வீட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் பாக்கியவான்கள்
    தெரியாதவைகளை செய்ய முயற்சிக்கலாமா என
    எண்ணி உள்ளோம்
    நல்ல பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பதிவு இனிக்கிறது
    ஆனால்..?
    பலகாரம் எனக்கு இனிக்காது
    காரணம்
    இனிப்பே உடம்பிலே இருக்கே
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. அம்மி புளியோதரை செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை சகோதரரே (காட்டான்)

    புளிக்காய்ச்சல் செய்து சாதம் உதிரி உதிரியாய் வடித்து நல்லெண்ணை கலந்து புளிக்காய்ச்சல் கலந்து சாப்பிட்டாலும் ருசி அதிகம்....

    புளிக்காய்ச்சல் செய்முறை

    புளி திக்காக கரைத்துக்கொண்டு கடாய் வைத்து எண்ணை ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து புளி கரைசலை விட்டு மஞ்சள் தூள் உப்பு போட்டு கொதிக்கவிட்டு இந்தப்பக்கம் காலி கடாய் வைத்து பெருங்காயம், மிளகாய், தனியா கறுப்பு எள்ளு, வெந்தயம், கடலைப்பருப்பு வறுத்து பொடி செய்து புளி கரைசல் நன்றாக கொதிக்கும்ப்போது போட்டு கலந்து இறக்கி வைத்துவிட வேண்டும்... இது தான் புளி காய்ச்சல்....

    செய்து பாருங்கள் சகோதரரே...

    ReplyDelete
  10. அப்டின்னா என்னன்னு தெரியலையே காட்டான் சகோதரரே.... விவரம் அறிந்து நண்பரிடம் இணைக்கிறேன் சகோதரரே...

    அன்பு நன்றிகள் மூன்று முறை பதிவிட்டமைக்கு..

    ReplyDelete
  11. அன்பின் மாலதி,

    நீங்க கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கிறீர்களா? நல்லமுறையில் படித்து சிறப்பாய் வெற்றிகளை குவிக்க என் அன்பு பிரார்த்தனைகள்....

    விடுமுறைக்கு வீட்டுக்கு செல்லும்போது மறக்காம அம்மா கிட்ட சொல்லி செய்து தரச்சொல்லி சாப்பிடுங்கப்பா...

    ReplyDelete
  12. அன்பின் வேதாம்மா,

    எங்க வீட்டுக்கு பக்கத்துல நீங்க இருந்தீங்கன்னா இப்பவே மணக்க மணக்க சமைத்து உங்களுக்கு பரிமாறி இருப்பேன் கண்டிப்பாக....

    அன்பு நன்றிகள் வேதாம்மா....

    ReplyDelete
  13. அன்பு நன்றிகள் ரமணி சார்...

    இங்கே யார் வீட்டுக்கு வந்தாலும் வெளியே வாங்கி வைக்கமாட்டேன். என் கையால் சமைத்தே பரிமாறுவேன். அது எனக்கு ஆத்ம திருப்தி....

    ReplyDelete
  14. அடடா இராமானுசம் ஐயா அடுத்த பகிர்வு உடைத்த கோதுமை கிச்சடி பகிர்வு தருகிறேன்... டையபடிக் என்று கவலைப்படாதீர்கள்.... உணவு கட்டுப்பாட்டில் இருந்தால் கண்டிப்பா அருமையா ஆரோக்கியமா இருக்கலாம்....

    கோதுமை இனிப்பு, கல்கண்டு வடை இதை தவிர்த்து மீதி இருப்பவை எல்லாம் சாப்பிடலாம் ஐயா நீங்க...

    அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...